நவீனத்தில் கவிழும் மரபின் நிழல்
கவிதை வாசிப்பு எனக்கு
மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும்
அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன். எது கவிதை அனுபவம் எனும் இடத்தில் கேள்வியுடன்
நின்றுவிடுகிறேன். கவிதையில் முன்னோடியான சி.மணியை வாசித்ததில்லை. என் சொந்த ஊரான சேலத்தை
சேர்ந்தவர். கவிதையின் மீது தீராத பற்றும் நவீன கவிதையுலகை வடிவமைத்ததில் பெரும் பங்கும்
வாய்க்கப்பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து “எழுத்தும் நடையும்
சி.மணி” எனும் தொகுப்பை மணல்வீடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கால சுப்ரமணியம் தொகுத்திருக்கிறார். இந்நூல் கவிதை விரும்பிகளுக்காக
மட்டும் அல்ல என்பதையும் சேர்த்தே சொல்லிவிடுகிறேன்.
சமகலாத்தில் விமர்சனம்
மீதான புரிதல் என்ன ? கதை சொல்வதும், அதற்குள் ஊடாடி இருக்கும் அரசியல் பேசுவதுமாகவே
அமைந்துவிடுகிறது. சமகால ஓட்டத்தின் வேகம் கொடுக்கும் சட்டகம் இது. கதை சொல்லுதலில்
இருக்கும் குறைபாடுகளை, மொழிக் குறைபாடுகளை பெரும்பான்மையானவர்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை.
அரசியலை பேசுவதில் கூட கதை பேசும் அரசியலை கதையிலிருந்து பிரித்தெடுத்து தனியே உரையாடுகிறார்கள்.
எனது வாசிப்பின் அடிப்படையில் கதைகள் தனி உலகம். அவை பேசும் அரசியலும் சமூகப் பிரக்ஞையும்
அக்கதையுலகிற்குள் வைத்ததே பேசப்பட வேண்டும். இதை உதாரணம் கொண்டு சொல்லலாம். அசோகமித்திரன்
மேடைப் பேச்சொன்றில் பின்வருமாறு கூறுகிறார். நான் ஆயிரம் விஷயங்கள் சொல்லலாம், ஆனால்
என் கதாபாத்திரங்கள் ஒரு விஷயம் தான் பேசும். கலைஞனிடம் இருக்கும் தெளிவான பார்வை இது.
வாசிப்பு தளத்திலோ கதாபாத்திரத்தின் ஒற்றை அரசியல் பிடிப்பும், கதைஞனின் பன்முகப்பட்ட
அரசியல் பிடிப்பும் ஒன்று சேர்கின்றன. பின் கதாபாத்திரம் கழற்றிவிடப்பட்டு ஆசிரியர்
மட்டுமே சிக்கிக் கொள்கிறார்.
படைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி
வைக்கப்படும் விமர்சனம் பிரதானமான கேள்வியொன்றை சந்திக்க நேர்கிறது. படைப்பு மரபின்பால்
நிற்கிறதா அல்லது நவீனம் நோக்கி நகர்கிறதா என்பதே ஆகும். மரபு மாறாதது ஆனால் அழியக்கூடியது
என்றும் நவீனம் தன்னை காலத்திற்கேற்ப தகவமைத்துக்கொள்வது எனும் புரிதலை நோக்கியே சி.மணியின்
விமர்சனப் பார்வை பரிகாசம் செய்கிறது. எது மரபு எது நவீனம் எனும் புரிதலுக்கு இவரின்
கட்டுரைகள் பேருதவி புரியவல்லவை.
மூன்று நிலவுக் கவிதைகள்
எனும் கட்டுரை எஸ்.வைத்தீஸ்வரனின் ‘கிணற்றில் விழுந்த நிலவு’, தி.சோ.வேணுகோபாலனின்
‘ஒட்டு’ மற்றும் ‘வெட்டு’, ஆகிய மூன்று கவிதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை ஒப்பு நோக்குகிறது.
நிலவு எனும் எளிய படிமத்தை கவிதைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது என்பதை
அவை எடுத்துரைக்கின்றன. இதைப் போன்றே இருக்கும் மற்றொரு நீண்ட கட்டுரை இலக்கியத்தில்
கண் வர்ணனை என்பதாகும். இந்தக் கட்டுரை சங்ககாலத்திலிருந்து பாடல்களை தரவுகளாக எடுத்துக்கொள்கிறது.
பின் அவற்றை காலவகைப்படுத்தி ஒவ்வொன்றிலும் கண்ணிற்கு எவை உவமையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன
எனும் விஷயங்கள் பட்டியலப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் புதிதாக உருவாகும் உவமைகளும்
தனித்து காட்டப்படுகின்றன. இறுதியாக நவீன கவிதையும் அதில் சொல்லப்படும் உவமையும் கோடிட்டு
காட்டப்படுகிறது. இவற்றின் வழியே ஓர் உவமை எதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும்,
எதன் அடிப்படையில் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனும் தகவல்களை பெற முடிகிறது.
மேலும் நவீன கவிதைகளில் கையாளப்படும் உவமைகள் மரபின் நீட்சி என்பதையும் கட்டுரை பேசுகிறது.
சி.மணி கட்டுரைகளின் பேசுபொருளாக மரபும் நவீனமும் மோதும் இடங்கள் அமைகின்றன.
எலியட்டைப் பற்றி நீண்ட
ஆய்வுரை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அந்த கட்டுரையும் மரபிற்கும் நவீனத்திற்குமான
தொடர்பை வேறு கோணத்தில் அணுகுகிறது. கவிதை நாடகங்கள் அருகிப் போன காலத்தில் அதை மீட்டுருவாக்கம்
செய்தவர் எலியட் எனும் குறிப்பு கட்டுரையில் இடம்பெறுகிறது. அதர்கு மரபு எவ்வாறு துணை
புரிகிறது என்பதையும் நவீனம் மரபிலிருந்து எவ்வாறு உருவாகிறது என்பதையும் எலியட்டின்
கதைப் போக்கை முன்வைத்து தீர்க்கமாக பேசுகிறார். இந்த மூன்று கட்டுரைகளும் நவீனம் மரபை
கொண்டிருக்கிறது என்பதும் மரபை விரிவாக்குவதே நவீனத்தின் நோக்கம் என்பதையும் எளிதில்
கண்டுணரமுடிகிறது. அதை விளக்க, அல்லது பல்முனையிலிருந்து அவற்றை ஆய்வு செய்யும் சி.மணியின்
உழைப்பு விமர்சனம் மீதான சமகாலப் பார்வையை கேள்விக்குட்படுத்துகிறது.
இந்த தன்மையை திரைப்பட
பாடல்களிலும் பொருத்திப் பார்க்கிறார். திரைப்படப் பாடல்களில் காணப்படும் எதுகை, மோனை,
இயைபு போன்ற இலக்கிய நயங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அதிலும் நவீன பாடல்களில் தென்படும்
வறட்சியை சாடுகிறார். மரபு சார்ந்த புரிதலின்மை நவீனத்தை தோற்றுவிக்காது எனும் பாடம்
ஒவ்வொரு கட்டுரையின் வழியேவும் தென்படுகிறது.
கவிதை, சிறுகதை, கட்டுரை,
நேர்காணல் என வேறு வேறு வடிவங்களில் சி.மணியின் ஆளுமை நூலில் வெளிப்பட்டிருந்தாலும்
கட்டுரையே எனக்கான சி,மணி சார்ந்த அறிமுகமாக தென்படுகிறது. விமர்சனம் சார்ந்த ஈர்ப்புடையவர்களுக்கான
பாடபேதமாக நிச்சயம் இந்நூல் அமையும். அற்புதமான வடிவமைப்பை நல்கிய மணல்வீடு பதிப்பகத்திற்கு
அன்பும் நன்றியும்.