பிம்பங்களுடன் போராடும் மனிதர்கள்
எப்போது
சென்னை புத்தக திருவிழாவிற்கு சென்றாலும்
முதலில் கால்பதிக்கும் இடம் காலச்சுவடு பதிப்பகம்
தான். அதில் சில நூல்களை
அதிக தள்ளுபடியில் தருவர். சென்றமுறை கிருஷ்ணன்
நம்பியின் ஆக்கங்கள் கிடைத்தது. இம்முறை சில பொக்கிஷங்களை
கால தாமதத்தினால் இழந்தாலும் வேறு சில நல்ல
படைப்புகளை அள்ள முடிந்தது. அவற்றில்
ஒன்று எஸ்.செந்தில்குமாரின் “விலகிச்
செல்லும் பருவம்” எனும் சிறுகதைத்
தொகுப்பு.
எஸ்.செந்தில்குமாரின் எழுத்துகளுடன் எனக்கு நேரடித் தொடர்பு
இல்லை. வல்லிசை நாவலுக்காக ஓர்
கட்டுரை வேண்டி புத்தகம் பேசுது
இதழ் சார்பாக அவரிடமிருந்து அழைப்பு வந்தது.
அது சார்ந்தே அவருடனான எனது நட்பு மலர்ந்தது.
எப்படியேனும் அவரை வாசித்துவிட வேண்டும்
என்றிருந்தேன். சில சிறுகதைகள் இணையத்திலேயே
கிடைக்கின்றன என சொல்லியிருந்தார். மனதிற்கு
உவப்பாக இல்லை. நூலளவிலேயே வாசிக்க
வேண்டும் என்றிருந்த ஆர்வம் விலகிச் செல்லும்
பருவம் நூலின் வழியே நிறைவேறியது.
வாழ்க்கையின்
தடத்தில் எண்ணற்ற மனிதர்களை காண்கிறோம்.
அலுவல் ரீதியாக பேச ஆரம்பிக்கிறோம்.
சில நேரங்களில் அன்றாடங்களின் பகுதியாக அம்மக்கள் மாறிவிடுகின்றனர். அவற்றில் சிலரிடம் மட்டும் நெருக்கம் அதிகமாகிறது.
நட்பின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். சிலர் எதிரிகளின் பட்டியலில்,
எதிர்தரப்புகளின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இவ்விரு அம்சத்திற்கும் பொதுவான
காரணம் என ஒரு விஷயத்தை
பார்க்கிறேன். அஃதாவது தன்னிடம் இருக்கும்
ஏதோ ஒரு குணத்தை பிறரிடம்
காண்பது. தன்னிடம் இருக்கும் நல்ல விஷயங்களை பிறரிடமும்
காணும் பட்சத்தில் அவர் நண்பனாகவும், தன்னிடம்
உள்ள கையாலாகாத்தனம் பிறரிடம் தெரியும் பட்சத்தில் அவரை சாடுகிறோம் எனும்
பெயரில் அறப்போர்வைக்குள் ஒளிந்துகொள்பவராகவும் மாறிவிடுகிறோம். தன்னை மட்டுமே பெரிதுபடுத்தி,
அனைவரிடத்திலும் தன்னையே தேடி தன்னுள்ளேயே
ஒடுங்கிப் போகும் மனிதர்களைத் தான்
எஸ்.செந்தில்குமார் தன் சிறுகதைகளில் உலவவிடுகிறார்.
இத்தொகுப்பில்
மொத்தம் பதினான்கு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அனைத்து சிறுகதைகளும் சில
மையப்புள்ளிகளில் இணைகின்றன.
1. ஒவ்வொரு
கதாபாத்திரத்திற்கும் நீளமான மற்றும் ஆழமான
கடந்தகாலம் இருக்கிறது. அதன் வடுவை சுமந்து
கொண்டே கதை முழுக்க திரிகிறார்கள்.
2. கதையின்
நாயகர்கள் அனைவரும் கதையினுள்ளேயே தன்னைப் போன்றொரு மனிதரை
சந்தித்துவிடுகின்றனர். அவர்களிடம் இருக்கும் தன்னை அடையாளம் காண
முயற்சிக்கின்றனர்.
3. வெவ்வேறு
சிறுகதை அமைப்பிலும் ஒரே மாதிரியான கதைசொல்லலைக்
கொண்டு நகர்த்துதல்.
இம்மூன்றிலும்
தான் ஆசிரியரின் பலம் மற்றும் பலவீனம்
இரண்டும் அடங்கியுள்ளது. மேலும் இவற்றின் வழியே
இவர் வைக்கும் கதைகள் எளிமையான மனிதர்களின்
வாழ்க்கையை பேசுகிறது. அன்றாடம் நாம் காணும் மனிதர்களின்
வாழ்க்கையை வெளிச்சமிட்டு தன்னுடைய விவரணைத் திறனால் காட்சிப்படுத்துகிறார். “இரு நிறமுடைய
காட்சிகள்” எனும் சிறுகதையில் பால்காரர்களின்
அன்றாடத்தை துல்லியமாக விவரிக்கிறார். வேறு சில கதைகளில்
விவரணையின் வழியே கதையின் ஆழத்திற்கு
வாசகனை இழுத்து செல்கிறார்.
“பூங்காவின்
ஞாயிற்றுக்கிழமை” எனும் சிறுகதை. பூங்காவின்
விவரணையைக் கொண்டு அதன் நிலையை
முழுதாக வாசகனுக்கு கடத்துகிறார். அதனோடு அவர் உருவாக்கும்
கதை பூங்கா எவ்விதமான உணர்வை
பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் கொடுக்கிறது என்பதாக அமைகிறது. இரு பருவத்து ஆட்கள்
கொள்ளும் கவலைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியை
வாசகனால் எளிதில் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
வடிவத்தில்
சில சோதனை முயற்சிகளையும் நேர்த்தியாக
இத்தொகுப்பில் காணமுடிகிறது. மூன்று காதல் கதை
எனும் சிறுகதை மாற்றி அமைக்கப்பட்ட
அத்தியாயங்களின் வழியே சொல்லப்படிருக்கும். வாசிக்கையில்
சிடுக்குகள் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களால்
ஆன சிறுகதையாக இருப்பினும் அவற்றினூடே ஒவ்வொரு கதைமாந்தர்களின் காதலை
சொன்ன விதம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.
இத்தொகுப்பில்
“பகலில் மறையும் வீடு”, “ஜெயக்கொடி”,
“காதலித்துக்கொண்டே இருப்பவர்கள்”, “என் மரணத்திற்கு பிறகு
நீயும் இறந்துவிடுவாய்” ஆகிய கதைகள் சிறந்த
கதைகளாக இருக்கின்றன. இந்நான்கிலும் வித்தியாசப்படுவது பகலில் மறையும் வீடு
சிறுகதைதான். பகலில் மறைந்து இரவில்
மட்டும் தெரியும் வீட்டினை அறிய முற்படுவதுதான் கதை.
அது நிகழும் காலம் ஆங்கிலேயர்கள்
இந்தியாவில் இருந்த காலம். ஒரு
மர்மத்தை விடுவிக்க நாட்டாரியல் கதைக்கூறுகள் அல்லது அறிவியல் விஷயங்கள்
துணைபுரியும். அப்படி அது செய்யும்
தருணத்தில் சிறுகதை கொடுக்கக்கூடிய வாசிப்பின்
உச்சத்தை வாசகர்கள் இழக்க நேரிடும். முடிச்சுகளை
அவிழ்த்துவிட்டு நகரும் இயல்புக் கதையாகிவிடும்.
முடிச்சுகளை அவிழ்த்தும் சிறுகதைக்கான வாசிப்பனுபவத்தை இக்கதையில் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.
மீத மூன்று கதைகளும் அற்புதம்
என சொல்லியிருந்தாலும் குறைகளையும் ஒருங்கே பெற்றிருக்கின்றன. காதலித்துக்கொண்டே
இருப்பவர்கள் சிறுகதையில் விவாகரத்து ஆன மனிதன் தனியாக
வாடகைக்கு தங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய
கீழ் போர்ஷனில் இருக்கும் தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையும் விவாகரத்தில் முடியும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாயகன் கீழ்
வீட்டுக்கணவனிடம் தன்னைக் காண முயல்கிறான்.
அவனுடைய கதையும் கீழ்வீட்டு கதையும்
ஒன்றைப் போலவே ஒருங்கே பயணிக்கிறது.
என் மரணத்திற்கு பிறகு நீயும் இறந்துவிடுவாய்
எனும் சிறுகதையிலும் சிகாமணி – கார்க்கோடன் எனும் இரு கதாபாத்திரங்களும்
வேறு வேறு உருவங்களில் ஒரே
கதையை சுமக்கின்றன. மற்றொருவனுள் தன்னையே தேடுகின்றனர்.
ஜெயக்கொடி
சிறுகதை மட்டும் இதே விஷயத்தை
மாறுபட்டு பேசுகிறது. வாசகனொருவன் நாவலை வாசித்துவிட்டு அதன்
ஆசிரியரை சந்திக்க செல்கிறான். புனைவும் யதரத்தமும் இணையும் இடங்களை அறிய
முயல்கிறான். முடிவில் எது புனைவு எது
யதார்த்தம் எனும் சந்தேக நிலைக்கு
தள்ளப்படுகிறான். அதற்கொப்ப கதையும் இயல்பாய் நகர்கிறது.
ஒரே கதையமைப்பை வேறு வேறு வடிவத்தில்,
வேறு வேறு கருக்களில் இட்டு
சோதனை முயற்சி செய்யப்பட்டிருப்பதான தோற்றத்தையே இத்தொகுப்பு
அளிக்கிறது. அதற்கே மேல் கூறிய
மூன்று சான்றுகள்.
விமர்சனத்தை
கூறியிருப்பினும் இந்நான்கு கதைகள் வாசகனுக்கும் எழுத
முனைபவர்களுக்கும் மிக முக்கியமான படைப்புகளாக
நிச்சயம் இருக்கும். சிறுகதையின் எந்த ஒரு இடத்திலும்
ஆசிரியராக உள் நுழையாமல் அந்தந்த
கதாபாத்திரங்களின் உலகத்தை அவரவர்களின் கதைகள்
கொண்டு மட்டுமே நிரப்பி தொகுப்பு
ஒவ்வொரு கதையின் அளவிலும் முழுமையை
அளிக்கிறது.
நீரின்
ஓட்டத்தைப் போல ஒவ்வொரு கதாபாத்திரங்களும்
தங்களுடைய பிம்பத்தை தேடி அலைகிறது. புனைவுகளை
உருவாக்கிக் கொள்கிறது. புனைவுகளாக மாறிக் கொள்கிறது. காலங்கள்
இடம் மாறி ஒவ்வொரு கதாபாத்திரங்களும்
கதைகளின் வழி தங்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கின்றனர். தனி மனிதனின் இயல்பான
குணத்தை பரிசீலனையின் தன்மையில் அணுக கதைகளின் வழியே
உதவுகிறது எஸ்.செந்தில்குமாரின் “விலகிச்
செல்லும் பருவம்”