அபத்தத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் ஊடாடும் கதைசொல்லி
சிறுகதையில்
யாரை எழுத வேண்டும் என்பதற்கு
புதுமைபித்தனையும் எதை எழுத வேண்டும்
என்பதற்கு வண்ணநிலவனையும் வாசித்தே ஆக வேண்டும் என்று
எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பேச்சொன்றில் குறிப்பிட்டிருப்பார். இக்கூற்று எந்த அளவு நேர்மையானது
என்பதை வண்ணநிலவனை வாசித்த கடந்த மூன்று
மாதங்களில் முழுதாக உணர்ந்துகொண்டேன். எடுத்த
நூலை முடித்து விட வேண்டும் எனும்
தீரா வேட்கை கொண்டவன் நான்.
எனது இக்கொள்கையையும் மீறி சில நூல்கள்
நாட்களை கடத்திவிடுகின்றன. அப்படியான ஒரு நூல் தான்
வண்ணநிலவனின் மொத்த சிறுகதைத் தொகுப்பு.
91 சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய
தொகுப்பு அது.
வண்ணநிலவனின்
சிறுகதைகள் வாழ்க்கை முழுக்க நம்முடன் நடைபோடும்.
துவளும் ஒவ்வொரு தருணத்திலும் அவை
நிச்சயம் சொல்லும் உன்னைக் காட்டிலும் அனுபவம்மிக்க
மனிதர்களை நான் காட்டினேனே மறந்துவிட்டாயா
என. இது அதிகாரத்தையோ பச்சாதாபத்தையோ
கோரும் குரலன்று. மாறாக அவரவர்களின் இயல்பிலிருந்து
எழும் நிதர்சனக் குரல். வாழ்க்கையின் இருண்மையை,
அது கொண்டிருக்கும் நிழலின் குரூர உணர்வை
பிரதிபலிப்பவை வண்ணநிலவனின் சிறுகதைகள். சில கதைகளில் பேசப்படாத
மனிதர்களின் குரலாக இருக்கிறார். வேறு
சில கதைகளில் குறிப்பிட்ட தருணங்களுக்கான சாட்சியங்களாக மாறுகிறார். நூலை முழுமையாக வாசித்து
முடிக்கையில் 92 உலகத்தினுள் பிரவேசித்து வந்த உணர்வே மிச்சமாய்
மேலோங்கி நிற்கிறது.
வண்ணநிலவனை
வாசிக்கிறேன் என சில வாசிப்பு
நண்பர்களிடம் பகிர்ந்த உடனேயே சில சிறுகதைகளை
சிலாகிக்க ஆரம்பித்தனர். இணையத்தின் வழியேவும் அக்கதைகளே பெருவாரியாக பேசப்படுகின்றன. எஸ்தர், மிருகம், பலாப்பழம்,
பாம்பும் பிடாரனும் போன்றவை அவை. வாசகசாலை
சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
நிகழ்ந்துகொண்டிருக்கும் சிறுகதைகளின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கூட பலாப்பழம் கதை
பற்றி பேசியிருந்தேன். மேற்கூறிய பட்டியல் வண்ணநிலவனுக்கான அறிமுகங்கள் எனக் கொள்ளலாம். அவருடைய
சிறந்த சிறுகதைகளுள் இவையும் சில. இதை
மட்டுமே வெளிச்சமிட்டு காட்டும் குரல் சலிப்பினை ஏற்படுத்தியது.
அதனாலேயே இச்சிறுகதைகள் எதையும் இப்பதிவில் பேசாமல்
அவர் காட்டிய பன்முக உலகங்களை
விவரிக்கலாம் என்றிருக்கிறேன்.
பொதுமையாக
வண்ணநிலவனின் சிறுகதைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று வாழ்வு கொண்டிருக்கும் அபத்த
தருணங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவை. நூலின்
ஆரம்பத்திலிருந்து வரும் அனைத்து கதைகளிலும்
இத்தன்மையை உணர முடியும். நூலின்
கடைசிப் பகுதியில் இருக்கும் கதைகள் அனைத்தும் வாழ்வு
நகர்ந்து கொண்டிருப்பதற்கு மையமாக இருக்கும் நம்பிக்கையின் சார்பாக
அமைகிறது. உதாரணம் கொண்டு சொன்னால்
சற்று தெளிவாக புரியும்.
1970 இல்
வெளியான சிறுகதை மயான காண்டம்.
செல்லையா பண்டிதன் ஒரு வெட்டியான். வெகு
நாட்களாக யாரும் மரணிக்கவில்லை என்பதால்
அவனைத் தேடி பிணங்கள் வரவில்லை.
இதனால் வீட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மனைவிக்கும்
அவனுக்கும் இடையே உரையாடல்களும், பழைய
நினைவுகளுமாக கதை நீள்கிறது. பணம்
கிடைக்க வழியேது என்று யோசிக்கும்
போது சங்கெடுத்துக் கொள்கிறான். பிணம் விழுந்தாற்போல ஊதத்
துவங்குகிறான். ஊரில் மரணம் இல்லாத
போது இப்படி செய்தால் ஊர்க்காரர்கள்
அவனின் ஏழ்மையை புரிந்துகொண்டு அவனது
தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்று அர்த்தம்.
ஆலமரத்தடியில் இருந்த சாமியின் முன்
சென்று தன் தேவையை சொல்லி
சங்கூதுகிறான். இதன் பிறகு சிறுகதையின்
கடைசி பத்தியில் வண்ணநிலவனின் வரிகள்,
“திடீரென்று
சாமியின் முன்னால் நகர்ந்துபோய், ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய தகர உண்டியலைப்
பிடுங்கி, இடுப்பில் வேஷ்டி முந்தியில் கட்டிக்கொண்டு,
ஆலஞ்சருகுகள் சரசரக்க வீட்டை நோக்கி
நடந்தான்”
பிறரின்
மரணம் தான் தன்னையும் தன்னை
சார்ந்திருப்பவர்களின் உயிரையும் காக்கும் எனும் நிலையை பேசும்
சிறுகதை சக மனிதன் கூட
துணைக்கு இல்லாத ஓர் முடிவை
பேசுகிறது. களவு அவன் அளவில்
சரி என்றே வாசகன் ஏற்கிறான்.
இதே வண்ணநிலவன் 1996 இல் எழுதிய மற்றொரு
சிறுகதை பிழைப்பு.
இக்கதையில்
வரும் ரெத்தினம் பிள்ளை ஒருகாலத்தில் ஊரின்
பெரிய கையாக இருந்தவர். அவரின்
கம்பீரத்திற்கு குறையென்பதே இல்லை. அவரின்பால்
பயம் அதிகமாக இருந்தது. அவரின்
அனைத்து டாம்பீகமும் இழந்து சாதாரண மனிதனாகிப்
போன ஓர் நிலையில் அவரைத்
தேடி செல்லம்மா என்றொரு பெண் வருகிறாள்.
அவளுடைய வீட்டில் வாடகைக்கு தங்கும் குடும்பம் வாடகை
தராமல் ஏமாற்றுகிறது. அவர்களை எப்படியாவது விரட்ட
வேண்டும் என்று இவரின் உதவியை
நாடுகிறாள். தன் பலம் ஊரில்
நலிவடைந்துவிட்டது என்பதை சொன்னாலும் அவளுக்கு
இவர் மேல் நம்பிக்கை இருக்கிறது.
அந்நம்பிக்கை கொடுக்கும் உத்வேகத்தில் அவரும் அந்த வீட்டிற்கு
செல்கிறார். அங்கு அவர் காண்பதோ
வறுமையின் உருவம். தன்னுடைய வாழ்க்கை
எந்நிலையில் மாறியிருக்கிறதோ அப்படி மாறியிருக்கும் ஒரு
குடும்பத்தை காண்கிறார். ஆனாலும் செல்லம்மா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் மிரட்டி சீக்கிரம் காலி
செய்கிறோம் எனும் உத்திரவாத வார்த்தைகளை
உதிர்க்க வைக்கிறார். கதையின் இறுதியில் அவர்
முடிக்கும் விதம் ரெத்தினம் பிள்ளையால்
நடக்க முடியவில்லை. பசி எடுக்கிறது. செல்லம்மா
வீட்டிற்கு சென்றால் சாப்பிடலாம். நடக்க முடியாதிருப்பதால் வழியிலேயே
சாலையில் படுத்து உறங்கிவிடுகிறார்.
சக மனிதனின் மீதான நம்பிக்கையும் அந்நம்பிக்கையை
கடந்து உலகை காணும் பார்வையையும்
வண்ணாநிலவன் இக்கதையின் வழியே முன்வைக்கிறார். முன்னர் கூறிய கதைக்கும்
இந்த கதைக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
அவை தான் இந்த மொத்த
தொகுப்பின் வழியான பயணமாக இருக்கிறது.
மனிதத்தை பேசுவது இலக்கியம் எனில்
மனிதம் எப்படியெல்லாம் உருவம் கொண்டிருக்கிறது என்பதையும்,
அந்த மனிதம் எப்படியெல்லாம் சீர்குலைந்து
போயிருக்கிறது என்பதையும் இந்த தொகுப்பில் உணர்ந்துகொள்ள
முடியும்.
சிறுகதையின்
தன்மை அளவில் இருகூறாக அவருடைய
படைப்பிலக்கியத்தை பிரிக்க முடிந்தது. கதையின்
அளவில் இரண்டாக சொல்ல விழைகிறேன்.
வாழ்க்கையின் குறிப்பிட்ட சில தருணங்களை கதையாக
பேசுகிறது முதல் வகை. இதை
வாழ்வின் சம்பவங்கள் என்று எளிமையாக சொல்லலாம்.
மேற்கூறிய இரண்டு சிறுகதைகளும் இவ்வகைமையில்
அடங்கும். அதில் பல்வேறு மனிதர்களை
அவர் கூறுகிறார். மேற்கூறிய கதையில் எப்படி வெட்டியானின்
வாழ்க்கை பகிரப்பட்டதோ அதைப் போல கூத்தாடியின்
வாழ்க்கையை, வேஷமணிபவர்களின் வாழ்க்கையை, வேசிகளின் வாழ்க்கையை என நிறைய மனிதர்களை
காணமுடிகிறது. இவர்களைக் கடந்து யதார்த்த வாழ்க்கையில்
நாம் காண நேரும் உறவுகள்(அக்கா, அப்பா, அம்மா,
மனைவி) முன்வைக்கும் அரசியலையும் தீர்க்கமாக பேசுகிறார்.
உதாரணத்திற்கு
மனைவியின் நண்பர் என்றொரு கதை.
இந்த தலைப்பிற்கே தைரியம் வேண்டும். மனைவியின்
நண்பர் எனும் வார்த்தையில் தெரியும்
மரியாதை கணவனின் மனதில் எப்படி
உருவாகும் எனும் கேள்வியே எழுகிறது.
மனைவி தன்னுடைய நண்பருடன் தொடர்ந்து உரையாடுகிறாள். அவர்கள் வீட்டினுள் பேசிக்
கொண்டிருக்கும் பொழுது வீட்டை ஒட்டியது
போல இருக்கும் கடையிலிருந்து கணவன் அவர்களைப் பற்றியே
யோசித்துக் கொண்டிக்கிறான். சிந்தனைகள் அனைத்தும் விதிமீறல்களை, அறப்பிழைகளை, மனைவியின் மீதான சந்தேகங்களாகவே இருக்கின்றன.
மனைவி வாழ்க்கையை எப்படி நிலைப்படுத்துகிறாள் எனும்
விஷயத்தை கணவனின் பார்வையில் விவரிப்பது
வண்ணநிலவனின் மேதமையே இச்சிறுகதையில் தென்படுகிறது.
நூலின்
முதல் சிறுகதையான யுகதர்மம் சிறுகதையில் தன் மகள் யாருடனாவது
ஓடிப் போகமாட்டாளா என்று அப்பா ஏங்குகிறார்.
அதற்கு காரணமாக இருப்பது வீட்டின்
வறுமை. ஒவ்வொரு கதையாக வியந்தோதிக்
கொண்டே செல்கையில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின்
சிக்கலிலிருந்து ஏதோ ஒரு கணத்தில்
தப்பிக்க முனைகிறான் என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளமுடிகிறது.
அந்த சிடுக்குகளுக்கு காரணமாக வாழ்வின் அபத்தமும்
தப்பித்தலாக சில இடங்களில் மரணமும்
வேறு சில இடங்களில் சக
மனிதன் மீதான நம்பிக்கையும் என்று
வாழ்வின் மீதான பற்றை புனைவுகளின்
வழியே இறுக்கமாக்குகிறார்.
சிறுகதைகளின்
அளவில் இவருடைய இரண்டாவது வகை
தன்மைகளை (instances) மட்டுமே கதையாக்குவது. தன்மை
வகைக் கதைகள் என்பதை உதாரணம்
கொண்டு சொன்னால் புரியக்கூடும். வெளிச்சம் எனும் சிறுகதையை 1977 இல்
எழுதியிருக்கிறார். இந்தக் கதையை பொறுத்தவரையில்
நாயகனுக்கு தன்னையும் மனைவியையும் தவிர்த்து இன்னுமொருவர் வீட்டில் தங்கியிருகிறார் எனும் எண்ணம். அது
யார் எனில் தெருவிளக்கின் வெளிச்சம்.
வெளிச்சம் வீட்டினுள் புகுவதால் அவனின் குணத்தையே மாற்றுகிறது.
அவனுடைய எதிர்மறை உணர்வுகளுக்கு வெளிச்சம் காரணமாகவும், சில நேரங்களில் இருக்கும்
கோபத்திற்கு துணை போவதாகவும் அமைகிறது.
வெளிச்சமே அவன் எதிரி. அந்த
வெளிச்சத்தை என்ன செய்கிறான் என்பது
தான் கதை. இப்படி தொகுப்பில்
நிறைய கதைகள் இடம்பெறுகின்றன. ராஜநாகம்
எனும் சிறுகதை ஒரு பெண்
பாடுவது மட்டுமே ஆகும். ஆனால்
அதன் வழியே மனித குணத்தின்
ஓர் அங்கத்தில் முழுப்பார்வையையும் முன்வைக்கிறார்.
கசப்பினை
மட்டுமே பெருவாரியாக பேசும் வண்ணநிலவன் அதே
கசப்பை மகத்தான பகடியாகவும் சில
சிறுகதைகளில் மாற்றுகிறார். பிச்சாண்டி பானர்ஜி எனும் சிறுகதை
ஒரு எழுத்தாளரைப் பற்றியது. யாரைப் பற்றி சிறுகதை
எழுதினாலும் அம்மனிதர்களுக்கென இருக்கும் சங்கங்கள் அந்த எழுத்தாளரை எதிர்க்க
ஆரம்பிக்கின்றனர். இதனால் தான் யாரைப்
பற்றி எழுதுவது எனும் சந்தேகம் மேலோங்குகிறது.
அப்போது தனக்கு பிச்சாண்டி என்றிருந்த
மாமாவை மையப்படுத்தி சிறுகதை எழுதி பிச்சாண்டி
பானர்ஜி என்று மாற்றிவிடுகிறார். அந்த
உண்மைக் கதாபாத்திரத்தையும் காண்கிறார். அந்நிலையில் இருவருக்குமான உரையாடல்களும், எழுத்தாளனின் பயமும் வாசகருக்கு பெரும்
நகைச்சுவையை கொடுத்து செல்கிறது. எழுத்தாளன் சுதந்திரமாக இயங்க வேண்டியவன். ஆனாலும்
அவனை சமூகம் பயம் கொண்டவனாக
மாற்றி விடுகிறது. இந்த கசப்பைக் கூட
பகடியாக மாற்றிவிடுகிறார் வண்ணநிலவன். இப்படியான நிறைய பகடிகளை சில
சிறுகதைகளின் வாயிலாக உணர முடிகிறது.
இதுவரை
சொல்லாத ஒரு படைப்பு அவருடைய ஒரே
ஒரு நாள் எனும் குறுநாவல்.
வேலை தேடி அலையும் இளைஞனின்
கதை அது. வேலை தேடி
அலையும் பொழுது ஒரு வீட்டில்
தங்கியிருக்கிறான். பக்கத்துவிட்டில் இருக்கும் பெண்ணின் மீது மையல். அவளுக்கென
தனியொரு கதை என கிளைக்கதைகள்
மைய இழைக்கு உறுத்தாமல் நகர்கின்றன.
வேலை தேடி அலையும் பொழுது
அவன் காணும் சென்னையின் விவரணைகளும்,
மனிதர்களும் அவனின் உலகமாக மாறுகிறது.
குறுநாவலின் இடையில் ஒரு வரி
வருகிறது. அது தான் அக்கதையின்
மைய இழையாகவும் நகர்கிறது. அவ்வரியானது,
“எல்லோருமே
ஏதோ காரணத்துடனோ, காரணமின்றியோ அவரவர் உலகங்களில் தான்
உழன்று கொண்டிருக்கிறார்கள்”
கூற்றின்
உண்மையாய் குறுநாவலின் கதாபாத்திரங்கள் தங்களுடைய கடந்த காலத்தை சுமந்து
கொண்டு நகர்கின்றனர். குறுநாவலின் இடையில் ஆசாரி ஒருவர்
வருகிறார். வேலைகள் அதிகம் இல்லாமல்
கடனில் தேநீர் குடிக்கிறார். அவரிடம்
சொல்லப்படும் விஷயம் உங்கிட்ட எடுக்க
இருப்பது கையும் காலும் தானே
என்கிறார் கடைக்காரர். உழைப்பை மட்டுமே நம்பும்
மனிதனை உலகம் எப்படி வரவேற்கிறது
என்பதை குறுநாவலினூடே பல இடங்களில் உணர
முடிகிறது. இன்றளவும் சென்னையின் தெருக்களில் வேலை தேடி அலைபவர்களின்
உணர்வுகளை மிகத் துல்லியமாக இந்த
குறுநாவல் பிரதிபலிக்கிறது.
கிட்டதட்ட
மூன்று மாத காலம் இந்த
தொகுப்பை வாசித்தேன். இடையில் பேச அமையும்
வாய்ப்புகளில் எல்லாம் நண்பர்களிடம் வண்ணநிலவனின்
சிறுகதைகளை பேசியிருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு கசப்பிற்கும் எடுத்துகாட்டுகளையும்
முன்னனுபவங்களையும் வண்ணநிலவனின் கதாபாத்திரங்களிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையை இத்தொகுப்பு
விதைத்து செல்கிறது. எழுதலாம் என முடிவு செய்த
போதும் எந்த கதையை சொல்வது
எந்த கதையை விடுவது எனும்
குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தேன். மனதின்
ஆசையோ எல்லாவற்றையும் சொல் என்பது தான்.
சொல்வதைக் காட்டிலும் என் நோக்கம் சக
வாசகர்கள் அனைவரும் வண்ணநிலவனை வாசிக்க வேண்டும் என்பது
தான். சில சிறுகதைகளை மட்டுமே
மேலே கூறியிருப்பதால் வேறு சில சிறுகதைகளின்
தலைப்பினை கீழே கொடுக்கிறேன்.
யுகதர்மம்,
தர்மம், மயான காண்டம், பலாப்பழம்,
மனைவி, மிருகம், எஸ்தர், ராஜநாகம், பாம்பும்
பிடாரனும், அரேபியா, வெளிச்சம், இரண்டாவது சொர்க்கம், குடும்பச் சித்திரம், உள்ளும் புறமும், பகல்
கனவு, மனைவியின் நண்பர், வீட்டுக்கார சொர்ணத்தாச்சி,
பிச்சாண்டி பானர்ஜி, மல்லிகா, அவர்கள், அவன் அவள் அவன்,
பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்,
அரெஸ்ட், பிழைப்பு, ஆடிய கால்கள், காதுகள்,
ஒர்க்ஷாப்.
இவற்றைத்
தாண்டிய சில நல்லனுபவத்தைக் கொடுத்த
கதைகளும் வாசகர்களுக்கு கிட்டக்கூடும். எத்தனையோ கசப்புகளையும் அபத்தங்களையும் வாழ்க்கை சுமக்கும் பொழுதிலும் ஓர் புலனாகாத எளிமை
வாழ்க்கையோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை
வெளிச்சமிட்டு காட்டுவதற்கு பேருதவி புரிகிறது வண்ணநிலவனின்
புனைகதைகள்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக