வேடிக்கை மனிதர்கள்
எனக்குள்
தேசம் சார்ந்த ஆற்றாமை என்றும் இருந்துவந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தேசியகீதம் சார்ந்து. தேசிய கீதம் சிறுவயது முதலே மிகவும் பிடித்தமான ஒன்று. அதே நேரம் இதை பிடித்தமானது
எனக் கூறினால் கிண்டல் அடிப்பர்களோ எனும் எண்ணத்தில் எனக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பேன்.
திங்கட்கிழமையானால் பள்ளியில் கொடியேற்றி தேசிய கீதம் பாடச் சொல்வார்கள். கல்லூரி சேர்ந்த
பின்னர் தேசிய கீதம் என்பது வருடத்திற்கு இருமுறை சந்தர்ப்பவசமாக கேட்கக்கூடிய பாடலாக
மாறிப்போனது.
என்னுள்ளே
எழும்பிய ஆற்றாமைக்கான காரணம் கால்பந்திற்கான ஃபீஃபா போட்டி தான். அர்ஜென்டினாவா பிரேசிலா
என்று ஞாபகம் இல்லை. அந்த போட்டி ஆரம்பிக்கும் போது அதன் தேசியகீதத்தை பாட ஆரம்பித்தனர்.
அந்த பாடல் பாடப்பட்ட நேரம் முழுவதும் பார்வையாளர்களிடம் இருந்தது கொண்டாட்டம் மட்டும்
தான். கால்பந்து பற்றி அதிகம் எனக்கு தெரியாது என்பதால் இந்த ஒரு விஷயத்தை கவனிக்க
வேண்டி தொடர்ந்து சில போட்டிகளை அது ஆரம்பிக்கும் நேரத்தில் பார்க்க முனைந்தேன். பல
நாட்டு பார்வையாளர்களிடம் இந்த கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது. ஒருமுறையேனும் ஜனகண
மணவிற்கு இப்படியான ஒரு சூழலை சந்திக்க முடியுமா எனும் கேள்வியே எனது ஆற்றாமையின்
முதல் விதையானது.
இந்தக்
கேள்வியை சில நண்பர்களிடமும் கேட்டு பதிலாக அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று என்பதை
அறிந்துகொண்டேன். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் என்னை சமாதானம்
செய்யும் அளவிலான பதில் அவர்கள் வசமும் இல்லை. இச்சூழல் இங்கு நிலவுவதற்கு காரணம் தேசியத்தை
பீடத்தில் ஏற்றி வைத்து வழிபடும் மனோபாவம் தான். சின்ன சோதனை முயற்சி ஒன்றை சொல்கிறேன்.
முடிந்தால் செய்து பாருங்கள். குறிப்பாக பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோர். பதின்
வயது மாணவனையோ மாணவியையோ அழைத்து கூட்டத்தின் இடையே திடிரென தேசிய கீதத்தை பாடச் சொல்லுங்கள்.
முதலில் வார்த்தை எழாது. கூச்சமே எழும், அதுவும் வெகுநேரத்திற்கு.
சினிமாவில்
வரக்கூடிய கானா பாடல் கொடுக்கக்கூடிய சின்னதான சிரிப்பை கூட தேசியகீதம் கொடுப்பதில்லை.
பாட வேண்டுமெனில் கைகளும் கால்களும் அசைவினை ஒருமுகபடுத்தியிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள்
வேண்டும். இதைத்தான் கற்பித்திருக்கிறார்கள். ஒருவேளை தேசியகீதத்தை சிரிப்புடன் கொண்டாட்டத்துடன்
வாய்விட்டு சத்தமாக குதித்துக் கொண்டே பாடினால் அது என்ன தேசத்துரோகமா ? பதிலோ தெரியவில்லை
ஆனால் பலமுறை அப்படி பாடத் தோன்றியிருக்கிறது. சில நேரங்களில் யாருமறியாமல் பாடவும்
செய்திருகிறேன்.
இதற்கு சரியான மாற்று பள்ளி ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் தான் இருக்கிறது. தேசிய கீதம்
ஒரு நிமிடம் கால்கடுக்க நிற்க வேண்டிய விஷயமன்று என்பதை எடுத்துரைக்க வேண்டும். அதன்
அர்த்தத்தை விளக்க வேண்டும். அன்றாடத்தின் அங்கமாக மாற வேண்டுமே ஒழிய பாடதிட்டத்தின்
பகுதியாக இருத்தல் கூடாது. இது வரவிருக்கும் தலைமுறைகளிடம் எடுத்து செல்ல வேண்டிய கடமையும்
கூட.
தேசிய
கீதம் என்றாலே நினைவிற்கு வருவது சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவல் தான். அதில்
நாயகன் ஓரிடத்தில் சொல்வான் தேசிய கீதம் என்னை பொருத்தவரை ஒரு சங்கீதம் என. உணர்ந்தவர்கள்
கொண்டாட்டத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கலாம் உணராதவர்கள் எப்போதும் போல் தேமே என்று
பாடிக் கொண்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஜன கண மண ஓர் இனிமையான பாடல்.
பி.கு
: சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் பட்டமளிப்பு
விழா நிகழ்ந்தது. அதில் தலைமை தாங்க மத்திய துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்
படித்த அதிகாரி ஒருவர் வந்திருந்தார். உடன் மேடையில் கல்லூரி நிர்வாகத்தின் முதன்மை
பீடாதிபதிகளும் ஒவ்வொரு துறை தலைவர்களும் அமர்ந்திருந்தனர். விழா முடியும் போது தேசிய
கீதம் என்றனர். முதல் இருவரியை முழுங்கிக் கொண்டு ஒலிபெருக்கி ஒலிக்கத் தொடங்கியது.
இடையில் மேடைப் பக்கம் திரும்பின கண்கள். ஒருவருடைய வாயும் அசையவில்லை. பாரதியின்
வேடிக்கை மனிதர்களென தெரிந்தனர் அம்முன்மாதிரிகள். ஒரே கேள்வி தான் மனதில் உதித்தது
– அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது தேசிய கீதம் ?
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக