அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது ?
கேடர்பில்லரில் பணிபுரிய ஆரம்பித்து
கிடைத்த முதல் மாத சம்பளத்தில் வாங்கிய நூல் ரேமண்ட் கார்வரின் சிறுகதை மொழிபெயர்ப்புகளான
“வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு”. முதல் மாத சம்பளம் என்பது பெயருக்கு
தானே ஒழிய ஒவ்வொரு மாதமும் ஏதேனும் நூலொன்றை வாங்கி சேகரித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
மனுஷ்யபுத்திரன் ஒருமுறை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் - வாசிக்காமல் இருப்பதன்
குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி புதிய புதிய நூல்களை வாங்கிக் கொண்டே
இருப்பதுதான் என்று. வாசிக்கிறேனோ இல்லையோ அந்த விஷயத்தை மறக்காமல் செய்து வருகிறேன்.
ரேமண்ட் கார்வருடனான எனது அனுபவம்
அவரது சிறுகதைகளைப் போலவே slow poison தன்மை கொண்டது. முதல் முறை அழியாச்சுடர்கள் இணையம்
மூலமாக அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். யதார்த்தவாத கதைகளின் மீதிருந்த குறைந்த ஆர்வம்
அதிகமானதற்கான காரணங்களுள் இவரும் ஒருவர். அவருடைய கதைகள் வாசிப்போடு ஒருபோதும் நின்றுவிடவில்லை.
ஏதோ ஒன்றை அந்த கதைமாந்தர்கள் என்னுள் செய்துகொண்டே இருந்தனர். அவர்களின் செயல்களை
என்னால் ஒருபோதும் சிந்தித்துக்கூட பார்க்க முடிவதில்லை.
யதார்த்தம் குறிப்பிட்ட மனிதனுடன்
எப்போதும் சுருங்கிவிடுகிறது. நான் செய்யும் அன்றாட விஷயங்கள் எனக்கான யதார்த்தமாக
அமைகிறது. சாமான்யனுக்கும் ஏற்றவகையில் சொல்ல வேண்டுமெனில் அவரவர்களுடைய அனுபவம். கொலைகாரன்
ஒருவனுடன் பேசுகிறேன் எனில் அவன் அனுபவம் எனக்கு முற்றிலும் புதுமை. என்னால் வாழ்க்கையில்
ஒருபோதும் கொலையொன்றை செய்ய முடியாது என தற்சமயம் நிதர்சனமாக சொல்வேன். காலமும் சூழ்நிலையும் மனிதனை குறிப்பிட்ட செயல்களை
செய்ய வைக்கிறது. அதை பிறிதொருவன் கேட்கும் சமயத்தில் விமர்சனம் செய்கிறான். கொலைகாரனை
பார்த்து, கற்பழிப்பவனை பார்த்து, வன்முறையை பிரயோகிப்பவனைப் பார்த்து அச்சமயத்தில்
அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என சமாதனம் செய்கிறான். ஆனால் அத்தருணத்தில் அந்த மனிதனிடம்
எச்சக்தி அச்செயலை செய்ய உந்துகிறது ? இந்த சூட்சுமம் தான் பின்னாட்களில் அம்மனிதனுக்கான
அனுபவமாக மாறுகிறது.
இப்படியான மனிதர்களைத் தான் ரேமண்ட்
கார்வரின் கதைகளில் சந்தித்தேன். அவர்களின் செயல்களை என்னால் ஒருப்போதும் செய்ய முடியாது.
அந்நிலைமைகளில் நான் வேறு ஏதேனும் அபத்த முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏன் சில நல்ல
அபூர்வ முடிவுகளையும் கூட எடுத்திருக்கலம். கதைமாந்தர்களோ புதியதொரு உலகத்தை அவரவர்களின்
செயல்கள் வாயிலாக, முடிவுகளின் வாயிலாக படைக்கிறார்கள்.
இணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு
கதைகள் அவருடைய தொகுப்பினை தேடத் தூண்டியது. அந்நேரத்தில் தான் கல்குதிரை சிற்றிதழில்
அவருடைய சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது ஏற்பட்ட பிரமிப்பு மீண்டும் தொகுப்பினை சார்ந்து
எனக்குள்ளிருந்த தேடலை உந்தியது. ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்கலாம். ஆனாலும் தமிழ் மொழிபெயர்ப்பினை
தேடின பித்துப்பிடித்த மனம். இடையில் கதீட்ரல் சிறுகதையை தூத்துக்குடியிலிருக்கும்
நண்பனொருவன் அனுப்பி வாசித்துப் பார் என்றான். உறக்கத்தையே கெடுத்தது அச்சிறுகதை. மேலும்
அச்சமயத்தில் வெளியாகியிருந்த தொகுப்பும் குறைந்த அளவே அச்சிடப்பட்டிருப்பதாகவும் தற்சமயம்
இல்லை எனவும் கடைகள் மூலம் அறிந்தேன். இந்நிலையில் தான் கிடைத்தது இந்த பொக்கிஷம் முதல்
மாத சம்பளத்தில் எனும் பெயரினை தாங்கி.
இத்தொகுப்பை செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன்,
க.மோகனரங்கன், விஜயராகவன் என நால்வர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பன்னிரு கதைகள் இடம்பெற்றிருகின்றன.
ஒவ்வொரு கதையும் தனி மனிதனுக்கு அன்றாடம் நிகழும் சின்னதான அசைவின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது.
சில கதைகள் அவற்றினூடே மனிதனுள் இருக்கும் அசட்டுத்தனங்களையும் அன்றாடமாக மாறிய அபத்தங்களையும்
கூறுகின்றன.
யதார்த்தவாத கதையாக இருந்தாலும்
கூட மனிதனுள் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்து தன் கதையினை உருவாக்குகிறார்.
“அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை” என்னும் கதையில் நாயகனுக்கு தன் மனைவி மீது
சந்தேகம் வருகிறது. அவள் வேலை பார்க்கும் பாரில் அமர்ந்துகொண்டு அவளைப் பற்றிய அந்நியர்களின் வார்த்தைகளை, அசிங்கமான வர்ணிப்புகளை கேட்கிறான்.
ரசிக்கிறான். ஒரு பக்கம் தன் மனைவி என்னும் பிரக்ஞை. மற்றொரு பக்கம் அவனுக்கே ஆன சந்தேகம்.
இரண்டையும் கதை மிக அழகாக சமன் செய்கிறது.
நூலின் தலைப்பிலான கதையில் வரும்
வசன பரிமாற்றமே கார்வரின் கதையம்சத்தை வெளிப்படையாக சொல்லிவிடுகிறது. அக்கதையில் நாயகன்
கொலை செய்திருப்பானோ என மனைவிக்கு சந்தேகம். அதன் தெளிவு என்ன மற்றும் எப்படி அந்த
சம்பவம் நிகழ்கிறது என்பதாக கதை நீள்கிறது. அதனிடையே இருவருக்குமிடையிலான பேச்சானது,
““நீ
எப்போதாவது வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என
நினைத்தது உண்டா ? அல்லது ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது
உண்டா ?”
அவள்
என்னையே பார்த்தாள். “ அப்படி எப்போதும் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இல்லை, இல்லை
நான் வேறு ஆளாக இருந்திருந்தால் அது எனக்கு பிடிக்காமல் கூட போயிருக்கலாம்””
இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும்
ஒவ்வொரு கதையும் தன் கதைமாந்தர்களும் வேறு ஒருவராக இருக்க முனைகிறார்கள். ஆனால் தன்னிடம்
இருக்கும் அபத்தங்களாலேயே தோற்று நிற்கிறார்கள். கதீட்ரல் சிறுகதையில் மனைவியின் சிநேகிதன்
வீட்டிற்கு வருகிறான். அவன் குருடன். சமீபத்தில் தான் மனைவியை இழந்திருக்கிறான் வேறு.
நாயகனுக்கு குருடனைப் பார்த்து வெறுப்பு ஏற்படுகிறது. இது தான் கதை. இந்த மூவரின் சந்திப்பு
என்ன மாதிரியான விளைவுகளை ஒவ்வொருவரிடமும் குறிப்பாக நாயகனிடமும் ஏற்படுத்துகிறது என்பதை
மிக வசீகரமாக சொல்கிறது சிறுகதை.
ஜுரம் கதையில் குழந்தைகளை பார்த்துக்
கொள்ள பெண் தேடும் நாயகனாகட்டும், பெட்டிகள் கதையில் வீட்டினை மாற்றிக் கொண்டே இருக்கும்
பெண்மணியாகட்டும், சின்னஞ்சிறு வேலை கதையில் செகாவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்
ஆகட்டும் எல்லோரும் தங்களுக்குள்ளே இருக்கும் சில அபத்த உணர்வுகளை கெட்டியாக பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் habit ஆக மாறிய ஒன்று.
அவர்களிடம் இருக்கும் செல்வங்களுக்கு கதையில் எங்குமே மதிப்பில்லை. ஜுரம் கதையில் நாயகன்
குழந்தைகளை வளர்க்க பெண் தேடுகிறான் என சொல்லியிருந்தேன் அல்லவா அதற்கான செலவுகளை மனைவி
எய்லீனிடம் சொல்லும் போது எய்லீனின் பதில்,
“பணம்தானே. போகட்டும். பண்டமாற்றுப் பொருள் என்பதைத் தவிர பணத்திற்கு பெரிய
மதிப்பொன்றும் இல்லை. பணத்தைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன”
மொத்த தொகுப்பில் என்னை நிலைமறக்க
செய்த கதை “ஒரு சின்ன, நல்ல காரியம்”. மகனுக்கு பிறந்த நாள் என கேக்கினை ஆர்டர் செய்கிறாள்
மனைவி. மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிடுகிறது. மருத்துவமனையில் கண்விழிக்காமல் இருக்கிறான்.
சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கணவனும் மனைவியும் மாறி மாறி மகனுடன் இருக்கிறார்கள்.
ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிற்கு செல்லும் போது வீட்டிற்கு அழைப்பொன்று வருகிறது. அது மகனை
மறந்துவிட்டீர்களா என்று மட்டுமே கேட்கிறது. மன உளைச்சல், இடையில் தொலைபேசியினால் ஏற்படும்
தொல்லை. எல்லாம் சேர்ந்து என்ன ஆகிறது என்பது தான் மீதக்கதை. அதிலும் கடைசியில் மனைவி
கேக் கடைக்காரனை சந்திக்கிறாள். அவர்கள் இருவரிடையெ நிகழும் உரையாடலும் செயலும் உன்னதமான
தரிசனம். கதை முடியும் போது என்வசம் கண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. குறிப்பாக கேக்
கடைக்காரன் சிறுகதையின் தலைப்பினை நாயகியிடம் சொல்லும் தருணம். வார்த்தைக்கு வார்த்தை
உருகி நின்றேன்.
பௌதீக உலகத்தின் எவ்விதமன மாற்றங்களும்
கார்வரின் கதாபாத்திரங்களை பாதிப்பதில்லை. மாறாக அவர்களின் அகமே உலகை சிருஷ்டிக்கிறது.
அது மிகச்சிறிய உலகம். அதிகபட்சம் ஐந்து பேர் வருகிறார்கள். அவர்களுடனான உரையாடல்கள்
அவ்வுலகத்தை நிறைக்கின்றன. ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கடந்து செல்லும் போதும் என்னுள்
இருக்கும் அபத்தங்கள் ஒட்டுண்ண்ணியை போல கெக்கலியிடுகின்றன. மீண்டும் மீண்டும் என்னுள்ளே
கார்வரின் கதைகளை அசை போடுகிறேன். அவருடைய கதையொன்றின் கதாபாத்திரமாக மாற முடியாதோ
என ஏங்குகிறேன். எல்லா நினைவுகளுடன் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்கிறது,
அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது
?
பி.கு : கார்வரின் கதைகளை வாசிக்க
நேர்ந்தால் இந்த கேள்வி ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாசகனை துரத்திக் கொண்டே இருக்கும்.
Madly loving you carver. . .
0 கருத்திடுக. . .:
Post a Comment
கருத்திடுக