தேவிபாரதியின் குறுநாவல்கள் : உதிரிகளின் நாடகம்
சிறுகதைகளின் வழியே பெரும் தாக்கத்தை இலக்கியத்தில் ஏற்படுத்தியவர் தேவிபாரதி. ஒவ்வொரு படைப்பின் வழியேவும் வாழ்வின் அபத்தத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர். முதல் சிறுகதைத் தொட்டு சமீபத்தில் வெளியாகியிருக்கும் நாவலான நட்ராஜ் மகராஜ் வரை இந்தப் பொதுத் தன்மையை வாசகரால் எளிதில் உணர்ந்து கொள்ளமுடியும். இத்தன்மையிலிருந்து சற்றும் விலகாது நிற்கின்றன தேவிபாரதியின் குறுநாவல்கள்.
கறுப்பு வெள்ளைக் கடவுள்
எனும் குறுநாவல் தொகுப்பு நட்ராஜ் மகராஜ் நாவலுக்குப் பின் வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும்
நான்கு குறுநாவல்களும் சிறுபத்திரிக்கைகளின் வழியே வாசகர்களை முன்பே சென்றடைந்திருக்கின்றன.
தொகுப்பாகக் காணும் பட்சத்தில் நான்கு குறுநாவல்களுக்கும் தொடர்பிருப்பதை எளிதில் உணர்ந்து
கொள்ளமுடிகிறது. நான்கும் மாறுப்பட்ட கதைக்களன். பலதரப்பட்ட மனிதர்கள், சமூகத்தின்
மேல்நிலைவாதிகளால் கடந்து செல்லக்கூடிய வாழ்க்கை, சமூகத்தின் விளிம்பிலிருந்தும் வாழ்வின்
விளிம்பிலிருந்தும் முன்னேற துடிக்கும் மனிதர்கள் என்று குறுநாவல்கள் விரிவு கொள்கின்றன.
‘அ.ராமசாமியின் விலகல்
தத்துவம்’ எனும் குறுநாவல் ஓர் எழுத்தாளனின் கதை என்று ஒற்றை வரியில் சுருக்கிவிடலாம்.
சிறுகதையாசிரியனுக்கு நாடகத்துடனான அனுபவம் ஏற்படுகிறது. அவர்களின் வழியே தன்னுடைய
சிறுகதைகளில் சிறந்தது எனச் சொல்லப்படும் சிறுகதையொன்று நாடகமாக்கப்படுவதற்கான நிகழ்வும்
அரங்கேறுகிறது. அந்த நாடகத்திற்கான பிண்ணனி உழைப்புகளும், சிறுகதையாசிரியருக்கும் நாடகாசிரியருக்குமான
உரையாடல்களுமே குறுநாவலாக விரிவடைகிறது.
நாடகம் உருவாக்கப்படுவதற்கான
நுண்மைகளையும் ஆசிரியர் அ.ராமசாமி எனும் கதாபாத்திரத்தின் வழி விவரிக்கிறார். பின்
ஒரு சிறுகதை நாடகமாக உருமாறுவதையும் பேசுகிறார். இந்த இடங்களில் இரு கலைஞர்களின் பார்வையில்
ஓர் கதை எப்படியெல்லாம் விரிவு கொள்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. சிறுகதையாசிரியன்
தன் அனுபவத்தின் சட்டகத்திலிருந்து, அந்த அனுபவத்தின் நியாயத்தை கதையில் முன்வைக்கிறான்.
நாடகாசிரியனுக்கோ அந்த சிறுகதையே சட்டகமாக மாறுகிறது. சிறுகதையாசிரியன் வாசிப்பின்
வழியே கொடுத்த பிரமிப்பை நாடகாசிரியன் காட்சிகளின் வழியே கொடுக்க பிரயத்தனம் செய்கிறான்.
இந்த இரண்டாம் கட்டச் செயல்பாடு சிறுகதையாசிரியனுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. தான்
உருவாக்கிய கதை வேறொரு வகையில் கதையாக மாறுவதை உணரத் துவங்குகிறான். தன்னுடைய கதையே
அந்நியப்பட்டு வேறொரு படைப்பாளியால் செதுக்கப்படுகிறது என்பதை உணரத் துவங்குகிறான்.
சிறுகதையை நாடகாமாக்கும் பொழுது எழுத்தாளனை கொன்றுவிட்டுத் தான் நகர முடியும் என்பதை
குறுநாவல் நிறைய இடங்களில் குறிப்பிட்டே நகர்கிறது.
அவர்கள் நாடகாமாக்கப்படும்
கதை சாதியத்தை மையப்படுத்திய சிறுகதை. அதில் பிராமணப் பெண் வேசியாகிறாள். அவளை தலித்
இளைஞன் காமுற அழைக்கிறான். பின் அங்கு நிகழும் அபத்தங்கள். இதை நாடகமாக்க முனையும்
பொழுது கதாபாத்திரத் தேர்வு, காட்சியமைப்பு, எழுத்தாளன் கதையில் வைத்திருக்கக்கூடிய
நிலப்படிமங்கள் என அனைத்தையும் காட்சியாக்க முனையும் விவரணைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
நாடகத்தை கடைசி ஒத்திகை அன்று பார்க்க எழுத்தாளரும் அழைக்கப்படுகிறார். அப்போது அந்த
எழுத்தாளருக்கும் நடிப்பவர்களுக்கும் இடையே உரையாடல் ஏற்படுகிறது. அந்த உரையாடலின்
வழியே தான் உருவாக்கிய கதாபாத்திரத்தையும் தன் முன்னே யாரோ ஒருவர் உருவாக்கும் கதாபத்திரத்தையும்
மதிப்பிடத் துவங்குகிறார். தேவிபாரதி எழுத்தின் தனித்தன்மையே புறவுலக விவரணையின் வழியே
அகச்சிக்கலை தீவிரமாகப் பேசுவது ஆகும். முடிந்த படைப்பினின்று விலகி நிற்க வேண்டிய
தருணத்தில் அதனூடே பயணிக்க முயலும் எழுத்தாளன் எவ்வளவு பெரிய அபத்தத்தை உண்டு செய்கிறான்
என்பதையே குறுநாவலின் வழி உணர முடிகிறது. இக்குறுநாவலில் இடம்பெறும் பல கதாபாத்திரங்களின்
பெயர்கள் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களாக இருக்கின்றன. இந்நுட்பம்
கதையின் மீதான பிடிப்பை கதாபாத்திர அளவிலும் கதையின் அளவிலும் அதிகப்படுத்துகின்றது.
அறிந்த பெயர்களையும் அவர்தம் குணங்களையும் குறுநாவலில் கடக்க நேரிடும் பொழுதெல்லாம்
அவர்களின் நினைவு எழுவது இயல்பாக இருக்கிறது. குறுநாவல் முடியும் பொழுது கதாபாத்திரங்களிலிருந்து
விலகி கதையின் அதிர்ச்சியில் நிலைப்பது விலகல் தத்துவத்தின் சான்று என்றே உணர்கிறேன்.
இரண்டாவது குறுநாவலான கறுப்பு
வெள்ளைக் கடவுள் பலதரப்பட்ட மனிதர்களின் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. காமராஜர்
இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது பிணத்தை கோயிலில் காண்கிறான் ஒரு பரதேசி. அவன்
காமராஜரின் உபாசகன். இதற்கு இணைகோடாய் அரசிற்கு எதிரான இயக்கமொன்றில் பணியாற்றியவர்
என்று பள்ளி ஆசிரியை ஒருவரை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். அதனை செய்யும் ஆய்வாளர்
தான் இந்த பிணத்தை அப்புறப்படுத்தும் வேலைக்கும் நியமிக்கப்படுகிறார். இந்த இரு கதைகளுக்கும்
மையமாய் இருப்பது காமராஜர் எனும் ஆளுமை. அவருடைய
கடந்தகாலச் சுவடுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாற்றமொன்றை நிகழ்த்தியிருக்கிறது.
பரதேசிக்கும் சரி பள்ளி ஆசிரியையிற்கும் சரி. அதன் பிடிமானத்தில் இருந்து நிகழ்காலத்தை
அணுகுகின்றனர். இந்த அணுகுதல் எப்படி பொய்த்துப் போகிறது என்பதை நோக்கி நகரும் நாவல்
அபத்தத்தின் அதிர்ச்சியை வாசகருக்கும் கொடுத்தே செல்கிறது.
கழை கூத்தாடியின் இசை எனும்
குறுநாவல் இயக்குனர் ஆக முயற்சிக்கும் இளைஞனின் கதை. இலக்கிய பரிச்சயம் கொண்டவன். அவனுடைய
மனதிற்கு நெருங்கிய படைப்பாக உணர்வது குர் அதுல்ஐன் ஹைதர் எனும் உருது எழுத்தாளர் எழுதிய
அக்னி நதி எனும் நாவல். அதன் பாதிப்பில் தன் பெயரை கௌதம நீலாம்பரன் எனவும் மாற்றி வைத்துக்
கொள்கிறான். வாசிக்கும் சில படைப்புகளுக்கு திரைப்படத்திற்கேற்ப திரைக்கதையையும் தயார்
செய்து வைத்திருக்கிறான். கௌதம நீலாம்பரன் இயக்குனராவதற்காக செய்யும் முயற்சிகளை தீர்க்கமாக
விவரிக்கிறது இக்குறுநாவல். அதனூடே அவனுடைய குடும்ப பிண்ணனியையும், இலக்கியத்தின் மீதுள்ள
பற்றையும், திரைத்துறை சார்ந்த ஈர்ப்பையும், வாழிடத்தையும் நுண்மையாக பேசுகிறது. அக்னி
நதியின் பாதிப்பை குறுநாவல் முழுக்க உணர முடிகிறது. காணும் மனிதர்கள் அனைவரையும் அதன்
கதாபாத்திரங்களாக எண்ணி அகச்சிக்கல் கொள்ளும் தருணங்களில் தேவிபாரதியின் புனைவுத்திறன்
தனித்துவம் வாய்ந்ததாக உருக்கொள்கிறது. நாவலின் வாசிப்பால் மனம் கொள்ளும் சிக்கலுக்கான
தீர்வை புறவெளியில் தேடி அலையும் கதாபாத்திரத்தின் முடிவும் நிறைவேறாத ஆசைகளின் சாயலாய்
நிற்பது பெருத்த மௌனத்தை படைப்பில் உருவாக்குகிறது.
நான்காவது குறுநாவலான பரமனின்
பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள் எனும் கதை மீத மூன்று குறுநாவல்களிலிருந்தும்
சற்று விலகித் தெரிகிறது. நாவிதனான பரமனின் கதை. நான்காவது மகள் மீதிருக்கும் அளவிலாத
பாசம் தான் மையக்கதை. மற்ற மூன்று பெண்களிடமும் வெளிக்காட்டாத அன்பையும், பொருள் ரீதியான
பாசத்தையும் நான்காவது பெண்ணுக்கு மட்டும் காட்டுகிறான். இந்த விஷயத்தை முன்வைத்து
மூன்று பெண்களுக்கு ஏற்படும் பொறாமை சார்ந்த அகச்சிக்கலையும், மனைவின் குழப்ப நிலையையும்
விவரிக்கிறார். சில எடுத்துக்காட்டு விவரணைகளுடன் பரமனுக்கு மஞ்சுவின் மீதான பாசத்தை
குறுநாவல் பேசுகிறது. உதாரணம் எனில் மேட்டுக்குடி மக்கள் செய்வது போல ஆடம்பரமாக மஞ்சுவிற்கு
பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறான். இதன் பின் அந்த நிகழ்வு பிறசாதி மக்களுக்கு
எவ்விதமான உணர்ச்சிகளை எழுப்புகிறது எனும் இடங்களில் தேவிபாரதியின் விவரணைகள் சாதியப்
படிநிலைகளின் அகவன்மத்தை தோலுரித்துக் காட்டுகிறது. பரமனின் அன்பு பெண்ணின் வளர்ச்சியோடு
நாவலில் நகர்கிறது. மஞ்சுவிற்கான திருமண வயது நெருங்கும் பொழுதொன்றில் காணாமல் போகிறாள்.
அவளைத் தேடிச் செல்லும் தந்தையின் தருணங்கள் சமூகத்தில் நிலவும் சாதியப் படினிலைகள்
பரமனிடம் எப்படியானச் சிந்தனைகளை மேலெழச் செய்கிறது என்பதை தீர்க்கமாக அணுகுகிறது.
அகச்சிக்கலின் வழியே பரமன் தன்னுடனேயே உரையாடும் இடங்கள் குறுநாவலின் முடிவை எண்ண வைத்தாலும்
அதன் காட்சி தனித்த அனுபவமாக உருமாறியே நிற்கிறது.
அ.ராமசாயின் விலகல் தத்துவம்
குறுநாவலை மட்டும் சற்று விரிவாகவும் பிற குறுநாவல்களைக் குறைத்துச் சொல்லவும் தனித்த
காரணங்கள் இருக்கின்றன. நான்கு நாவல்களும் கதாபாத்திர குணங்களாலும் கதைசொல்லியின்
தன்மைகளாலும் பிண்ணப்பட்டு இருக்கின்றன. நான்கு கதைகளும் இணைகோடுகளாக தன்னுள் வேறொரு
கதையை, குணத்தை பெற்றிருக்கின்றன.
கழைகூத்தாடியின் இசையில்
அக்னி நதி நாவலே மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கும் பொதுவாக அமைகிறது. நாவலின் அனுபவத்தையும்
அது கொடுக்கும் அனுபவத்தையும் ஒரு சேர கொடுக்கிறது கதையின் மைய கதாபாத்திரம். அ.ராமசாமியின்
விலகல் தத்துவத்தில் சிறுகதை மற்றும் நாடகம் எனும் இரு படிமமே இருவேறு அனுபவங்களாக
கதையில் உருவம் கொள்கின்றன. இந்த நாடகம் எனும் விஷயம் கிட்டதட்ட அனைத்து கதைகளிலும்
இடம்பெறுகின்றன. யதார்த்தத்திற்கு அப்பால் இருக்கக்கூடிய நம்பிக்கையை நிலைபெற முயல்கின்றனர்
கதாபாத்திரங்கள். அதில் காணும் தோல்வியும் அதைக் கடந்த வெற்றியை நோக்கிய எண்ணமும் குறுநாவலின்
வாசிப்பை தனித்துவம் வாய்ந்ததாக மாற்றிவிடுகின்றன.
இப்படியான ஒரு நாடகத்தை
கறுப்பு வெள்ளைக் கடவுளில் கதைசொல்லியே நிகழ்த்துகிறார். இணைகோடென பயணிக்கும் இரு கதைகளையும் தெளிவாக விவரிக்கும்
கதைசொல்லி குறிப்பிட்ட இடத்தில் அனைத்தையும் நாடகத்தில் இயங்கும் சிறு அங்கம் என மாற்றுகிறார்.
அப்படி மாற்றும் பொழுது அதிகாரத்தின் பிடியில் அனைத்து கதாபாத்திரங்களும் மாட்டிக்
கொள்கின்றன. பரதேசியும் பெண் ஆசிரியையும் தத்தமது நமபிக்கைகளிலிருந்து பிடி நழுவி விழத்
துவங்குகின்றனர். காமராஜரின் பிணம் அவர் இறந்த சில ஆண்டுகளுக்கு பின் கிடைக்கிறது எனும்
அதீத கற்பனையில் துவங்கும் குறுநாவல் கதை நிகழும் சூழலின் வழியே யதார்த்தத்தில் பயணிக்கத்
தொடங்குகிறது. ஒவ்வொருவரின் நம்பிக்கைகளும் உடையும் தருணத்தில் வாழ்வின் குரூர யதார்த்தமாக
உருமாற்றம் கொள்கிறது. தேவிபாரதியின் கதாபாத்திரங்களில் குரூர யதார்த்தமே மேலதிகமாக
கோலோச்சுகிறது.
பரமனிடம் இதே விஷயம் கற்பனையாக
இருக்கிறது. கற்பனையே அவனது நம்பிக்கை. மஞ்சுவின் மீது வைத்திருக்கும் அளவிற்கு அதிகமான
அன்பு மஞ்சுவின் எதிர்காலம் சார்ந்த கற்பனையாக விரிவு கொள்கிறது. அந்த கற்பனைக்கும்
யதார்த்தத்திற்கும் இடையில் சிக்கித் தன்னையும் தன் அன்பையும் தனக்கே நிரூபித்து கொள்ள
முயல்கிறான். நிரூபனத்திற்கான தேவையை உணராத போதும் அதற்கானப் பிரயத்தனத்தை பரமன் குறுநாவல்
முழுக்க செய்துகொண்டே செல்கிறான்.
பரமனைப் போலவே பயணிக்கும்
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருமே
மைய கதாபாத்திரத்தின் வாழ்வை பொறுத்தமட்டில் உதிரிகள். ஆனாலும் அவர்களின் மேல் கொள்ளும்
சிறு பார்வை சுய வாழ்வை கேள்விக்குள்ளாக்குவதை ஒவ்வொருவருமே உணர்கின்றனர். இதையும்
தேவிபாரதியின் நுட்பமாகவே கருதுகிறேன். அ.ராமசாமியின் விலகல் தத்துவம் குறுநாவலில்
நாடக அரங்கினை விவரிக்கும் வகையில் அங்கு இடம்பெறும் அத்தனை கலைஞர்களின் குணங்களையும்
செய்கைகளையும் விவரிக்கிறார். பரமன் மகளைத் தேடி நகரத்திற்கு வரும் பொழுது அவன் சந்திக்கும்
நகரின் விளிம்பு நிலை மனிதர்களும், கறுப்பு வெள்ளைக் கடவுளில் பரதேசி கோயிலின் சுற்றுப்புறத்தில்
சந்திக்கும் மனிதர்களும், கழை கூத்தாடியின் இசையில் திருவல்லிக்கேணியின் வழியேவும்
கடற்கரை வழியேவும் கௌதம நீலாம்பரன் சந்திக்கும் மனிதர்களும் எண்ணிக்கையின் அளவில் அதிகமானவர்கள்.
உதிரிகள். ஆனாலும் சொந்த வாழ்க்கையை பரிசீலனை செய்ய உதிரிகளின் சிறு செய்கைகளே பேருதவி
புரிகின்றன. வாழ்வின் மீதிருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்வதும், பின் வேறொரு
நம்பிக்கையில் கையூன்றிக் கொள்வதற்கும் உதிரிகளே உதவுகின்றனர். மையக்கதாபாத்திரம் என
புகழும் மனிதர்களும் சமூகத்தின் உதிரிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். பரமனின் வாழ்க்கை
கண்மூடித்தனமான அன்பினால் சீரழிந்து போவதை விவரிக்கும் பக்கங்கள் மனிதன் எப்படி உதிரியாக்கப்படுகிறான்
என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றது. இப்படியான மனிதர்களையும் அவர்களின் உலகத்தையும்
அவரவர்களின் நியாயத்தில் நின்று பேசுகிறது தேவிபாரதியின் குறுநாவல்கள். குறுநாவல்களுக்கான
களம் மிகச்சிறியதாக இருக்கும் சமகாலத்தில் சவால் நிரம்பிய உலகையும், நுட்பமான கதை சொல்லும்
திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது தேவிபாரதியின் “கறுப்பு வெள்ளைக் கடவுள்” குறுநாவல்
தொகுப்பு.
- காலச்சுவடு
ஆகஸ்டு,2017