பரிகாசத்திற்குரிய பொம்மைகள்
சமீப காலம் வரை சமூகத்தின்
வளர்ச்சி அறிவியலின் வளர்ச்சியுடன் பிணைந்தே இருந்து வந்திருக்கிறது. புதிய
புதிய தொழில்நுட்பங்களாலும் கண்டுபிடிப்புகளாலும் சமூகம் நவீன வாழ்வியல்
முறையை நிர்மாணிக்கத் துவங்கியிருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும்
பல்வேறு சாதனங்களுடன் ஓர் நாளை கழித்துக்
கொண்டிருக்கிறான். இந்த அறிவியல் சாதனங்களை
கூறும் அதே நேரத்தில் இவை
ஏதோ ஒன்றின் மாற்றாக இருக்கக்கூடுமோ
எனும் எண்ணமும் இணைகோடாக எழுகிறது. நடந்து சென்று கொண்டிருந்த
மனிதனுக்கு மிதிவண்டி நடப்பதின் மாற்றாக அமைந்தது. இருசக்கர
வாகனம் மிதிவண்டியின் மாற்றாக, கார் இருசக்கர வாகனத்தின்
மாற்றாக என அடுக்கிக் கொண்டே
போகலாம். ஒரு கட்டத்தில் சாதனங்கள்
சமகாலத்தின் மோஸ்தராக உருவெடுக்கத் துவங்குகிறது.
மேற்கூறிய
விஷயங்கள் எல்லாமே பொருள்முதல்வாத அடிப்படையில்.
கருத்தின் அடிப்படையில் அணுகும் பட்சத்தில் அறிவியலின்
வளர்ச்சி மக்களை ஓர் நம்பிக்கையில்
இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு இட்டுச்
செல்கிறது. எத்தனையோ நோய்கள் புதிதாக பரவிக்
கொண்டு இருக்கும் காலகட்டத்தில் அதற்கான மருந்து எப்படியும்
கண்டுபிடிக்கப்படும் எனும் நம்பிக்கை மக்களிடையே
இருக்கத் தான் செய்கிறது. அதே
அறிவியல் வளர்ச்சி கொள்ள ஆரம்பித்த தருணங்களில்
மக்களிடையே இருந்த நம்பிக்கை என்ன
? அதை அறிவியல் எப்படி தகர்த்து தனக்கான
இடத்தை எடுத்துக் கொண்டது ? இவ்விரண்டு கேள்விகளும் தனிப்பட்ட ஒருவனின் வாழ்வில் எப்படி நிகழும் ? இம்மூன்று
கேள்விகளையும் மையமாக கொண்டு நகரும்
நாவலாக அமைகிறது லோரன்ஸ் வில்லலோங்கா எழுதி
தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்த
“பொம்மை அறை”.
இந்நாவல்
கட்டலன் மொழியிலும் ஸ்பானிய மொழியிலும் வெளியானது.
Jaume Pomar லோரன்ஸ் வில்லலோங்கா பற்றி எழுதியிருக்கும் நீண்ட
கட்டுரையில் இந்நாவல் சார்ந்த சில தகவல்கள்
கிடைக்கின்றன. 1952ற்கும் 1954ற்க்கும் இடையே பொம்மை அறை
நாவலை இயற்றியுள்ளார், சில பக்கங்கள் குறைவாக.
அதற்கு காரணம் அவர் முன்
எழுதிய Mort de dama என்னும் நூலின் வழியே
மல்லோர்க்கா எனும் இடத்தில் வாழும்
மக்களின் அன்றாட வாழ்க்கையை பகடி
செய்திருக்கிறார். அதை வெளியிடும் பொழுது
அதன் பதிப்பகத்தார் எழுத்துநடையில் சில மாறுதல்களையும் செய்திருக்கிறார்.
இதை அறிந்ததனாலேயே மொத்த நாவலையும் அவரே
மொழிபெயர்த்து ஸ்பானிய மொழியில் 1956 இல்
வெளியிடுகிறார், குறும்பதிப்பாக. அதிகமாக பேசப்படாமல் போகிறது.
பின் 1961இல் கட்டலன் மொழியில்
வெளியாகிறது. அப்போது பரவலாக பேசப்படுகிறது.
அப்பதிப்பே ஆங்கிலத்திலும் அதனின்று தற்சமயம் தமிழுக்கும் வெளியாகியிருக்கிறது.
நூலின்
பின்னுரையாக மொழிபெயர்த்த அனுபவத்தையும் அதே நேரம் வாசகராக
வாசித்த அனுபவத்தையும் யுவன் சந்திரசேகர் எழுதியிருக்கிறார்.
நாவலை வாசிக்கும் போதே அதனூடாக இருக்கும்
சிக்கலான மொழியையும் அழமான கருப்பொருளையும் வாசகனால்
எளிதில் இனங்காண முடியும். அதை
சுவை குன்றாமல் தமிழுக்கு கொண்டுவருவது சாதாரண காரியமன்று. அதை
கற்பனையில் நினைக்கும் பொழுதே ஆச்சர்யமென இருக்கிறது.
இவ்வார்த்தையை
குறிப்பாக கூறக் காரணம் நாவல்
பல அடுக்குகளாக விரிவுகொள்கிறது. மையமென மேலே குறிப்பிட்ட
அறிவியல் சமாச்சாரங்கள் நாவலில் எந்நம்பிக்கைகளை தகர்க்க
முனைகிறது எனில் இறையியல் நம்பிக்கைகளை.
தகர்க்க முனைகிறது என்பதைக் காட்டிலும் தீர்க்கமாக தர்க்கம் புரிகிறது. மதம் மக்களிடையே சில
நம்பிக்கைகளை விதைக்கிறது. நாளடைவில் அவை சமூகத்தின் மரபாக
மாறுகிறது. அறிவியல் எல்லாவற்றையும் பகுப்பாய முற்படுவதால் மதம் விதைக்கும் நம்பிக்கைகளையும்
பகுப்பாய துவங்குகிறது. மதத்தை மரபு என்று
சொல்லும் நோக்கில் அறிவியல் அதனின்று நவீனமானது என்பதையும் ஏற்க வேண்டும். இந்த
நவீனம் ஒவ்வொருவரின் ஆசையிலும், கலை சார்ந்த வளர்ச்சியிலும்
கூட இடம்பெறுகிறது. இந்த சமூகத்தின் கூட்டு
வளர்ச்சியை நுண்மையாக ஆசிரியர் நாவலில் கையாண்டிருக்கிறார்.
1929 இல்
முதலாம் ஜேம்ஸ் தலைமையில் கட்டலன்
பிரதேசம் மல்லோர்க்காவை வென்றது. அன்று முதல் பியர்ன்
எனும் இடத்தின் நிலங்கள் அனைத்தும் ஸென்யோர் வம்சத்தின் அடியில் வருகிறது. அவ்வம்சத்தின்
கடைசி ஆளாக இருப்பவர் டான்
டோனி மற்றும் டோனா மரியா
அந்தோனியா. டான் ஜோன் மயோல்
எனும் சிறுவனை வளர்ப்பு மகனென
வளர்க்கிறார்கள். இவர்களுடன் இன்னுமொரு முக்கிய கதாபாத்திரமாக நாவலில்
வருபவர் டோனா க்ஸிமா.(மருமகள்
என்றே நாவலில் குறிப்பிடப்படுகிறது. மூல மொழியின்
அடிப்படையில் ஒன்றுவிட்ட அல்லது விலக்கப்பட்டுவிட்ட மருமகளாக
இருக்ககூடும் என மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார்)
நாவல் முழுக்க வளர்ப்பு மகனான
டான் ஜோனின் கூறலிலேயே நகர்கிறது.
அறிமுகம் எனும் தலைப்பிலான அத்தியாயத்தில்
நாவல் துவங்குகிறது. அதில் டான் ஜோன் டான்
மிக்கெல் கிலாபெர்டுக்கு கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்திலேயே
மொத்த நாவலின் சாரத்தை கூறுகிறான்.
ஸென்யோர் தம்பதிகள் இறந்து விடுகின்றனர். அவர்கள்
இறந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை. ஆனால்
அவர்கள் வாழ்க்கையை தன்னால் கூற முடியும்
என சொல்லி தான் அறிந்த
ஸென்யோர் தம்பதிகளுடனான வாழ்க்கையை நாவல் முழுக்க விவரிக்கிறான்.
கடிதத்திக்லேயே பின்வருமாறு வருகிறது,
“பிரச்சினையை
நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விசித்திரமான அந்த வாழ்க்கையை பற்றிய
எனது விவரணையை நான் மூன்று பகுதிகளாக
பிரித்திருக்கிறேன் - இது
ஒரு நாவல் என்கிறது போல.
முதற்பகுதி ஃபாஸ்டுடைய தாக்கத்தில் என்று அழைக்கப்படும் – புயல்
சூழ்ந்த காலகட்டம் அது. இரண்டாவது பகுதி,
இந்த மலைத்தொடரின் சாந்தத்துக்குள் நிகழ்ந்தது, அதற்கு அமைதி பியர்னை
ஆள்கிறது என்று தலைப்பு. மூன்றாவது
பகுதியை பொறுத்தவரை அதில் ஒரு பின்னுரை
இருக்கிறது, சமீபத்தில் எனக்கு நேரிட்ட ஒரு
விநோதமான, மனமுடையவைத்த வருகைக்கு பின்னர் உடனே எழுதபட்டது”
இம்முன்று
பகுதிகளாகத் தான் நாவலும் நகர்கிறது.
நாவலின் ஆரம்பத்தில் வரும் இக்கடிதத்தாலும் அதில்
குறிப்பிடப்படும் இம்மூன்று தெளிவுகளாலுமே அமைப்பளவிலும் இந்நாவல் நவீனமானது என்பதை வாசகனால் உணர்ந்து
கொள்ள முடியும். மேலும் இந்நாவல் முழுமைக்குமே
ஒற்றைக் குரலில் ஒலிப்பது. அது
டான் ஜோன் மயோல் என்பவனின்
குரல். அவன் கண்டதையும் கேட்டதையும்,
அதன் மூலம் அவன் கொண்ட
தெளிவுகளையும் நாவலாக, ஸென்யோர் தம்பதிகளின்
கதையாக விவரித்திருக்கிறான்.
ஃபாஸ்டுடைய
தாக்கத்தில் எனும் பகுதி முழுக்க
டான் டோனியின் கதாபாத்திர மையத்தில் நகர்கிறது. மருமகளான டோனா க்ஸிமாவுடன் மனைவியை
விட்டுவிட்டு ஃப்ரான்ஸ் சென்றுவிடுகிறார் ஸென்யோர் (நாவலில் டான் டோனியை
ஸென்யோர் என்றும் டோனா மரியா
அந்தோனியாவை ஸென்யோரா என்றும் விளிக்கிறார்கள். அதையே
இங்கும் பிரயோகம் செய்கிறேன்). டோனா க்ஸிமா ஸென்யோரை
விட வயதில் சிறியவள். பாரிஸில்
அவளுக்கு வேறு காதலன் கிடைக்கவே
ஸென்யோரை விட்டுவிட்டாள். இந்த காரணத்தால் ஸென்யோராவும்
அவரை விட்டு பிரிந்திருக்க தனியே
டான் ஜோனுடன் இருக்கத் துவங்குகிறார்.
அத்தருணத்தில் தன்னை பிரிந்திருக்கும் மனைவி
சார்ந்த காதலையும், டோனா க்ஸிமாவின் மேல்
கொண்ட ஆசையையும் அவர் டான் ஜோனிடம்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிக்கொணர்கிறார். மீண்டும் இளமையை ரசிக்க வேண்டும்,
உலகின் வளர்ச்சிக்கொப்ப வளரும் கலையையும் அறிவியலையும்
கொண்டாட வேண்டும் என்பதே ஸென்யோரின் முக்கிய
விஷயங்களாக அமைகின்றன. அதே
ஸென்யோராவிற்கோ இறையியல் விஷயங்களே பிரதானமானது. அதனாலேயே ஸென்யோரின் பல கருத்துகளுக்கு முரணாகவே
நாவல் முழுக்க தெரிகிறார். கதைசொல்லியான
டான் ஜோன் இருபுறமும் செவிமடுக்கும்
நடுநிலைவாதியாக நாவலில் வலம் வருகிறான்.
இம்மூவருக்கும் இடையில் நிகழும் தர்க்கங்கள்
கதைசொல்லியின் நினைவுகூறலாக நாவலின் வழியே நகர்கிறது.
மதம் சார்ந்த நம்பிக்கைகளை அறிவியல்
மட்டும் எதிர்க்கவில்லை. மாறாக பண்பாட்டு வளர்ச்சியும்
கலாச்சார மாற்றங்களும் கூட மதத்திற்கு முரணாக
நின்றன. உதாரணமாகவெனில் டான் ஆண்ட்ரு எனும்
பாதிரியார் அவ்வூரில் நடக்கவிருக்கும் திருவிழா சார்ந்து ஸென்யோருடன் பேச வருகிறார். ஸென்யோர்
அங்கு நடனமும் இசையும் இருக்க
வேண்டும் என்கிறார். ஆனால் பாதிரி அது
பாவகரமானவை என தர்க்கம் புரிகிறார்.
இது போன்று பல சம்பவங்கள்
நாவலில் இடம்பெறுகின்றன. பல தீவிரமான தர்க்கங்களுள்
இதுவும் ஒன்று. எப்போதெல்லாம் நாவலில்
அப்படியான தர்க்கங்கள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் நாவல் வேறு ஒரு
கிளைக்கதையை உருவாக்குகிறது. இங்கு இரண்டு கிளைக்கதைகள்
உருவாகின்றன. ஒன்று நடனம் பாவமானது
அல்ல என. இதை ஸென்யோர்
முன்வைக்கிறார். பத்து கட்டளைகள் முன்
டேவிட் நடனமாடியதாக விவிலியமே கூறுகிறது என. சமூகத்திலிருந்து ஒரு
விஷயம் மறுக்கப்படும் போது மறைவில் அந்த
தவறு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை
விவரிக்கும் போதும் பாதிரியால் உணர்ந்துகொள்ள
முடியவில்லை கொண்டாட்டம் பாவகரமானதன்று என. அப்போது ஸென்யோர்
சொல்கிறார்,
“ஜனங்களை
நான் அறிவேன் - அதிலும்
நடன நிகழ்ச்சி எதற்கும் போயிராத, ஆனால் இறுதிச் சடங்கு
எதையுமே தவறவிட்டிராத சில பெண்களை அறிவேன்.
நீண்டகால அளவில், ஒருவரின் குணபாவத்தை
பாதிக்கக்கூடியது இது. காலம் போகப்
போக, மிகக் குறைவான நடவடிக்கைகளிலேயே
நாம் ஈடுபடுகிறோம். கடைசியில் சாவதைத் தவிர வேறொன்றும்
செய்ய அறியாதவர்களாய் ஆகிவிடுகிறோம்.”
இந்த கூற்று ஸென்யோரின் கடந்த
காலத்தை தனக்குள்ளே ஆராயும் அதே நேரத்தில்
சமகாலத்தில் அவர் கண்ட மக்களின்
வாழ்வில் இருக்கும் வெறுமையையும் வெளிக்காட்டுகிறது. மேலும் இது இந்நாவலின்
காலகட்டத்திற்கு மட்டுமானதன்று. நவீன வாழ்க்கையின் முதற்குறிக்கோளாக
மரபை உடைத்தெறிதலாகவே மாறக் காரணம் மரபு
இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டிருப்பதே ஆகும். அதை இந்நாவலில்
கள யதார்த்தமாக ஆசிரியர் சித்தரித்திருக்கிறார்.
இந்நாவல்
மேற்குறிப்பிட்டது போல பல உட்பகுதிகளை,
கிளைக்குறிப்புகளை கொண்டிருக்கிறது. நாவலின் கதாபாத்திரங்களும் வாசித்த
நூல்களின் குறிப்புகளும், எழுத்தாளர்களின் கலைநோக்கும், பார்த்த நாடகங்களின் தாக்கமும்
நாவல் முழுக்க விரவி இருக்கிறது.
இதை இருவேறு பார்வையில் அணுகலாம்.
பல உப குறிப்புகள் நாவலிடையே
வந்தாலும் அவை நாவலின் ஓட்டத்தை
அல்லது கதை சார்ந்த போக்கை
எங்குமே பாதிக்கவில்லை. மற்றொன்று அக்கதைகளையும் அதன் தன்மைகளையும் அறியும்
பட்சத்தில் நாவல் வாசகனுக்கு வேறொரு
திறப்பை கொடுக்கக்கூடும். மேலும் நாவலின் கதாபாத்திரங்களின்
வழியே ஃப்ரெஞ்சு, லத்தீன், இத்தாலி போன்ற பிரதேசங்களின்
கலாச்சார பிண்ணனிகளையும் வாசகனால் கண்டுணரமுடிகிறது. வாக்னரின் இசையை பேசும் நேரத்தில்
அது சார்ந்த தர்க்கங்களையும் ஆசிரியர்
முன்வைக்கிறார். ஃபாஸ்டின் நாடகமும் அறிமுக மற்றும் விமர்சனம்
எனும் இரு ஒழுங்கில் நாவலில்
இடம்பெறுகிறது. இது போன்று எண்ணற்ற
பேர் நாவலினூடே இடம் பெறுகின்றனர். யுவன்
சந்திரசேகர் கூட தன் பின்னுரையில்
தமிழில் இப்படியான புதினம் வெளிவரவில்லையே என
ஆதங்கத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் பொழுது வாசகர்களுக்கும் அவ்வெண்ணம்
எழுவது நாவலின் இயல்பாக இருக்கிறது.
நிறைய கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பேசும் ஸென்யோரின் வசம்
ஆவணக்காப்பகம் ஒன்றிருக்கிறது. அதில் இருக்கும் பல
நூல்களை மதத்திற்கு புறம்பானது என சுற்றத்தார் அடிக்கடி
கூற அந்த ஊரே கேட்டிருக்கிறது.
பாதிரியும் அந்த நூல்களை அகற்ற
வேண்டும் என அவரிடமே பேசுவது
நாவலில் இடம்பெறுகிறது. மேலும் இரவு நேரங்களில்
விளக்கினை வைத்துக் கொண்டு ஏதோ பாவகாரியம்
செய்துகொண்டு வருகிறார் எனும் சந்தேகமும் ஊர்
மக்களுக்கு எழுகிறது. ஆனால் அவர் இரவில்
என்ன செய்கிறார் என்பது டான் ஜோனிற்கு
கூட தெரியவில்லை. மேலும் உலகின் மூலைகளில்
நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்தெல்லாம் இவர் அறியும் தருணங்கள்
நாவலில் மர்மமாகவே இருக்கிறது. யார் சொல்லியும் ஆவணகாப்பகத்தின் சில நூல்களை தூக்கியெறியவோ
எரிக்கவோ முன்வராத ஸென்யோர் மனைவி திரும்ப வரும்
பொழுது எரிக்க சம்மதிக்கிறார். வேண்டுகோளிற்கிணங்க
எரிக்கவும் செய்கிறார். அதற்கு காரணமாக முன்வைப்பது
கூட்டன்பர்கின் அச்சியந்திர கண்டுபிடிப்பு. அதை பகடியுடன் பின்வருமாறு
கூறுகிறார்,
“மகா கூட்டன்பர்க் சுதந்திர சிந்தனைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார். எந்த அளவிற்கு என்றால்,
இப்போதெல்லாம் புத்தகங்களை எரிப்பது என்பது அவற்றைப் பிரபலபடுத்துகிற
காரியம் ஆகிவிட்டது. பியர்னில் எரிக்கப்படும் பதிப்புகளுக்கு ஈடாக பாரிஸில் அவை
அச்சாகும்”
ஸென்யோர்
மீது சுற்றத்தார் வைத்திருக்கும் தவறான அபிப்பிராயங்களே ஸென்யோராவிடமும்
இருக்கிறது. ஆனால் நாவலின் இரண்டாம்
பகுதியில் உலகம் அறிவியலின் வளர்ச்சியுடன்
தன் வளர்ச்சியை இணைத்துக் கொண்டுள்ளது என்பதை அறியும் போது
அறிவியல் நடைமுறை பிழையாக இருக்காது
எனும் நிலைக்கு ஸென்யோரா வருகிறார். அது சமூகம் மாற்றம்
கொள்வதின் குறியீடாகவே இருக்கிறது. குறிப்பாக முதலில் ஸென்யோர் கண்டுபிடிக்கும்
ஆட்டோமொபைல் எனும் வாகனத்தை உதாசீனம்
செய்யும் ஸென்யோரா பின் வேறொரு நாட்டில்
அது நடைமுறையென மாறியிருப்பதை பார்க்கும் போது அவளுள் ஏற்படும்
மாற்றம் தனி மனிதரின் மாற்றமாக
சித்தரிக்கப்படாமல் சமூகத்தின் மாற்றமாக சித்தரித்திருப்பது நாவலின் பெரும் திறப்பாக
அமைகிறது.
நாவலின்
இரண்டாம் பகுதியான பியர்னை அமைதி ஆள்கிறது
பகுதியில் பல சம்பவங்களை கதைசொல்லி
விவரிக்கிறார். அவற்றின் வழியே ஸென்யோரின் ஸ்திரமற்ற
மனதை எளிதாக புரிந்து கொள்ள
முடிகிறது. அதே நேரம் அவர்
மனதினுள்ளே இருக்கும் காதல் ரசத்தையும் மிக
அழகாக ஆசிரியர் விவரித்திருக்கிறார். முதல் பாதியில் பியர்னுக்கு
திரும்பி வரும் டோனா க்ஸிமாவை
நிராகரிக்கும் தருணத்திலிருந்து அவருடைய நிலையில்லா தர்க்கம்
துவங்குகிறது. அவருடைய உள்ளார்ந்த தேடல்
எதுவென்றே அறியாத நிலையில் பிற
கதாபாத்திரங்களும், தன் தேடல் எதுவென
சொல்லத் தெரியாத கதாபாத்திரத்தில் ஸென்யோரும்
இரண்டாம் பாகத்தில் உளவுகிறார்கள்.
ஸென்யோர்
வம்சத்தின் ஆதி முதலான ஆவணங்கள்
எதுவுமே அவர்கள் வசம் இல்லை.
மேலும் டான் டோனி தன்
வம்சம் அந்த நிலத்தை வாங்கினார்கள்
என்பதிலேயே நிற்கறாரன்றி போருக்கு பின்னால் கிடைத்தது என்பதை ஏற்கவில்லை. இந்நிலையில்
வம்சப்பெயரை தாங்கி நிற்கவே பல
படாடோப விஷயங்களை செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அதில் கடன் வம்ச சொத்துகளை
விற்கும் நிலைக்கு சென்றுவிடுகிறது. ஸென்யோரா திரும்பி வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்த கடன்களை சமாளிக்க
டான் ஜோனுடன் கணக்கு வழக்குகளில்
பணி புரிகிறார். கதைசொல்லியான டான் ஜோன் பாதிரியாராவதற்கான
படிப்பில் இருக்கிறான். அவன் எப்படியேனும் போபாண்டவரைக்
காண வேண்டும் என ஸென்யோர் விரும்பியதால்
யாரிடமும் கேட்காமல் நிலத்தின் சில பகுதியை விற்று
பணத்தை சேமித்து அதில் மூவரும் பயணம்
மேற்கொள்கிறார்கள். இந்த பயணம் இரண்டாம்
பகுதியில் பெரிதாக ஆக்ரமிக்கிறது. அந்த
பயணத்தில் கூட கடைசியில் போபாண்டவரை
ஸென்யோர் தனிமையில் சந்திக்கிறார். அப்போது என்ன பேசினார்
என்பது கடைசி வரை சொல்லப்படவில்லை.
அதற்கு காரணம் முன்னமே சொன்னது
போல கதைசொல்லியின் பிரக்ஞை வட்டத்தினுள் அமைந்தவற்றை
மட்டுமே ஸென்யோரின் கதையாக நாவலில் மாற்றம்
கொள்கிறது. ஒருவேளை கதைசொல்லி டான்
ஜோனாக இன்றி ஸென்யோராக இருந்திருப்பின்
இந்த பிரதியில் இருக்கும் பல அறிந்திட முடியாத
மர்மங்கள் அதில் வெளிப்படக்கூடும்.
முதல் பாதி முழுக்க ஸென்யோர்
அறிதல் சார்ந்த தேடலை நிகழ்த்துகிறார்
எனில் இரண்டாம் பாதியில் அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை அறுவடை
செய்கிறார். தான் ஒரு நூல்
எழுதப் போகிறேன் என்கிறார். அந்த
பயணத்தின் வழியே அவருக்கான அனுபவங்கள்
சேகராமாகிக் கொண்டே இருக்கிறது. பாரிஸில்
டான் ஜோன் போலீஸை அடித்து,
பொய்கள் மேல் பொய்களை சொல்லி
தனக்கான அறத்திலிருந்து வழுவிவிட்டோமே என தனக்குள்ளேயே அல்லலுறுகிறான்.
பாரிஸின் வழியே செல்வது அவர்களுடைய
பயண நோக்கம் அல்ல. ஆனால்
பாரிஸின் கலாச்சார தருணங்களை டான் ஜோன் அறிய
வேண்டும் எனும் எண்ணத்திலேயே அவ்வழியான
பயணத்தை மேற்கொள்கிறார் ஸென்யோர். ஸென்யோராவிற்கோ மீண்டும் டோனா க்ஸிமாவிற்காக வந்திருக்கிறாரோ
எனும் அச்சம் மேலிடுகிறது. ஓரிடத்தில்
தொலைந்தும்விடுகிறார். எங்கு காணவில்லை என
தேடுகின்றனர். டோனா க்ஸிமாவிற்காக சென்றிருக்கலாம்
என நினைத்துக் கொள்கிறார் சென்யோரா. அவரோ திஸ்ஸாந்தியே சகோதரர்கள்
கண்டுபிடித்த பறக்கும் பலூனில் பயணம் செய்ய
போயிருந்தார். இந்த இடங்கள் நாவலினூடே
விரிவடையும் பொழுது ஸென்யோரின் முடிவுடாறாத
தேடலின் அற்புதமான சில தருணங்களை கண்ணுற்ற
நிறைவே மேலிடுகிறது.
மாடோ கொலாமா எனும் கதாபாத்திரம்
நாவலின் கடைசியில் சில இடங்களில் வருகிறது.
அக்கதாபாத்திரத்தின் கொலை சார்ந்து நகரும்
பக்கங்கள் ஸென்யோரின் சுயபரிசீலனைக்கான தருணங்களாக அமைகின்றன. தன் மனைவி மீதான
காதலை அவர் வெளிப்படுத்துவது தன்னுள்
இருக்கும் இளமையை வெளிக்கொணர்வதாக அமைகிறது.
மனைவியிடம் அவர் கேட்கும் பாவமன்னிப்பாக
அமைகிறது. அவர் தேடிய ஒவ்வொரு
பெண்ணிடமும் ஈர்த்தது என்ன என மனைவியுடன்
உரையாடுகிறார். எல்லா ஈர்ப்பின் பின்னும்
இருப்பது மனைவியின் நுண்ணிய அற்புதங்களாக இருக்கிறது.
அவர் சொல்கிறார்,
“நான் உங்களிடம் உறுதியாய் சொல்வேன். நான் யாருடன் எல்லாம்
இணைந்து அவளுக்கு துரோகம் செய்தேனோ, அந்தப்
பெண்கள் ஒவ்வொருவரிடமும் அவளைக் கண்டேன் என்றே
சொல்ல வேண்டும்”
அவர்கள்
திரும்ப பியர்னுக்கு வந்தவுடன் டோனா க்ஸிமாவும் வருகிறாள்.
இம்முறை அவளுக்கு நீண்ட உரையாடல்கள் ஸென்யோராவுடன்
அமைகிறது. எல்லா செல்வங்களையும் இழந்து
நிர்கதியாக நிர்கிறாள் டோனா க்ஸிமா. ஒவ்வொருவரும்
தங்களுக்குள்ளே பாவமொன்றை செய்தோம் என நினைத்து வருந்தி
கொண்டிருக்கிறார்கள். அதற்கு தகுதியான அல்லது
இவருக்கு தான் தீங்கிழைத்தோம் என
எண்ணுபவரிடத்தில் பாவமன்னிப்பையும் கோருகிறார்கள். ஒவ்வொருவரின் பாவத்திற்கான மன்னிப்பு என்ன என்பதும் இறுதியாக
அம்மூவரும் எப்படி இறந்தார்கள் என்பதுமாக
நாவல் நிறைவினை அடைகிறது.
இவ்வளவு
நேரம் பேசியதில் பொம்மை அறை என்பதன்
காரணம் சொல்லப்படவேயில்லை. அந்த இடத்தில் ஆவணக்
காப்பகம் போலவே வேறு ஒரு
அறையும் இருக்கிறது. அந்த அறையினை யாருமே
பார்த்ததில்லை. அதனால் கதைசொல்லியான டான்
ஜோனும் பார்த்ததில்லை. நாவலின் கடைசியில் நாவலினூடே
அவ்வறையும் வாசகனுக்கு காண்பிக்கப்படுகிறது. அது தான் உண்மையான
ஆவண காப்பகம். அங்கிருக்கும் உண்மைகள் நாவல் முழுக்க சொல்லப்பட்ட
ஸென்யோரின் குணத்தை இன்னமும் ஆழமாக
மாற்றுகிறது. மேலும் கலாச்சார மற்றும்
அறிவியல் மாற்றங்களை கண்ட உயிருள்ள பொம்மைகளின்
கதையாகவே இந்நாவல் முடியும் போது உருவம் கொள்கிறது.
நாவலினூடே
சொல்லப்பட்ட கலைஞர்களின் பெயர்கள், இசையின் நுட்பங்கள், போர்கள்
சார்ந்த வரலாற்று தகவல்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த உண்மைகள் நாவலின்
காலத்தை எடுத்துரைக்கிறது. மரபை நவீனம் உடைக்கும்
பொழுது நவீனம் சந்திக்க வேண்டிய
விமர்சனமும் மரபின் முன்னே இருக்கும்
சவால்களும் நாவல் முழுக்க விரவிக்
கிடக்கிறது. இவ்விரு விஷயங்களாலேயே பொம்மை
அறை நாவல் எல்லா காலத்திற்குமான
மகத்தான இலக்கிய படைப்பாக மாற்றம்
கொள்கிறது. அதைத் தமிழில் சுவை
குன்றாது மொழிபெயர்த்த யுவன் சந்திரசேகருக்கு மனம்
கனிந்த பாராட்டுகள்.
பி.கு : நவம்பர் 2016 காலச்சுவடில் வெளியான கட்டுரையின் முழுமையான உருவம்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக