ஆங்கிலோ-இந்தியர்களின் வரலாறு : இன அழிப்பின் சாட்சியம்
ஒவ்வொரு வரலாறும் அறிஞர்களால்
எழுதப்படுகிறது. அவர்களின் மேட்டிமைப் பார்வையில் வரலாற்றின் ஒவ்வொரு செங்கல்லும் சீர்மையாக
அடுக்கப்படுகிறது. அதில் உதிர்க்கப்படும் எண்ணற்ற உதிரிகள் எழுதப்படும் வரலாற்றிலிருந்து
கண்டுகொள்ளப்படாமலே சென்றுவிடுகின்றனர். ஆனால் அந்த உதிரிகளே எழுதப்படும் வரலாற்றின்
அடித்தளம் எனும் விஷயம் அவ்வரலாற்றாலும் அதனை வாசிக்கப்போகும் சந்ததியாலும் நிச்சயம்
மறக்கப்பட்டுவிடும். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மனிதர்களின், இனக்குழுக்களின்
சமூகங்களின் செயல்பாடுகள் காலத்திலிருந்து மறைக்கப்பட்டு வருகிறது. அவை வெளிவரும் பொழுது
நிச்சயம் வரலாற்றின் மீதிருக்கும் பொதுப்பார்வை சிதிலமடையத் துவங்கும்.
மேற்கூறிய தன்மையின் சாட்சியாக
ஓர் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக கிடைக்கும்
“இந்தியாவின் பிணைக்கைதிகள்” எனும் நூலையே குறிப்பிட விரும்புகிறேன். தொடர்ந்து சந்தியா
பதிப்பகம் வரலாறு சார்ந்த நுண்தகவல்கள் கொண்ட பல நூல்களை வெளியிட்டு வருவது பாராட்ட
வேண்டிய விஷயத்துள் ஒன்றாகும். அதில் இந்நூல் இன்னமும் சற்று பாராட்டுகளைப் பெறுகிறது.
ஹெர்பர்ட் ஸ்டார்க் என்பவரால் எழுதப்பட்டு ஜெ.நிர்மல் ராஜ் மற்றும் அனுராதா ரமேஷ் ஆகியோரால்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நூறு பக்க அளவே கொண்டுள்ள இந்நூல் வெறும் ஆங்கிலோ இந்தியர்களின்
வரலாற்றையும் அதனூடான வீழ்ச்சியையும் பேசவில்லை. மாறாக உலகில் எந்த மூலையிலெல்லாம்
இன அழிப்புகள் நிகழ்ந்திருக்கின்றதோ அதன் அதிகார நுட்பத்தை செறிவாக சீண்டிச் செல்கிறது
இந்நூல்.
ஆங்கிலோ இந்தியர்களின்
வாழ்க்கையை அதன் வரலாற்றிலிருந்தே துவங்குகிறது. போர்ச்சுகீசியர்களும் ஃபிரெஞ்சுக்காரர்களும்
டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் பொழுது பெருவாரியாக ஆண்கள் கூட்டமாகவே இருந்தனர்.
மேலும் சிறு வணிகமே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. பின் தொடர் வணிகத்திற்காக
இங்கே தங்களை தகவமைத்துக்கொள்ள நேர்ந்தவுடன் இந்தியப் பெண்களுடனான உறவும் ஆரம்பித்திருக்கிறது.
அவர்களின் வழியான குழந்தைகளை பொதுச்சொல்லில் யூரேஷியர்கள் என்றும் பின் அச்சொல் ஆங்கிலோ
இந்தியர்கள் என்றும் மருவி வந்துள்ளது.
குழந்தையிலிருந்தே அவர்களுக்கான
பிரச்சினைகள் தொடங்கியிருக்கின்றன. தந்தைவழி பிற தேசத்தவர்களாக இருப்பினும் தாய்வழி
இந்தியர்கள். இருவேறு கலாச்சாரங்களின் வித்து என்பதால் இரு பக்கமிருந்தும் புறக்கணிப்புகள்
எழுந்துள்ளன. திருச்சபையின் விதிமீறலாக தந்தை தேசமும் மதச் சடங்ககுகளிலிருந்து புறமொதுக்கப்படும்
நிலை தாய் தேசத்திலும் நிகழ்ந்திருக்கிறது. இருந்தும் விளிம்பு நிலையில் அவர்களுக்கான
வாழ்க்கை பல்வேறு காலனிகளிடமிருந்து தொடர்ந்தவண்ணமே இருந்திருக்கின்றன.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு
வந்தவுடன் இந்தச் செயல்பாட்டை விமர்சித்திருக்கின்றனர். ஆனால் நாட்டில் வணிகத்தை பெருக்கவும்
இங்கிருந்த படி வணிகத்தை தொடர்ந்து நடத்தவும் வாரிசின் தேவையை உணர்ந்திருக்கின்றனர்.
அரசாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர்களின் சந்ததிகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன.
அடிப்படை மொழியியலை கற்றுத்தருவதற்காக பாதிரிமார்களை இங்கிலாந்திலிருந்து கப்பல்களில்
அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் வழி ஆங்கீலோ இந்தியர்கள் தந்தைவழி வந்தவர்களாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.
அதனால் வணிகம் சார்ந்த பல்வேறு தொழிலில் அவர்களால் ஈடுபட முடிந்திருக்கிறது. மொழிப்பிரச்சினையை
கடந்து இரு மொழிகளும் அறிந்த ஆங்கீலோ இந்தியர்கள் இந்தியாவுடனான வணிகத்தில் பெரும்
பங்காற்றியிருக்கின்றனர்.
இந்தியாவை தங்களின் காலனி
நாடாக மாற்ற முடிவெடுக்கும் தருணத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் இருப்பவர்களுடனும் ஒப்பந்தம்
படியோ போரிட்டோ தங்களின் பக்கம் பிரதேசத்தை மாற்றியிருக்கின்றனர். போரில் ஆங்கிலேயர்களுக்கு
அதிகம் துணை நின்றது ஆங்கிலோ இந்தியா வம்சாவளியினர் தான்.
பதினெட்டாம் நூற்றாண்டின்
கடைசி ஆண்டுகளில் அவர்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கினர். ஐரோப்பிய நாடுகளில்
உருவான இனக்குழுக்களின் வரலாற்றை முன்வைத்து ஆங்கிலோ இந்தியர்களின் மீதான காழ்ப்பு
ஆங்கிலேயர்களுக்கு எழுந்தது. அச்சமயத்தில் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் ஆங்கிலோ இந்தியர்களின்
எண்ணைக்கை அதிகம். இந்தக் காரணத்தால் தனியுரிமையையும் நாட்டையும் அவர்கள் ஆண்டுவிடுவார்களோ
எனும் எண்ணம் உதித்திருக்கிறது. அந்த பயத்திலிருந்து தங்களது வணிக நிறுவனத்தையும் நாடுபிடிக்கும்
எண்ணத்தையும் காக்க அனைத்து அரச பதிவுகளிலிருந்தும் ஆங்கிலோ இந்தியர்களை நீக்கினர்.
போருக்கான பயிற்சிகள் மேலதிகமாக கொடுக்கப்பட்டிருந்ததால் ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை
பெரும் கேள்விக்குறியானது. அதே எநேரம் அவர்கள் கொண்ட வீழ்ச்சி பிற்கால சந்ததியினருக்கு
பெரும் படிப்பினையாக அமைந்தது.
ஆங்கிலோ இந்தியர்களை நீக்கிய
நேரம் தங்களின் அடித்தட்டு வேலைகளுக்கு ஆள்தட்டுப்பாட்டை சமன் செய்யவும் திட்டம் வகுத்திருந்தனர்.
இந்தியர்களுக்கு அடிப்படை ஆங்கிலத்தை பாதிரிமார்களை வைத்து கற்றுக்கொடுத்து பணியில்
அமர்த்துவது. இந்நிலையில் ஆங்கிலோ இந்தியர்களும் பல எழுத்தர் வேலைகளுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.
அப்போது பிரச்சினை இந்தியர்களுக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் என்றாக திரும்பியிருக்கிறது.
ஆனாலும் சரியான வாழ்வாதாரம் அமையவில்லை. சிலர் மற்றும் கடைத்தேற்றப்பட்டனர்.
கல்வியே தங்கள் இனத்திற்கான
விடுதலை என்பதை உணர்ந்தனர். இந்த எண்ணம் உதிக்கும் சமயத்தில் தான் பல்வேறு மாகாணங்களில்
கல்வி நிலையங்கள் ஆரம்பமாயின. அதிலும் நிராகரிக்கப்பட்டு சில தனிப்பட்ட கல்வி நிலையங்கள்
ஆங்கிலோ இந்தியர்களுக்கான கல்வி வாய்ப்பை நல்கியது. அங்கிருந்தே அவர்களுக்கான் மறுவாழ்வு
ஆரம்பம் ஆகியிருப்பதாக நூலில் உணர்த்துகிறார். இதன் நீட்சியை வேறு நூல்கள் வழியாகத்
தான் நம்மால் உணரமுடியும் என எண்ணுகிறேன்.
மிகச்சிறிய அளவிலான இந்நூல்
ஆங்கிலேயர்களின் பார்வையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவை கூறும் வரலாற்றுத்
தகவல்கள் இன அழிப்பின் பின்னிருக்கக்கூடிய காலனியாதிக்க மனநிலையை துயிலுரித்துக் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியாவின் நவீன வளர்ச்சியில் கீழ்நிலையிலிருந்து ஆங்கிலோ இந்தியர்கள்
ஆற்றிய பணியை செறிவாகவும் சொல்லிச் செல்கிறது. மேலும் ஆங்கிலத்தின் ஊடுருவல் காலத்தின்
தேவையாகத் தான் இருந்திருக்கிறது எனும் பெரும் வியப்பை சில தகவல்களின் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது.
சில சிறுகதைகளின் வழியே உயிர்ப்பித்திருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் நிராகரிக்கப்பட்ட
வாழ்வில், ஆசிரியர் சொல்வதைப் போல் பிணைக்கைதிகளாகவே தங்களின் வரலாற்றை செப்பனிட்டிருக்கின்றனர்
என்பது வாசிப்பில் வேதனை அளிக்கிறது..
சிறிய கண்ணீரும் இன அழிப்பு
சார்ந்த பரந்துபட்ட பார்வையையும் நல்குகிறது
இச்சிறிய நூல்.