தேநீர் சொல்லும் வாழ்க்கை
தேநீரின் தீவிர ரசிகன்
நான். தொலைதூர பயணங்களில் பேருந்து நிறுத்தும் இடைவேளையில் பயத்துடனேயே தேநீர் அருந்துவேன்.
அதற்கு காரணம் தேநீரை வெறுக்கும் ஓரிடமும் அது தான். வியாபார நோக்கத்திற்காகவோ வேறு
காரணங்களுக்காகவோ அவர்கள் புளியங்கொட்டையை கலந்துவிடுகிறார்கள். குடித்தவுடன் நாக்கு
மரத்து போய்விடுவதான உணர்வு. ஆனாலும் குடிக்க வேண்டும் என ஏங்குவதே என் மனம்.
தேநீரைப் பற்றிய நூல் ஒன்று
இருக்கிறது. ஜப்பானின் பாரம்பரியத்துடன் ஒன்றானது தேநீர். அதை தெளிவுற நூலாக எழுதியிருப்பவர்
ஒக்ககூரா காக்குஜோ. நேரடியாக ஜப்பானிய மொழியிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்திருப்பவர்
அ.கா.பெருமாள். அந்த நூலே “தேநீர்க் கலை” ஆகும். இருவரைப் பற்றிய தெளிவான குறிப்புகளும்
நூலில் இடம்பெற்றுள்ளன. அக்குறிப்புகள் இந்நூலை எழுதுவதற்கான காரணத்தையும் அதை தமிழில்
மொழிபெயர்ப்பதற்கான காரணத்தையும் நுண்மையாக எடுத்துரைக்கின்றன.
தேநீரை பேசும் பொருட்டு
மேற்கத்திய கலைகளுக்கும் கிழக்கத்திய கலைகளுக்கும் இருக்கும் முரண்பாட்டை ஆசிரியர்
தெளிவாக விளக்குகிறார். ஒவ்வொரு ஊரின் வழியே மேற்கத்திய நடைமுறைகளை அமல்படுத்துவதன்
மூலம் ஏதோ ஒரு கிழக்கத்திய கலை அழிக்கப்படுகிறது. அதே கலையினை மேற்கத்தியர்கள் கண்டுகொள்ளும்
பொழுது அதை வணிகமாக்குகின்றனர். இந்த அரசியலில் சிக்கியதொரு பண்டம் தான் தேநீரும் என்கிறார்.
தேநீர் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது. எந்தெந்த முறையிலெல்லாம் தேநீர் தயாரிக்கும் முறை
நடைமுறையில் இருந்தது என்பதை விவரிக்கிறார். அதே நேரம் எப்படி மேற்கத்தியர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட
தேநீர் அவர்களாலேயே பயன்படுத்தப்பட்டது என்பதையும் கூறுகிறார்.
கலை உணர்வு ரீதியானது.
கலையாக மதிக்கப்படும் விஷயம் பொருளாக பாவிக்கப்படும் பட்சத்தில் அங்கே உணர்வுகளுக்கு
இடமில்லாமல் போகிறது. அந்த வகையில் தான் மேற்கத்தியர்களுக்கு தேநீர் பானமாகவும், கிழக்கத்திய
நாடான ஜப்பானிற்கு தேநீர் கலையாகவும் மாறியிருக்கிறது. தேநீரை எளிமையின் குறியீடாக
பார்க்கின்றனர்.
ஜப்பானியர்களின் வீட்டில்
தேநீர்க்கென ஓர் அறையினை வைத்திருக்கின்றனர். அதன் பெயர் சுக்கியா. அதற்கான வடிவமைப்புகள்
அனைத்தும் இயற்கையிலிருந்தானதாக இருக்கிறது. ஆட்கள் குனிந்து மட்டுமே வர முடியும்.
உள்ளே வைக்கப்படும் கலைப்பொருட்கள் கூட எண்ணிக்கையில் அதிகம் இல்லாததாக இருக்க வேண்டும்.
அந்த அறைக்கு வருவதற்கு ஒரு தோட்டப்பாதை இருக்கிறது.
அதை விவரிக்கும் வகையில் தேநீர் அறை எப்படி ஜப்பானை பிரதிபலிக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஓர் கதையும் இடம்பெறுகிறது. அதில் சீடன் தோட்டப்பாதையை சுத்தம் செய்கிறான். ஆனாலும்
குருவிற்கு மனம் ஒப்பவில்லை. மீண்டும் சுத்தம் செய் மீண்டும் சுத்தம் செய் என்கிறார்.
சுத்தமாக இருந்தும் அவரே மறுக்கிறார். குருவே இறங்கிச் சென்று தோட்டாப்பாதையின் வழியில்
இருந்த மரத்தை உலுக்கி இலைகளை உதிரச் செய்கிறார். ஏன் எனக் கேட்கும் பொழுது இலையுதிர்காலம்
என்பதை இடம் காட்ட வேண்டும் என்கிறார். சுத்தம் எல்லாவற்றையும் அகற்றுவது அல்ல. தேவையும்
உபயோகமும் அர்த்தமும் அற்றதை அகற்றுவதே சுத்தம்.
இயற்கையோடு இணைந்ததே வாழ்க்கை.
அந்த வாழ்க்கையை மக்களுக்கு எடுத்து சொல்ல தேநீர் அதிகமாக உதவுகிறது. தேநீரை வைத்து
அவர் ஜப்பானின் கலைகளுக்ககாக மட்டும் குரல் கொடுக்கவில்லை. மாறாக கிழக்கத்திய நாடுகளுக்கு
சார்பாகவும், அதிகாரத்தின் வழியில் கலைகளை அழிக்க முனையும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும்
குரல் எழுப்புகிறார். தேநீரின் ரசிகர்களாக இருப்பவர்களும் கிழக்கத்திய கலைகளுக்காக
குரல் கொடுப்பவர்களும் நிச்சயம் இந்த நூலை வாசிக்க வேண்டும். தேநீருக்கு பின்னும் கிழக்கு-மேற்கு
கலைகளுக்கு பின்னும் இருக்கக்கூடிய அரசியலை எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.
பி.கு : நூலை வாசிக்கும்
பொழுது வேறொரு விஷயம் நினைவில் எழுந்தது. முகலிவாக்கத்தில் தங்கியிருந்த பொழுது அருகில்
vrksha என்றொரு கடை இருந்தது. அதில் தொண்ணூறு வகையான தேநீர் கிடைக்கும். அந்த அனைத்து
வகைகளிலும் கூட ருசியைப் பொறுத்து கிளைகள் உண்டு. இந்த தேநீர்க் கலை நூல் அங்கும் இருக்கிறது.
அங்கு இருக்கும் புருஷோத்தமன் என்பவர் ஒவ்வொரு தேநீரைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார்.
பேசவே சுவாரஸ்யமாக இருக்கும். அந்த இடமே அற்புதமாக இருக்கும். சின்னதான தோட்டம். கலைபொருட்கள்
நிறைந்த அறை. குறுகிய அளவிலான மனிதர்கள் இருக்கக்கூடிய இடம். தேநீர் அருந்திக் கொண்டே
கதையாட அற்புதமான அமைப்பு. தேநீரின் விலை தான் சற்று அதிகம்(ரூ 90 – ரூ 240)! இந்த
விலைக்கான காரணத்தை அவர் சொன்னாலும் பத்து ரூபாய்க்கு தேநீர் சாப்பிட்டு பழகிய என்னால்
தான் ஏற்க முடியவில்லை!
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக