அன்பி லதனை அறம்!


மோஸஸ் இஸ்ரேலிய அடிமைகளை எகிப்திற்கு அப்பால் அழைத்து சென்று கடவுளின் ஆணைப்படி விடுதலை அடைய வைக்கிறார். அதை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளொன்றில் பெருவிருந்து ஒன்றை அரசர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதில் மற்றொரு சிறப்பும் உண்டு. மக்கள் ஆர்ப்பறிக்கும் மனிதர் ஒருவரை, அடிமையாகவும் சிறைவாசியாகவும் இருக்கும் மனிதரை விடுதலை செய்வர். இச்செய்கைக்கான தினம் அன்று வருகிறது. மூவர் அன்று சிலுவையில் அறையப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவன் பாரபாஸ். ரோமானிய அரசிற்கு எதிராக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் சிறைவாசம் மேற்கொள்ளப்பட்டவன். அவனை விடுதலை செய்து அவனுக்கு பதிலாக ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய அரசு முடிவெடுக்கிறது. பாரபாஸைப் பற்றிய மேலதிக தகவல்கள் வரலாற்றிலிருந்தோ வேதாகமத்திலிருந்தோ கிடைப்பதில்லை. இந்நிலையில் இச்சிறு பொறியை நாவலாக்கியிருக்கிறார் ஸ்பானிய எழுத்தாளரான பேர் லாகர்க்விஸ்டு.1950 ஆம் ஆண்டு பாரபாஸ் எனும் நாவல் ஸ்வீடனில் வெளியாகிறது. இதற்கு முன்னரே dwarf எனும் நாவல் வழி பெரும் வாசிப்புப் பரப்பை அடைந்தவர் பேர் லாகர்க்விஸ்டு. இந்நாவலும் தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்பில் தமிழில் “குள்ளன்” எனும் பெயரில் வெளியாகியிருக்கிறது. தன்னை அதிகம் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர் இதன் ஆசிரியர். அவருடைய அரசியல் நிலைப்பாடு பெரும் குழப்பத்திற்குள்ளான ஒன்று. நான் ‘நம்பிக்கைக் கொண்டவன், ஆனால் மதத்திற்கு நாத்திகன்’ எனும் கூற்றை சொல்பவர். இந்தத் தன்மையை இங்கு குறிப்பிடக் காரணம் இத்தன்மையிலான நாவலே அவர் எழுதிய பாரபாஸ். இந்நாவல் அவருக்கு உலகளாவிய கவனத்தையும் நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பை க.நா.சுப்ரமணியம் “பாரபாஸ் அல்லது அன்பு வழி” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

ஏசு கிறிஸ்துவையும் இரண்டு சிறைவாசிகளையும் சிலுவையில் அறையுமிடத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. சிலுவையில் சிறைவாசிகளின் அறைதல் அவ்வூரில் இயல்பான ஒன்று. சிலர் அதை சட்டை செய்யாமல் அவரவர் வேலைகளில் இருக்கின்றனர். பலர் ஒவ்வொரு தெருவாக கண்ணீர் மல்க செல்கின்றனர். இருவரின் உயிர் பிரிந்த பின்பும் மத்யமாக இருக்கும் ஏசுவின் உயிர் பிரியாமல் இருக்கிறது. பலருடன் பாரபாஸும் அதை தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கிறான். தனக்கு பதில் சிலுவையில் அறையப்பட்டவர் எனும் ஒற்றைத் தகவல் மட்டுமே அவன் அப்போதைக்கு அறிந்திருந்தது. அவருடைய உயிர் பிரிந்த பின் அவரை அடக்கம் செய்கின்றனர். அந்த கல்லறையை அவன் அருகாமையில் பார்க்கிறான். இதுவரை முதல் அத்தியாயம் நீள்கிறது.

யார் இந்த மனிதர் ? சிலர் கண்ணீர் உகுத்தது எதனால் ? தனக்காக உயிர் நீத்த மனிதரை அறியாமல் இருப்பது எப்படி ? சிறிதாகவேனும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் பாரபாஸிற்கு வருகிறது. அவரை அறிய விழையும் பாரபாஸின் பயணமே மீத நாவலை முழுமையாக்குகிறது. அவனை அறிந்தவர்கள் நண்பன் திரும்பிவிட்டான் என்றும் உறவினன் திரும்பி விட்டான் என்றும் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் பாரபாஸின் முகத்தில் தெளிவு இல்லை. கல்லறையினுள் இருந்த மனிதனைப் பற்றி சிந்தித்த வண்ணம் இருக்கிறான்.

அவர் மக்களை சொஸ்தப்படுத்தியவர். தீமைகளிலிருந்து காத்தவர். இறந்தவர்களை மீட்டவர் முதலிய அதிசயத்தனமான விஷயங்களை பயணத்தின் வழியில் அறிகிறான். பலரிடமிருந்தும் அவன் அறியும் விஷயம் அவர் கடவுளின் மகன் என்பதே. அங்கிருந்தே பாரபாஸின் மனக்குழப்பம் விரிவடைகிறது. கடவுளின் மகன் எனில் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் ? ஏன் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீக்க வேண்டும் ?

அவனை அறிந்த மனிதர்கள் அவனுடைய விடுதலையை கொண்டாட ப்ரியப்படுகின்றனர். ஆனால் பாரபாஸின் மனக்குழப்பம் அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. அதே நேரம் மறைந்த மனிதர் சார்ந்த தகவல்களை திரட்ட பயணிக்கிறான். பலரிடம் அவரைப் பற்றிய கதைகளை கேட்டறிகிறான். ஆனாலும் அங்கு ஒரு சங்கடம் அவனுக்கு நேர்கிறது. இவன் மறைய வேண்டிய இடத்தில் அவர்களின் நாயகன் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை அறியும் தருணத்தில் வெறுப்பு உமிழ்கிறது. பலருடைய அன்பை இவன் புறக்கணிக்கும் அதேநேரம் வேரு சிலரிடம் வெறுப்பையும் சம்பாதிக்கவே செய்கிறான்.

பாரபாஸ் தன்னுடைய பயணத்தில் சில முக்கியமான மனிதர்களை சந்திக்கிறான்.

மேலுதடு பிளந்த பெண் :

இந்தக் கதாபாத்திரம் ஏசுவை அறிய பாரபாஸிர்கு பேருதவி புரிகிறது. ஒருவர் மற்றவருக்கு அன்பு செய்ய வேண்டும் என்பதே ஏசு மக்களுக்கு கற்றுக் கொடுத்தது என்கிறாள். அன்பு எதையும் செய்யும் எனும் விஷயத்தை பாரபாஸால் நம்ப முடியவில்லை. சித்தாந்தங்களுக்கான விளக்கங்களை, நடைமுறை சாத்தியம் நிறைந்த ஆதாரங்களை நாடுகிறான். லாசரஸை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. லாசரஸின் கதை வேதாகமத்திலும் இடம்பெறுகிறது. இறந்து போன லாசரஸை மீட்டெழச் செய்தவர் கிறிஸ்து. அவரை சந்தித்து அவரது அனுபவங்களை கேட்கிறன். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் தர்க்க அறிவு அவர் ஏன் அடிமையக இருந்தார் எனும் இடத்திற்கே அவனை இட்டுச் செல்கிறது.

இந்தப் பெண் அதிகமாக கிறிஸ்துவின் செய்தியை பரப்புகிறாள் எனும் செய்தியறிந்து அரசு அவளை கல்லால் அடித்து கொல்ல ஆணையிடுகிறது. அந்த பெண்ணின் துர்மரணத்திற்கு குற்றவுணர்ச்சி கொள்கிறான். தனக்காக உயிர் விட்ட இரண்டாவது நபர் என்று தன்னையே சாடுகிறான். அங்கிருந்து தப்பித்து செல்கிறான்.

சஹாக் :

சுரங்கத்தில் பாரபாஸிற்கு கிடைக்கும் நண்பன். அவன் கிறிஸ்துவின் கதை கேட்டு அவர் மீது பற்று கொள்கிறான். தினமும் பிரார்த்திக்கிறான். பாரபாஸ் தன்னுடைய கதையை சுருக்கமாக சொல்லி கடைசியாக தான் பார்த்த கிறிஸ்துவின் உருவ அமைப்பை விவரிக்கிறான். இருவரும் நண்பர்களாகின்றனர். அவர்களுக்கான அடிமைப் பட்டயத்தில் ஏசு கிறிஸ்துவின் பெயரை பொறித்துக் கொள்கின்றனர். இது நடந்த சில காலத்திற்கு பிறகு அரசால் இருவரும் அழைக்கப்படுகின்றனர். அதில் பட்டயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் காரணமாக தண்டனையின் பாதையில் இருவரும் இருக்கின்றனர். இந்நிலையில் சஹாக் தான் ஏசுவின் அடிமை என்று கூற சிலுவையில் அறையப்படும் தண்டனையைப் பெறுகிறான். பாரபாஸோ தன் சந்தேகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனக்கு ஏசுவின் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்லி தப்பிக்கிறான்.

இவ்விரு கதாபாத்திரைத்தை குறிக்கவே சற்று விரிவாக எழுத நேரிட்டது. கதையின் போக்கில் மேகுறிப்பிட்ட பகுதிக்கு பின் அவன் ரோமாபுரிக்கு சென்ரு கிறிஸ்துவர்களுடன் இணைந்து ரோமாபுரியை எரிக்கும் சம்பவத்தில் பயணம் சேர்வதாக நாவல் நீள்கிறது. காலத்தைக் கடந்தும் பாரபாஸின் நாவல் நிலைத்து நிற்கும். அதற்கு மூலக் காரணம் இந்நாவல் பேசும் இரண்டு முக்கியமான அரசியல் கூறுகள். அவற்றை பிரதிபலிக்கக்கூடிய இரண்டு கதபாத்திரங்களே மேற்கூறியவையாகும்.

கிறிஸ்து இறப்பதற்கும் கிறித்துவம் எனும் மதம் பெருவாரியான நிலப்பரப்பை ஆக்ரமிப்பதற்கும் இடையில் நிகழும் கதைக்களம். அரசர்களே மக்களின் கடவுளாக கருதப்பட்ட காலம். ஆணை இடுபவன் ஆண்டவன் எனும் நிலை நிலவுவதால் வேறொரு மதம் பரவுவதை அரசதிகாரம் ஏற்பதில்லை. அதை முடக்கவே முயற்சிக்கின்றனர். மதத்தை அரசு வளர்க்கிறது. அரசிற்கு ஏற்றாற் போல மதம் வளைக்கப்படுகிறது. ஒருவேளை மக்கள் தடம் மாறி செல்வதாக அரசிற்கு சந்தேகம் வந்தால் மதத்தின் வழியாகவே மற்றொரு மதத்தை அழித்தொழிக்கும் செயலையும் அரசு செய்யும். இவை காலம் கடந்தும் நிகழ்ந்து கோண்டிருக்கும் விஷயமாகவே கருதுகிறேன். இந்தியாவில் நிகழும் மதவாத அரசியலும், இலங்கையில் நிகழும் பௌத்த-இஸ்லாமிய மோதலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஊடாடியிருக்கும் தீவிரவாத கும்பல்களின் சித்தாந்தங்களிலும், பாரபாஸில் ஆசிரியர் முன்வைக்கும் அரசியல் துளியும் மாறாமலிருக்கிறது. அதில் பாரபாஸின் நிலை என்ன ?

அதுவே மதம் கொள்ள வேண்டிய மற்றொரு அரசியல். அன்பை போதிப்பதே சகல மதத்தின் அடிநாதம். அந்த அன்பை போதிக்க ஏன் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும் ? கடவுள் எனும் உயர்ந்த பீடத்தை குறிப்பிட்ட மனிதருக்கு கொடுக்கும் அவசியம் என்ன ? இயற்கையிடமிருந்து அன்பை அடைய முடியாதா என்ன ? தன் பாவத்திற்காக ஒருவன் சிலுவையில் அறைகிறான் எனும் இடத்தில் அறியப்படமுடியாமல் இருக்கும் அறத்தை தேடி பயணப்படுகிறான் பாரபாஸ். ஏசுவின் மரணம் ஊரில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையே அவனது பயணம் முதலில் உணர்த்துகிறது. ஆனால் அதே ஊர் இவன் தான் பாரபாஸ், இவனுக்கு பதிலாகத்தான் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என அறிந்துகொள்ளும் போது இருவேறு விதமான வினைகள் எழுகின்றன. ஒன்று வெறுப்பு. மற்றொன்று கருணையை போதித்தல். இந்த இடம் சொற்களால் அவனுக்கு விளங்குவதில்லை. இதை சம்பவம் கொண்டு சொல்லலாம்.

சுரங்கத்தில் சஹாக்குடன் உரையாடிக்கொண்டிருக்கையில் இருவரும் பிரார்த்தனை செய்யும் நேரம் வருகிறது. சஹாக்கைப் பார்த்துக்கொண்டு அவனும் செய்கிறான். அப்போது அங்கு வரும் அடிமை ஓட்டி இருவரும் வேலை செய்யமல் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் கைவசம் இருக்கும் சாட்டையால் அடிக்கிறான். அப்போது பின்வருமாறு கதைசொல்லி பேசுகிறார்,

சிலுவையில் இறந்தவருக்காக பாரபாஸ் துயரம் அடைந்து தண்டிக்கப்பட்டது இதுதான் முதல் தடவை, தனக்குப் பதிலாக சிலுவையில் இறந்த மார்பில் மயிர் இல்லாத, வெளுத்த மெலிந்த தேகத்தினனாகிய அந்த ஞானிக்காக பாரபாஸ் அடிபட்டது அதுதான் முதல் தடவை”

அன்பை விளக்கும் இடத்தில் சொற்கள் தோற்றுவிடுகின்றன. அனுபவமே அன்பை அவனுக்கு போதிக்கின்றன. அன்பும் மனிதமும் எப்படி அறமாகிறது என்பதை அறிய அவன் செய்யும் நீண்ட நெடும் பயணமே பாரபாஸ். அவனுக்கான தெளிவை அடையும் இடத்தில் வாசகன் தன் தேடலைத் துவங்குகிறான். நாம் எல்லோரும் பாரபாஸாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் உணர்தலை நாவலின் போக்கு அடிக்கடி சுட்டிக் காட்டுகிறது. அரசாலும் அதிகாரத்தாலும் கோழையாக்கப்பட்டவன். நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களைத் தேடி சொல்புத்தியால் ஈர்க்கப்பட்டவன். அன்பைத் தேடி அவன் செல்லும் பாதையே அன்பை மெய்யுணர்த்தி செல்கிறது.

க.நா.சு தமிழுக்கு செய்த பெரும் கொடைகளில் இதன் முக்கியத்துவம் நிலைத்து நிற்கும். மேலும் “அன்பு வழி” என்று அவர் இட்டிருக்கும் தலைப்பு பாரபாஸின் வாழ்க்கையை சொலவடையாக்குகிறது. அன்பிற்கான போதாமைகளும் தேவையும் உலகில் நிலைத்து நிற்கும் வரை பேர் லாகர்க்விஸ்டின் பாரபாஸும் வாழ்வான்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக