நிஜத்தை தொலைத்த நிழலின் கதை
ஆன்மீகமும்
இலக்கியமும் ஓரிடத்தில் இணைகிறது. ஆன்மிகத்தை அறிய முற்படுபவர்கள் எல்லோரும்
ஆன்மீகப் புருஷர்களின் பின்சென்று அவர்களின் வழியே உதிர்ந்த வார்த்தைகளை
மூலதனமாக எடுக்கிறார்கள். அந்த தத்துவார்த்தம் பலரின்
வாழ்க்கையை மாற்றுகின்றன. இதையே தான் இலக்கியமும்
செய்கிறது. இரண்டிற்கும் பிரதானமாக அமையும் விஷயம் மனிதன்
தன்னையே அறிதல். அந்த அறிதல்
நிகழும் தருணத்தில் அவன் ஞானவானாகிறான். மிகச்சிறிய
விஷயங்களில் கூட இது நிகழலாம்.
இலக்கிய வாசிப்போ மனிதனின் அகத்தில் இருக்கும் கயமைகளை அவனுக்கே எடுத்து
காட்டுகிறது. அதை உணரும் தருணத்தில்
தனக்கான வாழ்க்கைப் பாதையை தெரிவு செய்ய
முற்படுகிறான். அத்தருணத்தில் தான் இலக்கியம் அவனுக்கான
புனித நூலாகிறது. இலக்கியம் வாசித்தல் என்பது மகத்தான தியானத்திற்கு
ஒப்பானதாகும்.
தன்னை
அறியும் தருணத்தில் எல்லோரும் ஞானிகளாகிவிடுகின்றனர். சில இடங்களில் இறந்துவிடுகின்றனர்.
சமகாலத்தில் அப்படியான ஞானிகள் ஏன் உருவாவதில்லை
? யாருமே தங்களின் அடையாளங்களை தேடி அலைவதில்லையா ? தான்
யார் என்றறியும் ஆர்வம் அழிந்துவிட்டதா ? அப்படி
தேடிச் செல்ல நேர்ந்தால் இந்த
நவீன காலம் அதை எப்படியான
கண்ணோட்டத்தில் அணுகும் ? இச்சமூகத்தில் இருக்கும் அவலங்களுக்கிடையே இந்த ஆன்மீக தேடல்
ஞானத்தை அளிக்கவல்லதா ? அல்லது சமூக அவலங்கள்
அந்த தேடலை சிதைத்து சாமான்யனுக்கும்
கீழான வாழ்வினை அளிக்குமா ? என முடிவுறா தர்க்கத்திற்கு
இழுத்து செல்கிறது சமீபத்தில் வெளியான தேவிபாரதியின் “நட்ராஜ்
மகராஜ்” நாவல். இது அவருடைய
இரண்டாவது நாவல். முதல் நாவலான
நிழலின் தனிமையை 2011 இல் எழுதினார். அதன்
பிறகு இப்போதே நாவல் வெளிவருகிறது.
இந்நாவல்
எனக்கான மகத்தான தரிசனம் எனக்
கூறுவதில் பெருமை கொள்கிறேன். வாசித்த
வரையிலான இலக்கியங்களில் தனித்து, வாசித்தவற்றையெல்லாம் கடந்து என்னுள் சிறப்பான
இடத்தை பெறுகிறது இந்நாவல். அதற்கு இந்நாவல் கைகொள்ளும்
ஒவ்வொரு அம்சங்களையும் காரணமாக காட்ட நினைக்கிறேன்.
இக்கட்டுரையின் முதல் பத்தியை வாசிக்கும்
போது இது ஆன்மீக நாவலோ
எனும் சந்தேகம் வாசகர்களுக்கு எழலாம். ஆனால் ஆன்மீகத்தின்
சாரத்தை அடிநாதமாக வைத்து இந்நாவல் தனக்கான
மாபெரும் பயணத்தை மேற்கொள்கிறது.
ஒ
எனும் கிராமத்தில் ந எனும் நாயகன்
அவன் மனைவி வ உடன்
வசித்து வருகிறான். அவன் வசிப்பது சிதிலமடைந்த
அரண்மையின் காவல்கூண்டு எனும் சின்ன பகுதியில்.
அவனுக்கு இரண்டு குழந்தைகள். வடநாட்டிலிருந்து
வரும் வரலாற்று பேராசிரியர் ஒருவர் இந்த ந
என்பவன் இந்திய சுதந்திர போராட்டத்தில்
ஈடுபட்ட முதல் போராட்ட வீரரான
காளிங்க நடராஜ மகாராஜரின் நேரடி
வாரிசு எனும் விஷயத்தை தெரிவிக்கிறார்.
அது அவன் வாழ்க்கையை என்ன
என்ன திசைக்கு இட்டு செல்கிறது என்பது
தான் மையச்சரடின் சின்ன இழை. இதைத்
தாண்டி நிறைய உட்கதைகள் இருக்கின்றன.
ஃப்ரான்ஸ்
காஃப்கா எழுதிய TRIAL நாவலும்,
உதய்பிரகாஷ் இயற்றிய மோகன்தாஸ் எனும்
குறுநாவலும் மௌனியின் பிரசித்தி பெற்ற சிறுகதையான அழியாச்சுடரும்
இந்நாவல் வாசிக்கையில் நெற்றிப் பொட்டில் வந்து அமர்ந்தன. அதற்கு
காரணம் இம்மூன்றையும் அவர் கடந்து நிற்பது
தான். இது போன்ற அடையாளங்களை
தேடும் கதைகள்
இன்னமும் பல இருக்கலாம். ஆனால்
இம்மூன்றும் நான் வாசித்தவற்றில் முதன்மையானவை.
காஃப்கா
நாவலில் அவன் தன்னை யாரென்று
நிரூபிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இல்லையெனில் அவன் செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். மேலும் அவனை சுற்றி
என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே அவனுக்கு தெரியமறுக்கிறது.
ஆக முதலில் அவன் தன்னையே
தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை
தெரிந்து கொண்டால் அவனுடைய குழப்பங்களுக்கான பதில்
கிடைத்துவிடும். நிற்க. அடுத்து உதய்
சங்கரின் மோகன்தாஸ்.அதில் அவன் பெயரில்
வேறொருவன் தனக்கு கிடைக்க வேண்டிய
உத்தியோகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். தான்தான் மோகன்தாஸ் என
நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்துவிட்டால் தன்னுடைய தேவைகளை அவனால் பூர்த்தி செய்துவிட
முடியும். இந்த இரண்டு கதைகளில்
தன்னை அறியும் தருணத்தில் நாயகனின்
தேவையொன்று பூர்த்தியாகிவிடுகிறது.
தேவை
என்பது புறம் சார்ந்ததொரு விஷயம்.
அது பூர்த்தியாவதற்காக ஒருவன் தன்னையே தேடுகிறான்.
தன்னையே உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான்.
இது எவ்வளவு பெரிய அபத்தம்
? அது அவன் மனதை எவ்வளவு
தூரம் ஆட்டிப்படைக்கும்? அப்படி தன் மனம்
தேவையை அடையும் தருணத்தில் எப்படி
இருக்கும் ? தன் தேடலை விட்டுவிடுமா
? இந்த கேள்விகளுக்கான பதிலை தேவிபாரதி அளிக்கிறார்.
அந்த காரணங்களிலாயே முன்சொன்ன இரு கதைகளும் அறுபட்ட
கதைகளாகின்றன.
தன்னை
ஒருவன் நிரூபிக்க அவனுக்கு தரவுகள் தேவைப்படுகிறது. மனிதனிடம்
இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம் அவனது கடந்தகாலம் மட்டும்
தான். அதிலிருந்து மட்டுமே அவனுக்கான தரவுகளை
எடுக்க முடியும். இன்னமும் வேண்டுமெனின் அவனது பாட்டன் முப்பாட்டன் என வம்சாவளிகளின் பட்டியலை எடுத்து அதன் மூலம்
நிரூபிக்கலாம். ஆனால் நிரூபிப்பது தான்
வாழ்க்கையா ? சிரிப்பை நிரூபணம் செய்த அடுத்த கணம்
அந்த சிரிப்பு அர்த்தமிழந்துவிடுகிறது. அப்படித்தான் மனிதனின் இருத்தலும். மானுடத்தின் முடிவற்ற தர்க்கம் இந்த இருத்தல். அந்த
தர்க்கத்தை தன் கதாபாத்திரத்துடன் முன்னிறுத்தி
ஆசிரியர் அரங்கேற்றுகிறார்.
இந்த
இருத்தலை நிரூபித்தல் வேறு ஒரு கட்டத்தை
அடையும் போது அங்கே மௌனியின்
உதாரணம் முன்வருகிறது. நாம் செய்யும் வினைகளுக்கான
பலன் முப்பாட்டனுடையது எனும் போது நமக்குள்
கோபம் வருகிறது. மகன் நல்லது செய்யும்
போது அப்பாவின் பெயரை முன்னிறுத்தி பாராட்டினால்
மகனின் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது. எல்லோரும் தனக்கென
ஒரு சுயத்தை உருவாக்கி கொள்ள
யத்தனித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதே நேரம் யாரோ
ஒருவரின் பிம்பமாய் நம்மை இந்த உலகம்
சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இந்த முரணிற்கு இடையே
வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த
முரணையும் ந கதாபாத்திரம் சந்திக்கிறது.
அவனை
பொறுத்தவரை தான் ஒரு மகாராஜாவின்
வாரிசு என்பது எப்படி இருக்கிறது
? அந்த செய்தி தன்னை சுற்றியிருக்கும்
ஊருக்கு தெரியப்படும் போது அவர்களின் எதிர்வினை
எப்படியாக இருக்கிறது ? அவனுடைய அன்றாடம் எப்படியான
மாற்றம் கொள்கிறது ? இந்த செய்திகள் எட்டுவதற்கு
முன்பான வாழ்க்கையும் அதற்கு பின்பான வாழ்க்கையும்
எந்த
பாதையில் அவனை இட்டு செல்கிறது
என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். ந
வின் எண்ணங்களும் புறவுலக செய்கைகளும் பட்டவர்த்தனமாக
வாசகனால் பார்க்க முடிகிறது.
தத்துவார்த்த
விஷயங்களை மட்டுமே இந்நாவல் பேசவில்லை.
மாறாக அதிகாரத்திற்காக ஏங்கும் மனித மனத்தையும்
விரிவாக அலசுகிறது. ந முதலில் பைனான்ஸ்
கடையில் வேலை பார்க்கிறான் பின்
தான் அரசு மேல்நிலைபள்ளியின் சத்துணவு
அமைப்பாளராகிறான். முதலில்
வேலை பார்ப்பது தனியார். இரண்டாவதோ அரசு. இரண்டிலும் இருக்கும்
நிர்வாகம் முற்றிலும் மாறுபட்டது. இதில் ந வின்
எண்ணத்தை பாருங்கள்,
“தன்னுடைய முந்தைய மேலாளரின்
முன்பும்
இருபத்தி
நான்கு
இயக்குனர்களின்
முன்பும்
எவ்வளவுதான்
பணிந்து
நிற்க
வேண்டியிருந்தாலும்
வசைகளை
வாங்கி
கட்டிக்
கொள்ள
நேர்ந்திருந்தாலும்
சாயந்திரங்களில்
வசூலிற்கு
போன
ஒவ்வொரு
முறையும்
அவனால்
யார்
மீதாவது
அதிகாரம்
செலுத்த
முடிந்திருந்தது.
பொது
மேலாளரால்
தன்
மீது
பிரயோகிக்கப்பட்ட
வசைகளை
திரும்ப
செலுத்துவதற்கு
சிலர்
அவனுக்கு
கிடைத்தனர்.”
ந
என்னும் பாத்திரத்தின் இந்த அதிகார வேட்கையை
நாவல் முழுக்க நம்மால் பார்க்க
முடியும். குறிப்பாக தான் யார் என்பதை
அறியும் தருணத்திலிருந்து நிகழும் மாற்றங்கள் அவனுக்கான
ஆசுவாச இடமாக மாற ஆரம்பிக்கின்றன.
அதே நேரம் அமைப்பினுள்ளிருந்து செலுத்த
நினைக்கும் அதிகாரம் வேறு, தனி மனிதனாக
கட்டமைக்க நினைக்கு அதிகாரம் வேறு என்பதையும் பன்முக
கதையம்சத்தினால் வாசகன் முன் வைக்கிறார்.
இதே
அதிகாரத்தில் இருக்கக் கூடிய நுண் அரசியலையும்
நம்முன் கதையாக வைக்கிறார் தேவிபாரதி.
ஒன்று அமைப்பு ஒன்றினுள் சேரும்
ந அங்கு எப்படி
தனக்கான அதிகாரத்தை நிலைநாட்டுவது என தேடுகிறான். அதே
நேரம் அங்கு இருக்கும் அரசியல்
தன்மைகள் எப்படி அவன் மீது
அதிகாரம் செலுத்துகின்றன என்பதையும் காட்டுகிறார். குறிப்பாக சத்துணவு அமைப்பளரானவுடன் அங்கு நிகழும் அபத்தங்களையும்
ஊழல்களையும் அது எப்படி அன்றாடம்
ஆகிறது என்பதை எடுத்துரைக்கும் பகுதிகளிலும்
அதன் தன்மையை வாசகனால் நன்கு
உணர முடியும்.
அதே
தனக்கு அரசு வழங்கும் இலவச
வீட்டினை பெற அவன் அலையும்
பொழுது சமூகம் எனும் மாபெரும்
அமைப்பினுள் இருக்கும் அதிகாரத்தின் முன் சாமான்யன் எப்படி
பூச்சியென இருக்கிறான் என்பதை மிக நுண்மையாக
காட்டுகிறார். சின்ன உதாரணம். வீடு
சம்மந்தமாக ஊரட்சி தலைவரை பார்க்க
செல்கிறான். அங்கே இருக்கும் தோட்டக்காரன்
ஒவ்வொரு முறையும் பழங்களை அளிக்கிறான். அதை
அங்கேயே சாப்பிடாமல் வேலியோரம் சென்று குறியினை பிடித்திருப்பது
போன்ற பாவனையில், மூத்திரம் பெய்வது போன்ற தோரணையில்
நின்று சாப்பிடுகிறான். இதுவல்லவா மகத்தான உதாரணம் அதிகாரத்தின்
நுண் அரசியலை விவரிக்க!
வடநாட்டிலிருந்து
வரும் கதாபாத்திரங்களிடையே அதிகாரத்தின் வேறொரு உருவத்தை முன்மொழிகிறார்.
அவர்கள் அந்த அரண்மையின் ஊடாக
அழிக்கப்பட்ட வரலாற்றை மீட்டுவாக்கம் செய்ய முயன்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களின் ஆச்சர்யம் ஒவ்வொரு பொருளையும் காணும்
போது ஏற்படுகிறது. அப்போதெல்லாம் நாயகனுக்கு சாக்லேட் ஒன்றை கொடுக்கிறாள் உடன்
வருபவள். அவனின் சந்தோஷம் எல்லாம்
சாக்லேட்டில் அடங்கிவிடுகிறது. அதிகாரம்
செய்வதற்கு அறிந்திடாத பொருளே போதும் எனும்
மனப்பாங்கு நாவல் முழுக்க குறிப்பாக
நாவலில் வரும் வட நாட்டவர்களால்
சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களைத் தவிர நாவலில் வரும்
ஊடகவியலாளர்கள் அங்கீகாரத்துடனான இவ்வித அதிகாரத்தை மக்களின்
மேல் செலுத்துவதையும் அழகாக சித்தரித்திருக்கிறார் தேவிபாரதி. ஊர்க்காரர்களுக்கு
கொடுக்கப்படும் பிஸ்கேட்டுகள் சாக்லேட்டுகள் எல்லாமே அதிகாரத்தை செலுத்துவதற்கு
ஆயத்தமாகும் மனதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
ஓரிடத்தில் நாயகனே சொல்கிறான்,
“சம்மந்தமேயில்லாத ஒருவர் சம்மந்தமேயில்லாத
ஒரு
விஷயத்தை
எடுத்துக்கொண்டு
சம்மந்தமேயில்லாத
ஒருவனை
ஏமாற்றுவதற்காக
ஏன்
அவ்வளவு
தொலைவு
பயணம்
செய்து
ஒ
என்னும்
பெயருடைய
அவனுடைய
சிறிய,
மிகச்
சிறிய
கிராமத்திற்கு
வர
வேண்டும்
? நடந்த
எல்லாவற்றையும்
திரும்பத்
திரும்ப
நினைவு
கூற
முயன்றான்
ந.
அவ்வளவு
சுத்தமாக
ஆங்கிலம்
பேசும்
ஒருவர்
அதிலும்
புகழ்பெற்ற
பல்கலைகழகமொன்றின்
பேராசிரியர்
யாரையும்
ஒருபோதும்
ஏமாற்றமாட்டார்
என
நம்ப
விரும்பினான்”
கடைசி
இரண்டு வார்த்தைகள் அவன் மேல் திணிக்கப்பட்ட
மன ரீதியான அதிகாரத்தின் வெளிப்பாடு.
நான் மிகச்சிறிய எடுத்துக்காட்டுகளையே கூறிக் கொண்டிருக்கிறேன். நாவல்
இது போன்ற பல சம்பவங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது. அதிகாரம்
மனிதனை இயல்பாக வாழ வெகுவாக
உதவுகிறது. தன் மீது திணிக்கப்படும்
அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறான். திணிப்பதும்
திணிக்கப்படுவதும் அன்றாடமாகிப் போகிறது.
இந்நாவலைப்
பற்றிய பேச்சினை எடுத்தாலே பேசப்போகும் பிரதான விஷயத்தை கட்டுரையின்
இவ்வரிவரை நான் கூறவில்லை. அது
இந்நாவலின் பெயர்கள். மனிதர்களுக்கும் ஊருக்கும் அதன் முதல் எழுத்து
மட்டுமே பெயர்களாக இருக்கின்றன. இந்த மொழி எழுத்தாளனுக்கு
சவாலானது. வாசகன் பெயர்களால் பழக்கப்பட்டிருக்கிறான்.
இந்நிலையில் முற்றிலும் மாறுபட்டு ஒற்றை எழுத்துகளால் பெயர்களை
நிரப்பும் பொழுது வாசகன் எத்தருணத்திலும்
நாவலினை விட்டு வெளியே சென்றுவிடுவான்.
ஆனால் அதை தேவிபாரதி நேர்த்தியாக
மாற்றி நாவல் முழுக்க அந்த
நுட்பத்தை இயல்பாக்கியிருக்கிறார். நாவல் முடியும் பொழுது
பெயரிடப்படாமல் இருக்கும் விஷயமே இந்நூலை உன்னதமாக்குகிறது
என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ளமுடியும். அடையாளத்தை முற்றாக துறப்பதே இந்நாவலின்
மைய நோக்கம். அதை பெயர்களிலிருந்து செய்திருக்கும்
தேவிபாரதிக்காக தமிழ் இலக்கியம் கர்வமே
கொள்ளலாம். காஃப்காவின் ‘க’வை விட
தேவிபாரதியின் ‘ந’ காலத்தை கடந்து
நிற்கும்.
தேவிபாரதியின்
மொழி பிரத்யேகமானது. நிழலின் தனிமை நாவலைப்
பற்றி இன்றளவும் பிறரிடம் பிரஸ்தாபிக்கும் பொழுது அதன் மொழியை
கூறாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு வரியிலும் வஞ்சத்தின்
கூர்மையை வாசகனால் உணர்ந்து கொள்ளமுடியும். இந்நாவலிலும் தேடலும் அதிகாரமும் பிண்ணிப்பிணைந்து
கிடக்கும் தன்மையை மொழியினூடாக வாசகன்
உணர்ந்து கொள்ளமுடிகிறது. நாவலின் இடையே வரும்
வழக்கு மொழி மட்டும் பொது
மொழியாக இருந்திருப்பின் நாவலின் மையமான அடையாளங்களை
நாவல் மொழியளவிலும் முற்றாக கழற்றிவிட்டிருக்கும்.
மொழியைப்
போலவே நாவலின் அமைப்பும் தனித்துவம்
வாய்ந்ததாக இருக்கிறது. நாவலில் ஒருவரி அடிக்கடி
வருகிறது. அது,
“ந என்பவன் வெறும்
நவோ
ந
என்னும்
பெயருடைய
சத்துணவு
அமைப்பாளனோ
அல்ல,
தேசத்தின்
முதல்
சுத்நதிரப்
போராட்ட
வீரன்,
மாவீரன்
காளிங்க
நடராஜ
மகாராஜாவின்
நேரடியான,
உயிருள்ள
ஒரே
வாரிசு”
நாவலின்
பல இடங்களில் இடம்பெற்றாலும் வாசகனுக்கு தொய்வு தருவதில்லை. வரலாற்றின் மீட்டுருவாக்கம் எனும் பெயரில் நிகழும்
நாடகத்தில் அவனும் அங்கம். அங்கே
அந்த வரலாறு மீண்டும் சொல்லப்பட
வேண்டியிருக்கிறது. வரலாறு என்பதே மீண்டும்
மீண்டும் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகவே சமகாலத்தில்
இருக்கிறது. அதை இந்நாவல் தன்
அமைப்பளவிலும் நேர்த்தியாக கையாள்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் விஷயங்கள்
அடுக்கப்ப்பட்டுக் கொண்டே செல்கின்றன. ஆனால்
ஒவ்வொரு முறை மீண்டு சொல்லப்படும்
போதும் அதன் தன்மை வேறாக
இருக்கிறது. அதனோடு வேறொன்று சேர்ந்துகொள்கிறது.
காளிங்க
நடராஜ மகாராஜாவின் வரலாற்றுக்கதையை கூறியிருக்கும் விதத்திலும் இந்நாவல் நவீனத்தை எட்டுகிறது. அதை தனி அத்தியாயமாக்காமல்
அங்கங்கு சின்ன சின்னதாய் சொன்ன
விதமும் அதை காட்சிபடுத்தாமல் சமகாலத்திலிருந்து
வரலாற்றை பார்க்கும் நோக்கும் வசீகரமானதாய் இருக்கிறது.
என்
வாசிப்பில் கூகை நாவலுக்கு
பிறகு யதார்த்த நாவல்களிடையே எழும்பும் மீமாய அம்சங்களை இந்நாவலில்
காணமுடிகிறது. புனைவின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் அவரளவில் இந்நாவலில்
பதிவு செய்கிறார். அவர்களின் கனவுகளை விவரிக்கும் இடமெல்லாம்
யதார்த்தத்திலிருந்து மனிதனின் அதீத ஆசைகளின் உருவங்களாக
பரிணமிக்கின்றன. ஆசைகளாலும் கடந்த கால கசப்பு
மற்றும் உண்மைகளாலும் அன்றாடம் அல்லலுறுகிறது. மனிதனின் அவசரத் தேவையோ அன்றாடச் சிக்கல்கனின்று தப்பித்தல் தான். அதற்கான பாத்திரமாக
நாயகனின் மனைவி வ நாவலில்
இடம்பெறுகிறாள்.
நாவலை
வாசித்தவுடன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த விஷயத்தில் முக்கியமானது இந்நாவலை தயை கூர்ந்து சீக்கிரம்
மொழிபெயர்த்துவிடுங்கள் என்பதே. புனைவின் எல்லா
சாத்தியக்கூறுகளையும் தீண்டி மகத்தான அனுபவத்தை
முன்வைக்கிறது இந்நாவல். காலத்தின் முன்னே தான் யாரென
அறிய மனிதன் எல்லா காலங்களிலும்
முற்பட்டுக் கொண்டே இருக்கிறான். அறியும்
தருணத்தில் அந்த காலம் திரும்பி
அவனிடம் நீ யார் எனக்
கேட்டால் அவனின் பதில் எதுவாக
இருக்கக்கூடும் என்பதற்கான விடை உன்னத தரிசனமாக
நாவலில் விரிவடைகிறது.
நாவல்
சார்ந்த அனுபவம் இங்கு பதிவிட்டதைக்
காட்டிலும் மிகப்பெரியது. அடையாளங்களை கழற்றி எறிய எல்லா
மனிதர்களும் முயன்று கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் எல்லோராலும்
முடிவதில்லை. அடையாளங்கள் சில அதிகாரத்திற்கு வழிவகுக்கிறது.
அந்த அதிகாரம் மனிதனுக்கு சிற்றின்பத்தை அளிக்கிறது. மொத்தமாக பார்த்தால் எல்லாமே மானுட அபத்தத்தின்
மெல்லிய இழைகள். அதை நாவலில்
தரிசனமாக தேவிபாரதி முன்வைக்கும் பொழுது கண்ணீரைத் தவிர
வேறெந்த வார்த்தைகளும் வர மறுக்கின்றன. மௌனியின்
உதாரணத்தை மேலே எடுத்திருந்தேன். ஆனால்
அதற்கான தகுந்த வார்த்தைகளை மேற்கோள்
காட்டவில்லை. ஒவ்வொருவர் முன்னும் எழ வேண்டிய கேள்வியை(எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?) தேவிபாரதி மிகத்
தெளிவாக மானுட அபத்தங்களின் கோப்பாக
நட்ராஜ் மகராஜை நிறுவியுள்ளார்.
நட்ராஜ்
மகராஜ் – காலத்தை விஞ்சி நிற்கும்
படைப்பு.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக