Why uncle’s are not sexy ?
தோழி மஹியின் குழந்தைக்கு வயது
ஆறோ ஏழோ தான் இருக்கும். மூன்று வயது முதல் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுவருகிறான்.
இம்முறையும் மாலை போடுகிறான் போல. அதற்காக அவளும் கோயிலுக்கு சென்றிருக்கிறாள். சில நாட்களுக்கு பின் என்னுடனான உரையாடலில் அவளுக்குள்ளிருந்த
கோபத்தை வெளிப்படுத்தினாள். அதில் முக்கியமான விஷயம் அவளுக்கு அக்கோயிலில் ஏற்பட்ட
ஓர் அபத்த உணர்வு. குறிப்பாக ஆண்களின் உடை சார்ந்து.
சில மாதங்களுக்கு முன்னர் கோயில்களில்
பெண்களுடைய ஆடைகளில் கட்டுபாடுகள் இருக்க வேண்டும் என்று அரசு கூறியிருந்தது அல்லவா
அப்போது எனக்கு கோபமே எழுந்தது. காரணம் இருப்பதிலேயே கோவிலில் அரை நிர்வாண ஆடையில்
திரிவது அக்கோயிலின் குருக்கள் தான். தொந்தியும் அக்குள் மற்றும் மார்புகளில் துருத்தியிருக்கும்
ரோமங்களும் கருவறையில் செய்யும் வேலையினால் உருவான வியர்வையும் ஒரே இனமான என்னாலேயே
பொருத்துக்கொள்ள முடியவில்லையெனில் பெண் இனத்தால் எப்படி சகித்துக் கொள்ளமுடியும் ? பல
கோயில்களில் ஆண்கள் மேலாடையின்றி தான் செல்ல வேண்டும். அப்படியான சில கோயில்களில் பெண்கள்
ஆகும் கடுப்பை நேரிலேயே கண்டிருக்கிறேன். மேலும் அங்கு பக்தி எப்படியைய்யா வரும் ? (அப்படியெனில்
இதற்கு நீர் சொல்லும் தீர்வு தான் என்ன என்கிறீர்களா ? இப்பதிவின் கடைசியில் சொல்கிறேன்.)
இதுவா மதம் போதிக்கும் நிர்வாணநிலை ? காலத்திற்கொப்ப மதம் பௌதிக அளவில் தன்னை மெருகேற்றிக்
கொள்ளவேண்டாமா ? இது ஆன்மீக பதிவு இல்லையென்பதால் இகேள்விகனின்று கழன்று மைய விஷயத்திற்கு
செல்வோம்.
இது என்னுள் இருக்கும் இன்னுமொரு
கேள்வியையும் சீண்டியது. அது ஆண்கள் எல்லோரும் 30 முதல் 40 வயதுவரை உள்ள பெண்களை ஏன்
அதற்கும் மேற்பட்ட வயதினரையும்கூட கண்களால் மோகிக்கிறார்கள். மனதளவில் உடலுறவே கொள்கிறார்கள்
என்றாலும் சாலத்தகும். இப்படி பெண்கள் வசம் உண்டா ? அவர்கள் ஏன் அங்கிள்களை சைட் கூட
அடிப்பதில்லை ? அப்படியே செய்வதாயினும் அதன் சதவிகிதம் மிகக்குறைவாகவே உள்ளதே ஏன்
? பெண்களுக்கு ஆசையே இருக்காதா ? சில தோழிகளிடம் இக்கேள்விகளை கேட்ட பொழுது அதிர்ச்சியான
பதில்கள் கிடைத்தன. சற்று அவமானகரமானது தான். இருந்தாலும் சொல்கிறேன்.
பெண் சிறுவயதுமுதலே தன்னை அழகுபடுத்திக்கொள்ளவேண்டும்
என்பதில் அதிக முனைப்புடன் இருக்கின்றாள். ஆண்களுக்கோ அதில் நாட்டமே செல்வதில்லை. அப்படி
அவனும் முயல்வானாயின் அது தன்முனைப்பே தவிர இயற்கையன்று. அதற்கு அவன் வளரும் சூழலே
காரணம். ஆணிற்கும் அழகிற்கும் இடையே இருப்பது நீண்ட இடைவெளி என்பதை அவன் வளர்ச்சி அவனுக்கான
படிப்பினையாக்கி இருக்கிறது. இந்த படிப்பினைதான் அழகு சாதன பொருட்களை நுண்மையாக உபயோகிக்கும்
பெண்களை பார்த்து ஆபாசமாகவும் கிண்டலாகவும் சித்தரிக்கவைக்கிறது. இப்படி சொல்பவர்கள்
தான் பெண்களின் தேகத்தின் மீதும் அதீத ரசனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உதாரணம்
தான் 30ற்கும் மேற்பட்ட வயதினரை கண்டவுடன் அவர்களின் தேகத்தின் மீது ரசனை கொள்வது.
இது பெண்களை இழிவாக கூறும் பதிவன்று.
மாறாக grooming responsibility என்னும் விஷயத்தை ஆண்கள் பெண்களிடமிருந்து நிச்சயம்
கற்றுக்கொள்ள வேண்டும். இப்பத்தியின் மைய விஷயத்தை சற்று மாற்றி யோசித்து பார்த்தால்
முப்பது வயதை கடந்தவுடன் ஆண் வர்க்கத்தை இச்சையால் சீந்தக்கூட பெண்கள் இல்லை என்னும்
நிலை தான் இச்சமூகத்தில் நிலவுகிறது.
இதற்கெல்லாம் முடிவு தான் என்ன
? எப்படி கேஸனோவாவாக மாறுவது என்று கேள்வி எழும்பினால் பதில் என் வசம் இல்லை. சின்ன
டிப்ஸ் வேண்டுமென்றால் தருகிறேன். பதின்வயதில் பெண்களுக்கு சில ஆண்களை பிடித்திருக்கிறது.
ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். சினிமா நடிகர்களையும் அதே ரகத்தில் வைக்கிறார்கள்.
சில காலம் கடந்தபின்பு நடிகர்களை மட்டுமே ஆற்றாமையுடன்(?) ரசிக்கிறார்கள். இதன் இடைவெளிதான்
தரிசனத்திற்கான திறவுகோள் மக்களே!!!!
பி.கு : ஒரே ஒருமுறை நரேந்திர மோடி என்னும் செயலியின் வழியே
அவருடைய “மன் கி பாத்” கேட்டேன். அதில் காதி உடைகளின் பெருமைகளையும் அதன் மூலம் நிகழ்த்தக்கூடிய
மாற்றத்தையும் கூறியிருந்தார். அஃதாவது வீட்டிற்கு ஒருவர் எனவும், இளைஞர்கள் எனில்
ஒரே ஒருமுறையேனும் கதராடையை வாங்க வேண்டும். அப்படி வாங்கும்பட்சத்தில் நெசவாள சமூகத்தை
சின்ன அளவிலாவது நம்மால் மீட்டெடுக்க முடியும் என. நியாயமான வார்த்தை தான். கோயில்களில்
மேலங்கி இல்லாமல் செல்வதற்கு பதிலாக கதரினாலான மேலாடைகள் அனுமதி என அரசே சொல்லலாம். கோயில்
குருக்களுக்கு கதராடைகளை கட்டாயமாக்கலாம். பிறகு நியாயமாகவே கடவுளின் அருளினால் அடித்தட்டு
மக்களின் ஒரு சமூகத்தினரான நெசவாளர்கள் மேலெழுவர். ஆளுங்கட்சியை வாழ்த்துவர். பக்தி
பெருகும். பெண்களும் ஆசுவாசமடைவார்கள்!