கடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள்

ஜாக் லண்டன் அமேரிக்க எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ஜாக் லண்டனின் கதை நுட்பத்துடன் பேச்சொன்றில் சொல்லியிருந்தார். அதன் வேகத்தில் அவருடைய white fang எனும் நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதை இப்போது என் நினைவில் இல்லையெனினும் அவருடைய மொழியிலான பயணம் நினைவில் தேங்கியிருக்கிறது. அவசரத் தன்மையற்ற சீரான மொழிநடை. நீளமான கதைசொல்லலை தன்னகத்தே கொண்டிருப்பவர். இப்போது அவருடைய நாவல்கள் தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கின்றன. அவரது சிறுகதைகளும் நாவல்களுக்கொப்ப உலகம் முழுக்க கவனம் பெற்றவை. அவையும் தமிழில் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த புத்தகத் திருவிழாவில் யதேச்சையாக/அதிர்ஷ்டவசமாக கண்ணில் அகப்பட்டது அந்நூல்.

மொழிபெயர்ப்பு நூலை வாங்க தேர்வு செய்யும் முன் மொழிபெயர்ப்பாளரின் மீது சந்தேகமே முதலில் எழுகிறது. அறியப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பிலோ அல்லது பதிப்பகங்களின் வழியில் மட்டுமே பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்களை தேர்வு செய்கிறோம். அவ்வகையில் இந்நூல் எனக்கும் சந்தேகத்தையே கொடுத்தது. ஆனாலும் ஜாக் லண்டனின் உலகத்தை அறிய ஏதேனும் ஒரு வகையில் துணை போகும் என்றெண்ணியே இந்நூலை வாங்கியிருந்தேன். வாசித்து முடிக்கும் பொழுது ஜாக் லண்டனுடைய கதை உலகத்தின் மீது நம்பிக்கை பெருந்தூணாய் எழுந்து நிற்கிறது. வ.உ.சி நூலகம் “சிறந்த சிறுகதைகள் ஜாக் லண்டன்” எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்கள். இந்நூலை நா.ஜகந்நாதன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் அவரது சிறுகதைகளை படித்ததில்லை. ஆயினும் லயம் பிசகாமல் கதைகள் அதனதன்  தாக்கத்தை முறையே ஏற்படுத்துகின்றன.நூலிற்கான முன்னுரையை பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். ஜாக் லண்டன் சார்ந்த அறிமுகமாகவும் அந்த கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் கதைகளை வாசிக்கும் போதும் தொடர்ந்துகொண்டே வந்தது. ஜாக் லண்டனிடம் பெரிதாய் வீடு கட்ட வேண்டும் என்ற கனவொன்று இருந்தது. அதற்காக செலவு செய்து காலம் செலவிட்டு கட்டினார். முழுதாக கட்டி முடிந்து அடுத்த நாள்  குடிபுக வேண்டும் எனும் தருவாயில் கெட்ட செய்தி ஒன்று அவரை எட்டுகிறது. அவருடைய கனவு இல்லம் பற்றி எரிகிறது என. பட்ட கடனையெல்லாம் எழுதியே தீர்க்கிறார். கிட்டத்தட்ட எழுத்து நோயென மாறி அவரை எழுத வைத்திருக்கிறது. எரிந்து போன வீட்டின் கனவை நிச்சயம் மீதக் காலம் முழுக்க சுமந்திருப்பார். அதையே அவருடைய கதைமாந்தர்களும் செய்கின்றனர். பிரபஞ்சன் ஜாக் லண்டனின் கதைகளை மனிதர்களின் பரிதாபத்தை பிரதிபலிப்பன என்கிறார். இவ்வகையான பார்வையை என்னால் கதைகளில் இனங்காணமுடியவில்லை. கதைமாந்தர்கள் அனைவரும் கடந்த காலத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர். அதன் சுமையே அவர்களை வழிநடத்துகிறது. ஏதேனும் ஓரிடத்தில் அதை இறக்கி வைக்க முனைகின்றனர். அங்கு அவர்கள் காணும் தோல்வி சுமையே வாழ்க்கை எனும் நிலையை உணர வைக்கிறது. இந்தச் சுமைகளின் நிழலை ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் காணமுடிவது ஜாக் லண்டனின் முத்திரையாகிறது. எதன் வெளிச்சம் பட்டு இந்நிழல்கள் உருவாகிறதோ அந்த வெளிச்சம் அவருடைய அரசியலாகிறது.

தமிழில் எழுதப்படும் சிறுகதைகளைக் கடடிலும் பக்க அளவில் ஜாக் லண்டனின் சிறுகதைகள் நீளமாக இருக்கின்றன. மேலும் அவை வரலாற்றுப் பின்புலத்தை புனைவின் பலமாக கொண்டிருக்கின்றன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆப்ரிக்கா மீதான ஈர்ப்பு ஐரோப்பியர்களுக்கு அதிகாமாயின. ஆப்ரிக்கா கண்டறியப்பட்ட போது அதன் மீதான ஈர்ப்பு அதிகமின்றி இருந்தது. பின் அங்கிருக்கும் அபரிமிதமான இயற்கை மூலப்பொருட்கள் ,மற்றும் அடிமைகளின் வியாபாரமும் ஆப்ரிக்காவின் பக்கம் ஐரோப்பியர்களை ஈர்த்தது. ஆனால் அவர்களுக்கு இருந்த உடல்பலம் போரிட்டு வெல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது. பூர்வகுடிகள் நிரம்பியிருந்த ஆப்ரிக்காவினுள் ஐரோப்பிய பொருட்கள் உள்நுழைந்து வியாபார உலகம் துவங்கியது. இந்த வியாபாரம் காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சார மோகமாக மாறியது. அதை பயன்படுத்தி ஆப்ரிக்காவின் மீதான எதேச்சதிகாரத்தை ஐரோப்பியர்களால் நிறுவ முடிந்தது. இதை எதேச்சதிகாரத்தின் வேறொரு முகமாக பார்க்கலாம். இந்தியாவிலும் இப்படியான வழியில் தான் ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆரம்பித்தது எனினும் அதுவே முதன்மை பெற்றிருந்தது என்று கூறமுடியாது. இத்தகைய எதேச்சதிகாரத்தை த்ரில்லர் வகையான சிறுகதையாக மாற்றுகிறார் ஜாக் லண்டன்.

கிழவர் கூட்டம் எனும் சிறுகதை தொடர் கொலைகாரன் ஒருவனைப் பற்றிய கதை. தான் செய்த கொலைகளையெல்லாம் ஒப்புக்கொண்டு சரணடைவதிலிருந்து கதை துவங்குகிறது. செய்த ஒவ்வொரு கொலைகளையும் அதற்கான பின்புலங்களையும் எடுத்துரைக்கிறான். எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட இனக்கூட்டத்திலிருக்கும் ஒருவன் அவன். புராணீக விஷயங்களையும் மரபையும் விடக்கூடாது எனும் எண்ணத்தில் திணிக்கப்படும் பொருள்முதல்வாத அதிகாரத்தை எதிர்க்க முனைகிறான். தனித்து கொள்கையோடு விடப்படும் அவன் கடைசி கட்ட ஆயுதமாக அதிகாரத்தை நூதனமாக திணித்தவர்களை கொலை செய்ய தயாராகிறான். அவனுக்கான தண்டனை யாதாக இருந்தது, தொடர்ந்து கொலை செய்து வந்தவன் ஏன் அப்போது சரணடைகிறான் போன்ற கேள்விகளின் பதிலாய் கதை முடிவை நெருங்குகிறது.

அதிகாரத்தின் பலம் மக்களை விழிப்புணர்வின்ரி வைத்துக் கொள்வதே ஆகும். ஒருவேளை அவர்களுள் யாருக்கேனும் விழிப்புணர்வு வந்துவிட்டால் மக்களை அவனிடமிருந்து பிரிப்பது இரண்டாம் பணியாகிறது. அந்த மனிதன் கொள்கையோடு சமூகத்தில் தனித்து அலையவிடப் படுகிறான். சமூகத்தின் பொதுநீரோட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது அவன் முட்டாளாகிறான். காலாச்சார ரீதியிலும் தான் கொண்ட சித்தாந்தத்தின் அடிப்படையிலும் தோற்றவனாகிறான்.

தோல்வியை வேறு விதமாகவும் கதையாக்குகிறார். அதில் ஒரு கதை “தொங்கிய முகம்”. இது ரோமானியத் திருடனின் கதை. இனக்குழுவுடன் தொடர்ந்து திருடி வந்த திருடன் அகப்பட்டுக்கொள்கிறான். அவனுக்கு செய்யப்படும் சித்ரவதைகள் கதை முழுக்க நீள்கின்றன. எப்படியும் சாகப்போகிறோம் என்பதறிந்தவுடன் வரலாற்றிலிருந்து தன் கலங்கத்துடன் கூடிய பெயரை எப்படியேனும் நீக்க வேண்டும் என யோசிக்கிறான். தனக்கு ஒரு மந்திரம் தெரியும் எனவும் அதை வைத்து எந்த வாளாலும் வெட்ட முடியாத தன்மையாக சதையை மாற்ற முடியும் எனவும் சொல்கிறான். அவன் பேச்சைக் கேட்டு வீரனும் துணைபோகிறான். இறுதியில் அவன் கூறியது பொய் என நிரூபனமாகிறது. திருடனின் மீதே பிரயோகப்படுத்தப்படும் வாள் திருடனை துண்டாக்கிவிடுகிறது. ஆனால் சகவீரர்கள் திருடனின் பேச்சைக்கேட்டதால் அவ்வீரனை ஏமாளி என விளிக்க ஆரம்பிக்கின்றனர். வரலாற்றிலிருந்து களங்கத்தை நீக்க முனையும் தருணத்தில் அவற்றை பிறிதொருவர் மீது திணிக்க வேண்டிய சூதினை இக்கதை நுண்மையாக பேசுகிறது. இதை கிட்டதட்ட சமகால அரசியல் நோக்கில் அணுகும் பட்சத்தில் அனைத்து நாட்டிற்குமான அரசியல் சண்டைகளாக உருவம் கொள்கின்றன.

கடந்த காலத்தை பேசும் கதைப்பகுதிகள் கதையளவில் அடர்த்தியாய் வேகமாக நகர்கின்றன. மேலும் சில பக்கங்களே நீள்கின்றன. அவற்றை சுமையென சுமக்கும் நிகழ்காலத்தை விவரிக்கும் பக்கங்கள் மிக நுண்மையாக கையாளப்படுகின்றன. இந்த நுண்மையே கடந்த காலச் சுமையை வாசகனுக்கும் கடத்துவதாய் அமைகிறது. அங்ஙணம் ஜாக் லண்டனின் ஆகச் சிறந்த கதைகளுள் தலையாயதாக இருக்கும் சிறுகதை “ஒரு துண்டு இறைச்சி”. மேற்கூறிய எந்த கோட்பாட்டிற்கும் மாசற்று துலங்குகிறது இச்சிறுகதை. மேலும் மனித வாழ்க்கையில் இருத்தல் தோல்வியை எப்படி சந்திக்கிறது என்பதையும் தோல்வியை எவ்வாறு அளவிடுவது என்பதையும் இத்துணை நுண்ணுணர்வுடன் பேச முடியுமா என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது.

டாம்கிங் பிரபல குத்து சண்டைக்காரன். இந்த குத்துச்சண்டை வேறு சில கதைகளிலும் இடம்பெறுகிறது. வயது அதிகமாவதால் குத்துச் சண்டைக்கு அதிகம் கூப்பிடுவதில்லை. வீட்டில் வறுமை. அன்று இளம் வயதினனான ஸாண்டலுடன் குத்துச் சண்டை. சண்டையிட்டால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என ஏஜெண்ட் கூறுகிறான். அங்கு இளம் வீரர்களை முதிய மற்றும் பிரபலமான வீரர்களுடன் மோத விடுவார்கள். அதில் இளம் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கான குத்துச் சண்டை சார்ந்த எதிர்காலம் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடும். பணமும் நிறைய ஈட்டலாம். டாம்கிங்கிற்கும் ஸாண்டலுக்குமான குத்துச் சண்டையே மீத இருபது பக்கங்களுக்கு நீள்கிறது.

ஒவ்வொரு சுற்றாக கதை விவரித்துக்கொண்டே செல்கிறது. அவ்வப்போது டாம்கிங் தன்னுடைய இளமைக் காலச் சண்டையை நினைத்துப் பார்க்கிறான். அப்போது முதியவனான ஸ்டௌஷர்பில்லுடனான சண்டையை நிகழ்ந்துகொண்டிருக்கும் சண்டையுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். அன்று ஸ்டௌஷர்பில் தோற்றுப் போகிறான். அவனுடைய அழுகை அப்போது டாம் கிங்கிற்கு புரியவில்லை. இன்றைய நிலையை யோசிக்கும் பொழுது பேரும் பணமும் புகழும் ஈட்ட முனையும் இளைய வீரனுக்கும் அடுத்த வேலை சாப்பாட்டிற்காக போராடும் முதிய வீரனுக்குமான சண்டையாக உருவம் மாறுகிறது. இங்கு நிகழும் சண்டை இளமைக் காலத்தில் நிகழ்ந்த சண்டையில் தோற்ற ஸ்டௌஷர்பில்லிடம் கேட்கும் மன்னிப்பாக உணர்கிறான். ஆனால் மன்னிப்பு நியாயமானதா ? இந்த போட்டியில் யார் ஜெயிக்க முடியும் எனும் குழப்பத்தில், துவந்துவத்தில் கதை நீள்கிறது. இக்கதை பேசும் மானுடம் அனைத்து மக்களுக்குமானது. புகழுக்காக போராடும் கைகள் ஒருபோதும் பசிக்காக போராடுபவனை எழுந்திருக்க விடுவதில்லை. புகழுக்கானவன் சண்டையிடுகிறான். பசிக்கானவன் போராடுகிறான்.

ஒவ்வொரு கதைகளும் தோல்வியின் வழியே மனிதத்தை தொடர்ந்து பேசுகிறது. இம்முன்று கதைகளும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முதல் மூன்று கதைகளாகும். மீதக்கதைகளும் தோல்வியை வெவ்வேறு பின்புலத்திலிருந்து கதைமாந்தர்களின் கடந்தகாலத்திலிருந்து பேசுகிறது. சாமுவேல் எனும் சிறுகதை ஒரு தாயின் கதாபாத்திரத்திலிருந்து சொல்லப்படுகிறது. சாமுவேல் என பெயரிடப்படும் குழந்தைகள் அனைவரும் இறக்கின்றனர். அவர்களின் இறப்பும் அது சார்ந்த ஊராரின் கதையும், அம்மாவின் தர்க்கமும் கதையை அதன் மையத்திற்கு கொண்டு செல்கிறது. ஜீஸ் உக்கின் கதை எனும் சிறுகதை கிட்டத்தட்ட இடும்பியின் புராணக் கதையை போன்றே தோன்றுகிறது. ஒரே கணவனைக் கொண்டுள்ள இரு பெண்கள். இருவரில் ஒருவர் கணவனை விட்டுத் தர வேண்டும் எனும் நிலை மானசீகமாக உருவாகிறது. எதன் அடிப்படையில் எனும் இடத்தில் மானுடம் உருவம் கொள்கிறது. பெண்ணிற்காக சண்டையிடும் “போபர்டு வேடிக்கை” சிறுகதை, புரட்சிக்கு பணம் வேண்டி குத்துச்சண்டையிடும் போர்வீரனின் கதை என கதைகள் மானுடம் சிதைவுறும் அல்லது கேள்விக்குள்ளாக்கபடும் தருணங்களாக நீள்கின்றன.


ஜாக் லண்டனின் காலகட்டத்தின் காரணத்தினாலோ என்னவோ சொல்ல விரும்பும் அறத்தை ஏதோவொரு பத்தியில் ஆசிரியராகவே சொல்லிவிடுகிறார். அதே நேரம் வெறும் அறமுழுக்கமாக அல்லாமல் கதையினை அதன் போக்கில் கதைசொல்பவனின் வீச்சில் சொல்லிச் செல்வது செறிவாக கையாளப்பட்டிருக்கிறது. மானுடத்தின் கடந்தகாலம் பெரும் கறையை மனிதர்களின் மீது விட்டுச் சென்றிருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றன ஜாக் லண்டனின் சிறுகதைகள். வரலாற்றை மையமாக கொண்டு கதை எழுத முனைபவர்களுக்கு ஜாக் லண்டன் பெரும் படிப்பினையாக நிச்சயம் தென்படுவார்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக