Home
Archive for
August 2016
வாசகசாலை - பார்த்தீனியம்
வரும் சனிக்கிழமை மாலை வாசகசாலை நிகழ்த்தும் கலந்துரையாடலில் தமிழ்நதி எழுதிய "பார்த்தீனியம்" நாவல் சார்ந்து பேசவிருக்கிறேன். விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம். . .
நாள் : 27/08/2016
நேரம் : மாலை 5:30
இடம் : ப்யூர் சினிமா புத்தக கடை, 7, மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, (கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்).
இரு நிகழ்வுகள்
1. பாலசுப்ரமண்யம் பொன்ராஜ் எழுதிய "துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை" சிறுகதை தொகுப்பிற்கான திறனாய்வு கூட்டத்தில் வரும் சனிக்கிழமை பேசவிருக்கிறேன்.
நாள்: 20/8/2016
நேரம் : மாலை 6 மணி
இடம்: பரிசல் புத்தக நிலையம், 71A R.K. மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4
2. ஞாயிற்றுக்கிழமையன்று தமிழவன் எழுதிய "நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்" எழுதிய சிறுகதை தொகுப்பு சார்ந்து பேசவிருக்கிறேன்.
நாள் : 21/08/2016
நேரம் : காலை 10 மணி
இடம் : சிற்றாடல் அரங்கம், கீழ்பாக்கம், சென்னை-10 (ஈகா தியேட்டர் பின்புறம், எண்.45 லாண்டன்ஸ் ரோடு (டான் போஸ்கோ) சுகா பில்டிங்கின் உட்புறமுள்ள தீபிகம் ஹாலின் சிற்றாடல் அரங்கில் நடைபெறும்)
இருகருங் காக்கைகள்
நேற்றிரவு இரண்டரை மணியிருக்கும். தூக்கம் வரவில்லை. அறையின் பலகணியிலிருந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தேன். கண்களுக்கு அகப்பட்டது மின்சாரக் கம்பியின் மேல் அமர்ந்திருந்த இரண்டு காக்கைகள். வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த இரவே வந்துவிட்டது. ஆனாலும் அந்த இருகாக்கைகள் என்னுள் ஏற்படுத்திய சலனம் மட்டும் புரிபடாமல் இருக்கிறது. வார்த்தைபடுத்த முயன்றேன். ஆனாலும் நீரில் எறிந்த கல் போன்று அந்த காக்கைகள் என்னுள் இருந்துகொண்டே வருகிறது.
இருகருங் காக்கைகள்
வெளிச்சத்தின் நிழல் உருகிய
கருமையான நடுநிசிப் பொழுதில்
மின்கம்பிகளின் மேல்
கம்பீரமாக வீற்றிருந்தன
இருகருங் காக்கைகள்
அலகுகளை அசைக்கவில்லை
பார்வையை நகர்த்தவில்லை
சாம்பல் நிற சிறுதொப்பையும்
ஏறி இறங்கவில்லை
அலைந்தோடிய மென்காற்றுக்கு
இறகின் சிற்றிழையும்
பதிலளிக்கவில்லை - ஆனாலும்
நிலைகுத்தி நின்றிருந்தன
இருகருங் காக்கைகள்
சிற்றின்பத்தின் நுண்ணிய அசைவை
பகல் துரோகங்களின் மிஞ்சிய கசடை
பகல் அறியாத பல்முனை உண்மையை
காரணமற்று கசியும் கண்ணீர்த் துளியை
உலகமறியா குழந்தையின் மூச்சுக்காற்றை
இரவில் மடுமே உயிர்த்தெழும் இரகசியங்களை
ஒட்டுகேட்டு கொண்டிருந்தன
இருகருங் காக்கைகள்
உயிர்த்தெழும் இரைச்சலுக்கு
செவிகொடுக்காத இரவும்
அறிந்துகொண்ட கணங்களுக்கு
அசைந்திடாத காக்கைகளும் - காத்திருக்கின்றன
சுவாரஸ்யமற்ற
அடுத்த
பகல்பொழுதிற்கு.
விலக்கப்பட்டவன் நாயகனாகிறான்
காந்தியால் ஈர்க்கப்பட்டதற்கு
பல காரணிகள் உண்டு. அவ்வப்போது கடந்து வரும் காந்தி சார்ந்த எழுத்துகளின் வழியே அவருடைய
தத்துவார்த்த தரிசனம் கிட்டியது. அதில் ஒன்று சமஸ் எழுதிய கட்டுரையின் வழி கிடைத்தது.
காந்தி யாரையும் எதிரியாக பாவித்தது இல்லை. இன்று சமூகத்தில் இருக்கும் பெரிய நோய்
binary opposition தான். தன் எதிரில் இருப்பவர்களை எதிரியாக பாவித்தே பல நிகழ்வுகள்
அரங்கேறுகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த முரட்டுத்தனத்தை பயன்படுத்திக் கொண்டே
வருகிறோம். காந்தியோ எதிரி எனும் பதத்தையே முழுமுற்றாக நிராகரிக்கிறார். காரணம் நாம்
எதிரியென நினைப்பது எதிர்கருத்து மட்டும் தான் என முடிவு செய்கிறார்.
நாம் கொண்டிருக்கும் கருத்து
சரி எனும் கர்வம் எப்படி நம்முள் இருக்கிறதோ அப்படியே எதிராளியிடமும். உண்மையை அறிந்த
பின்பும் சமரசமின்றி செல்வதே எதிரி எனும் ஒற்றைப் பரிணாமத்தில் ஒருவரை நிலைநிறுத்துகிறது.
இந்த கருத்தாக்கத்தில் நாதுராம் கோட்ஸேவை சமூகம் எதிரி என பாவித்தது. சமூகத்தால் உருவாக்கப்பட்ட
பிம்பம் அது. மாறாக அந்த காலகட்டத்தின் மாற்றுக்கருத்தாக கோட்ஸேவை கருதவில்லை. இந்த
கருத்து நிலவுவதாலேயே இன்னமும் கோட்ஸேவை முன்வைத்து பல அரசியல் பிற்போக்குத் தனங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கருத்தை கொண்டாடும் அல்லது மெருகேற்றும்
அதே அளவு எதிர்கருத்தையும் மெருகேற்றவேண்டும். அப்போது தான் சமபலம் வாய்ந்ததாக உண்மையான
கருத்துகள் மேலெழும். இந்த மெருகேற்றுதலை நாவலின் வடிவத்தில் கோட்ஸே கதாபாத்திரத்தின்
மீது ஏற்றியிருக்கிறார் மலையாள எழுத்தாளரான சக்கரியா. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் “இதுதான்
என் பெயர்” குறுநாவல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும்
நாயக புருஷர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் மாபெரும் சமூகத்திலிருந்து
மேலெழும் போது உதிரிகளாக பலர் விலக்கப்பட்டவர்களாகிறார்கள். அந்த எல்லா விலக்கப்பட்டவர்களின்
புதிய உருவம் நான் என கொலையாளி கூறுகிறான். நாவல் இரண்டு பகுதியாக பிரிகிறது. ஒன்று
கொலையாளி எனும் தலைப்பில் நகர்கிறது. அதில் பல கதைகள் கூறப்படுகின்றன. மானுட அபத்தங்களின்
முன்மாதிரியாக விலங்கும் மனிதர்களின் கதைகள் அவை. அதை சொல்வதன் காரணத்தை நாவலின் மற்றொரு
பகுதியில் ஆசிரியர் வைத்திருக்கிறார்.
இரண்டாம் பகுதி காந்தி படுகொலையின்
விவரணையாக நகர்கிறது. இந்த பகுதியில் கூட மக்களின் கொந்தளிப்பு, கொலையாளியின் பார்வையில்
விரியும் சம்பவம் நிகழும் இடம், கொல்லப்பட்டவனுக்கும் கொலையாளிக்கும் இடையே இருக்கும்
தத்துவார்த்த போர் என விவரணைகள் நீள்கின்றன. காந்தியை கொன்றவனை மக்கள் அடிக்கிறார்கள்.
எப்படியேனும் அடித்துவிடலாம் என சிலர் யத்தனிக்கிறார்கள். அப்போது கொலையாளியினுள் இரண்டு
சந்தேகங்கள் எழுகின்றன. அஹிம்சையை போதித்த காந்தி இறந்து சில நொடி நேரங்களிலேயே இப்படி
வன்முறையை ஏன் பிரயோகிக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று அவன் செய்ததில் பிழை என்ன
என சிந்திப்பதில் அடங்குகிறது.
மக்கள் அவனை அடிக்கும் போது அவன்
சிந்திக்கிறான்,
‘நண்பர்களே! நீங்கள் உபநிஷத வாசகத்தைக் கேட்டதில்லையா ? அடிப்பவன், நான் இவனை
அடிக்கிறேன் என்றோ, அடிபட்டவன் எனக்கு அடிபட்டதென்றோ நினைப்பானேயானால் அவர்கள் இருவரும்
ஆத்மாவை அறிவதில்லை. ஆத்மா அடிப்பதில்லை. அடிபடுவதுமில்லை’
கொலையாளியின் ஆத்மா யுக யுகமாக
உதிரிகளாக, கண்டுகொள்ளப்படாமல் சென்றவர்களாக, சமூகத்தால் விலக்கப்பட்டவர்களாக வாழ்ந்து
மடிந்தவர்களின் நீட்சியாக நாவலில் வலம் வருகிறது. சமூகம் போற்றும் நாயகர்களை அழிக்கும்
பட்சத்தில் கொலையாளிகளின், தீமை செய்பவர்களின் பெயர்கள் வெளிப்படுகின்றன. பெயர்களே
அவர்களுக்கான விலங்கு. பெயர்கள் தெரியாத பட்சத்தில் அவர்களும் உதிரிகளுள் ஒருவராகிப்
போவர். இது குற்றவாளிகளுக்கு சாதகமான நாவலன்று. மாறாக சமூகத்தின் சாபம் சார்ந்த நாவல்.
கொலையாளி கூறும் ஒவ்வொரு ஜென்மக் கதைகளும் நாம் குற்றவாளி என சுட்டிக்காட்டும் ஒவ்வொருவக்கு
பின்னாலும் நிலவக்கூடிய அரசியலை விமர்சனம் செய்ய உதவுகிறது. சமூக நிலைப்பாடு எனும்
பெயரில் நமக்குள்ளேயே இருக்கும் கயமையை வெளிக்காட்டுகிறது. அதற்கு சக்கரியா கையாளும்
புராணீக கதைகளும், உபநிஷத்துகளும் ஆழமான தர்க்கங்களுக்கு வழிகோலுகின்றன. காந்தி சார்ந்த
கருத்தாக்கத்தை மறுபரிசீலனை செய்யவும் சக்கரியாவின் எழுத்து உதவுகிறது.
நாவலின் கடைசியில் கொலையாளி தன்
பெயரை சொல்கிறான். அந்த பெயர் நம் முகத்தில் அறைகிறது. நம்மை குற்றவாளியாக்குகிறது.
நாவலில் மாபெரும், மகத்தான தரிசனமாகவும் ஆகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)