போர்ஹெஸ் - காலத்தின் செயல்பாடு

மேற்கு கிழக்கு எனும் வகைப்பாடுகள் இலக்கியத்திற்கும் பொருந்தும். இரண்டு வகையான கலாச்சாரங்களையும் அதிலிருந்து முளைத்த இலக்கிய வடிவங்களையும், அதைப் பயன்படுத்தி எழுதப்பட்ட பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளையும் வாசகன் வாசித்து, அதனுடன் வாழ்கிறான். ருஷ்ய இலக்கியங்கள் வாழ்க்கையை விசாரணை செய்த வகைமையில் லத்தின் அமேரிக்க இலக்கியங்களும் விசாரித்திருக்கின்றன. மக்களின் உளவியலில் சிக்காமல் ஓடும் நினைவோடைகளுக்கு நவீன முகத்தை, வடிவத்தை கொடுக்க முனைந்தது லத்தின் அமேரிக்க இலக்கியம். அந்த வடிவம் அங்கிருந்த அரசியல் சூழல் மற்றும் அவர்களின் சமகால வாழ்க்கையிலிருந்து எழுந்தவையாகும். மரபார்ந்த கதைசொல்லலிருந்து விடுபட்டு மாறுபட்ட கதைக்கூறலை நிகழ்த்தியதில் லத்தின் அமேரிக்க இலக்கியங்களுக்கு பெரும் பங்குண்டு. பல நாடுகளில் நிகழும் சோதனை முயற்சிகளுக்கும் முன்னோடியாக அவ்விலக்கியங்களே திகழ்கின்றன.

அவ்விலக்கியங்களுள் போர்ஹெஸின் எழுத்துகள் ஓர் மைல்கல். வடிவ ரீதியான முயற்சிகளாக முதல் வாசிப்பில் தெரியும் எழுத்துகள், தொடர் வாசிப்பில் படிமங்களின் குவியலாக, வரலாற்றின், புராணீகங்களின் நவீன முகமாக காட்சியளிக்கத் துவங்கிவிடும். உலகம் முழுக்க வீசப்பட்ட போர்ஹெஸின் அலையில் தமிழகமும் தப்பவில்லை. மீட்சி, கொல்லிப்பாவை இதழ்கள் வெளியான சமயங்களில் தீவிரமான மொழிபெயர்ப்புகளும், அறிமுகங்களும். இலக்கிய உரையாடல்களும் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன. இவை லத்தின் அமேரிக்க இலக்கியங்கள் சார்பாக நிகழ்ந்தவை. அதில் பெரும்பான்மையாக பேசப்பட்டவர்களுள் ஒருவர் போர்ஹெஸ். அவருடைய அலை சமகாலத்திலும் நீடித்து இருக்கிறது.

போர்ஹெஸின் எழுத்துகளை மீட்சி இதழின் இணைய வடிவத்தில் வாசிக்க முடியும். பல வருடங்களாக அக்கதைகள் நூல் வடிவம் பெறாமல் இருந்திருக்கின்றன. பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியன அடங்கிய தொகுப்பை சமீபத்தில் யாவரும் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கெட்டி அட்டையில் செவ்வியல் படைப்புகளுக்கே உண்டான மெருகேற்றுதலுடன் நூலை செழுமையாக வடிவமைத்திருக்கின்றனர். நூலிற்குள் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் கூட போர்ஹெஸ் கதைகள் கொடுக்கக்கூடிய மனநிலையுடன் சீர்மையில் இயங்கக்கூடியவை. மேலும் அவருடைய கதைகளின் Abstract உருவங்களை உருவகப்படுத்துகின்றன அவ்வோவியங்கள்.போர்ஹெஸ் போன்ற செவ்வியல் தன்மை வாய்ந்த, உலகம் முழுக்க நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களை ஓர் மொழிக்குள் கொண்டு வரும் பொழுது அந்த நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது. நூலின் தொடக்கத்தில் பிரம்மராஜனின் நீண்ட கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அந்த கட்டுரை போர்ஹெஸின் வாழ்க்கைக்குறிப்புகளை பேசுகின்றன. அதை மட்டுமே பேசக்கூடிய கட்டுரையாக அல்லாமல் அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து இலக்கியத்திற்கான சரடு எப்படி உருவானது எனும் நுண்மையைப் பேசுகிறது. மேலும் வாசகனாக போர்ஹெஸை அணுகிய பொழுது கண்டடைந்த விஷயங்களையும் கட்டுரையில் உள்ளடக்கியிருக்கிறார். நூலின் தொடக்கத்தில் இடம்பெறுவதால் போர்ஹெஸ் சார்ந்த கோட்டுச்சித்திரத்தை அக்கட்டுரை கொடுத்துவிடுகிறது. பின் அவருடைய சிறுகதைகள் ஆரம்பம் கொள்கின்றன.

போர்ஹெஸின் சிறுகதைகள் சார்ந்து பொதுமையாக எழுப்பப்பட்ட வாதங்கள் புரியாத் தன்மையிலிருந்து துவங்குகிறது. சிடுக்கான மொழியையும், அதன் வழியே புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்தும் கதையை எழுதியவர் எனும் சொல்லாடல்கள் கேட்க முடியும். போர்ஹெஸின் கதைகள் கைப்பிடித்து அதன் உலகிற்குள் நம்மை அழைத்து செல்லக்கூடியவை. பொறுமையுடன் அவர் புனைவில் தன் உலகத்தை சித்தரித்திருக்கிறார். அதில் மனிதர்களின் பிரக்ஞையை புனைவாக்குகிறார். மனிதர்கள் கொள்ளும் உணர்வு சார் விஷயங்களைப் புனைவிற்குள் கதைமாந்தர்களாக கொண்டு வரும் பொழுது, அவை உளவியல் சிக்கலின் பின்புலத்தை அடையத் துவங்குகிறது. அங்கே கதைமாந்தர்களுக்கு உள்ளேயே ஓர் உரையாடல் ஆரம்பித்துவிடுகிறது. இந்த சுயாதீன உரையாடலின் வழி ஓர் தேடலை ஒவ்வொரு கதையின் வழியேவும் போர்ஹெஸ் நடத்திச் செல்கிறார்.

இவர் கதைகளில் வடிவம் சார்ந்த நுட்பங்கள் காலம் கடந்தும் சவால் நிரம்பியதாய் இருக்கிறது. ஒவ்வொரு தகவல்களிலும் இடைவெளிகள் இருக்கின்றன. அது நபர் சார்ந்த குழப்பமாகவும், சமப்வங்களுக்கு இடையிலான காலமாகவும் இருக்கக்கூடும். ஆனால் ஒவ்வொரு தகவலின் பின்னும் இந்த இடைவெளி ஓர் கதையை விட்டுச் செல்கிறது. அந்த இடைவெளி பேசும் கதைகளையே போர்ஹெஸின் புனைவுகளில் பார்க்க முடிகிறது. நூல் விமர்சன அளவிலும், எழுத்தாளர் சார்ந்து ஆய்வு செய்வதன் நோக்கிலும், கனவு காண்பதன் வழியிலும், ஓர் இடத்தை வர்ணனை செய்வதன் வழியிலும் கதையை நகர்த்துகிறார்.

அனைத்து வகையான கதைகளிலும் ஒரு ஒற்றுமையை இனங்காணமுடிகிறது. அனைத்து கதைகளும் முடிவுறாத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் தன்னிலையிலிருந்து துவங்கி தனக்குள்ளேயே ஓர் பயணத்தை மேற்கொள்ளும் கதைகளாக அமைகின்றன. மொத்த உலகையும் தனக்குள் அல்லது ஒற்றை புள்ளியுள் அடக்க முனையும் பொழுது புள்ளி எனும் அடையாளம் பெரும் வெளியாக உருவெடுக்கிறது. இந்த கற்பனையான மாற்றத்தை புனைவின் வழி கொடுக்கிறார். இந்திய ஞான மரபு முன்வினைப்பயன்களை தீவிரமாக பேசுகிறது. அதன் அடிப்படையில் காலத்தின் ஓட்டத்தில் இந்த உயிர் வேறு வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மதமும் மரணம் சார்ந்த கூற்றுகளை மனிதர்களுக்கு பயிற்றுவிக்கிறது. அவை மனிதன் நித்தியமானவன் எனும் விஷயத்தை மறக்க வைத்துவிடுகிறது. மனிதன் தான் நித்தியமானவன் என்பதை ஏன் நினைவில் கொள்ள வேண்டும் ? நித்தியத்துவத்தின் தேவை என்ன ? முதலிய கேள்விகளுக்கு போர்ஹெஸின் புனைவுகள் சாட்சியாய் நிற்கின்றன.

புனைவில் இருக்கக்கூடிய அதே சுவாரஸ்யத்துடன் அவரது கட்டுரைகளும் அமைகின்றன. கட்டுரைகளின் வழியேவும் மானுடத்தின் நீட்சியை கணக்கிட முயல்கிறார். வாசித்து தான் கொண்டாடும் நூல்கள் சார்ந்து எழுதிய சில கட்டுரைகளின் மொழிபெயர்ப்பும் நூலில் கிடைக்கிறது. அவற்றின் வழியே இலக்கிய உலகின் நுட்பங்களை வாசகனால் எளிதில் இனங்காண முடிகிறது. அதற்கு மேலும் உதவி புரியும் வகையில் தன்னுடைய கதைகள் எழுதியதன் பின்னணியையும் சில கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். அதன் மொழியாக்கமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

நூலில் பிரம்மராஜனின் இரண்டு கட்டுரைகள் (முதலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்து) வாசிக்கக் கிடைக்கின்றன. ஒன்று விலங்கியல் சார்ந்த போர்ஹெஸின் அறிதல்/புரிதல்/புனைவு பற்றியது. புதிய விலங்குகளை கதையில் உருவாக்கியவர் போர்ஹெஸ். ஆனால் அவை எப்படி வரலாற்று/புராணீகச் சிறப்பு பெற்றவை எனும் அறிமுகத்தை அவை கொடுக்கிறது. மற்றொன்று அவரது கவிதைகள் சார்ந்த வரலாறு. புனைவிற்குள் செய்த சோதனை முயற்சிகளைக் கவிதைகளிலும் செய்திருக்கிறார். இறுதியாக நூலில் போர்ஹெஸின் கவிதைகளும் இடம்பெறுகின்றன. சின்னச் சின்ன வாக்கியங்களில் மானுடத்தின் நித்தியத்தன்மையை, புனைவுகளின் சாட்சியாய் நீடித்திருக்கும் மனித இனத்தை கவித்துவமாக்குகிறார். மேக்பெத் எனும் தலைப்பிலான கவிதையை மொத்த போர்ஹெஸுடைய புனைவுலகின் எளிய சாட்சி எனக் கருதுகிறேன். அக்கவிதை,

மேக்பெத்
நம் செயல்கள் முன்தீர்மானிக்கப்பட்ட வழியில் தொடர்கின்றன
அவை ஒரு முடிவினை அறியாதவை.
நான் என் பேரரசனை வாளால் வெட்டினேன்
ஷேக்ஸ்பியர் தனது துன்பியல் நாடகத்தின் கதைத்திட்டத்தை தீட்டும்படி.

போர்ஹெஸ் சார்ந்த பன்முக அறிமுகத்தை செவ்வியல் தன்மை குன்றாமல் அளிக்கிறது தமிழ் வடிவம். புதிய வாச்கர்களுக்கு நவீன கதை உலகையும், எழுத முனைபவர்களுக்கு  நவீனம் சார்ந்த புரிதலையும் அளிக்கிறது இத்தொகுப்பு. நேர்த்தியக வெளியிட்டிருக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.


பி.கு : நூலில் ஆங்காங்கு தெரியும் எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பிற்குள் தவிர்க்க முயலலாம். அற்புதமான வடிவமைப்பில் நெருடலாக அமைகின்றன பிழைகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக