மானுட வன்மங்களால் இயற்றப்படும் இசை
அழகிய பெரியவன் எழுதிய வல்லிசை நாவல் சார்ந்து ஆகஸ்டு மாத புத்தகம் பேசுது இதழில் வெளியாகியிருந்த கட்டுரை.
மானுட
வன்மங்களால் இயற்றப்படும் இசை
இந்தியாவில் தலித்துகளின் அரசியலை
இரு கோணங்களிலேயே எல்லோராலும் அணுக முடியும். ஒன்று காந்தியினுடையது. மற்றொன்று அம்பேத்கருடையது.
இவ்விரு கோணங்களும் கூட முற்றிலும் எதிரெதிர் திசையில் பயணம் செய்பவை. தீண்டாமை எனும்
கொடிய நோயினால் துவண்டிருந்த மக்களிடையே அரசியல் எழுச்சியாக சாதிப் பிரிவினை உருக்கொண்டது.
அப்போது காந்தி அஹிம்சையின் வழியே மேட்டுக்குடியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களுக்கு
அல்லது ஹரிஜனம் என சொல்லப்படுபவர்களுக்கு விடுதலையை வங்கித் தர முனைந்தார். அம்பேத்கரோ
தன்னை மேல் ஜாதிக்காரர்களிடம் அர்பணித்துக் கொண்டு மக்களுக்கான உரிமையை பெறுவதில் மறுப்பை
தெரிவித்தார். மாறாக சாதி அமைப்பு எனும் விஷயமே முழுமுற்றாக தகரும் தருணத்தில் மேட்டுக்குடி
எனும் அதிகாரமும் கீழ்ச்சாதிக்காரன் எனும் அடிமை நிலையும் முற்றாக ஒழிந்துவிடும். அதுவே
மானுட விடுதலை என்றார்.
இந்த இரு கோணங்களை அறிந்து கொள்ள
டி.ஆர்.நாகராஜ் எழுதி ராமாநுஜம் மொழிபெயர்த்த “தீப்பற்றிய பாதங்கள்” எனும் நூல் பெரிதாக
உதவியது. அதிலிருக்கும் தத்துவங்களை நாவலாக்குவது சற்றே சவாலான விஷயம். கொஞ்சம் தீவிரமாக
பேசினாலும் கட்டுரை தொகுப்பாக மாறிவிடும். இருந்தும் சமூகத்தின் பொதுத் தேவையை, அதன்
அவல நிலையை, காலமாற்றத்தோடு ஊடாடியிருக்கும் சாதி அரசியலை, அது சார்ந்த மக்களின் போக்கை
“வல்லிசை” எனும் நாவலின் வழியே மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் அழகிய பெரியவன்.
முழவு, துடி, தண்ணுமை என மூன்று
பாகங்களாக நாவலை பிரித்திருக்கிறார். இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டங்களை பிரதிபலிக்கின்றன.
முழவு பகுதி திருவேங்கடம் எனும் தனி மனிதனின் வளர்ச்சியை கணக்கில் கொள்கிறது. துடி
பகுதியோ அத்தனிமனிதன் எப்படி சமூகத்தின் பங்காக தன்னை மாற்றிக் கொள்கிறான் என்பதை கூறுகிறது.
மூன்றாவதோ மானுட வீழ்ச்சியை எதிரொலிக்கும் அத்தியாயமாக இருக்கிறது. தான் உழைத்த சமூகத்தினாலேயே
துரத்தப்பட்டு எப்படி மீண்டும் தனி மனிதனாகிறான் அல்லது வழமைக்குள் சிக்கிவிடுகிறான்
என்பதை அற்புதமான சித்திரமாக்குகிறது மூன்றாவது பகுதி.
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய
காலத்தில் பூங்குளம் எனும் கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. இராவணேசன் தோல் பதனிடும்
தொழிற்சாலையில் பணிபுரியும் நேர்மையான ஊழியர். அவருடைய மகன் திருவேங்கடம். அப்பாவின்
மூலமாகவும் அவருடைய தோழராக வரும் சிவமலை போன்றவர்களின் மூலமாகவும் கிராமத்தில் கூறப்படும்
சாதி எதிர்ப்பொலிகளை கேட்டு வளர்கிறான். கல்வி ஒன்றே சாதியமைப்பை உடைக்க பெரிதும் வழிகோலும்
என பெரிதாக நம்பும் இராவணேசன் மகனை மெட்ராஸில் இண்டர்மீடியேட் படிக்க அனுப்புகிறார்.
விடுதியில் கிடைக்கும் நண்பர்கள் மூலமாக தனிமனித சுதந்திரம் சார்ந்த விழிப்புணர்வு
ஏற்படுகிறது. அந்த தனி மனித சுதந்திரம் கூட எப்படி மேல்சாதிக்காரர்களின் சொத்தாக மாறுகிறது என்பதையும் கேள்விஞானத்தால் உணரத் துவங்குகிறான்.
நாவலின் முதல்பகுதியான முழவு முழுக்க
திருவேங்கடத்தின் அறிதலிலேயே கழிகிறது. இரண்டாவது பகுதியில் அவனது வாழ்க்கை எப்படி
போராட்டம் பக்கம் திரும்புகிறது என்பதாக மாற்றம் கொள்கிறது. இங்குதான் படைப்பு அதன்
ஆழம் நோக்கி நகரத் துவங்குகிறது.
திருவேங்கடத்தின் நண்பன் சிவலிங்கம்.
பறையடிக்கும் வம்சத்தில் பிறந்தவன் என்பதால் அவனுக்கும் அந்த தொழிலே அமைகிறது. பறையடித்தல்
குறிப்பிட்ட சாதியின் குறியீடாக மாறியிருக்கிறது என்பதை கிராமத்தால் உணர முடியவில்லை.
மேல்சாதிக்காரர்களின் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலோ, மாடுகள் மடிந்தாலோ பறை அடிப்பவர்களுக்கு
வேலை வருகிறது. இதைத் தவிர சாக்கடையை சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல் என மனிதநேயத்திற்கு
புறம்பான விஷயங்களை தொழிலாக செய்கிறார்கள். இவை எல்லாவற்றையும் திருவேங்கடம் ஒற்றைப்
பரிமாணத்தில் முன்வைக்கிறார். அஃதாவது மேட்டுக்குடி மக்களின் அவசிய மற்றும் அன்றாட
தேவைகளுக்கு தலித்துகளின் தொழில் முக்கியமானதாகிறது. அந்நிலையில் ஏன் அவர்களுடனான சமூகத்தில்
சம உரிமையை ஏற்க மறுக்கிறார்கள் ? தொழில் முறையில் உருவாக்கப்பட்ட சாதீய அமைப்புகள் எல்லாம் தொழில்
சார்ந்து முடங்கிவிட்டன என்பதை எப்படியேனும் மக்களுக்கு புரிய வைக்க திருவேங்கடம் போராடுகிறான்.
சாதீய தொழில் எனும் விஷயம் ஒழியும்
தருணத்தில் மேட்டுக்குடி எனும் அதிகாரம் ஒடிந்துவிடும் எனும் நம்பிக்கை அவனுள் வேர்விடுகிறது.
பறையை கிராமத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் எனும் முனைப்பில் போராட்டங்களில் ஈடுபடுகிறான்.
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் மக்கள் பக்கத்தினின்று மேலெழுகிறது. பறையடித்தலை தன் சொந்த இச்சைக்காக ஒருவன் செய்கிறான் எனில் அவன்
ஏன் பறையை கைவிட வேண்டும் ? பறை சாதீய அறிகுறி என்பதெல்லாம் அவனுக்கு தேவையில்லையே
? அவனுக்கான இசையாக மட்டுமே பறையொலி அமைகிறது. இதன் விளைவுகள் என்ன ? பறையினின்று ஒரு
சமூகம் விடுதலையடைகிறதா ? சித்தாந்தங்களால் நடைமுறைகளை மாற இயலுமா போன்ற பல கேள்விகளுக்கு
கதையின் போக்கில் கதையின் வழியாகவே அழகிய பெரியவன் பதிலை முன்வைக்கிறார். சுதந்திரத்தின்
முன்னிருந்து பலரின் வாயிலாக ஒவ்வொரு மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மானுட
விடுதலை வார்த்தையினூடே உயிர்ப்பெற்று நடைமுறையில் காலாவதியாவதை நவீன சித்திரமாக்கியிருக்கிறார்.
இந்த கேள்விகளின் நீட்சியாய் நாவலின் மூன்றாம் பகுதியும் நீள்கிறது.
இது வெறும் பறையை பற்றிய நாவல்
அல்ல. பறை குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளம். இது போன்ற எத்தனையோ குறியீடுகளால் பல சமுதாயங்கள்
ஒடுக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாவற்றையும் எதிர்த்து எத்தனையோ சித்தாந்தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
அவற்றின் நடைமுறை நிலை என்ன என்பதை இந்நாவல் ஆராய்கிறது. மேலும் இந்நாவல் தாழ்த்தப்பட்ட
சாதிகளை மட்டுமே மையப்படுத்தியும் பேசுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கான உரிமையை யாரோ
ஒருவரின் போராட்டமாய் அனுபவித்துக் கொண்டே இருக்கிறான். அதற்கு பதிலியாய் உரிமையற்று
இருக்கும் யாரோ ஒருவனுக்காக தன் குரல் ஒலிக்க வேண்டும் எனும் சுயநினைவு ஏன் இல்லாமல்
போனது ? தன்னுடன் இருக்கும் சக மனிதர்களும் தனக்கொப்ப சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா
என்பதை ஏன் அறிய மறுக்கிறான் ? போன்ற கேள்விகள் நவீன யுகத்தின் முன்னே வைக்கப்படும்
குற்றச்சாட்டுகளாய் நாவலில் எழுகிறது.
குறைந்த கதாபாத்திரங்களை வைத்தே
நாவல் நகர்கிறது. திருவேங்கடம் சமூக நிலையை அறிதல், பின் சமூகத்தில் ஒன்றாக மாறுதல்,
பின் மீண்டும் தன் தோல்வியை அறிதல் என முப்பரிமாண வாழ்க்கையை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார்.
அடுத்து முக்கிய பாத்திரம் சிவலிங்கம். திருவேங்கடம் எப்படி சித்தாதங்களின் ஒற்றை உருவகமாக
நாவலில் உருக்கொள்கிறாரோ அதே போல சிவலிங்கம் மக்களுடைய மனோபாவங்களின் ஒற்றை உருவகமாக
உருவெடுக்கிறார். சமூக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில் அதற்கு தொலைநோக்கு
பார்வை தேவையாக இருக்கிறது. மக்களோ அன்றைய/அன்றாட தேவைகள் தீர்ந்தால் போதும் என்றிருக்கிறார்கள்.
இவ்விரு விஷயங்களும் மோதும் தருணத்தில் சமூகத்தின் யதார்த்த நிலையும், ஏன் ஒரு சித்தாந்தம்
மக்களிடைய தோல்வியுறுகிறது என்பதையும் இவ்விரு கதாபாத்திரங்களின் வழியே வாசகனால் அறிந்து
கொள்ளமுடிகிறது. திருவேங்கடத்தின் பாத்திரத்தில் அம்பேத்கரின் வாழ்க்கைச்சாயல் தெரிவது
கதையின் தன்மையை தீவிரமாக்குகிறது.
இவர்களைத் தவிர நாவலில் சின்ன
சின்ன கதாபாத்திரங்களாக நிறைய பேர் வருகிறார்கள். திருவேங்கடம் மற்றும் சிவலிங்கத்தின்
மனைவியராக வரும் குப்பி மற்றும் மங்காவின் பாத்திரங்கள் அழுத்தமாக பதியப்படவில்லை.
மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கான இடம் நாவலில் வெறுமையையே தழுவுகிறது. மூன்று தலைமுறைகளுக்கிடையே
இருக்கும் அரசியல் பிரக்ஞையை வெவ்வேறு கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் நுட்பமாக
பதிவு செய்கிறார்.
பழைய சென்னையையும், பூங்குளம்
கிராமத்தையும் விவரித்திருக்கும் விதம் நாவலை உயிர்ப்புடன் வைக்கிறது. பூங்குளம் கிராமத்தின்
பல செடி மற்றும் மரங்களின் பெயர்களும், அவர்தம் தொழில்களும் அது சார்ந்த வர்ணனைகளும்
பிரம்மாண்ட உருவத்தை கொடுக்கிறது. மேலும் அங்கு நிகழும் கூத்துகள் சார்ந்தும், சுடுகாட்டில்
பிணம் எரிக்கும் போது சொல்லப்படும் நடுகாட்டு கதையும் கிராமத்தை வாசகன் முன் துயிலுரித்து
காட்டுகிறது. கிராமம் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தை ஆசிரியர் விவரிக்கும் அதே தருணத்தில்
அவையெல்லாம் எப்படி சாதியமைப்போடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதையும் நுண்மையாக விவரிப்பது
நாவலின் மையத்தை நோக்கியே வாசகனை பயணிக்க வைக்கிறது.
சமகாலத்தில் இந்நாவலின் தேவை என்ன
எனும் கேள்வி நாவலை வாசித்து முடிக்கையில் எழுகிறது. தலித்தாக இருக்கும் ஒருவன் அறிவுசார்
வளர்ச்சியை அடைந்திருந்தாலும் அவனை பார்க்கும் சமூகம் சாதித்தட்டில் வைத்தே அளவிடுகிறது
என்று நாவலுள்ளேயே வருகிறது. இதனை தீர்க்க எத்தனையோ கோட்பாடுகள் இயற்றப்பட்டாலும் நிலையை
மாற்ற இயலவில்லை. காரணம் பொதுவுடைமை, சமநீதி, மனிதநேயம் போன்றவை அரசியலுக்கான விஷயங்கள்
அன்று. தனி மனிதனின் ஒழுக்கம் சார்ந்த விஷயம். பழமையில் தோய்ந்த சமூகம் அவற்றை அரசியலாக்கியிருக்கின்றன.
அந்த பழமையின் குறுக்குவெட்டு தோற்றமாக, பறையின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் இழிகுரலாக
ஓங்கி ஒலிக்கிறது அழகிய பெரியவனின் “வல்லிசை”.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக