ச.தமிழ்ச்செல்வனின் மூன்று நூல்கள்
தற்சமயம்
நான் தங்கியிருக்கும் இடம் நந்தம்பாக்கம். வெகு
அருகிலேயே Madras war
cemetery என்றொரு இடம் இருக்கிறது. இரண்டாம்
உலக யுத்தத்தில் இறந்த பல்வேறு ஆங்கிலேயர்களின்
உடல்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான நடுகற்கள் மட்டும் இங்கே
இடம்பெற்றிருக்கின்றன. மிக அழகான அமைதியான
இடம். சுற்றி மரங்கள் இடையிடையே
கற்களாலான திட்டுகள். அவற்றின் அருகேயும் அஜானுபாகுவான மரங்கள். எங்கும் புல்தரை. எப்போதும்
இளைஞர்கள் போட்டோ எடுத்துக் கொண்டடே
இருப்பர். ஆனாலும் அந்த இடம்
முழுக்க அமைதி நிலவிய வண்ணமே
இருக்கும். அமைதியை உருக்குலைக்கும் விஷயம்
போக்குவரத்து சப்தமும் விமானத்தின் சப்தமும் தான்.
வெளியில்
வாசித்து பார்க்கலாம் என்னும் எண்ணத்தில் சின்னதான
நூலொன்றை எடுத்துக் கொண்டு சென்றேன். அது
ச.தமிழ்ச்செல்வனின் “1947”. சில நாட்களுக்கு
முன் நிகழ்ந்த கணையாழி வாசகர் கூட்டம்
சந்திப்பில் இமையம் எழுதிய ‘எங்
கதெ” நாவல் சார்ந்து தமிழ்ச்செல்வன்
பேசினார். அவருடைய பேச்சு ரொம்பவே
பிடித்திருந்தது. அங்கே வாசலில் அவருடைய
அளவில் சிறிய கட்டுரைத் தொகுதிகள்
இருந்தன. அதில் மூன்றை வாங்கினேன்.
1947
இந்தியாவில்
இருக்கும் எல்லோராலும் இந்த ஆண்டை நிச்சயம்
மறக்க முடியாது. அதற்கான காரணம் சுதந்திரம்
என்னும் சொலவடை. ஆனால் அதற்கு
பின்னே இருக்கக்கூடிய அபத்தமான சில விஷயங்களையும் இந்தியா
தன்னுடைய நினைவுகளில் சேகரமாகவே வைத்திருக்கிறது. ஏகப்பட்ட ஆய்வுகளும் திரைப்படங்களும் அது சார்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் அதன் வீச்சம் இன்னமும்
இந்தியா முழுக்க வீசிக்கொண்டே இருக்கிறது.
அது தான் இந்தியா-பாகிஸ்தான்
பிரிவினை.
ஒன்றுபட்ட
இந்தியாவின் குறுக்கே கோட்டினை போட்டு அந்தப்பக்கம் பாகிஸ்தான்
இந்த பக்கம் இந்தியா என்றும்
அதற்கு பிண்ணனி மதமென்றும் வைத்திருந்தனர்.
நாடு முழுக்க இந்த அபத்த
பிரிவினைக்கான காரணம் பலர் என
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூற ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டதோ
எந்த அரசியலிலும் நேரடியாக ஈடுபடாத பொது மக்களே.
இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என பலர் பல்வேறு
வகைகளில் சித்ரவதைகளையும், கற்பழிப்புகளையும், பாலியல் வன்முறைகளையும் கண்டிருக்கின்றனர்.
அதற்கு இந்த அரசு என்ன
பதில் சொல்லப் போகிறது என்னும்
கேள்வியை நூலின் வழியே எழுப்புகிறார். இந்து-முஸ்லீம் பிரச்சினைகள் மூலமாகவும் தீவிரவாத செயல்பாடுகளாலும் அறுபது ஆண்டுகளை கடந்தும் விடை தெரியாத கேள்வியாக நிலைத்து நிற்கிறது ச.தம்ழ்ச்செல்வனின் வார்த்தைகள். மேலும் பல ஆதாரங்களையும்
பாதிக்கப்பட்ட பலரின் குரல்களையும் இச்சிறு
நூலின் மூலம் வெளியே எடுத்து
சொல்கிறார்.
இந்திரா
காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளும்,
பாபர் மசூதி இடிப்பின் போது
வெளிப்பட்ட ரத்தங்களும் இதனை வேராக கொண்டது
என்பதை தர்க்கங்களுடன் தெளிவாக கூறுகிறார். அன்று
நிகழ்ந்த பிரிவினை அரசியல் வெளிப்பாடு. அதே
நேரம் அது வேறொரு அரசியல்
நிலைப்பாட்டையும் நிறுவி சென்றிருக்கிறது. அதுவே
இப்போதைய அரசாக இருக்கிறது. தீராத
நினைவாக 1947 மாறியிருப்பதை இச்சிறுநூல் சிறப்பாக கூறியிருக்கிறது.
எது கலாச்சாரம் ?

அடிப்படைவாதத்திலேயே
பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை எது கலாச்சாரம்
என்னும் ச.தமிழ்ச்செல்வனின் நூல்
எடுத்து கூறுகிறது. கலாச்சாரம் என்னும் வார்த்தையையே முழுமுற்றாக
எதிர்க்கிறார். கலாச்சாரம் என்பது கலை சார்ந்த
அர்த்தத்தை கொண்டுள்ளது. அது எப்படி Culture என்னும்
வார்த்தைக்கு உகந்ததாக இருக்க முடியும் என்னும்
கேள்வியுடன் நூல் தொடங்குகிறது. பண்பாடு
என்பதே culture ஐ குறிக்கும் சரியான
வார்த்தை என்பதை விளக்கத்துடன் கூறுகிறார்.
மேலும் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டையும்
காலமாற்றத்தினோடு இவ்விரண்டில் ஏற்பட்ட மாறுதல்களையும் பல்வேறு
தர்க்கப்பூர்வ விளக்கங்களுடன் எடுத்துரைக்கிறார். ஒரே ஒரு எடுத்துக்காட்டு
தருகிறேன்.
நாகரீகம்
முழுக்க வாழ்வியல் முறை சார்ந்தது. கற்களை
பயன்படுத்தி வாழ்தல், பின் உலோகங்கள் என்று
வாழ்வதற்கான சூழலை முழுமைக்குமான உருவாக்குதலும்
அதில் நிகழ்ந்த பரிணாமங்களும் என சொல்லலாம். இது
தற்போதைக்கு ஆடை, அணிகலன், போக்குவரத்து
சாதனங்கள் என நவீனத்திற்கு மாறியிருக்கிறது.
நல்ல ஆடை உடுத்தி சாப்பாட்டினை
ப்ளாஸ்டிக் தட்டில் இட்டு ஸ்பூனால்
சிந்தாமல் சின்ன சின்னதாய் சாப்பிடுகிறான்
ஒருவன். இன்னொருவன் கந்தல் ஆடைகளும் அங்கங்கு
அழுக்கேறிய உடம்பும் உழைப்பின் மிகுதியால் வியர்வைகள் சட்டையின் மேல் தெரிய கைகளால்
பிசைந்து சாப்பிடுகிறான். முதலாமவனை சமூகம் நாகரீகமானவன் என
சொல்லும். இரண்டாமவனை அநாகரீகமானவன் என சொல்லும். இது
பொதுமையான கருத்து(Ideal statement). இப்படி சொல்ல வைப்பது
தான் பண்பாடு. ஊருடன் கூடி வாழ்
என்பதை தத்துவார்த்த ரீதியாக மாற்றினால் அதுவே
பண்பாடு என்கிறார்.
இந்த பண்பாடு எப்படி அரசியலாகிறது,
சமூகத்தின் விழுமியமாக எப்படி மாறுகிறது, நாகரீகத்தின்
வளர்ச்சியை இந்த பண்பாடு நோயென
அழுத்தி பிடிப்பது எப்படி போன்றவற்றை நூல்
விரிவாக பேசுகிறது.
அரசியல்
எனக்குப் பிடிக்கும்

இந்த புரிதலுக்கு உதவுவதையொப்ப இச்சிறுநூல் அமைந்துள்ளது. அரசியல் எனில் என்ன
? பல்வேறு காலகட்டங்களில் அரசியலின் நிலைப்பாடு எப்படி இருந்தது ? அரசியலின்
மைப்பிளவு எப்படி அமைக்கப்பெற்றது ? அவற்றிலிருந்து
கட்சிகள் எவ்வாறு தோன்றின ? மனிதனுக்கு
அரசியலின் தேவை என்ன ? அரசியலின்
விளைவாய் மனிதனுக்கான தேவை என்ன ? போன்ற
எண்ணற்ற கேள்விகளுக்கு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே செல்கிறது இந்நூல்.
தனிவுடைமைக்கும்
பொதுவுடைமைக்குமான போராகத்தான் இந்த அரசியல் எல்லா
நாடுகளிலும் இருக்கிறது. தனிவுடைமையிடமிருந்து பொதுவுடைமைக்கு மாற வேண்டியது பலாயிரம்
கோடிப்பேரின் கனவாகவும் பொதுவுடைமையிலிருந்து தனிவுடைமைக்கு செல்வது பல நாடுகளின்
யதார்த்தமாகவும் இருப்பது தான் அரசியலின் அபத்தமாக
இருக்கிறது. இந்த அபத்தம் உருவாவதற்கான
காரணம் என்ன ? பணத்தை மையப்படுத்தி
அரசியல் நிர்ணயம் ஆவதன் விளைவு யாது
? பாதிக்கப்படப்போவது உண்மையில் யார் போன்ற கேள்விகளுக்கு
இந்நூல் கொடுக்கும் பதில் நமக்குள் இருக்கும்
சமூகப் பொறுப்புணர்ச்சியை வெகுவாக தூண்டுகிறது.
மார்க்ஸீயவாதிகளை
இந்நூல்களை வாசித்தவுடன் வெகுவாக ரசிக்கிறேன். மார்ஸீயவாதிகள்
தங்களுக்கென பல கொள்கைகளை வைத்திருக்கலாம்.
அதை நோக்கி போராடலாம். அது
எனக்கு தேவையில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட
பிரச்சினையை அல்லது விஷயத்தை அணுகும்
விதம் விபரங்களுடனும் நுண்மையாகவும் கற்பனைக்கு இடம் கொடுக்காததாகவும் தர்க்க
ரீதியாகவும் இருப்பது வாசிப்பதற்கும் கருத்துரீதியாகவும் நியாயமாக இருக்கிறது. விமர்சகன் தன்னளவில் நிச்சயம் மார்க்ஸீயவாதியாக இருக்க வேண்டும் என்பதை
உணர்கிறேன். இப்போதைக்கான என் அறிவில் அது
சாத்தியமில்லை. ஆதலால் இதை என்
நெடுங்காலக் கனவாக மாற்றிக்கொள்கிறேன். . .
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக