நவீன இலக்கியத்திற்கான புதிய சாளரம்
1970களில் தமிழகத்தில்
வெளியாகிக் கொண்டிருந்த அனைத்து சிறுபத்திரிக்கைகளிலும் லத்தின் அமேரிக்காவில் எழுதப்பட்ட
கதைகளின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருந்தது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் உலகளாவிய தாக்கத்தை
லத்தின் அமேரிக்க கதைகள் ஏற்படுத்திய காலகட்டம் அது.
கூபா, சீலே, காதமாலா, பெரு
முதலிய இருபத்தி மூன்று நாடுகளால் ஆனது லத்தின் அமேரிக்க பிரதேசம். பல்வேறு பழங்குடி
கதை மரபின் கோர்வையாக லத்தின் அமேரிக்க கதைகளின் தொன்மம் ஆரம்பம் கொள்கிறது. பின் ஸ்பானியர்களின்
படையெடுப்பு, ஆங்கிலேயர்களின் ஆக்ரமிப்பு ஆகியவைகளால் நவீன வாழ்முறைக்கு அம்மக்கள்
மாறத் துவங்கியிருந்ததனர். அதில் அவர்களின் வேர்களை இழக்க தொடங்கியிருந்தனர். ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து
விடுதலை பெற பல்வேறு கோடுபாடுகளை உலகுக்கு அளித்தனர். விடுதலையுணர்வுடன் சேர்ந்தே இழ்ந்த
பண்பாட்டின் மீதான அவர்களின் கவனம் காலத்தால் முக்கியமானது.
நாட்டு எல்லைகளைக் கடந்து
லத்தின் அமேரிக்கா எனும் ஒற்றைக் குடையின் கீழ் படைப்பாளர்கள் சேர்ந்தனர். சமகாலப்
பிரச்சினைகளில் இருந்து விரும்பும் விடுதலை அவரவர்களின் மரபில் புதைந்திருக்கிறது என்பதை
அறிந்தனர். சமகாலப் பிரச்சினைகளை மரபின் பார்வையில் அணுகுவதை விரும்பினர். அதிகாரத்தை
வைத்துக் கொண்டு பொது மக்களின் மீது கட்டவிழுத்து விடப்படும் வன்முறையை எதிர்க்க பிரயாசை
கொண்டனர். படைப்பு சுதந்திரம் பாதிக்கப்படும் அரசியல் சூழலில் புதிய வடிவங்களை உருவாக்கினர்.
அங்கிருந்த மரபுக் கதைகளும்,
வாய்மொழிக் கதைகளும், பாடல்களும் கூட இறைவனை வழிபடுவதாக இருந்திருக்கிறது. நவீன படைப்புகள் குறுகிய எல்லைக்குள் அடைந்து விடக்கூடாது
என்பதால் தொன்மங்களும் வாய்மொழிக் கதைகளும் கற்றுக் கொடுத்த கருத்தியல்களை கையில் கொண்டு
அரசை விமர்சித்தனர். மாய யதார்த்தவாதம், மையமற்ற கதைகள், சர்ரியலிஸம் முதலிய கோட்பாடுகளை
உலகிற்கு வழங்கினர். அரசியல் நெருக்கடிகளில் உருவான வடிவங்கள் காலத்தின் போக்கில் வெறும்
சுவாரஸ்யத்தின் வடிவங்களாக தேக்கம் கொண்டன.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட
இக்கதைகள் இங்கிருக்கும் படைப்பளர்களின் மீதும் தாக்கம் செலுத்தின. பலர் சோதனை முயற்சிகளாக
கதைகளை எழுதியும் பார்த்தனர். சில கதைகள் வெற்றியும் பெற்றன. மீட்சி, கொல்லிப்பாவை,
பிரக்ஞை, கசடதபற முதலிய இதழ்களில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் தனி நூல்களாக உருவாகவில்லை.
உருவானவைகளும் மறுபதிப்பு காணவில்லை. இந்நிலையில் “சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்”
சமகால வாசகர்களுக்கு லத்தின் அமேரிக்க சிறுகதைகளை மீள் அறிமுகம் செய்வதாக அமைகிறது.
இருபத்தி ஒன்பது லத்தின் அமேரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
இடம்பெற்றிருக்கும் முப்பத்தி மூன்று சிறுகதைகளில் முப்பத்தியோரு சிறுகதைகளை அமரந்தாவும்
இரண்டு சிறுகதைகளை மனோரஞ்சிதம், கலைச்செல்வன் ஆகியோரும் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
நூலின் தொடக்கத்தில் அமரந்தா
மற்றும் ஆர்.சிவக்குமாரின் நீண்ட கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை லத்தின் அமேரிக்க
நாடுகளில் இருந்த அரசியல் நிலைகளையும், அதில் மக்களிடம் பரவிய அரசியல் கொதி நிலைகளையும்
விரிவாக பேசியிருக்கின்றனர். அங்கு அரசியலில் பெரும் பங்காற்றியிருப்பது இலக்கியமும்
இலக்கிய கர்த்தாக்களும். கதை தன் மரபிலிருந்து அரசியல் மரபை உருவாக்கியிருப்பதன் வரலாற்றை
நுண்மையாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது அக்கட்டுரைகள். இதன்மூலம் கதைகளின் வழியே
அரசியலை அறிந்து கொள்ளவும், சமூக பிரச்சினைகளை பேசவும், அரசியலுடன் கலந்திருந்த மக்களின்
வாழ்க்கையை காலம் கடந்து கடத்தவும் இலக்கியம் உதவும் என்பதை உணர்த்தும் கையேடாக இருக்கிறது.
ஒவ்வொரு சிறுகதைகளின் ஆரம்பத்திலும் அவ்வெழுத்தாளர்கள் குறித்த சிறுகுறிப்பும், அக்கதை
ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பங்கு பெற்றிருக்கும் குறிப்புகள் வாசகர்களை கதைகளுக்கு
அருகில் பயணிக்க வைக்கின்றன.
தமிழகத்திலும் இந்தியாவிலும்
இப்போது நிலவி வரும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும், அப்பண்பாட்டை மீட்க குரலெழுப்பும்
பல்வேறு அமைப்புகளுக்கும், மக்களுக்கும் நிறைய முன்மாதிரிகளை இக்கதைகள் கொடுக்கின்றன.
அவர்களின் மண்ணிலிருந்த அரசியல் நெருக்கடிகள் கதைகளுக்கான காரணிகளாக இருந்தாலும், கதைகள்
உலகத்திற்கான அரசியல் முன்மாதிரிகளாக அமைந்திருக்கின்றன. ஓர் உதாரணம் கொண்டு சொல்லலாம்.
சாமுவேல் ஃபெய்ஹோ கூப தேசத்து
எழுத்தாளர். அவர் எழுதிய “சாதெரோவின் கடைசி ஒட்டகம்” சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
சாதெரோ ஒரு விவசாயி. அவனுக்கு மூன்று ஒட்டகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. அதை வைத்து
பிழைக்க நினைக்கிறான். அவற்றில் இரண்டு இறந்து போகவே ஒன்றை மட்டும் வளர்க்கிறான். அதை
த்ரினிடாட் எடுத்து சென்றால் யாரேனும் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்படவே
ஓட்டிச் செல்கிறான். அங்கு காந்தெரோ, இஸ்னாகா என இரு செல்வந்தர்கள் இருக்கின்றனர்.
இருவரும் ஆடம்பரத்திற்காக ஒருவரை எதிர்த்து ஒருவர் என செலவு செய்பவர்கள். இந்நிலையில்
காந்தெரோவிடம் ஒட்டகத்தை விற்கிறான். அதன் மீது ஒய்யாரமாக சவாரி செய்வதை மக்கள் வியந்து
பார்க்கிறார்கள். இஸ்னாகா அதை விட சிறந்த மிருகம் வேண்டுமென்று நீர்யானையை வரவழைக்கிறான்.
அதைக் கண்டு இஸ்னாகாவே அச்சம் கொள்கிறான். எந்த செயல்பாடுகளிலும் இஸ்னாகா இறங்காமையால்
காந்தெரோ வெற்றிக் கொண்டதாக எண்ணி பெரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். அப்போது நீர்யானையை
விட்டு அவ்விருந்தை நாசம் செய்கிறான் இஸ்னாகா. இதற்கு காரணம் ஒட்டகம் வந்த நேரம் தான்
என்றெண்ணி அதன் தலையை எஜமானனான சாதெரோவின் முன்னணியிலேயே வெட்டுகிறான் காந்தெரோ. மேலும்
சாதெரோவிற்கும் முப்பது கசையடிகள் கிடைக்கின்றன. உடல் மெலிந்து மீண்டும் ஊர் திரும்புகிறான்.
அப்போது சென்று திரும்பிய நாட்டின் சமகால நிலைமையை நண்பன் கூறுகிறான். காந்தெரோவும்
இஸ்னாகாவும் ஆயுத வியாபாரிகளின் துணைகொண்டு மக்களைக் கொன்று தங்களின் ஆடம்பரத்தை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். அதனால் உயிர் பிழைத்திருக்கும் உன் நிலை தேவலை என்கிறான். தானும்
ஆயுத வியாபாரத்தில் இறங்கலாமோ என்றெண்ணும் சாதெரோவின் சிந்தனையில் கதை முடிகிறது.
காந்தெரோ, இஸ்னாகா எனும்
இடங்களில் எந்த அரசை வைத்தாலும் இக்கதை அரசியல் பகடியாக மாறிவிடும். சாமான்யன் என்ன
தொழில் செய்ய வேண்டும் என்பதை அதிகாரம் முடிவு செய்கிறது. சாமான்யனின் இன்பம் அதிகாரத்தின்
சிரிப்பில் அடங்கி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இக்கதை. எவ்வளவு அடிபட்டாலும் அதிகாரத்தின்
அடைக்கலம் சாமான்யனுக்கு தேவைப்படுகிறது. இந்த தேவையை அதிகாரமே செல்வத்தால் உருவாகுகிறது
என்பதை கதை உணர்த்துகிறது. வெறும் நகைச்சுவைக் கதையாக கடக்கக்கூடும் இக்கதை பல உள்
அடுக்குகளை கொண்டிருக்கிறது. தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையுமே இப்படியான உள் மடிப்புகளை
பேசுபவையே.
அதிகாரத்தின் குரூரம்,
அதன் மீது சாமான்யன் கொள்ளக்கூடிய கோபம், வன்முறையின் வழியில் ஆயுதமாகும் முறையற்ற
காமம், குடும்பத்திற்குள் நிலவும் நுண்மையான வன்முறை, போர்க்கால வாழ்க்கை முறையும்
அதன் அவலங்களும் என நீளும் பட்டியல் வேறு நிலத்தின் வாழ்க்கையை தமிழ் வாசகர்களுக்கு
அறிமுகம் செய்கிறது. அந்த வாழ்க்கையில் அரசியலின் சாளரம் திறந்தே இருக்கிறது. அதன்
காற்று குடும்பங்களின் மீது கவிழ்கிறது. சொந்த வாழ்க்கையின் மீதும், அதை இயக்கும் சமூகத்தின்
மீதும், அதற்கு துணைநிற்கும் அதிகாரத்தின் மீதும் கேள்வி எழுப்ப முனைகிறது அம்மனிதர்களின்
மனம். அந்த கேள்விகளை பிரதிபலிக்கின்றன லத்தின் அமேரிக்க இலக்கியம். எந்த மனதிலெல்லாம்
இது போன்ற கேள்விகள் எழத் தயாராய் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவ்விலக்கியம் சார்ந்த
தேவை அதிகரிக்கிறது.
சொர்க்கத்தின் அருகிலிருந்து
வந்தவன் கதை சொல்கிறான். அதன்வழி சமூகத்தோடு இயைந்த வாழ்க்கையை பரிசீலனை செய்ய கற்றுக்
கொடுக்கிறான்.
- தமிழ் தி இந்து
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக