Home
Archive for
January 2018
உலகம் விநோதமானவர்களின் கூடாரம்
பாலசுப்ரமணியன் பொன்ராஜின்
சிறுகதைகளுடனான வாசிப்பனுபவம் கல்குதிரையின் வாயிலாக இருமுறை நிகழ்ந்தது. வலை எனும்
சிறுகதையை முதன்முதலாக வாசித்த பொழுது கோணங்கியுடன் அந்தக் கதை சார்ந்து பேசத் துவங்கினேன்.
அது பொன்ராஜின் செவிகளுக்கு சென்றதா எனத் தெரியவில்லை. ஆனாலும் குறைந்தது ஒரு மாத காலம்
அந்தக் கதையை தெரிந்த நண்பர்களிடமெல்லாம் கூறிக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த கல்குதிரை
வந்த உடனேயே பொன்ராஜின் கதைகளை தேடினேன். தந்திகள் என்றொரு கதை இடம்பெற்றிருந்தது.
வலையின் அளவு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லையெனினும் அதனுள்ளிருந்த நவீனம் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் சார்ந்து எனக்குள்ளிருந்த பிம்பத்தை உயர்த்திப் பிடித்தது.
முழு சிறுகதை தொகுப்பாக
“துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”யை வாசிக்கும் போதும் அந்த பிம்பம் சிதைவுறாமல்
இருப்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் சமகாலத்து எழுத்தாளர்களுக்கான
சவாலாகவும் இத்தொகுப்பு அமைகிறது. இடம்பெற்றிருக்கும் அனைத்து சிறுகதைகளும் ஒவ்வொரு
வகையான சோதனை முயற்சிகள். அத்துணையும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் இருக்கும் க்ளாஸிக்குகள்
என கூறப்படும் அனைத்து எழுத்தாளர்களின் நூல்கள் வழியேவும் கதை நிகழும் காலத்திற்கேற்ற
கலாச்சாரத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். மோகமுள் நாவலின் முன்னுரையில் தஞ்சாவூரின்
தெருக்கள் வழியே பயணித்ததை சுகுமாரன் எழுதியிருப்பார். இன்று நம்மால் அப்படியான பயணத்தை
மேற்கொண்டு காண நினைத்தாலும் நாவலில் இருக்கும் பல விஷயங்கள் நாவலுடனேயே அமிழ்ந்து
போயிருக்கக்கூடும். அந்நேரத்தில் நாவல் ஏதோ ஒரு வகையில் ஆவணமாக மாறுகிறது.
இந்த ஆவணத்தை தற்செயல்
நிகழ்வு போல் புனைவினூடே உருவாக்க சமகாலம் சார்ந்த நுண்மையான அறிவும் மரபு சார்ந்த
தெளிவும் அவசியமாக தேவைப்படுகிறது. சமகாலத்தில்
இருக்கும் அப்பாக்களின் குழந்தைப் பருவத்திற்கும் இப்போதைய குழந்தைகளின் உலகிற்கும்
இடையே இருக்கும் தூரம் கணக்கிலடங்காதது. காலம் தன் பொறுமையை இழந்து ஏதோவொரு அவசரகதியில்
இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்த அவசரத்தினுள்ளே தான் நவீனம் அடங்கியிருக்கிறது. அதை
ஒவ்வொரு சிறுகதையிலும் வைத்திருப்பதால் நவீனத்திற்கான ஓர் ஆவணமாக பாலசுப்ரமணியன் பொன்ராஜின்
கதைகள் உருமாறுகின்றன.
நவீனம் மற்றும் மரபு சார்ந்து
தெளிவான பார்வையை “புடவு” எனும் கதையில் பதிவு செய்கிறார். மூவர் சமணர்களின் குகைகளை
பார்க்க செல்கின்றனர். அதன் வழியே மரபு சார்ந்த தத்துவங்களுக்கும் இப்போதைய சமூகம்
எதிர்நோக்கும் வாழ்வியல் முறைகளுக்குமான வேற்றுமைகளை வசனங்கள் வாயிலாக பதிவு செய்கின்றனர்.
அதில் அகஸ்டின் எனும் பாத்திரத்திற்கு தொன்மங்கள் மீது அதீத ஈடுபாடு கிடையாது. அவன்
கூறுவதாக அற்புதமான வரியொன்று சிறுகதையில் வருகிறது,
“தீர்த்தங்கரர்களோட சிலைகளைப் பார்க்கறதோ, கற்கால மனிதர்களோட
ஓவியங்களைப் பார்க்கறதோ எனக்கு கிளர்ச்சியேயில்லை. இதெல்லாம் பழைய களிமண் வீடுகள் மாதிரி.
மக்கள் எப்பயெல்லாம் இயங்கினாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு வழி. கண் முன்னாடி நிக்கிற சேணம்
ஏத்திய குதிரையை ஓட்டுரத விட நீங்க பேசும் லாஸ்கோ குகையின் ஓவியக் குதிரைகளைப் பார்க்கறது
எனக்கு விருப்பமில்லை”
இந்தக் கதை முழுக்க மரபுகள்
எப்படி அன்றாடங்களோடு பிண்ணிப்பிணைந்திருக்கிறது என்பதை விரிவாக சொல்கிறார். அதே நேரம்
எத்தருணத்தில் நிச்சயம் அது உடைபட வேண்டும் என்பதையும் விவரிக்கிறார். மரபுகள் எப்போதும்
காலாவதியாகக்கூடியது. இல்லையெனில் நவீனத்திற்கான இடம் இல்லாமலேயே போயிருக்கும். அது
ஓர் சுழற்சி முறை.
உடற்பயிற்சி நிலையத்திற்கு
செல்பவர்கள், உடைந்து போன பூர்ஷ்வா கனவு, ஜங்க் போன்றவை மேற்கூறிய நவீனத்தின் நுண்மைகளை
இதுவரையில் சிறுகதைகளில் முகம்காட்டாத மனித சிந்தனைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.
உதாரணத்திற்கு டாட்டூ குத்தும் நபர் கதையின் பகுதியில் வருகிறார். ஒரு கதாபாத்திரம்
பின்வருமாறு சொல்கிறது,
“ஒரு சிக்கன் லெக்பீஸின் அளவிற்கோ, போர்னோகிராபியைப் போன்றோ
கடவுள் ஒன்றும் அவ்வளவு சுவாரஸ்யமானவரில்லை”
இதைத் தொடர்ந்து போர்னோகிராபிக்காக
இச்சமூகம் நிகழ்த்தும் அனைத்து செயல்பாடுகளையும் விவரிக்கிறார். உடற்பயிற்சி நிலையத்திற்கு
செல்பவர்கள் கதையில் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இழந்த சமூகத்தின் வேகத்தை எடுத்துரைக்கிறார்.
காலம் நகர்வதற்கு ஒருபோதும் அனுமதி கேட்பதில்லை. அதற்குள் நம்ப வேண்டியவற்றை நம்பியும்
உதறித் தள்ள வேண்டியவற்றை உதாசீனம் செய்தும் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்குள்ளிருந்து
உறவுகளும் தப்பிப்பதில்லை என்பதை கதை வாசிக்கும் போது நன்குணர முடிகிறது.
உடைந்து போன பூர்ஷ்வா கனவு
சிறுகதை சமகாலம் எப்படி பொருள்முதல்வாத அடிமைகளாக மாறிப் போயிருக்கிறார்கள் என்பதை
நுண்மையாக காட்டுகிறது. நமக்கு கிடைக்கும் பரிசு கூட குடும்ப பொருளாதாரத்தின் அங்கமாக
நினைக்கும் மனோபாவம் நவீன அபத்தத்தினுள் ஒன்று. அன்பு கூட இங்கே பணத்தினோடு எடை போடப்படுகிறது.
குறிப்பாக அந்தச் சிறுகதையின் முடிவு மானுட அபத்தமாக மாறுகிறது. காலம் மாறுகையில் இந்த
காலத்தின் மீதான பகடியாக இக்கதை மாறக்கூடும். அவ்வகையில் கதையும் அதன் முடிவும் அமைந்திருக்கிறது.
எந்த அளவு பௌதீக அடிப்படையில்
நவீனத்தின் உருவத்தை கொடுக்க முனைந்திருக்கிறாரோ அதே அளவு சிந்தனை ரீதியிலும் நவீனத்தின்
உருவத்தை கொடுக்கிறார். மாய யதார்த்தவாத கதைகள் அருகி வரும் காலத்தில் அதன் மைய நோக்கத்தை
சிதறவிடாமல் மிகச்சரியாக கையாண்டிருக்கிறார். இதுவரையிலான கட்டுரையில் எப்படி இந்த
சிறுகதைத் தொகுப்பை நவீனத்திற்காக பேசினேனோ அதே அளவு மாய யதார்த்தவாத கூறுகளுக்காகவும்
பேச வேண்டும் என்பது தான் உண்மை.
இதனை சொல்ல முனையும் போது
இரண்டு கூற்றுகள் நினைவில் எழுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய சிறுகதை முகாமில் மாய
யதார்த்தவாதத்தை விவரித்திருந்தார். இயல்பாக நிகழ வேண்டிய விஷயம் நிகழாமல் போய்விடுகிறது.
அது சந்தோஷத்தை தருமாயின் ஃபேண்டஸியாகவும் பயத்தை தருமாயின் அமானுஷ்யமாகவும் மாறும்
என்றார். உதாரணமாக அவர் சொன்னது டம்ளரில் இருக்கும் நீரினை அருந்திய பிறகும் நீர் அதில்
மீதமிருக்குமாயின் அதுவே மாய யதார்த்தவாதம்.
இதிலிருந்து வேறு சில விஷயங்களை
நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அஃதாவது மாய யதார்த்தவாத அம்சத்தினை முன்வைக்க அடித்தளமாக
யதார்த்த கதையமைப்பு நிச்சயம் தேவைப்படுகிறது. சிறுகதை தொகுப்பின் முதல் கதையான தந்திகள்
கதையிலேயே இதை அருமையாக கையாள்கிறார். ஈரான்காரிக்கு பூனையை கத்தியால் அறுப்பதால் பூனை
எழுப்பும் சப்தம் கேட்கிறது. அதை நம்பிக் கொண்டு பக்கத்துவீட்டிற்கு சென்று பார்க்கிறாள்.
அங்கே ஒரு பூனை இறந்து கிடக்கிறது. கூர்முனை கொண்ட புதிய கத்தியும் இருக்கிறது. இதில்
கதையானது ஒரு கதாபாத்திரத்தின் கற்பனையில் துவங்கி நிஜத்தில் நகர்கிறது. நிஜம் யாதெனில்
இறந்து கிடக்கும் பூனை இறந்து நாட்களாகின்றன. ஆனாலும் அழுகவில்லை. இனிமேல் சம்பாஷணைகளில்
கதை நகரும்.
இங்கு நிறுத்தியதன் காரணம்
சிறுகதையில் ஒரு வரி வருகிறது. அது பூனையை அறுத்து பார்க்கலாமே எனும் எண்ணம் வரும்
போது அந்த பெண் சொல்கிறாள்,
“அழுகாத பூனையின் உடலை அறுக்கவும் முடியாது”
கதை தனக்கென ஒரு உலகை நிர்மாணித்துக்
கொள்கிறது. அதனூடே வாசகன் பயணிக்கிறான். மனிதன் கற்பிதங்களின் மேல் வைத்திருக்கும்
நம்பிக்கை அவனை வேறொரு கற்பிதத்திற்கு இட்டு செல்கிறதே அன்றி உண்மைக்கு அல்ல என்பதை
தீர்க்கமாக பதிவு செய்கிறார்.
இரண்டு கூற்று என சொல்லியிருந்தேன்.
அதில் இரண்டாவது லக்ஷ்மி சரவணகுமாரினுடையது. அகரமுதல்வன் எழுதிய இரண்டாம் லெப்ரினன்ட்
சிறுகதை தொகுதிக்கான முன்னுரையில் லத்தின் அமேரிக்க இலக்கியத்தினின்று அமைப்பினை மட்டுமே
எடுத்துக் கொண்டுள்ளோம். மாற்றாக அதற்கு பின்புலமாக அமைய வேண்டிய அரசியல் தேவையை மற்நதுவிட்டோம்
என்றிருப்பார். இத்தொகுப்பு அதை செவ்வனே செய்கிறது.
நாளை இறந்து போன நாய் மற்றும்
பன்னிரெண்டுமரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு ஆகியன அவ்வகையிலான சிறுகதைகள். முதலில்
குறிப்பட்ட கதையில் நாயகன் நாயையே வளர்க்கவில்லை. ஆனால் அவன் நாய் இறந்துவிட்டதாக சம்பவங்கள்
அரங்கேறுகின்றன. அதை நேரடியாக சொல்லாமல் நான் – லீனியர் முறையில் சொல்லியிருக்கிறார்.
இதே முறை தான் இரண்டாவதாக குறிப்பிட்ட கதையிலும். ஆனால் சிறுகதை என்பதைவிட அது நீண்ட
கவிதை என்று சொன்னாலும் தகும்., நாம் அன்றாடம் கவனிக்க மறக்கும் பொருட்கள் சார்ந்தும்
அல்லது மனிதனின் கவனத்தில் சிக்காமல் கடந்து போகும் இயற்கையின் மரணங்கள் சார்ந்தும்
எழுதியிருக்கிறார். துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை பெசண்ட் நகரில் நுழையும் கப்பலின்
விளைவுகளால் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு வரலாறும் சில ஆவணங்களும் துணைகோலுகிறது.
மையத்தை வைத்து பொன்ராஜ் விவரிக்கும் உலகம் தான் வாசிப்பின் ஆழத்திற்கு நம்மை இட்டுச்
செல்கிறது. உதிரிகளின் மீது செலுத்தப்படும் கவனம் நாம் உயர்வாக நினைப்பவற்றை ஒரு கணத்தில்
உதிரியாக்கிவிடுகிறது.
இவையெல்லாவற்றையும் கடந்து
தனித்து நிற்கும் கதை “வலை” எனும் சிறுகதை. மாய யதார்த்தவாத சிறுகதைகளுக்கு அறிவியல்
எப்போதும் துணைகோலுகின்றன. அதே நேரம் ஏற்கனவே சொல்லப்பட்ட எளிமையான கதைகளுக்கான மறுவடிவம்
இவ்வகையிலான கதைகளில் தேவைப்படுகிறது. காலத்தை அளக்கும் கருவியினை கண்டுபிடிக்க முனையும்
மூவரின் பயணமாக இக்கதை நகரத் துவங்குகிறது. காலத்தின் வழியே வாசகன் கண்டடையும் பாத்திரங்களும்
தரிசனங்களும் எண்ணிலடங்காதவை. அதிலும் ஜெசியா எனும் பாத்திரம் வாசித்து முடித்த பின்னும்
என்னுள் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி எந்த பாத்திரம் பேசினாலும் அது இந்தக் கதையின்
வெற்றியாக இருக்கும். மேலும் கதையினூடே வைத்திருக்கும் அசல் மற்றும் நகல் சார்ந்த தத்துவார்த்த
துவந்துவமும் அதற்கான கிளைக்கதைகளும் இச்சிறுகதையை காலத்திற்கும் சிறந்த கதையாக உயர்த்தி
வைக்கிறது.
மொத்தமாக இச்சிறுகதை தொகுப்பு
குறிப்பிட்ட காலத்தின் ஆவணம். சிலருக்கு இதனுடனான உரையாடல் கசப்பானதாக இருக்கலாம்.
முரண்பட்டு பிரியலாம். ஒத்திசைந்து கொண்டாடலாம். எப்படிப்பட்ட எதிரிவினைகளைக் கொண்டாலும்
இந்நூல் அதனளவில் துகிலுரிக்கப்பட்ட நவீன ஆவணமாக எப்போதும் திகழும். ஆசிரியரே ஓரிடத்தில்
குறிப்பிடுகிறார். இவ்வுலகம் விநோதமானவர்களின் கூடாரம் என. அந்த விநோதமானவர்களின் இடையே
சில சாமான்யர்களும் உயிர் வாழ்கிறார்கள். அந்த இரு வகையான மனிதர்களும் கலந்த கதைத்
தொகுப்பு தான் இந்நூல்.
Subscribe to:
Posts
(
Atom
)