சரீரம் கொள்ளும் பாவனைகள்

கட்டுரைத் தொகுப்புகள் வாசித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. யாருடைய பரிசீலனையின் பெயரிலும் நூல்களை வாசிப்பதில்லை. ஆனாலும் சென்னை புத்தக திருவிழாவில் .ராஜனின் சில பரிசீலனைகளை ஏற்க வேண்டியதாய் போயிற்று. காரணம் அவை rare ஆன புத்தகங்கள் அல்லது மறுபதிப்பில் கொள்ளையிடப்படும் விலையினை ஏற்கும் நூல்களாக அமைய நேர்பவை. இக்காரணங்களினாலாயே அவர் கூறியவற்றில் சில நூல்களை தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தேன். அவற்றில் ஒன்று .மோகனரங்கன் எழுதியஅன்பின் ஐந்திணைஎனும் நூல். இது அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.


அனுபவக் கட்டுரைகளின் அடிநாதமே வாழ்வின் மீதான விமர்சனம் தான். அது நேர்மறையாகவோ எதிர்மறையாகோ ஏன் பகடியாகக் கூட இருக்கலாம். தனி மனிதனின் பார்வையில் தன்னுடைய மற்றும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த புரிதலே அனுபவ கட்டுரைகளின் மையமாக அமைகிறது. படைப்பிலக்கியத்திற்கான கருக்குவியலாகவே அனுபவக் கட்டுரைகளைப் பார்க்கிறேன். கட்டுரைகள் நிகழ்பவற்றின் மீதான குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கிறது எனில் படைப்பிலக்கியம் அந்த நிகழ்வையே உருவாக்குகிறது.

இத்தொகுப்பில் இருக்கும் பதிமூன்று கட்டுரைகளும் உறவுகளை மையப்படுத்திய கட்டுரைகளாக இருக்கின்றன. இரு மனிதர்களிடையே இருக்கும் புரிபடாத/புரிதலுக்கு அப்பாற்பட்ட தன்மையே உறவு நீடிப்பதற்கான காரணியாக அமைகிறது. இந்த மர்மத்தை உறவில் அல்லாத வேறு மனிதனிடம் கூறும் பொழுது அந்த மூன்றாமவன் மர்மத்தை விடுவிக்க முயல்கிறான். அந்த மூன்றாமவனாகவே ஆசிரியர் இக்கட்டுரைகளில் இடம்பெறுகிறார், வாசகனோடு உரையாடுகிறார். மனிதர்களுக்கு இடையிலான உறவை, உலகத்தோடு கொண்டிருக்கக்கூடிய உறவை, சக ஜீவராசிகளின் மீதான உறவை சுயானுபவம் வாயிலாக வாசகனுக்கு காட்சிப்படுத்துகிறார்.

பருவங்கள் மாற மாற முன்னிருந்த கோபங்கள் நினைவுகளின் கசப்பாக மாறிவிடுகிறது. முன்பிருந்த முரண் சுயபகடியாக உருக்கொள்கிறது. பால்யகாலத்தில் கைவிடப்பட்ட உறவுகள் சமகாலத்தின் கயமையாக நினைவுகொள்கிறது. இப்படியான நிறைய மனிதர்கள் தொகுப்பினூடே உலவுகிறார்கள். ஒவ்வொரு கட்டுரைக்குமான தலைப்பு வசீகரத்துடன் அமைந்திருக்கிறது. இரண்டு கட்டுரைகள் பிற கட்டுரைகளைக் காட்டிலும் வெகுவாக பாதித்தது. இரவின் தூக்கத்தினூடேயும் அதில் உலவிய மனிதர்களின் குரலை கேட்க முடிந்தது.

அவற்றில் ஒன்றுசிறுகோட்டுப் பெரும் பழம்எனும் கட்டுரை. பால்யகாலத்திலிருந்து நிறைய பெண்களை தொடர்ந்து காதலித்த ஒருவனின் கதை.  ஒரு காதல் கைவிடப்படும் நேரத்தில் வேறொரு காதல் அவ்விடத்தை அவனுடைய வாழ்வில் நிரப்பிவிடுகிறது. கைவிடப்படுதலும் வேறொரு கைசேர்தலும் இயல்பாக அரங்கேறுகிறது. கடைசியாக நிகழும் கைவிடப்படுதல் அவனை தற்கொலைக்கு இழுத்துச் சென்று வெற்றியும் காண்கிறது. வாழ்க்கையை பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் முழுக்கதையையும் சொல்லி கடைசியாக அவனுடைய தற்கொலைக்கு அர்த்தம் கொடுக்கும் இடம் தான் வாசிப்பில் பேரலையை உருவாக்கி செல்கிறது. அவ்வரிகள்,

எப்பொழுதும் என் பெருவிருப்பமாகவும் ஆறுதலாகவும் இருந்த புத்தகங்களும் கைவிட்டுவிட்ட பெரும்பொழுது அது. பழகிய முகங்களுமே கூட பார்க்கக் கசந்தது. காதல், காமம் எனும் தோல் எலும்புகளைக் கீறிய ஆழத்தில் ஜீவனின் ஆதி இச்சையான தன்லயிப்பும் அறுபட்டுபோனது. அக்கணத்தில் ஒருவன் செய்யக்கூடிய  மிக இயல்பான காரியமாக இருப்பது, சுமக்கத் தாளாத பாரமாக கிடந்து அழுத்தும் உயிரை உடலினின்றும் இறக்கி வைப்பதுதான்.”

ஒவ்வொரு கட்டுரையிலும் கண்ணில் கண்ட சம்பவங்களிலிருந்து தான் ஊடுபாவிய விஷயங்களை ஆசிரியர் கட்டுரையின் இறுதியில் சொல்லி வந்தாலும் அவை வாசகனின் மேல் திணிக்கும் தன்மையில் இல்லாமல் இருப்பது தொகுப்பின் பலமென உணர்கிறேன். சில கட்டுரைகளில் அந்தந்த வாழ்வின் மனிதர்களே தங்களின் நிலையை கூறுகிறார்கள்.

நட்சத்திரங்களுக்கு நடுவிலான இருள்எனும் கட்டுரையில் பால்யகாலத்தில் காதலித்த பெண்ணை மீண்டும் சந்திக்கிறான் ஒருவன். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. பால்யகால காதலையும் திருமணம் நிகழ்ந்த விதத்தையும் ஆசிரியர் விவரிக்கிறார். கட்டுரையின் நாயகன் மருத்துவன். அவனுடைய மருத்துவமனைக்கு தான் பால்யகால காதலி வருகிறாள். நினைவுகளின் தகிப்பில் சிகிச்சை முடிந்த பிறகு அணைத்துக்கொள்கிறான். அவள் விடுவித்துக்கொண்டு இந்தத் தைரியம் மட்டும் உங்களுக்கு அப்பவே இருந்திருந்தா கட்டின புடவையோட பின்னாடி வந்திருப்பேன் என்று சொல்கிறாள். சிகிச்சைக்காக அவள் கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு விபத்தில் மாட்டிக்கொள்கிறான். அவனை மருத்துவமனையில் நோயாளியாக சந்திக்கும் ஆசிரியருடனான உரையாடலில் கட்டுரை முடிகிறது. அவ்விடத்தில் ஆசிரியரின்றி அந்நாயகனே சொல்கிறான் நான் மனைவியாக இருப்பவளை அடைந்ததாற்காகவோ அல்லது பால்யகால காதலியை மணம் செய்ய இயலாததன் நினைவிலோ குடிக்கவில்லை. மாறாக குறிப்பிட்ட பருவத்தில் காணாமல் போன துணிச்சலை எண்ணித் தான் குடித்தேன் என.

மனித உறவுகள் விசித்திரமானவை. மர்மம் நிறைந்தவை. அவற்றை ஊடுபாவும் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தை கொடுக்கவல்லவை. அப்படி சில வாழ்வியல் தருணங்கள் .மோகனரங்கனுக்கு கொடுத்த பார்வை தான் தொகுப்பு முழுக்க விரவி இருக்கிறது. வாழ்க்கை சார்ந்து வாழ்க்கை பற்றிய அகராதியாகவே இந்நூலை வாசகன் எடுத்துக்கொள்ளலாம்.

பாதசாரி இந்நூலின் பின்னுரையினை .மோகனரங்கனின் கவிதை ஒன்றுடனேயே முடிக்கிறார். அதன் சில வரிகளை பின்னட்டையிலும் இட்டிருக்கின்றனர். அதில் ஓர் வரிதான் இக்கட்டுரையின் தலைப்பும். கவிதையின் ரசிகன் அல்ல நான். கட்டுரையின் முடிவாக அக்கவிதை அமைந்திருந்ததாலோ என்னவோ பலமுறை அக்கவிதையை வாசித்தேன். மொத்த தொகுப்பின் மையத்தை வசீகரமாக தீண்டுகிறது அந்நீள் கவிதை. அதன் கடைசி பகுதியோடு இக்கட்டுரையையும் முடித்துக் கொள்கிறேன்.

உனதூனுடல்
உடைந்தூறிப் பெருகும் பேராறு
சுழித்தோடித் தேங்கும்
நினைவின் கடல் முகத்தில்
மிதந்து
மெல்ல ஏகுமென் ஏமப்புணை
தந்தையும் மகளுமாய்
மகனும் தாயுமாய்
சரீரம் கொள்ளும்
பாவனைகளைக் கீறி
உள்ளுக்குள் ரத்தம் ருசிக்கும்
ஆன்மாவோ
புறத்தே பேசி நடிக்கிறது
பிரிவின்
தீராத வாதையை சுகமென


பி. கு 1 : நூலை பரிந்துரை செய்த .ராஜனுக்கு நன்றி

பி. கு 2 : அன்பின் ஐந்திணை எனும் நூலின் தலைப்பிற்கான விளக்கத்தை www.tamilvu.org என்னும் தளம் தெளிவாக தருகிறது. அவ்வரிகள்

//ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர். தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.//


நூலை வாசித்து முடிக்கையில் அன்பின் ஐந்திணையை வாசகனால் எளிதில் இணங்காணமுடியும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இல்லை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக