நாடகங்களுக்கான அறிமுகம்
நான் நாடகம் பார்த்ததில்லை.
ஒரே ஒரு முறை குகைமரவாசிகள் எனும் நாடகத்தை கோணங்கியின் அழைப்பால் பார்க்க நேர்ந்தது.
நாடகம் சார்ந்த அறிமுகம் என்வசம் இல்லை என்றே நினைக்கிறேன். நாடகம் எனும் கலையை புரிந்துகொள்ளுதலில்
எனக்குள் சில சிக்கல்களையும் உணர்கிறேன். மேலும் நாடகம் சார்ந்து எனக்குள் இருக்கும்
அறிமுகமெல்லாம் தேவிபாரதி எழுதிய குறுநாவலான “அ.ராமசாமியின் விலகல் தத்துவம்” தான்.
அக்குறுநாவல் சிறுகதையை நாடகமாக்கும் முயற்சிதான். அதன் மாற்றங்கள் இருவேறு கலைவடிவங்களுக்குள்
எப்படி ஊடாடுகிறது என்பதை நுட்பமான சித்திரமாக்கியிருப்பார். இந்நிலையில் வெளி ரங்கராஜன்
எழுதிய “நாடகம் நிகழ்வு அழகியல்” எனும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கும் அதிகக் கழிவான புத்தகங்களின்
பட்டியலில் எப்போதும் வலம் வருவேன். நிச்சயம் சில நல்ல புத்தகங்கள் கண்டுகொள்ளப்படாமல்
போனதால் அவ்விடம் சேர்ந்திருக்கும் என்று எனக்குள் இருக்கும் நம்பிக்கையே அப்பக்கம்
என்னை செல்ல வைக்கும். அதன்வழி கிடைத்த அற்புதமான நூல் இது.
இலக்கியம் வாசித்து முடிக்கப்படும்
பொழுது கற்பனையின் அளவில் உருவிலும், முழுமையாக ஓர் கருத்தாகவும் சுருக்கம் கொள்கிறது.
ஆனால் சிறுகதையின் மற்றொரு பரிணாமம் வாசகனின் சிந்தனையைப் பொறுத்தே உருக்கொள்கிறது.
இந்த நிலையிலிருந்து இலக்கியப் பிரதிகளை மேம்படுத்தவே நாடகங்களும் நிகழ்த்துக் கலைகளும்
அரங்கேற்றப்படுகின்றன எனும் வாதத்துடன் இந்நூல் துவங்குகிறது.
மேலும் நிகழ்த்துக்கலைகள்
பார்வையாளர்களின் மனதை வெகு எளிதாக தீண்டிவிடுகிறது. வரலாற்று சாட்சியங்களுடனும் அதற்கான
விளக்கங்களை அளிக்கிறார். பூர்வக்குடி மக்களிடமிருந்து கொணரப்பட்ட நிகழ்த்துக்கலைகள்
அவர்களின் துன்பங்களை துடைக்க வண்ண விஷயங்களை பாடல்களில் வடித்தது என்கிறார். மேலும்
சொல்லில் அடங்கியிருக்கும் வடிவத்தை பாடலும் குரலும் நாடகமும் பிரதிபலிக்கின்றன. கலைவடிவம்
மனிதர்களுக்கானது மானுடத்திற்கானது.
புரிசையில் நிகழ்ந்த நாடகத்
திருவிழாவை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார். அதன் வழி கூத்துக்காரர்களின், நடாகக்காரர்களின்
வாழ்க்கையையும் பேசுகிறார். கூத்து பழம் மரபிலிருந்து மீறாமல் நிகழ்வது. நாடகம் ஒவ்வொரு
காலகட்டத்திற்கும் நவீனமாகிக் கொண்டே வருகிறது. கூத்தில் நிகழும் கிராமத்தை மையப்படுத்தி
சூழ்ந்திருக்கும் மனிதர்களை பொருட்படுத்தி நுண்மையான உரையாடலை ஆரம்பிக்கிறது. இந்த
உரையாடல் தொடர் கூத்துகளின் நிகழ்வினால் விரிவடைந்து அந்த சுற்றுவட்டாரத்தில் மாற்றத்தை
ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார். மேலும் ஆண்கள் மட்டுமே வேடம் கட்டிய கூத்தில் பெண்களின்
பங்கையும் விவரிக்கிறார். அங்ஙணம் பெண்களின்
பங்களிப்பு சிறிது சிறிதாக அதிகரிக்கத் துவங்கும் பொழுது கூத்துக்குள் இருந்த சவால்களும்
வாழ்க்கை சார்ந்த சவால்களும் அவர்களை சேர்ந்தே துரத்தின.
இந்நடிகர்களுக்குள் இருக்கும்
நடிப்புத் திறனையும் அது அம்மனிதர்களிடம் கோரும் விஷயத்தையும் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.
வடிக்கப்பட்ட சிலைகளில் இருக்கும் அபிநயங்கள் உடலுடனேயே இருப்பதைப் போல நடிகரின் உடலும்
கதாபாத்திரத்தின் குணமும் ஒன்றிணைய வேண்டுவதே கூத்தின் உயிரைக் கொண்டிருக்கும் எனப்
பேசுகிறார். இதை அவர் கூறும் உதாரணத்துடனேயே விளக்கலாம். கு.ப.ரா எழுதிய சிறுகதை அகலிகை.
அதில் கல்லிலிருந்து அகலிகையை மீட்கும் தருணத்தை கு.ப.ரா எப்படி விவரிக்கிறார் எனில்
இயல்பான பெண் இருப்பை அங்கீகரிக்க புறக்கண்ணைத் தாண்டியும் அகக்கண் தேவை என்பதாக கதையில்
பேசுகிறார். இதை நாடகமாக்கும் நேரத்தில் ராமன் வேடத்திற்கு கண்பார்வையற்ற ஒருவரை பயிற்சி
செய்கின்றனர். நாடகம் முடிந்த பிறகே பார்வையாளர்களுக்கு அது தெரிவிக்கப்படுகிறது. அனைவராலும்
நம்பமுடியாதபடி அவரும் நடித்திருக்கிறார் என விவரிக்கும் வரிகள் காட்சியாக வாசிப்பில்
மலர்கின்றன.
திராவிடக் கட்சிகள் அனைத்து
கலைவடிவங்களையும் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியது. ஆனால் அந்தக் கலையில்
இருந்த கலைஞர்களின் மீதான அவர்களின் பார்வை எப்போதும் குறைவாகவே இருந்திருக்கிறது.
அதைச் சாடிய வண்ணம் அவர்கள் நிகழ்த்துக் கலைகளிலிருந்து தொலைக்காட்சி ஊடகங்களுக்கு
நகர்ந்ததையும் அதனால் கைவிடப்பட்ட நிகழ்த்துக் கலைஞர்களையும் விவரிக்கிறார். உடன் திரைப்படங்கள்
கொண்டிருக்கும் போதாமைகளையும் விவரிக்கிறார். மேலும் நிகழ்த்துக் கலைகளினூடாக ஊடுபாவி
இருக்கும் மக்களின் கவனமற்றத் தன்மை, மாநில மற்றும் மத்திய அரசின் ஈடுபாடற்ற செயல்பாடுகள்,
பயிற்சிகளுக்கு போதாமையாக இருக்கும் பயி|ற்சி நிறுவனங்கள் என நாடகம் சார்ந்த நல்ல்
அறிமுகத்தை இந்நூல் வழியே கொடுத்துச் செல்கிறார். நிகழ்த்துக் கலைகளிலும் நவீன நாடகங்களிலும்
சிறந்து விளங்கியவர்களின் நாடகங்களையும் அவர்கள்தம் வாழ்க்கையும் கூட விவரிக்கிறார்.
பின்னதை விவரிப்பதாலேயே அரசின் கைவிடபடப்பட்ட தன்மை வாசிப்பில் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது.
நாடகம் சார்ந்து அறிய விரும்புபவர்களுக்கு
நிச்சயம் இந்நூல் நல்ல தொடக்கமாக அமையும்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக