அகத்தீமைகளின் நாடகம்


தி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத்த தாக்கம் இன்றும் நினைவிலிருக்கிறது. நாவல் போன்ற பெருந்திடலில் அநாயாசமாக சொற்களில் உலவும் தி.ஜா சிறுகதைகளில் பெரும் பாதிப்புகளை என் வாசிப்பில் ஏற்படுத்தவில்லை என்றே உணர்ந்திருந்தேன். இதை அவ்வபோது அசை போடும் போதெல்லாம் தி.ஜாவின் சிறுகதைகளை மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் எச்சரிக்கை(ஆவல்) மணி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் அவருடைய குறுநாவல் தொகுப்பை வாசிக்க எடுத்தேன்.


தி.ஜானகிராமன் அபாரமான கதைசொல்லி. உரைநடையைக் காட்டிலும் உரையாடலில் சொற்கள் பெருவாரியான இடங்களை பிடித்துக் கொள்கின்றன. கதாசிரியரின் ஊடுருவலின்றி தெளிவான கதைகள் மட்டுமே வாசிக்க கிடைக்கிறது. கதாபாத்திரங்களின் நியாயங்கள் வாசகனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அந்த சுதந்திரத்தை செறிவாக கொடுக்கிறார்.

ஏழு குறுநாவல் அடங்கிய தொகுப்பு இது. ஏழு குறுநாவலும் குறிப்பிட்ட பிராந்தியத்தை சுற்றி இருக்கக்கூடிய மனிதர்களின் வாழ்க்கையை பேசுகின்றன. புறத்தோற்றத்தில் இப்படி இருந்தபோதிலும் ஒவ்வொரு குறுநாவலின் மையமும் மானுடத்தின் அகத்தை வெளிக்காட்டுகிறது. சூழ்நிலைகளைப் பொருத்தே மனிதனின் நன்மையும் தீமையும் வெளிப்படும் என்பதை பல எழுத்தாளர்கள் உணர்ந்திருக்கின்றனர். அந்த சூழ்நிலைகள் எப்படி அமையப்பெறுகிறது என்பதை நோக்கி அவரவர்களின் புனைவுப் பயணம் அமைகிறது. இந்த வகையில் தி.ஜாவின் பயணம் கட்டற்ற சுதந்திரத்திற்கும் கட்டுபாடான கலாச்சாரத்திற்கும் இடையிலான இடைவெளியை களமாக கொள்கிறது. இந்த இடைவெளியை உணர்ந்து ஊசலாடும் மனிதர்கள் எவ்விதமான வாழ்க்கையை மேற்கொள்ள விழைகிறார்கள் எனும் இடத்திற்கு கதைவழியே நகர்த்தி செல்கிறார்.

இக்குறுநாவல்களின் கதாபாத்திரங்களுக்கு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. குற்றவுணர்ச்சியில் அல்லது வாழ்க்கை சார்ந்த பிடிமானமற்ற சந்தேகத்தில் திளைப்பவர்களாக இருக்கிறார்கள். செல்வம் நிறைந்திருக்கும் கதபாத்திரங்களிடம் இக்குணம் உடைமையை இழந்துவிடுவோமோ எனும் பயமாகவும் வெளிப்படுகிறது. செல்வமற்ற கதாபாத்திரங்களுக்கு இயலாமையாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு கதைகளும் செல்வத்தை எளிதில் ஈட்டிவிடலாம் ஆனால் மனம் கொள்ளும் இச்சைக்கு பதிலுரைப்பது கற்பிதங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

‘அவலும் உமியும்’ எனும் குறுநாவல் தி.,ஜாவின் தத்துவார்த்த பின்புலத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. காயாப்பிள்ளை செல்வந்தர். அவருடைய பெயரன் நோஞ்சானாக இருக்கிறான். எத்தனையோ சத்தான உணவு கொடுத்தாலும் உடல் பூசுவதில்லை. அவருடைய வீடொன்றில் வாடகைக்கு இருக்கும் வீட்டாரின் பையன் கொழு கொழுவென்று இருக்கிறான். இவர் அளவுக்கு அவ்வீட்டில் செல்வம் இல்லை. ஆனாலும் எப்படி ஆரோக்யமாக இருக்கிறது அக்குழந்தை என்பதே இவரது விசனம். இந்த கவலை பொறமையாக உருவெடுக்கும்போது அந்த குழ்ந்தை மீது அவர் திணிக்க முற்படும் வன்முறை யதார்த்தத்தின் விளிம்பை வாசகர்களுக்கு சொல்லிவிடுகிறது. கதையின் நாயகனான காயாப்பிள்ளைக்கோ அக்குழந்தை அங்கிருந்து எங்காவது சென்றுவிட்டால் தேவலை எனும் எண்ணம் இருந்தே வருகிறது. ஆனால் அதே நேரம் தன்னுடைய பெயரனை நினைக்கும்போது வன்முறைக்கான விதை மேலெழும்புகிறது. இந்த முரணுக்கிடையில் அவர் எடுக்கும் முடிவும், அவர்காணும் தரிசனமும் கதையின் வசீகரத்தை மேலெழுப்புகிறது. பெரும் கதையாடலை இக்கதைகள் நிகழ்த்துவதில்லை. மாறாக வாழ்வின் சிறு அசைவுகளின் வழியே உணரும் பேருண்மைக்கு வெளிச்சமிடுகிறது. எதைக் களைய வேண்டும் எனும் பிரக்ஞையை காயாப்பிள்ளைக்கு ஒரு சிறுவனே அளிக்கிறான். தலைப்பை வைத்து சொல்ல வேண்டுமெனில் உமி காயாப்பிள்ளையின் அகத்தில் இருக்கும் வக்கிரம். அவல் அதைக் களைந்த பின் கிடைக்கும் தரிசனம். எப்படி உமியைக் களைவது எனத் தெரியாமல் இருக்கும் வரை அவல் மறைந்தே கிடக்கும்!

குடும்பத்தை மகத்தான சட்டகமாக தி.ஜா நிறுவுகிறார். அத்தனை தீமைகளுக்கான மன்னிப்பும் குடும்பத்திற்குள் இருக்கிறது. பல நேரங்களில் குடும்பமே தீமைகளை உருவாக்கும் கூடமாகவும் மாறுகிறது. ‘வீடு’ எனும் குறுநாவலில் கதாநாயகன் ஒரு மருத்துவன். அவனுக்கு உதவியாளனாக வருபவனுடன் மனைவிக்கு தொடர்பு ஏற்படுகிறது. இதை கணவன் அறிந்தபின் மனைவி பிரிவதற்கு தயாராகிறாள். வீட்டை பிரித்துக் கேட்கும்போது தர மறுக்கிறான். நாவலில் வரும் இரண்டு இடங்கள் அந்த வீட்டையும் குடும்பம் எனும் தத்துவத்தையும் ஒன்றிணைக்கிறது. ஓரிடத்தில் மனைவி வீடு என்பதை வெறும் கற்களால் ஆனதல்ல என்கிறாள். ஆங்கிலத்தில் இருக்கும் house மற்றும் home இற்கான வித்தியாசத்தை ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம். அந்த நாவலின் கடைசியில் நாயகன் சொல்கிறான். இந்த வீட்டில் வசிப்பதாயிருந்தால் என்னுடன் வசித்துக்கொள். ஆனால் கொடுக்க முடியாது என்கிறான். மனிதர்களுக்குள் வன்முறையின் விதை நீர்பாய்ச்சப்படாமல் அமைதியாக கிடக்கிறது. எங்கோ பாய்ச்சப்படும் நீரின் வீரியம் கூட குடும்பம் எனும் சட்டகத்தினுள் வெடித்து எழும். அதன் ஒரு வெடிப்பு ‘வீடு’ குறுநாவல்.

தி.ஜாவிடம் இருக்கும் புராணீகம் சார்ந்த தெளிவு கதைகளின் வழியே பேருண்மையாக உருவெடுக்கிறது. ஒவ்வொரு கதையையும் புராணக் கதைகளுடன் ஒன்றிணைக்கும் இடங்களில் அக்கதை வேறு பரிணாமங்களுக்கு இடம்பெயர்கிறது. ‘தோடு’ தொகுப்பில் என்னை ஈர்த்த முக்கியமான படைப்பு. கோவிலில் நகை திருடியவரின் வீட்டு ஆணின் மீது ஆசைப்பட்டு காலப்போக்கில் திருமணமும் செய்துகொள்கிறாள். திருமணத்திற்கு பின் அவருக்கு வேறு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு நாயகியின் வாழ்க்கையை நெருக்குகிறது. அக்குடும்பத்தின் கர்ண பரம்பரைக் கதையான திருட்டு தெரிந்தவுடன் காலங்காலமாக இவர்கள் திருடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலைக்கு மனதை மாற்றிக் கொள்கிறாள். அனைத்து திருட்டும் எந்த புள்ளியில் ஒன்றிணைகிறது என்பதை நோக்கி நகர்கிறது இக்குறுநாவல்.

இதை மிக முக்கியமான படைப்பு என சொல்வதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஒன்று இதில் இடம்பெறும் வர்ணனை. தெருவைக் குறித்தும், வீடுகளின் அமைப்பைக் குறித்தும், விடிகாலையில் வாசலில் இடும் கோலத்தின் நுண்மைகளை குறித்தும், கோவிலைக் குறித்தும் இடம்பெறும் வர்ணனைகள் காலத்தின் உருவத்தை கொடுக்கவல்லவை. அதே நேரம் அனைத்து வர்ணனைகளும் தோடு எனும் விஷயத்தை மையப்படுத்தி அமைகிறது. அம்மனின் மீதிருக்கும் தோடு. கதையின் ஆரம்பத்தில் பொருளாகவும் கோலமாகவும் உருவாகும் தோடு கதையின் போக்கில் வேறொன்றின் அடையாளமாக மாற்றம் கொள்கிறது. தோட்டை திருடினால் தோடு கோபித்துக்கொள்வதில்லை அதை அணிந்திருப்பவருக்கே நஷ்டம் மாதிரியான வரிகள் வரும் இடங்கள் தோடு ஒரு கதாபாத்திரமாக உருவாகிறது. இதே போன்று ஒவ்வொரு குறுநாவலும் அக்கதை நிகழும் காலத்தின் சாட்சியமாக வர்ணனையில் அமைகிறது. சாதி சார்ந்த பாகுபாடு, சுதந்திரம் நோக்கிய பயணம், திடிரென முளைத்த சட்டங்கள் என ஆங்காங்கே தகவல்களால் காலத்தை உணர முடிகிறது.

மேற்சொன்ன கதையில் அம்மனிடம் ஒரு தோடாக மாற வேண்டும் என நாயகன் நாயகியிடம் கடைசியில் மன்றாடுகிறான். தீமைகள் மனிதனை மனிதனுக்கே அடையாளம் காட்டுகின்றன. அப்போது அவன் மன்றாட விரும்புகிறான். ஆனால் தன்னை மன்னிக்க யாருக்கு தகுதியுண்டு என்ற ஆணவமும் மனிதனிடம் மீதமாய் இருக்கிறது. அத்தனையையும் கடந்து மானுடத்திடம் சிறு அடையாளமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பிரயத்தனப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அது மன்னிப்பின் அடையாளமன்று. அவன் எண்ணிய தீமைகளின் முகம். அப்படியான முகங்களை தி.ஜாவின் குறுநாவல் தொகுப்பு அறிமுகப்படுத்துகிறது. அவன் மன்னிப்பு கேட்க விரும்பும் மானுடத்தின் உருவம் பெண்ணுடைய சாயலில் ஒவ்வொரு நாவலிலும் இடம்பெறுகிறது.

மோக முள்ளிற்கு பிறகு தி.ஜானகிராமனின் மீதான பெருங்காதல் குறுநாவல்களால் மீண்டும் ஊற்றேடுக்கிறது.

பி.கு :  இதை பரிசளித்த, உடன் பணிபுரிந்த அரவிந்திற்கு அன்பும் நன்றியும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக