தர்மத்துடன் போராடும் வாழ்க்கையின் பதிவுகள்
மகாபாரதத்தை
பலர் நாவல் வடிவில் எழுதி
முயற்சித்திருக்கின்றனர். அதில் சில ஒற்றுமைகளைக்
காணமுடியும். குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் வாயிலாக பாரதத்தை கூற
முயற்சிப்பதும் அல்லது பாரதத்தின் கிளைக்கதைகளில்
ஏதேனும் ஒன்றினை எடுத்து அதிலிருக்கும்
அறத்தை நாவலாக்க முயற்சிப்பதும் ஆகும். இதில் பலர்
வெற்றி பெற்றிருக்கின்றனர். பி.கே.பாலகிருஷ்ணனின்
“இனி நான் உறங்கட்டும்”, எம்.டி.வாசுதேவன் நாயரின்
“இரண்டாம் இடம்”, வி.எஸ்.
கண்டேகரின் “யயாதி” போன்றவை மேற்கூறிய
விஷயங்களின் வழி எழுதப்பட்ட நாவல்கள்
ஆகும். தமிழில் எனில் எஸ்.ராமகிருஷ்ணனின் “உப பாண்டவம்”, ஜெயமோகனின்
“வெண்முரசு”. இச்சிறு பட்டியல்கள்
கூட என் வாசிப்பிலிருந்தே தவிர
முழுமையானது அன்று.
மகாபாரதத்திற்கென சில பொதுமையான விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் எண்ணற்ற
கிளைக்கதைகள் இடம் பெறுகின்றன. கிட்டத்தட்ட
அனைத்து கதைகளும் அறத்தை போதிப்பவை. ஆனால்
அவை பேசுவதோ அறப்பிழைகளை. எது
தவறு என்பதை விவரிப்பதன் வழியே
அறத்தை ஒவ்வொரு பகுதியிலும் நிலையென
பேசும் கதைகளே பாரதத்தில் நிறைந்து
இருக்கின்றன. இதை ஒவ்வொரு நாவலும்
முழுமைக்கும் பேச முயற்சிக்கின்றன. அப்படியான
ஒரு நாவலே எஸ்.எல்.பைரப்பா கன்னடத்தில் எழுதி
தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் “பருவம்”.
நேரடியாகப்
போரில் துவங்குகிறது இந்நாவல். ராஜா சல்லியனிடம் போருக்கு
தனக்கு துணையாக இருக்க வேண்டும் என பாண்டவர்களிடமிருந்து தூதுவர்கள் வருகிறார்கள். அவர்களிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு மகன்
ருக்மரதனிடம் போர் சார்ந்து விவாதிக்கிறார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நிகழப்போகும் போர்
சார்ந்த விவாதங்கள் நீள்கின்றன. பாண்டவர்களின் தந்தையான பாண்டுவிற்கு குழந்தை பெறுவதற்கான உடல்நிலை
இல்லை. அப்படியிருப்பின் அஸ்தினாபுரத்திற்கு ராஜீய வாரிசின்றி போகிறது.
இந்நிலையில் மனைவிகளுடன்(குந்தி மற்றும் மாத்ரி)
கானகம் செல்கிறான். அங்கு தேவர்களின் உலகத்தை
அறிகிறான். அங்கிருப்பவர்களின் கலாச்சாரம் முழுமைக்கும் வேறாக இருக்கின்றன. இப்பகுதியின்
விளக்கங்கள் நீளும் பக்கங்கள் கலாச்சாரம்
எவ்வாறு குறிப்பிட்ட நில வரையறைக்குள் முக்கியத்துவம்
பெறுகிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. மேலும் ஒரு
கலாச்சாரம் வேறொன்றினுள் ஊடுருவும் பட்சத்தில் அது காலம் சார்ந்த
வன்முறையாக உருவெடுக்கிறது. அது ஓர் அரசியல்
நிகழ்வு. இங்கு அவ்வாறு அரசியலாக்கப்படும்
நிகழ்வு நியோக முறை ஆகும்.
நியோக முறைப்படி ஐந்து வெவ்வேறு குணாம்சங்களைக்
கொண்ட மனிதர்களின் துணைக்கொண்டு குந்தி மற்றும் மாத்ரிக்கு
குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறக்கும் வரை
அக்குறிப்பிட்ட மனிதர்களுடனேயே வாழ வேண்டும். வாழ்க்கை
உடலால் மட்டுமே அன்றி மனதால்
அல்ல என்பது நியோகத்தின் விதி.
திருதிராஷ்டரனுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்விருவர்களின் குழந்தைகளின் இடையே தான் ராஜீய
ஆசை கிளர்ந்தெழச் செய்கிறது. நேரடியான வாரிசான எங்களுக்கு தான்
இந்த அஸ்தினாபுரம் என திருதிராஷ்டிரனின் மகன்கள்
இருக்கிறார்கள். ராஜ்ஜியத்தை தர மறுப்பதால் பாண்டுவின்
மகன்கள் போருக்கு தயாராகிறார்கள்.
மேற்கூறிய
காரணத்தை முன்வைத்தே நாவல் முழுமைக்கும் நகர்கிறது.
இரு அணியினரும் தங்களுக்காக படை சேர்க்க நாடு
முழுக்க பிரயாணிக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியின் வளத்தையும் வணிகத்தையும் அரசியலையும் பேசுவதாலேயே நாவல் கொடுக்கும் களம் கற்பனையின் எல்லைகளுக்கு அப்பால் விரிவு கொள்கிறது. அணியில் சேர்வதற்கும் எதிரணியில்
இணைவதற்கும் தனிப்பட்ட கதைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
ஓர் உதராணம் கொண்டு சொல்லலாம்
எனில் சல்லிய மகாராஜாவையே எடுத்துக்கொள்ளலாம்.
சல்லியன் பாண்டவர்களின் படையில் இணைந்துகொள்கிறேன் என
வாக்கு கொடுக்கிறான். ஆனால் வழியில் துரியோதனிடமிருந்து
கொடுக்கப்படும் உபசரிப்பினால் படையே தன்னிறைவடைகிறது. அப்போது
சல்லியனிடம் இருக்கும் அறம் மாற்றம் கொள்கிறது.
துரியோதனனுக்கே தன் படைகளை கொடுக்கிறார்.
இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
யாருடைய படைகளை எல்லாம் பாண்டவர்கள்
எடுத்துக்கொள்கிறார்களோ அவர்களின் பகைமையை சம்பாதித்தவர்களை துரியோதனன்
தன் படைகளில் இணைத்துக்கொள்கிறான். துருபதன் பாண்டவர்கள் பக்கம் எனில் அவனால்
அவமானத்தை எதிர்கொண்ட துரோணர் கௌரவர்கள் பக்கம்.
மேலும் இருபக்கத்திற்கும் குருக்களாக இருந்த பீஷ்மர், கிருபர்
ஆகியோரும் கௌரவர்கள் பக்கமே இருக்கின்றனர். அவர்களின்
பகைமையை சம்பாதித்தவர்கள் பாண்டவர் பக்கம் சேர்ந்துகொள்கின்றனர்.
இரு பத்திகளில் கதையின் சிறு
பகுதியை விரிவாக எழுதியமைக்கு முக்கியக்
காரணம் இருக்கிறது. இந்நாவல் போரை மையப்படுத்திய நாவல்.
ஆனால் போரினை பேசாமல் போர்
சீர்குலைக்கும் மனித வாழ்வை பேசுகிறது.
மாபெரும் போர் வெறும் இரு
தேசங்களுக்கு இடையில், இரு அணிகளுக்கு இடையில்
மட்டும் நிகழ்வதில்லை. மாறாக கூட்டணியாக சேரும்
ஒவ்வொரு தேசமும், அரசும், தத்தமது பகைமையை
தீர்த்துக்கொள்ள இப்போரை கையாள்கின்றனர். அவர்களுக்காக
வீடுகளை, ஊரை, அவரவர்களின் அரசியல்
விஷயங்களை விட்டு வரும் படைவீரர்கள்
கணக்கிலடங்காதவர்கள். அந்த எண்ணற்ற வீரர்களின் வாழ்க்கையை
பேசுகிறது.
வெறும்
அரசர்களின் கதையாக இந்நாவல் நகர்ந்திருப்பின்
காலத்தின் வளர்ச்சியில் நாவலின் பிடிமானம் எப்போதோ
தளர்ந்துபோயிருக்கும். மாறாக இந்நாவல் மக்களை
பேசுகிறது. நாவலின் பெரும் பகுதி
போர் வரப்போவதற்கான ஆயத்தங்களையே பேசுகிறது. இந்த தாக்கம் பொது
மக்களை எப்படியெல்லாம் பீதியுற வைத்திருக்கிறது என்பதையும்,
அவர்களின் வாழ்க்கை எவ்வாறு சிதிலமடைகிறது என்பதையும்
சித்திரமாக வரைகிறது. செவி வழிச் செய்திகளில்
கூட இப்படியான போரொன்றை அவர்கள் கேட்டு கூட
அறிந்ததில்லை. கற்பனையின் பயத்தில் சிக்கியிருப்பவர்களின் வீரத்தை ஒவ்வொரு பக்கத்
தலைவர்களும் மீட்டு எழுப்புகின்றனர்.
இதைக் கடந்த மற்றொரு விஷயம்
போருக்கான தளவாடங்களின் தயாரிப்பினில் இறங்குகின்றனர் பொதுமக்கள். போருக்கான தேர்கள், வாட்கள், கேடயங்கள் என பொருட்களுக்கான தயாரிப்பில்
மக்கள் தங்கள் செல்வத்தை செலவழிக்கின்றனர்.
ஆனால் இருபக்க முக்கியஸ்தர்களும் தங்களுக்கான
கூட்டணியை சேர்ப்பதில் மும்முரமாய் இருக்கின்றனர். இதில் ஆகும் காலதாமதத்தில்
மக்களுக்கு போர் நிகழுமா எனும்
சந்தேகம் ஏற்படத் துவங்குகிறது. ஒருவேளை
போர் நின்றுபோனால் தங்களுக்கான கூலி கிடைக்காதே எனும்
பொருளாதார மந்தநிலையை கற்பனையால் உணரத் துவங்குகின்றனர். செலவு
செயுது செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்குமான கூலி
தேவையெனில் அதற்கு போர் மட்டுமே
தீர்வு எனும் நிலையை நாவலின்
போக்கில் மக்கள் அடைகின்றனர். இந்த உணர்வுசார்
துவந்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் நாவலாசிரியர்
எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.
இந்த துவந்துவம் தர்மம் சார்ந்த வாதமாக
உருவெடுக்கிறது. கற்பனையில் காணும் போரைக் கண்டே
அச்சம் கொள்ளும் மக்கள் போரை எதிர்கொள்ளத்
தயாராகின்றனர் என்றால் போரின் உண்மையான
உருவம் எது எனும் கேள்வி
எழத் துவங்குகிறது. சாமான்ய மக்களுக்கான தர்மம்
வேறு அரசர்களுக்கான தர்மம் வேறாக இருக்கிறது.
போரில் கலந்துகொள்ளும் பல நாட்டு வீரர்களுக்கு
ஏன் இந்தப் போர் எனும்
அடிப்படை விஷயங்களே தெரியாமல் இருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியான
ஆதாயங்களுக்காக போரில் பல நாட்டு
வீரர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களிடையே எழும் சின்னச் சின்ன
கேள்விகளுக்கு பதில் கிடைக்க மறுக்கிறது.
அதில் பாதிக்கும் மேலான கேள்வி ஏன்
இந்தப் போர் என்பதாகவே இருக்கிறது!
தர்மம்
சார்ந்த நிறைய விவாதங்கள் நாவலில்
எழுகின்றன.
- பாண்டுவிற்கு நியோக முறையில் பிறந்தவர்கள் ராஜீய வம்சத்தில் சேர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள். தேவர்களின் கலாச்சாராமும் பாரதவர்ஷத்தின் கலாச்சாரமும் வேறு வேறு எனும் வாதம் கௌரவர்கள் பக்கம் இருக்கிறது. ஆனால் பாண்டுவும் திருதிராஷ்டிரனும் கிருஷ்ண துவைபாயன வியாசனுடனான நியோக முறையில் பிறந்தவர்களே எனும் வாதம் முன்னதை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வாசகர்களை மட்டுமன்றி தர்மம் எனப் பேசும் கதாபாத்திரங்களையே குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
- சல்லியன் தன் பேத்தியை பாண்டவர்களுக்கு மணம் முடிக்கலாம் என எண்ணுகிறான். ஆனால் பாண்டவர்களோ ஐவரும் தங்களுக்கு மனைவியாக்கிக் கொள்வார்கள் என்று மகன் ருக்மரதனின் கூற்று பேத்தியின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. அப்படியெனில் பெண்ணை மையப்படுத்தும் வகையில் அறம் என்பதன் விளக்கம் என்ன எனும் கேள்வி எழுகிறது. திரௌபதி தான் ஐவருக்குமான மனைவி. அவள் தனக்கென வகுத்துக்கொள்ளும் அறம் முற்றிலும் வேறானவையாக இருக்கின்றன. அப்போது அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் பிறக்கும் மகனான பிருத்திவிந்தியன் எது ஆரிய தர்மம் என எழுப்பும் கேள்வி நாவலில் ஊடாடும் அனைத்து பெண் கதாபாத்திரங்களையும் தர்க்கத்தினுள் ஆழ்த்துகிறது.
- பாண்டவர்களின் பிறப்பால் எழும் கேள்விகளை முன்வைத்து நாட்டை ஆரிய மையமாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தேறுகின்றன எனும் வாதங்கள் நாவலில் நிறைய இடங்களில் தென்படுகின்றன. இதில் எது ஆரிய அறம் எனும் கேள்விக்கு நாவலின் பல கதாபாத்திரங்கள் பதிலளிக்க முற்படுகின்றன. சுயானுபவங்களின் வழியே ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்வு அல்லது பதில் கிடைக்கிறது. அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
இம்மூன்றின்
மையத்தில் பருவம் நாவல் தன்னை
நிர்மாணித்துக்கொள்கிறது. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தர்மம் என்றால்
என்ன, அறம் என்றால் என்ன
எனும் கேள்வி எழுகிறது. அவர்வரகளின்
நிலையிலிருந்து அதற்கான விளக்கத்தை கொடுக்க
முயற்சிக்கின்றனர். போரில் பங்கு கொள்ளும்
சிற்றரசர்களுக்கும் கூட இந்த கேள்வி
எழுகிறது. போரின் காட்சிகள் விவரிக்கப்படும்
பக்கங்களில் வரும் ஏகலைவனின் பகுதி
சிற்றரசர்களின் அறத்தை தெளிவாகப் பேசுகிறது.
நாவலை ஆசிரியர் பகுதிகளாக பிரிக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட பக்கங்களுக்கு
ஒற்றை கதாபாத்திரத்தின் வாயிலாகவே கதை நகர்கிறது. அவர்களின்
பார்வையில் போருக்கான தர்க்கங்களும், அவர்களுக்கே உண்டான அறச் சிக்கல்களும்
தீர்க்கமாக பேசப்படுகின்றன. அனைத்து பாத்திரங்களும் ஏதோ
ஓரிடத்தின், வாழ்க்கையின் தடத்தில் சிறிய அளவிலான அறப்பிழையை
மேற்கொள்கின்றனர். அல்லது தங்களுக்கென வகுத்துக்
கொண்ட அறத்திலிருந்து பிறழ்கின்றனர். பின் அது கொடுக்கும்
விளைவுகளைச் சந்திக்கும் போது அவர்களுக்கான தர்மம்
அறப்பிழையின் மேல் ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை உணர்கின்றனர்.
நாவல் முழுமையில் ஓர் அறப்பிழையிலிருந்து எழுப்பப்படுகிறது.
ஆனால் அவ்விஷயங்களும் நிகழும் தருணத்தில் அவை
தருமமாக பாவிக்கப்படுகிறது.
அஸ்தினாபுரத்திற்கு
வம்சவாரிசுகள் தேவை எனும் போது
அது தர்மம். ஆனால் நியோகம்
செய்து பிறந்த குழந்தைகள் அறப்பிழை.
வனவாசத்தில் பீமன் சாலக்கடங்கடியின் மீது
காதல் கொண்டு திருமணம் செய்ய
குந்தி கொடுக்கும் ஒப்புதல் தர்மம். பின் அதே
குந்தியின் பேச்சைக் கேட்டு அவளை காட்டிலேயே
விட்டுவிட்டு கடந்து செல்வது அறப்பிழை.
பீஷ்மர் சத்தியவதியின் அப்பாவிற்கு அஸ்தினாபுரம் வேண்டாம் என செய்துதரும் வாக்கு
தர்மம். ஆனால் அஸ்தினாபுரத்திற்காக பெண்களை
கவர்ந்து வந்து விசித்திரவீரியனுக்கும் சித்திராங்கதனுக்கும் மணம் முடித்து
வைப்பது அறப்பிழை. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்
நாவலின் வழியே தத்துவார்த்த துவந்துவங்களை
சொல்ல முடிகிறது. பாதிக்கப்படுபவர்களே அறப்பிழையை எடுத்துரைக்கிறார்கள். ஒற்றை வரியில் சொல்ல
முயற்சித்தால் எது தேவையோ அது
தர்மமெனில் தேவைக் கடந்தபின்னும் அடைய
முயற்சிப்பது அதர்மமாகிறது. நாவலின் முடிவோ தர்க்கத்தின்
சுழற்சியில் நம்மை நுழைய வைக்கிறது.
அதன் மீளமுடியாத் தன்மையே பருவத்தின் ஸ்பரிசம்.
மேலும்
நாவல் மகாபாரதத்திற்கு என இருக்கும் மீமாயத்
தோற்றங்களை முழுக்கக் களைந்து தனித்துவம்
மிக்க கலாச்சாரங்களை உருவாக்குகிறது. இது மனிதர்களின் கதை.
சாம்ராஜ்யத்திற்கான கதை. அதற்காக நிகழும்
போரினை மையப்படுத்திய கதை. தர்க்கங்களின் வழியே
தர்மத்தை நிலைநாட்ட முனையும் மனிதர்களின் வரலாறு. நாவல் எந்த
இடத்திலும் முடிவினைத் தருவதில்லை. தர்க்கம் மட்டுமே மீதமாய் இருக்கிறது.
தர்க்கம் கொடுக்கும் அலைகளிலிருந்து வாசகர்களாக உணர வேண்டியதே தர்மமாக
நாவலில் தொக்கி நிற்கிறது. கதாபாத்திரங்களும்
வாசகர்களும் தனித்து தர்க்கத்தின் வழியே
தர்மம் எது என சிந்திக்கத்
தொடங்குவதிலிருந்தே நாவலின் முழுமையும் காலம்
கடந்து நிற்பதற்கான காரணத்தையும் உணரமுடிகிறது.
பி.கு : நாவலில் நிறைய
அச்சுப்பிழைகள் தென்படுகின்றன. மறுபதிப்பினை சாஹித்திய அகாதெமி கொணர்வதாக இருப்பின்
சிறு உழைப்பை நல்கி பிழைகளை
நீக்கலாம். பொக்கிஷத்தின் மீதிருக்கும் தூசினை நீக்கிய பெருமையும்
சேரும்.