வஞ்சிக்கப்பட்ட சர்ப்பத்தின் புனைவுகள்
ஒவ்வொரு கதை வடிவத்திற்கும் மரபான
சரடொன்று இருக்கிறது. அந்த சரடு புராணம் சார்ந்த விஷயங்களுக்கும், வரலாற்று சம்பவங்களுக்கும்
ஏற்கனவே சொல்லப்பட்ட அர்த்தத்தை காலந்தோறும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அர்த்தங்களை
நவீன இலக்கியம் எப்போதும் மறுபரிசீலனை செய்து வந்திருக்கிறது. புதிய அர்த்தங்களுடன்
புராணங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. சிவசங்கர் எஸ்.ஜே வின் “சர்ப்பம்
அவளை வஞ்சிக்கவில்லை” சிறுகதைத் தொகுப்பும் பல மரபான விஷயங்களை பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.
ஆதாம் ஸ்திரீ என்னை வஞ்சித்தாள்
என்கிறான். ஏவாள் சர்ப்பம் என்னை வஞ்சித்துவிட்டது என்கிறாள். மனிதர்களின் இச்சையை
தீமை எனக் கருதினால் அதற்கான பழியை சர்ப்பத்தின் மீது ஏற்றுகிறது இக்கதை. சர்ப்பத்தை
விடுவிக்கும் பொருட்டு மனித மனத்தினுள் இருக்கும் கயமைகளை ஆசிரியர் வெளிக்கொணர்கிறார்.
பெருவாரியான மக்கள் செய்யும் தீமைகளுக்காக எளிய, விளிம்பு நிலையில் இருக்கும் சர்ப்பம்
போன்ற மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். சர்ப்பத்தின் விடுதலை வழியே தலித்திய படைப்புகள்
சார்ந்த புதிய தர்க்கத்தை உருவாக்குகிறார்.
யதார்த்த வகை படைப்புகளின் வழியாகவே
தலித் இலக்கியம் ஏன் பிரகடனப்படுத்தப்படுகிறது எனும் கேள்வியை முன்னுரையில் எழுப்புகிறார்.
கழிவிரக்கத்தைக் கொடுக்கும் கதைகளைக் கடந்து புனைவு எனும் கட்டற்ற வெளியில் தலித் படைப்பாளிகள்
தங்களின் கதைகளை முயற்சிக்க வேண்டும். அதுவே பின்-தலித்தியம் என்றும் தலித் இலக்கியத்தின்
அடுத்த நகர்வு அதை நோக்கியதாக அமைய வேண்டும் என்றும் குரலெழுப்புகிறார்.
ஆதாம்-ஏவாள் கதையைப் போன்று முயல்-ஆமைக்
கதை, துறவு செல்வதற்கு முந்தைய கணத்தில் இருக்கும் சித்தார்த்தனின் நிலை ஆகியவற்றை
கதைகளாக்கும் இடங்களில் தனி மனித அடையாளம் சார்ந்த சிக்கல்கள் வேறு வேறு வடிவங்களில்
பேசப்படுகின்றன. ஹெராக்ளிடஸின் கோட்பாடு, ஷேக்ஸ்பியரின் நாடகம், சொர்க்கம் ஆகிய பெரும்
கருத்தியல்களை தலித்திய பார்வையில் அணுகியிருப்பது நவீனமான தர்க்கத்திற்கு வழிவகுக்கிறது.
நூல் முழுக்க நிலவும் உலகமயமாக்கல் சார்ந்த எதிர் விமர்சனப் பார்வை மனித இனத்தை பிரிவினைவாதங்களற்ற
உயிரியாக்க முயல்கின்றன.
உடைமை மனோபாவத்திலிருந்து சாதியின்
உட்கூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. காலத்திற்கேற்ப இந்த மனோபவம் நவீனம் கொள்கிறது. இருப்பினும்
நுண்மையான வடிவில் உடைமையின் சொந்தக்காரர்களுக்கும் அந்த உடைமைக்காக உழைப்பவர்களுக்குமான
இடைவெளி காலந்தோறும் ஒரே அளவில் தக்கவைக்கப்படுகிறது. எது நவீனம் என்பதையும் அதிகாரத்தில்
இருப்பவர்களே தீர்மானம் செய்கிறார்கள். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் உண்டுகாட்டி
எனும் சிறுகதை இதற்கான சிறந்த உதாரணம். மன்னன் உண்பதற்கு முன் அவ்வுணவில் விஷம் கலந்திருக்கிறதா
என்று சோதனை செய்ய வேண்டும். அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மனிதனின் கதை அது. அவனை
விளிம்பு நிலை மனிதனாகவே கதைசொல்லி அறிமுகப்படுத்துகிறார். ராஜ உணவு என தொடக்கத்தில்
மகிழ்ச்சி கொண்டாலும் உயிருக்கு ஆபத்தான தொழில் என்பதை விரைவிலேயே அறிந்துகொள்கிறான்.
அவனுடைய முழு வாழ்வை பேசிய பின் அவனுடைய தலைமுறையினரையும் வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
அடுத்தடுத்த தலைமுறையில் வந்தவர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உணவை சோதிப்பவராகவும்,
கப்பலில் மதுவை சோதனையிடுபவராகவும் வாழ்கிறார்கள். தலைமுறை இடைவெளியில் தொழிலின் வடிவம்
மாறுபடுகிறதே ஒழிய வாழ்வாதாரத்தில் அல்ல. தலித்திய கண்ணோட்டத்தையும் யாரோ ஒருவர் தான்
முடிவு செய்கிறார்கள் என்பதை இக்கதை குறிப்புணர்த்தி செல்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின்
முன்முடிவுகளைக் களைந்து வாழ்க்கை சார்ந்த உண்மையை பேசுகிறது சிவசங்கரின் புனைவுகள்.
நூலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் தலித்திய கண்ணோட்டத்துடன் அணுகப்பட்டிருக்கின்றன.
மரபார்ந்த கருத்தியல்களையும்,
கதை சொல்லும் முறையையும், கதைக்கருக்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் சிவசங்கர்
எஸ்.ஜே வின் கதைகள் பின்-தலித்திய புனைவுலகிற்கான முதற்புள்ளியாக அமையும்.
- தமிழ் தி இந்து
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக