காந்தியை எங்கிருந்து அறிவது ?
காந்தியின்
மீதான ஆர்வம் பல மாதங்களாய்
என்னுள் வேர்விடத் தொடங்கியிருந்தது. சிறுவயது முதல் அவர் மீதிருந்த
காரணமற்ற வெறுப்பை நினைக்கும் பொழுது சுய எள்ளலே
மீதமாய் இருக்கிறது. நினைவில் துல்லியமாக நிழலாடாத தினத்தில் தான் காந்தியின் மீதான
ஈர்ப்பு உருவானது. அத்தருணத்தில் அதைக் கவர்ச்சி என்றே
குறிப்பிட விரும்பினேன். அவர் மீது எனக்கிருக்கும்
வெறுப்பிற்கு காரணத்தை தேடுவோம் என்பதே விருப்பமாக இருந்தது.
அவருடைய சத்திய சோதனை வழியேவும்
அவர்பற்றி தமிழ் தி இந்துவில்
வெளியான சில கட்டுரைகளின் வழியேவும்
அறிய முடிந்தது.
காந்தியை
அறிதலும் அணுகுதலும் வேறு வேறானவை என்பதை
புரிந்து கொள்ளமுடிந்தது. இதைக் குறிப்பிடக் காரணம்
டி.ஆர். நாகராஜின் ‘தீப்பற்றிய
பாதங்கள்’ நூல் தலித்துகளின் பிரச்சினைகளை
காந்திய வழிமுறையிலும் அம்பேத்கரின் வழிமுறையிலும் வாதம் செய்யக்கூடியவை. இவற்றில்
எது சிறந்தது எனும் சார்பு நிலையில்
நிற்காமல் எந்த தருணங்களில் எம்மாதிரியான
அணுகுமுறையை சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை
தெளிவுறக் கூறும். அதுவே காந்தியுடனான
என் முதல் பரிச்சயம். நிறைய
இடங்கள் புரிபடாமலும், வாதங்களில் உள்நுழைய முடியாமலும் திணறிய பகுதிகள் நிறைய
இருந்தன. இன்றே அதற்கான காரணத்தை
புரிந்துகொள்ளமுடிகிறது. காந்தியை அறிதலே முதற்படி. பின்
அவருடனான விமர்சனமும் சார்புகளும் காந்தியம் நோக்கி நம்மை உந்துத்
தள்ளுபவையாக அமையும்.
இந்த அறிதலிலும் எங்கிருந்து எனும் கேள்வி முதலில்
வந்து நிற்கிறது. பள்ளிப் பாடங்களிலிருந்து நம்முடன்
பயணிக்கும் ஆளுமை காந்தி. அஹிம்சை,
சத்தியாகிரஹம், அரிச்சந்திரன் நாடகம், எளிமையின் உருவம்,
தண்டி யாத்திரை எனக் குறிப்பிட்ட சட்டகங்களின்
வாயிலாக மட்டுமே காந்தியை நம்மால் அறிய
முடிகிறது. இவை முழுமையான சித்திரமன்று.
அவருடைய பெரிதுபடுத்தப்பட்ட அல்லது தலைப்புச் செய்திகளை
ஒத்த சாதனைகளாகும். இவற்றிற்கான தத்துவங்களை, உந்துதல்களை எங்கிருந்து எடுத்துக் கொண்டார் என்பதிலிருந்தே அவர் சார்ந்த அறிதலை
நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும். சத்திய சோதனை அதற்கான
பெறும் திறப்பைக் கொடுக்கிறது. வரலாற்று அரசியல் சார்ந்த விஷயங்கள்
குறைவாகவும் தனி மனித ஒழுக்கம்
சார்ந்த பகுதிகள் நிறையவும் இருப்பதால் அங்கும் ஒரு வெறுமை
தொற்றிக் கொள்கிறது. அஹிம்சையின் ஆணிவேர் சிந்தனையிலிருந்தே துவங்குகிறது.
அதை சத்திய சோதனையில் யாரொருவராலும்
நன்குணரமுடியும். இதைத் தாண்டி காந்தியுடைய
வாழ்க்கையின் ஆதாரங்களை அவர் எங்கிருந்து கண்டார்
என்பதை அறிவதற்கு தரம்பால் எழுதி ஜனகப்ரியா மொழிப்பெயர்த்த
“காந்தியை அறிதல்” நூல் பேருதவி
புரிகிறது.
இந்நூல்
பெருவாரியாக இந்தியாவிற்கு வந்த பிறகான செயல்களை
மையப்படுத்தியே காந்தியை அறிமுகப்படுத்துகிறது. அவை வெறும் அறிமுகமாக
மட்டும் அடங்கிவிடாமல் வாசகர்களிடம் தர்க்கத்தையும் காந்தியை தேடிச் செல்லக்கூடிய உதேவகத்தையும்
தரவல்லதாகவும் அமைகிறது. தரம்பால் லாகூரில் பிறந்தவர். காந்தியால் ஈர்க்கப்பட்டு பொதுச் சேவையில் தன்னை
அர்ப்பணித்துக்கொண்டார்.
காந்தி
எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’ எனும்
நூலை ஆசிரியர் அதிகமாக மையப்படுத்துகிறார். (இந்நூலை வாசிக்கவில்லை.
விரைவில் வாசித்துவிடுவேன்) இந்நூலில் காந்தி சுதந்திரத்திற்கு பிறகு
இருக்க வேண்டிய இந்தியாவை கற்பனையில்
நிர்மாணிக்கிறார். அவை கட்டுப்பாடுடனும் பண்பாட்டு
வேர்களின் நீட்சியாகவும், தொழில்மைய மற்றும் பொருளாதார தன்னிறைவு
பெற்ற நாடாகவும் இருக்க வேண்டும் என
விரும்புகிறார். அதுவோ அவரது கற்பனையாக
மட்டுமே தேக்கம் கொள்கிறது. ஜவஹர்லால்
நேருவிற்கும் அவருக்கும் இடையில் நிகழும் கடிதப்
போக்குவரத்துகள் இந்தத் தோல்வியை எடுத்துரைக்கின்றன.
அந்தத் தோல்வி யதார்த்த இந்தியாவில்
எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நூல் விளக்குகிறது.
தன்னுடைய
கருத்துகள் அனைத்தையும் இந்தியாவின் வேர்களிலிருந்தே எழுப்புகிறார். நாடு மேற்கத்திய நாகரிகத்தின்
பார் ஈர்ப்புக் கொண்டதை அறியும் பொழுது
தமது வேர்களை எடுத்துரைக்க வேண்டியதை
தன் கடமையென உணர்கிறார். அதனாலேயே
சாதி சார்ந்த கூற்றுகளையும் தொழில்நுட்பம்
சார்ந்த ஆதங்கங்களையும் இந்திய மண்ணிலிருந்து பேசுகிறார்.
நூலில்
இருக்கும் காந்தியின் ஆதாரப் பகுதிகளை மூன்றாக
பிரிக்க முடிகிறது. முதலில் சாதி. சாதியை
காந்தி முதலில் ஆதரிக்கவே செய்கிறார்.
சாதி இந்தியாவை வலிமைபடுத்தக்கூடியது என்கிறார். போரின் பல பிரிவினரைப்
போன்றது சாதி என உயர்த்திப்பிடிக்கவும்
செய்கிறார். ஆனால் காலப்போக்கில் தன்
கருத்தின் தீர்க்கமான விளக்கத்தை முன்வைக்கிறார். அவ்விளக்கமானது வர்ணாஸ்ரம முறைகளையே தான் சாதி எனக்
குறிப்பிட்டதும், உட்சாதிகளையும் அதன் வழியே கிளைவிடும்
தீண்டாமையையும் தான் ஆதரிக்கவில்லை என
தீர்க்கமாக கூறுகிறார். சாதி சார்ந்து காந்தி
பல்வேறு கூற்றுகளின் வழியே தனக்கான கோடுபாடுகளைக்
கூறினாலும் அதை முழுதுமாக அழிக்க
எக்கருத்தையும் முன்மொழியவில்லை. மாற்றாக சாதிகளை regulate செய்ய
நினைக்கிறார். ஒவ்வொரு சாதியும் தொழில்களின்
பின்புலத்தில் எழுகின்றன. சாதியினை அழிக்கும் பட்சத்தில் பின்புலமாக இருக்கும் கிராமியத் தொழில்களும் அழிகின்றன. இந்தத் தொழில்களை அழிப்பது
இந்தியாவின் பன்மைத்துவத்தை சீண்டுவதாகும் என வாதிக்கிறார்.
கிராமியத்
தொழில்களையும் கிராமங்களையுமே காந்தி அதிகமாக ஆதரித்திருக்கிறார்.
மனிதன் எக்காரணத்திலும் சோம்பேறியாகிவிடக்கூடாது என்பதை தன் எண்ணங்களின்
ஆதாரமாக கொண்டிருக்கிறார். இத்தன்மையிலிருந்தே அவருடைய அறிதலின் இரண்டாம்
பாகமான தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் ஆரம்பமாகிறது.
விடுதலையை நெருங்கும் சமயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு தீவிரம் காட்டுகிறது.
அதில் மேற்கத்திய மனோபாவமே மேலோங்கியிருக்கிறது. அது நடைமுறைபடுத்தப்பட்டால் பல கிராமியத்
தொழில்கள் அழிய நேரிடும் என
ஆதங்கத்தை தெரிவிக்கிறார். தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலுபவை என்பதில் அவருக்கு ஐயமில்லை. எனினும் கிராமியத் தொழில்களின்
வேரில் பெரு நிறுவனங்கள் இயங்கலாம்
எனும் வாதத்தை முன்வைக்கிறார். மேற்கத்திய
தொழில்நுட்பங்கள் பொருளாதார/பொருளாதாய மையத்தை மட்டுமே ஆதரிப்பவை.
நம் கிராமியத் தொழில்களோ உழைப்பையும் உறவுகளையும் பேணிப்பவை ஆகும் என்கிறார். கிராமியத்
தொழில்களின் வழியே பல்வேறு தொழில்காரர்களுடனான
உறவுமுறை வலுப்படுகிறது என்பதையும் நம்பியவராகவே காந்தி இருந்திருக்கிறார். இந்த
உறவுமுறை வணிகம் மற்றும் கலாச்சாரம்
சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய
அறிதலின் மூன்றாவது விஷயம் அஹிம்சை. காந்தியின்
பொதுமையான குறியீடாகவே அஹிம்சையை சமூகம் அறிந்துகொண்டிருக்கிறது. வன்முறையின் வழியே
ஒரு நாடு வீழ்ச்சி அடைகிறது.
வீழ்ச்சி அடைந்தவர்கள் மேற்படி பலத்தை அதிகரித்து
வன்முறையையே பிரயோகிக்கின்றனர். அது ஒருபோதும் வாழ்வதற்கான
இடமாக இருக்காது என்பதை நம்புகிறார். உண்மையைத்
தேடி வாழ்க்கை முழுக்க தீராப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன் ஓர் வடிவமாகவே அஹிம்சையைக்
காண்கிறார். சத்தியாகிரஹ போராட்டத்தின் வழியே எளிமையான வாழ்க்கையையும்
சேவை மனப்பான்மையையும் மக்களிடையே அவரால் வளர்த்தெடுக்கமுடிகிறது. அதுவே விடுதலை
நோக்கியும் அவர்களை நகர்த்துகிறது. இதன்
கிளைப்பகுதியாகவே பிரம்மச்சரியத்தையும் மேற்கொள்கிறார். இந்திய மனம் கட்டுப்பாடுகளில்
இயங்குகிறது. இந்தக் கட்டுப்பாடுகளை சாதியில்
காண்பதாலேயே சாதியை ஆரம்பத்தில் ஆதரிக்கிறார்.
ஆனால் கட்டுப்பாடுகள் அரசியலாக மாறும் பொழுது விதிமீறல்களாக
உருவெடுக்கிறது. அங்கு தான் சாதி
எனும் உட்பிரிவுகளை புணர்நிர்மாணம் செய்ய வேண்டும் எனும்
குரல் அவரிடமிருந்து எழுகிறது.
சத்தியாகிரஹத்தில்
தான் தோல்வியைத் தழுவியதாகவே எண்ணுகிறார். சுய ஆய்வு செய்து
உண்மை ஏன் தோற்கிறது எனும்
கேள்விக்கு பதில் தேடிக் கொண்டே
வாழ்க்கையில் பயணிக்கிறார். சமூகம் விதிக்கும் அறங்கள்
ஆன்மபலத்தை அகற்றிவிடுவதாக எண்ணுகிறார். அவருடைய பயணங்கள் முழுக்க
மக்களிடையே பயமற்ற ஆன்மபலம் பொருந்திய
சத்தியாகிரஹத்தை உண்டு செய்வதே ஆகும்.
1915 பம்பாயில் வெல்லிங்டன் பிரபுவுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
பின்வருமாறு கூறுகிறார். அதில் அவருடைய ஏக்கங்களும்
சமூகம் சார்ந்த புரிதலும் ஆதங்கமாக
வெளிப்பட்டிருப்பதை உணர முடியும்.
“இன்றும்கூட
இந்தக் குற்றாச்சாட்டு உண்மைதான். முடியாது என்பது நம்முடைய மனதில்
இருக்கிறது. ஆனால் அவ்வாறு நம்மால்
சொல்ல முடியாது. மற்றவர் ‘ஆம்’ என்று சொல்ல
விரும்புகிறாரா அல்லது ‘இல்லை’ என்று
சொல்ல விரும்புகிறாரா என்பதை அறிந்துகொள்வதற்கு மற்ற
மனிதரின் முகத்தைப் பார்க்கிறோம். அவரும் நம்மைப் போலவே
சொல்லவேண்டுமென நாம் நினைப்போம். ஆனால்
இங்கே இந்தக் கட்டிடத்தில் மூன்று
அல்லது நான்கு வயதுச் சிறுமியை
என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படியும்படி செய்யமுடியவில்லை. அந்தச் சிறுமியை என்
மடிமீது வந்து அமரச் சொன்னேன்
ஆனால் அவள் ‘முடியாது’ என்று
மறுத்துவிட்டாள். அவளைக் கதர் அணிந்து
கொள்ள வேண்டுமென்று சொன்னேன். ‘முடியாது’ என்று அவள் சொல்லிவிட்டாள்.
ஒரு சிறுமி பெற்றிருக்கிற பலத்தைக்
கூட நாம் பெற்றிருக்கவில்லை”
சமூகம்
சார்ந்து காந்தி கொண்டிருந்த ஏக்கங்களையும்
சித்தாந்தங்களின் வழியே அவர் மேற்கொண்டிருந்த
பயணங்களையும் எளிமையாக இந்நூல் முன்வைக்கிறது. இந்நூல்
கொடுக்கும் திறப்பின் வழியே காந்தியம் சார்ந்த
பயணத்தை வாசகர்கள் எங்கிருந்தும் முனைப்புடன் மேற்கொள்ளமுடியும். இவை முன்முடிவுகளைக் கூறவில்லை.
சித்தாந்தம் உருக்கொள்வதற்கும் அவை தோற்றுவிடுவதற்கும் இடையில்
இருக்கும் இடைவெளிகளை கோடிட்டுக் காட்டுகிறது. சில இடங்களில் இடைவெளிகளாகவே
மிஞ்சிவிடுகின்றன. அவற்றைத் தேடிச் செல்வது வாசகர்களின்
கடமையாக அமைந்துவிடுகிறது.
தரம்பாலின்
பார்வையில் காந்தியையும் காந்தியத்தையும் அறிந்துகொள்ள இந்நூல் பேருதவி புரிகிறது.
நூலின் சில பகுதிகளை மட்டுமே
இப்பதிவில் கூறியிருக்கிறேன். காந்தியை முன்வைத்து தரம்பால் பேசும் விஷயங்கள் நம்முள்
முடிவுறா தர்க்கங்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டிருக்கின்றன. தர்க்கங்களுக்கான
தீர்வுகள் அனுபவத்தில் அடங்கியிருக்கின்றன என்னும் எச்சரிகையையும் காந்தியின்
வாழ்க்கை அவ்வப்போது கூறிச் செல்கிறது.