பொறாமைக் கொள்ள வைக்கும் எழுத்தாளர்
சுயானுபவக் கட்டுரைகளை
அவ்வப்போது வாசிப்பவன் நான். ஆரம்ப கால வாசிப்புகள் முழுதும் சாரு நிவேதிதாவின் எழுத்துகளால்
மட்டுமே நிறைந்திருந்தது. அவர் தனது பத்தி எழுத்துகளில் சுய அனுபவங்களுடன், வாசிப்பையும்,
சினிமா அனுபவத்தையும் தனது அரசியல் நிலைப்பாட்டையும், கலாச்சார அறத்தையும் கலந்து எழுதியிருப்பார்.
இது எழுத்தாளரின் மனப்போக்கை அறிந்துகொள்ளவும், அவர் பார்வையில் இருக்கும் சமூகத்தை
புரிந்துகொள்ளவும் பேருதவி புரியும். வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிக்கும் போதும் இதுபோன்ற
அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. இதில் சமீபத்தில் வாசித்த புத்தகம் அவ்வெழுத்தாளரின் மீதான
பொறாமையை அதிகப்படுத்தியது. அது க.நா.சு எழுதிய
“இலக்கியச் சாதனையாளர்கள்” எனும் நூல். பானு பதிப்பகம் வெளியீடாக கிடைக்கிறது.
எழுத்திற்காக மட்டுமே வாழ்ந்த
மனிதர் எனக் கூற வேண்டுமெனில் க.நா.சுவைக் கூறலாம். சின்ன வயதிலிருந்தே அப்பாவின் உந்துதலில்
எழுத்தாளராக ஆக வேண்டும் எனும் முனைப்பில் வளர்ந்தவர். தொடர் வாசிப்பும், உலக இலக்கியங்களுடனான
பரிச்சயமும் அவருக்கான வழியை அறிய உதவின. மேலும் பரந்து பட்ட வாசிப்புடன் தமிழ் இலக்கியத்தை
இணைத்து இங்கிருக்கும் இலக்கியப் பாதையை மாற்றவும் முனைந்திருக்கிறார். தன் படைப்புகளைத்
தாண்டி எண்ணற்ற உலக இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார்.
இந்த நூல் அவர் தான் சந்தித்த
படைப்பாளிகளுடனான அனுபவத்தைக் கூறும் நூல். இதை எழுத வேண்டுமா எனும் தயகத்தில் சில
காலம் இருந்து பின் எழுதுவது நிச்சயம் நினைவோடையாய்
இருக்கும் எனும் முடிவில் எழுதியிருக்கிறார். இந்நூல் வாசிக்கையில் பெரும் ஆச்சர்யமே
மிஞ்சுகிறது. நாற்பத்தி இரண்டு சாதனையாளர்களை அறிமுகம் செய்கிறார். ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும்
அதில் அவர்கள் கண்ட எல்லைகளையும் கூறி அதனோடு தனக்கிருந்த உறவையும் விவரிக்கிறார்.
சில இடங்களில் முரணான அனுபவங்களும் நிலைப்பாடுகளும் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் அமைகிறது.
என் சந்தேகம் யாதெனில் ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றிக் கூறும் பொழுதும் ஒரு நாளைக்கு
இத்தனை நேரம் வீதம் இத்தனை ஆண்டுகள் பழகி வந்தோம் எனக் கணக்கு கூறுகிறார். அதையெல்லாம்
தோராயமாக கணக்கிட்டால் கூட நாளின் விழித்திருக்கும் நேரம் முழுக்க நண்பர்களை சந்திப்பதில்
கழித்திருப்பாரோ எனும் எண்னம் மிஞ்சுகிறது. இதில் எழுத நேரம் எங்கிருந்து கிடைத்திருக்கும்
? எப்படி எழுதியிருப்பார் ? அவர் எழுதியிருக்கும் நூல்களையும் மொழிபெயர்த்த படைப்புகளையும்
எண்ணுகையில் ஆச்சர்யம் பன்மடங்காகிறது.
வில்லியம் ஃபாக்னர், ஆல்பர்ட்
காம்யூ, ஸ்டீபன் ஸ்பெண்டர், ஸால்வடார் மடாரியாகா, ஆர்தர் கொய்ஸ்லர், ஃப்ரான்சுவா போண்டி,
நிகோலஸ் நபகோவ் போன்ற பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்திருக்கிறார். இதில் கம்யூவுடன்
ஒன்பது மாத காலங்கள் தங்கியிருய்ந்த விஷயங்கள் ஆச்சர்யத்தை பன்மடங்காக்கியது., இவற்றிலிருந்து
எல்லாம் இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று சந்திக்கும் மனிதர்களிடம் இந்தியா சார்ந்து
இருக்கும் பார்வையையும் இலக்கியம் சார்ந்த கண்ணோட்டத்தையும் அறிந்து கொள்ள முயன்றிருக்கிறார்.
அவர்களும் எதிர்திசையில் இந்தியா பற்றி க.நா.சு வழி அறிய முயன்றிருக்கிறார்கள். முதலாவது
வெற்றி எனினும் இரண்டாவது கேள்விக்குறியிலேயே நின்று விடுகிறது. காம்யூ இந்திய முஸ்லீம்களைக்
குறித்து க.நா.சுவுடன் தொடர்ந்து கேட்டிருக்கிறார். அவர் அறிந்திராதது தனிமனிதவாதத்தின்
சாயல் என காம்யூ கூறுவது புதிய திறப்பாக அமைகிறது.
இந்நூலில் இருக்கும் வெவ்வேறு
கட்டுரைகளின் வழி சமூக அமைப்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது. உதாரணத்திற்கு எனில் க.நா.சுவிற்கு
சிறுகதைப் போட்டிக்காக அனுப்பி வைக்கப்பட்ட 1500 கைப்பட எழுதிய சிறுகதைகள் சிதம்பரத்திற்கு
அனுப்பி வைக்கப்படுகிறது. அதை வெள்ளைக்காரர்கள் பார்த்துவிட்டதால் ஆங்கிலேய அரசிற்கு
எதிராகச் சதி செய்பவராக க.நா.சுவை எண்ணிக் கொள்கின்றனர். இதைப் பகடியாக சொல்வதன் பிண்ணனியில்
இலக்கியம் சார்ந்த பொதுபுத்தியை நூல் முழுக்க பகடி செய்துகொண்டே வருகிறார். அல்லயன்ஸ்
பதிப்பகத்தார் சார்ந்த விவரணையில் மைலாப்பூரில் ஓடிய ட்ராமின் பகுதிகள் இப்போதிருக்கும்
சாலையோடு நினைவலைகளில் மோத வைக்கிறது.
வாசிப்பின் பலத்தையும்
அது கொடுக்கும் தேடலையும் மட்டுமே வைத்து இயங்கியவராக க.நா.சுவின் பிம்பம் இந்நூலின்
வழி உருக்கொள்கிறது. மேலும் அவர் நூல்களின் வழியே கொள்ளும் பலத்தை யாரிடமும் சமரசமின்றி
உரையாடுவது வாசகனாக கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக அமைகிறது. ராஜாஜியைப் பற்றிய கட்டுரையில்
தன் இலக்கிய பார்வையை வைக்கும்தோறும் உருவாகும் சலசலப்பை பேசிச் செல்கிறார். இந்த இடர்
ஒவ்வொரு இடத்திலும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. க.நா.சு நவீன இலக்கியம் நோக்கி எடுத்து
வைத்த அடி இன்றளவும் சமரசமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் நிச்சயம்
வாசிக்க வேண்டிய நூல் என இதைச் சொல்வேன். அதற்கு காரணம் வாசகன் எங்கெங்கு எல்லாம் சமர்சாமின்று
பேச வேண்டும் எனும் பெரிய பாடத்தை இந்நூல் போதிக்கிறது.
எழுதித்தீர்த்தாலும் பொறாமை
மட்டும் அடங்க மறுக்கிறது!
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக