நான் ரிபெல் கிடையாது - காதலான மனுஷி
ஐந்தாண்டுகளுக்கு முன்பு சாரு
நிவேதிதாவின் நூல்களைத் தவிர எதையுமே நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு நூலை வாசித்து முடித்த
பின்னர் அடுத்த நூலினை வாங்குவேன். இதுவே தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அதிலும்
ஒரு நூல் எனக்கு கிடைக்கவில்லை. அப்போதிருந்த வாசகர்வட்ட பிரமுகர்களிடம் கூட இந்நூலை
கேட்டேன். அவர்களும் வைப்பு இல்லை என சமாளித்தனர். ஒருவேளை அப்போது அதை வாசித்திருந்தால்
புரியாமல் போயிருக்குமோ எனவும் தற்சமயம் சந்தேகம் கொள்கிறேன். அந்த நூல் இப்போது மறுபதிப்பில்
உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் “இச்சைகளின் இருள்வெளி” எனும் நூல் தான்.
சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் நிகழ்த்தும் நீண்ட
உரையாடல் தான் இந்நூல். முடிவுகளை நோக்கியோ தெளிவுகளை நோக்கியோ இந்நூல் எங்குமே பயணிப்பதில்லை.
மாறாக சமூகத்தால் ஒடுக்கப்பட்ட காமம் எனும் விஷயத்தின்பால் இரண்டு மனிதர்களின் கருத்துகோப்பாக
இந்நூல் அமைகிறது. காமத்தை மையப்படுத்திய பண்பாட்டு அசைவினை இந்நூல் பேசுகிறது என்று
சொன்னாலும் தகும்.
சாரு நிவேதிதா தமிழின் எழுத்தாளர்
என்பதால் சமூகத்தில் நிகழும் அவலங்களையும் காமம் தொடர்பாக சமூகத்தின் நிலையையும் அதே
தருணத்தில் அதன் தேவை எந்தளவு உள்ளது என்பதையும் சாமான்யனின் சார்பில் பேசுவதாகவே படுகிறது.
நூல் முழுக்க நளினியின் குரலே பல சந்தேகங்களின் திறப்பாக அமைகிறது. அவர் பேசும் பல
விஷயங்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலை சார்ந்து மட்டுமேயல்லாமல் பொதுவாக
பாலியல் சார்ந்த விஷயங்களாகவும் அமைகிறது. இதை தெளிவாக்க வேண்டுமெனில் வயதிற்கேற்ப
உருவாக்கப்படும் கேள்விகளுக்கு தர்க்கப்பூர்வமான பதில்களை அளிக்கிறார்.
சாரு நிவேதிதாவின் இடத்திலிருந்து
ஆரம்பத்திலேயே நழுவிவிட்டேன். அவர் இந்த உரையாடலில் சாமான்யன் சார்பாக இருக்கிறார்
என மேலே கூறியிருந்தேன் அல்லவா அதற்கொப்ப அவரும் செய்தித்தாள்களில் அன்றாடம் காணும்
காமம் சார்ந்த குற்றங்களையும், பெருவாரியாக பேசப்பட்ட குற்றங்களின் காரணங்களையும் எழுத்தாளனாய்
கலாச்சாரத்தின் அடிப்படையில் பேசுகிறார். நளினியின் கூற்றுகளோ பாலியலின் பக்கம் மட்டுமே
நின்று பேசுகிறது.
சின்ன உதாரணம் எனில் பாலியல்
கல்வி. தூத்துக்குடியின் அருகாமையில் இருக்கும் பள்ளியில் என் நண்பரின் மகன் படித்துக்
கொண்டிருக்கிறான். அவனுடைய பள்ளியில் மாணவிகள் பையன்களிடமிருந்து பென்சில் ரப்பர் கூட
வாங்க மாட்டார்களாம். இதே போல ஆண்களும் பெண்களிடமிருந்து. இது என்ன காலக்கொடுமை என்றால்
அது ஒரு myth ஆக உருவாகியிருக்கிறது. வாங்கக்கூடாது. பேசக்கூடாது என. இது இயல்பான உணர்வெழுச்சிகளுக்கு
பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பெண்களை வேறு இனமாக மட்டுமே ஆண்களின் முன்னால்
நிறுத்துகிறது. அவர்களுக்கு தேவை முறையான பாலியல் கல்வி. அறியும் வரை மட்டுமே அதில்
பைத்தியமாக இருப்பர் என்கிறார். நளினி.
சாருவின் தரப்போ பாலியல் கல்வியே
கூடாது என. காரணம் அடிப்படை வசதிகளும் பள்ளி-கல்லூரிகளில் கொடுக்கப்படும் கல்வியே முறையாக
இல்லாத பொழுது பாலியல் கல்வி எதற்கு எனும் கேள்வியே அது. இதில் தான் எனக்கான முரண்
ஏற்படுகிறது. விஷயமே முரணானது தான். தனிப்பட்ட விஷயத்தில் பார்க்கும் பொழுது நளினியின்
குரலை ஏற்க வேண்டியதாய் இருக்கிறது. பொதுமையாக பார்க்கும் பட்சத்தில் சாருவின் குரல்
தேவையாய் இருக்கிறது. ஆக வாசகன் எந்த பக்கத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதில் தான்
நூல் சார்ந்த புரிதல் இருக்கிறது.
சமூகத்தின் பெரும் பிரச்சினையாக
இருவருமே காமத்தை பார்க்கின்றனர். முன்பு திருமணமான தம்பதியரில் குறிப்பாக பெண்ணுக்கு
பாட்டி முதலிரவில் என்ன செய்ய வேண்டும் என சொல்லி அனுப்புவாளாம். அந்த பாட்டி நவீன
யுகத்தில் காணாமல் போய்விட்டாள். இந்நிலையில் காமம் ஆணாதிக்கத்தின் குறியீடாகிறது.
மேலும் இந்த காமம் பெண்ணின் பௌதீக ரீதியான அனைத்து விஷயங்களை தனதாக்கிக் கொள்கிறது.
இது கலாச்சாரத்தின் அபத்த விஷயமாக மாறிவிடுகிறது.
பல முக்கிய விஷயங்களை பேசவே தயக்கம்
கொண்டவர்களாய் இருக்கிறோம். ஆணுறை சார்ந்த நிகழ்த்து விளம்பரங்களுக்கு கூட பாலியல்
தொழிலாளிகள் தான் தேவையாய் இருக்கின்றனர் என்பதை கூறுகிறார். நாட்டுப்புறக்கலைகளில்
வெளிப்படையாய் நகைச்சுவையாய் காமம் இருந்துவந்தது. அதை பெண்களும் ரசித்து ஏற்று வந்தனர்.
ஆனால் அதே காமத்தை தத்துவார்த்தமாய் பேசும் பொழுது கலாச்சார விஷயங்கள் இடைமறிக்கின்றன.
இதை வீட்டின் மூத்தவர்கள் உடைக்கும் போது தானாகவே பாலியல் கல்வியின் தேவையை எல்லோரும்
உணர்ந்துவிடுவர் என்பதை பல நுணுக்கமான உதாரணங்களுடன் முன்வைக்கிறார்.
ஆணாதிக்க மனோபாவத்தினுள்ளே பொதிந்திருக்கும்
சில நம்பிக்கைகளையும் ஆதாரங்களுடன் தகர்க்கிறார். கரமைதுனமும் தனிமையும் எப்படி பிணைகிறது,
பெண்களின் கன்னித்தன்மையும் அவர்களின் பிறப்புறுப்பில் இருக்கும் திரையை வைத்து ஆண்வர்க்கம்
கற்பினை நிர்ணயிப்பது எவ்விதத்தில் தவறானது என சான்றுகளுடன் முன்மொழிகிறார்.
பொதுவாக பல பிரச்சினைகளை பேசும்
அதே நேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மனநிலையையும் கூறுகிறார். அவர்களுடைய
அன்றாடம், தொழிலில் மேற்கொள்ளும் தர்மம், அவர்களுக்கு என இருக்கும் சிக்கல்கள் என அறியப்படாத
உலகத்தையும் கூறுகிறார். அவர்களுக்குள்ளான காதல் வாசிப்பதற்கே வசீகரமானதாய் இருக்கிறது.
அரசு அங்கீகரிக்க தயங்குவது ஓர் கலாச்சார சீர்கேடு என்றும் சாடுகிறார். மனிதநேயம் மிகுதியாக
தேவைப்படும் கார்ப்பரேட் என்பதாகவே என்னால் நளினி முன்வைக்கும் பாலியல் தொழிலை எடுத்துக்கொள்ளமுடிகிறது.
பெண்களுக்கு தேவை சுதந்திரம்
அன்று சமத்துவம் என்பதை பாலியல் ரீதியாக விளக்கும் நளினியின் உரையாடல் மிக யதார்த்தமாக
அமைந்திருக்கிறது. சாருவின் குரல் சமூகத்தினின்று வருவதாக அமைவதால் இரண்டோடும் வாசகன்
தன் பக்கத்தை வைத்து தர்க்கம் புரிய தயாராகிக் கொள்கிறான். பாலியல் சார்ந்த தெளிவுகள்
அனைத்தும் வாசகனின் புரிதலிலேயே அடங்கியிருக்கிறது.
நளினியின் வாதத்தை பார்க்கும்
பொழுது பல இடங்களில் புரட்சியாளரோ எனத் தோன்றியது. அப்போதெல்லாம் நளினி சாருவிடம் சொன்ன
வார்த்தைகள் நினைவில் எழுந்தது. அதனால் அதையே பத்தியின் தலைப்பாக்கிவிட்டேன். நூல் ஏதோ ஓர் இடத்தில் முடிவினை கொள்கிறது. ஆனால் வாசகனின் மனதுள் தர்க்கங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதுவே நூலின் ஆன்மாவாகவும் கருதுகிறேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக