அகச்சீற்றங்களின் அழகியல்
இவ்வாண்டின்
தொடக்கத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் அனைவரின்
எழுத்துகளையும் துளியேனும் ருசிபார்த்துவிட வேண்டும் எனும் பெரும் முனைப்பில்
இருந்தேன். அதற்கான திட்டங்களையும் தயார்படுத்தி
வைத்திருந்தேன். அவ்வப்போது நாவல்கள் மீதெழும் ஆசை, கட்டுரைகளின் வழியான
பயணம் என மையநீரோட்டத்திலிருந்து விலகிச் சென்றேன்.
மீண்டும் சிறுகதைகளின் உலகினுள் எட்டிப்பார்க்கும் போது எடுத்திருந்த முடிவுகளும்
தீர்மானங்களும் திட்டங்களின் மீதமும் அச்சுறுத்தின. மேலும் சமீப காலங்களில் ஒவ்வொரு நூலையும் நிதானமாகவே
வாசிக்க முடிகிறது. பல வரிகளை ரசிக்கிறேன்.
சில வரிகளை மீள்வாசிப்பு செய்துகொண்டே
இருக்கிறேன். எழுத்து தன் வசீகரத்தை
ஒவ்வொரு புனைவின் வழியேவும் காண்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான வசீகரத்தையே முனிமேடு சிறுகதைத் தொகுப்பும் என்னுள் நிகழ்த்தியது. எம்.கோபலகிருஷ்ணனை இந்நூல் வழி மட்டுமே முதன்முதலாய் அறிகிறேன்.
கிட்டத்தட்ட
அனைத்துக் கதைகளுமே தனிமனிதனின் உளவியல் சிக்கலை அவரவர்களின்
மண்ணிலிருந்து பேசுகிறது. கதைக்கான களமே அக்கதைக்கான மண்.
கதையின் மைய நாயகனாக சித்தரிக்கப்படுபவனின்
குணாம்சங்கள் அவனுடைய மண் சார்ந்தே
உருவாக்கப்படுகிறது. அதற்கென்றே இருக்கும் அனைத்து சிக்கல்களையும் எதிர்கொள்கிறான்.
அதன் மூலம் பாதிக்கப்படும் எண்ணற்ற
மனிதர்களும் கதையூடே இடம்பெறுகிறார்கள். மண்
எத்தனை தூரம் மனிதனை செப்பனிட
முனைகிறதோ அதே அளவில் எதிர்மறை
விஷயங்களையும் போதித்தே நகர்கிறது. மனிதனுள்ளே வேர்விடும் எதிர்மறையான விஷயங்கள் அன்றாடம் ஆகிறது. அவனது சுற்றத்தார்
அதற்கு பழகிக் கொள்கின்றனர். அக்குணத்தையே
அவனுக்கான அடையாளமாக மாற்றிக் கொள்கின்றனர். இந்தப்
புரிதலிலிருந்து தான் எம்.கோபாலகிருஷ்ணனின்
கதைகள் ஆரம்பம் ஆகின்றன. பிறிதொருவர்
சார்ந்து தாம் கொள்ளும் குணங்கள்
பொது அறத்தின் முன் வீழ்ச்சியுரும் போது
குழப்பத்தில் ஆழ்கிறோம். யதார்த்ததின் பக்கமும் சாய முடியாமல் தமக்குள்
இருக்கும் கற்பனைகளுக்கும் செவிமடுக்காமல் முரண்களுள் சிக்கிக் கொள்கிறோம். அப்படி சிக்குண்ட பல்வேறு
மனிதர்களை சிறுகதைகளின் வழியே வரைந்து செல்கிறார்.
“பிற்பகல்
விளையும்” சிறுகதையின் வழி மேற்கூறியக் கூற்றை
எடுத்துச் சொல்ல முடியும். புடவை
சார்ந்த தொழில் செய்பவர் நாயகன்,
அப்பா. அவர் புடவை மடிக்கும்
போதெல்லாம் கோபம்கொள்வார். மனைவியின் மீது எறிந்துவிழுவார். மகனால்
அந்தக் கோபத்தை அறிந்துகொள்ளவே முடியாது.
அப்பாவுடன் சென்றால் தேங்காய் பன் ஒன்று கிடைக்கும்
எனும் எண்ணத்தில் செல்கிறான். டெய்லர் கடை ஒன்றில்
அமரச் செய்துவிட்டு செல்கிறார். டெய்லர் கடையில் கணவன்
மனைவிக்கு இடையில் சண்டை நிகழ்கிறது.
அதை வேடிக்கைப் பார்க்கிறான். அக்கடையின் ஆடவரைப் பார்க்கும் போது
மனம் அப்பாவுடன் அவரை இணைத்துக்கொள்கிறது. கதை
முழுக்க மகனுக்கு அப்பாவின் மீதான உருவம் எப்படி
சித்தரிக்கப்படுகிறது என்பதை நுண்மையாக பேசுகிறது.
அப்பா அதிகாரத்தின் ஸ்தூலம். அந்த
அதிகாரம் மேலதிகமாக புழங்கும் இடம் வீடு. வீட்டிற்கு
வெளியில் அப்பாவின் அதிகாரம் என்ன என்பது அவனால்
அறிந்துகொள்ளமுடியாததாய் இருக்கிறது. அறிந்துகொள்ளும் பட்சத்திலும் அப்பாவின் அதிகாரம் தன்னிலிருந்து அழியாது பாதுகாக்க வேண்டும்
என எண்ணும் இடத்தில் சிறுகதை
செவ்வியல் தன்மையை அடைகிறது. டெய்லர்
கடையின் வழியே உருவாக்கப்படும் கதாபாத்திரம்
தன்னுடைய அப்பாவின் வலிமையை மெருகேற்றக் கூடியதாக
கதையில் பிசகின்றி உருவாக்கப்படுறது. இதை மேற்கூறிய எண்ணத்தில்
ஏற்றிப் பார்த்தால் சொல்ல விழைந்தது எளிதாக
புரியும். அப்பா எனும் பிம்பத்தை
மகன் உருவாக்குகிறான். பின் அதைப் பொதுவான
அப்பாவுடன் சேர்த்துக் கொள்கிறான். அப்பாவும் சமூகத்தின் ஓர் சாதாரண மனிதன்
என்பதை உணரும் போது தனக்கு
அப்பா சார்ந்த எவ்வித குணாம்சம்
தேவை எனும் தர்க்கத்தில் மூழ்கிறான்.
இதே வகைமைக்குள் இத்தொகுப்பில் நிறைய காதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றனர்.
இது தவறில்லையா என்று கேள்வி எழும்
மறுகணம் சுற்றியிருக்கும் மக்களை இக்கதைகளின் கோணத்தில்
அவதானிக்க முயன்றேன். அப்போதே புரிந்தது இக்கதைகளும்
அவற்றினூடாக இருக்கும் கதைமாந்தர்களும் அவர்தம் குணாம்சமும் கலாச்சாரத்தின்
குறியீடு. ஆதவன் மேட்டுக்குடியினராக முயலும்
நடுத்தர வர்க்கத்தின் பிம்ப உலகத்தை களைகிறார்.
எம்.கோபாலகிருஷ்ணன் ஒவ்வொரு மனிதனுள்ளும் குடிபுகும்
பிம்பங்களை எடுத்தெரிகிறார். இந்த பிம்பம் சமூகம்
தனி மனிதன் மீது செலுத்தப்படும்
வன்முறை. சாதி, நிறம், வர்க்கம்
என பல்வேறு காரணங்களால் எழும்
இந்த பிரிவுகளின் மூலம் மனதில் கசப்புகளாய்
குடிகொண்டிருக்கிறது. அடிப்படை உணர்வு முரண்களில் நிறுவப்பட்டிருக்கிறது.
மேற்பரப்பில் இருக்கும் பெரிய விஷயங்களைப் பேசாமல்
உள்ளார்ந்த நுண்மையை இந்தக் கதைகள் எளிமையாக
கையாள்கின்றன.
கதை மாந்தர்கள் எப்படி பண்பாட்டின் பகுதியாக
இருக்கிறார்களோ அப்படியே கதைசொல்லும் விதமும் அமைந்திருக்கிறது. பேய்களை மையப்படுத்திய கதைகளில் இருக்கும் மேற்கத்திய சிந்தனைகளைக் களைத்து மிக எளிமையாக
நம் அன்றாடத்துடன் இணைந்த பயத்தை பேசுகிறது
முனிமேடு எனும் சிறுகதை. அதில்
வரும் கோலம் எனும் குறியீடு
எழுத்தின் வழியே கடத்தக்கூடிய உணர்வுகளை
புல்லரிப்புடன் எதிரொலிக்கிறது.
பண்பாட்டின்
நிழலுடன் கதைகள் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றனவோ
அதே போல பண்பாட்டின் மீறலையும்
சில கதைகளில் பிரதிபலிக்கிறார். ‘நிழல் பொழுதினிலே’, ‘உயிப்
பற்று’, ‘சொற் பொருள் பின்
வரும்’, ‘நிலைக்கண்ணாடி’ ஆகிய கதைகள் வெவ்வேறு
பருவத்தில் இருக்கக்கூடிய மீறலை பேசுகிறது. உடலுக்கும்
வீட்டிற்கும் இடையே மனதளவில் போர்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. வீடும் குடும்பமும் உடல்
விரும்பும் கட்டற்ற சுதந்திரத்திற்கு அரணாக
அமைகிறது. அந்த அரணை உடைத்துக்கொண்டு
பொதுவெளிக்கு வரும் உடல்கள் வெறும்
உடல்களாகவே தேங்கிவிடுகின்றன. இந்த தேக்கம் சமூகம்
வகுக்கும் அறத்தின் காரணத்தால் அமைகின்றன. சமூகம் நிர்மாணிக்கும் அறங்களை
வீடாகவும் அதிலும் கட்டடங்க முடியாமல்
வெளியேற முயலும் மனிதர்கள் தனி
மனித சுதந்திரமாகவும் கதைகள் உலா வருவது
நவீன கலாச்சாரத்தை கேள்விக்குட்படுத்துகிறது. அதிலும் சொற்பொருள் பின்
வரும் சிறுகதை இந்த தர்க்கத்தை
சிறுவனின் பார்வையில் நிறுவியிருப்பது இவ்வகைமைக்குள் சிக்காத கதையாக அதை
மாற்றிவிடுகிறது. சிறுவனுக்கு இந்த அறங்கள் பொருட்டே
அல்ல. மாறாக அவனுடைய, அவனின்
அறிதலுக்குட்பட்ட சுயமரியாதையை தீண்டும் செயல்கள் அவனுடைய உளவியலை செப்பனிடுகின்றன.
பள்ளியின் வாசலில் பெட்டிக்கடை வைத்திருக்கும்
தன் அம்மாவிற்கும் பள்ளி முதல்வருக்கும் தொடர்பு
இருப்பதாய் வதந்தி ஆரம்பிக்கிறது.
அவனது பார்வையில் அம்மாவின் உலகம், அவனறிந்த உண்மை,
சுற்றத்தாரின் பேச்சு, கனன்றெழும் கோபம்
என அவனுடைய மனம் செல்லும்
பாதை மனிதம் தோல்வியுறும் இடமாக
மாறுகிறது. அதை அவனைச் சுற்றியிருந்த
சமூகமே அவனுக்கு போதித்திருக்கிறது என்பதை உணரும் தருணத்தில்
கதை பெரும் கனத்தை வாசகனிடம்
விட்டு செல்கிறது.
மானுடத்தின்
வீழ்ச்சியை பல்வேறு வகையில் சோதனை
முயற்சியாக செய்திருக்கிறார். அதில் அற்புதமான சித்தரிப்பாக
“சீசர்” எனும் சிறுகதை அமைகிறது.
நாயை பயிற்சி கொடுக்கும் போலீஸ்காரரின்
கதை. அந்த பயிற்சி முழுக்க
விவரிக்கப்படுகிறது.. அதை வேடிக்கைப் பார்க்கும்
மனிதர்களும் விவரணைக்குள் அடங்குகின்றனர். அவர்களீன் மீது பயிற்சி எனும்
போர்வையில் வன்முறையை பிரயோகிக்கிறான். சிறுகதையின் போக்கில் நாயினுள் இறங்கும் பயிற்சி கொடுப்பவனின், மனிதனின்
வன்மம் வன்முறையின் உச்சத்தை இறுதியில் அடைகிறது. அனைத்து மிருகத்தையும் ஏதேனும்
வகையில் மனிதனாக்க முயலும் மனிதனின் அற்பத்தனம்
வேறொரு எளிமையான மனிதனால் எப்போதும் வீழ்த்தப்படுகிறது என்பதையே இக்கதையும் இறுதியாக சொல்லி முடிகிறது.
சீசர் கதையின் இறுதியில் வரும்
கடலைக்காரியானாலும் சரி, மண்வீணை சிறுகதையில்
வரும் ஓவியனானாலும் சரி, முன்றகூறிய பிற்பகல்
விளையும் சிறுகதையின் மகன் கதாபாத்திரம் ஆனாலும்
சரி அனைவரும் தங்களிடமுள்ள நம்பிக்கைகளின் மீது தீராத பற்று
கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கையை சீண்டும்
வன்முறையை ஏளனப் புன்னகையால் கடந்து
செல்கின்றனர். சில நம்பிக்கைகள் அவர்களையே
வன்முறையை புரிய வைக்கிறது. தொகுப்பின்
முதல் கதையான ‘இரவு’இல்
தம்பியின் முதலிரவை கெடுக்க முயலும் அண்ணனின் சித்தரிப்பு
உளவியல் நோய்க்கூறின் உச்சத்தை எடுத்துக்காட்டுபவை. வரலாற்றுக் கதைகளின் வழியேவும், கற்பனைகளின் வழியேவும் மனிதனின் இயலாமை பேசப்படுகிறது, அதிலிருந்து
மீட்டெடுக்கப்படும் கலையின் வசீகரங்கள் கொண்டாடப்படுகிறது.
நவீன கலாச்சாரத்தின் மீதான விமர்சனமும் அதிலிருந்து
தப்பிக்க முனையும் மனிதர்கள் தொகுப்பு முழுக்க உலவிக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு
சிறுகதையின் மொழியும் குழிகளற்ற தார்ச்சாலையில் அலுங்காமல் பயணம் செய்வதை நினைவூட்டுகிறது.
முடிவை நோக்கிச் செல்லும் பயணம் முடிவற்ற அனுபவத்தை
தருவதைப் போன்று கதைகளும் அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் முடியும் இடத்தில்
வாசிப்பனுபவத்தில் தர்க்கங்கள் ஆரம்பிக்கின்றன. வாசிப்பில்
சுய வாழ்க்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. நிலைக்கண்ணாடிப் போல நம்முள்ளே இருக்கும்
கசடுகளை பிரதிபலிக்கின்றன எம்.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை
உலகம். அந்தரங்கங்களை சீண்டும் பயம் நிரம்பிய பயணமாகவே
இருக்கிறது முனிமேடு சிறுகதைத் தொகுப்பு.
பி.கு : முனிமேடு சிறுகதைத் தொகுதியை மட்டும் முன்வைத்து எம்.கோபாலகிருஷ்ணனை நேர்காணல் செய்திருந்தேன். அது முனிமேடு சிறுகதை தொகுப்பு சார்ந்த புரிதலையும் சிறுகதை எனும் பொது அம்சத்தையும் நுண்மையாக அணுக உதவிபுரிகிறது. நேர்காணலுக்கான இடுகை - முனிமேட்டில் ஒரு சந்திப்பு
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக