முதல் நூலிற்கென இருக்கும் வாசனை

தொடர்ந்து நூல்கள் வாசிப்பதில்லையா ? பதிவுகளே இல்லையே ? இலக்கியத்தில் சமாளிக்க முடியவில்லையோ ? என்பதே சமீப காலங்களில் குறுந்தகவல்களின் வழியே நான் எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளாக இருக்கின்றன. சமூகத்துடனான யதார்த்த வாழ்க்கையை சந்திக்க வேண்டிய நிலையில் தற்சமயம் இருக்கிறேன். இளமைக்கென இருக்கும் வைராக்கியத்துடனும் சமூகத்தின் கசக்கும் கணங்களுடனும் விடையில்லாத சில கேள்விகளுடனும் சம்போகித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு வாசிப்பதெல்லாம் அளவில் சிறியதாக இருக்கும் நூல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக சிறுகதைகளும் கட்டுரைகளும்இந்நிலையில் பெங்களூருவிலிருந்து பிரவின் என்பவர் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டார். நாகர்கோவிலை சேர்ந்த பிரவின் பிரயாசையுடன் தன்னுடைய முதல் நூலானசெத்த மச்சம்என்னும் சிறுகதை தொகுப்பை சந்தியா பதிப்பகம் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

முதல் நூல் என்பது நூறில் தொண்ணூத்தாறு சதவிகித பேருக்கு தோல்வியாகத் தான் இருந்திருக்கிறது. முதல் நூல் தருவது உத்வேகம். தன்னுடைய எழுத்தை நூல்வடிவில் பார்க்க வேண்டும் என்னும் பித்தனிலை. இந்த பித்தம் கொடுக்கும் வடிவமே கைகளில் தவழும் நம்முடைய நூல். இந்த பிழைகளை நானும் செய்தவன் தான் பிருஹன்னளை என்னும் பெயரில்.

முதல் நூலை முடித்து கடந்து வரும் போது தான் எழுத்திடம் நாம் தோற்று நிற்கும் விஷயங்களை கற்கிறோம். எழுத்தை கையாளும் போது அங்கே நமக்கென சில கடமைகள் மேலோங்கி நிற்கின்றன. ஒவ்வொரு மனிதனுள்ளும் தத்துவார்த்த மோதல்கள், பிரத்யேக அனுபவங்கள், மறக்கவியலா கசப்புகள் என கொட்டி கிடக்கின்றன. ஆனால் அவையே சாலச் சிறந்தது என நினைத்தால் அதுவே பிழை. அந்த பிழையின் வடிவமே பலருக்கான முதல் நூலாக அமைந்துவிடுகிறது.

அப்படியான பிழையாகத் தான் பிரவின் சியின் முதல் தொகுப்பை பார்க்கிறேன். பிழையினூடே தெரியும் உன்னதமான விஷயம் அவர் கையாளும் மொழிவளம். சின்னதான முன்னுரையிலேயே செவிவழிக் கதைகளையும், சொந்த அனுபவங்களையும் கதையாக்கியிருக்கிறேன் என கூறியிருக்கிறார். அதனைக் கடந்து செல்லும் போது எல்லா கதைகளிலும் ஆசிரியரை நம்மால் சந்திக்க முடிகிறது. நான்கைந்து கதைகள் கடந்த பின்பு தான் சிறுகதை என்னும் வடிவத்தை ஆசிரியரே கண்டறிகிறார்.

பதினைந்து கதைகள் இருக்கும் தொகுப்பில் ஐந்து கதைகளை தவிர்த்து மீதக் கதைகள் எல்லாமே சிறுகதை என்னும் அமைப்பை சரிவரக் கையாண்டிருக்கும் ஆசிரியரின் நுட்பத்தை உணர்த்துகின்றது. நாகர்கோவில்காரர் ஆதலால் அவர்களுக்கே உரிய பிராந்திய தமிழினை அங்கங்கு பயன்படுத்தி அவருடைய மண்ணின் சுவையை அளிக்கிறார். கதையளவில் சின்ன சின்ன கருக்களை பூதாகாரம் செய்கிறார். பெண்கள் துப்பட்டா அணியாமல் இருப்பதும் அங்கே ஆண் இருப்பின் ஏற்படக்கூடிய நிகழ்வும், முதியோர் இல்லம், ரத்த வங்கியும் தனியார் மருத்துவமனையும், ஈழப் போரில் நிகழும் குண்டு வெடிப்புகள் என அடிப்படைவாத பிரச்சினைகளை பேசுகிறார்.

சில கதைகளை வாசிக்க ஆரம்பிக்கும் போது அதன் அழகில் அக்குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்த விரிவான தர்க்கத்தை புரிவாரோ என ஏங்க வைத்து ஏமாற்றத்தை அளிக்கிறார். முதல் தொகுப்பு என நோக்கும் பட்சத்தில் பண அளவில் வெற்றி பெற்றாரா என தெரியவில்லை ஆனால் எழுத்தளவில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே என்னால் முடிவிற்கு வர முடிகிறது. முதல் தொகுதியில் எழுத்தாளன் சந்திக்க நேர்வது, அதுவும் குறைந்த வயதில் எழுத நேர்ந்தது எனில்,

1. குழந்தைப் பருவங்களில் நிகழ்ந்த சம்பவங்கள்
2. மனக்கஷ்டங்களை தத்துவார்த்த விஷயங்களாக பார்த்தல்
3. செய்தித் தாள்களிலும் ஊடகங்கள் மூலமாகவும் அறியும் விஷயங்களால் பாதிப்புறுதல்
4. தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களால் பாதிக்கப்படுதல்
5. முதல் காதல், பெண்ணையும் பெண்ணைப் பற்றியும் அறிதல்(இரண்டிற்கும் நிறைய வேறுபாடுண்டு)
6. கதையினூடே தன் நிலைப்பாட்டை கூறுதல்

இந்த எல்லா விஷயங்களையும் இந்த நூலும் சுமக்கிறது. ஆனால் அதனூடே தெரியும் அவருடைய கதையாக்க திறன், கதைகளை அவர் அறிந்து கொண்ட விதம், கதைகள் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கங்களின் பலன், சொல்லாடல்களின் அமைப்பு அடுத்த தொகுப்பினை எதிர்நோக்க வைக்கிறது. உண்மையை சொல்லவேண்டுமெனில் ஆரம்ப சில பக்கங்களில் இது ஒரு குப்பையோ என்ற உணர்வையே எனக்கு அளித்தது. ஆனால் குறிப்பிட்ட சில கதைகளை தாண்டியவுடன் அவர் கொடுக்கும் கதைகளின் அமைப்பு அவருடைய கதையாக்கத் திறன் சார்ந்த எதிர்பார்ப்பை எதிர்நோக்க வைக்கிறது. முதல் தொகுப்பிற்காக சியர்ஸ் பிரவின்!!!

Share this:

CONVERSATION