நேருவை அறிதல்
சமீபகாலமாக
நூல்களை வாசிக்காமல் நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன்.
இடையிடையில் வாசிக்க நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் கட்டுரைத் தொகுதிகளே என் நேரத்தை நிறைத்துக்
கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவினையும்
அதன் பிரச்சினைகளையும் சார்ந்த கட்டுரைகளை வாசிப்பதில்
ஆர்வம் அதிகமாக கொண்டுள்ளேன். சில
நூல்களை கடன் வாங்கியும் வைத்திருக்கிறேன்.
அதில் சுத்நதிர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்
நேருவின் போராட்டகால சிந்தனைகள் என்னும் நூலினை வாசிக்க
ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில்
சின்னதான சந்தேகமே என்னுள் எழுந்தது. ஒருவேளை
இந்நூல் போதனைகளாகவோ சுயமுன்னேற்ற நூலாகவோ இருந்துவிடுமோ என்னும்
சந்தேகமே அது. வாசிக்க ஆரம்பித்தவுடன்
நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு ஈடு
இணையே கிடையாது என்பதே உண்மையாகும். நாடு
சார்ந்த பலகருத்துகளை பகுப்பாயும் திறன் கைதேர்ந்த எழுத்தாளரின்
எழுத்துகளில் இருப்பது போன்ற தோற்றம் ஒவ்வொரு
பக்கத்திலும் ஈர்ப்பினை கொடுத்தது. தன்னுடைய கொள்கை யாது ? நாட்டின்
சுதந்திரம் எதை முகாந்திரமாக வைத்து
அடைய வேண்டும் ? சுதந்திரத்திற்கு
பிறகான இந்தியா எப்படியான அரசை
நிறுவ முயல வேண்டும் என்னும்
எண்ணற்ற கேள்விகளுக்கு இந்நூல் நேருவின் பார்வையில்
செறிவாக பதிலளிக்கிறது. அதனூடே தன்னுடைய சுய
வாழ்க்கையையும் சிறிதாக கூறியிருக்கிறார். அவருடைய
பல நூல்களிலிருந்து குறிப்பிட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதை தொகுத்தவர் அர்ஜுன்
தேவ். தமிழாக்கம் செய்தவர் நா.தர்மராஜன்.
நேரு சோஷலிஸத்தை மிகையாக நம்பியவர். அதற்கு
மூலக்காரணமாக அவர் கருதியது நம்
நாட்டின் கடந்தகாலத்தை தான். விவசாயத்தின் மையமாகவும்
பல சிறுதொழில்களின் ஸ்தாபனமாகவும் இருந்தது இந்தியா. அப்படியிருக்கையில் சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சி இவர்களின்
வளர்ச்சியை மையப்படுத்திய பயணமாக இருக்க வேண்டும்
என்னும் எண்ணமே அவரிடம் மேலோங்கியிருக்கிறது.
சுதந்திரத்திற்கு முன்பான அவருடைய எழுத்துகளும்
கடிதங்களும் கூட சுதந்திர இந்தியாவின்
சாசனங்கள்
சார்ந்தே அமைந்திருக்கின்றன. இதை தனித்துவமாகவே கருதுகிறேன்.
அதற்கு காரணம் காந்தி இந்தியாவினுள்
இருந்த ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினைகளையும்
தீர்ப்பதற்கான முனைப்பில் இருக்கும் பொழுது இந்தியாவின் எதிர்காலத்தில்
இப்பிரச்சினைகள் எழுமோ என்னும் கேள்வியை
நேரு சந்திக்கிறார்.
குறிப்பாக
கல்வியை எடுத்துக் கொள்ளலாம். நாட்டில் அப்போதைய காலகட்டத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் வகுப்புவாதத்துடன் இணைக்கும் சக்தி சில விழுமியங்களிடம்
இருந்தது. அதற்கு காரணமாக மக்களின்
பலவீனமும் துணைபோந்தன. 1933 வாக்கில் சர் சையது என்பவரை
நேரு குறிப்பிடுகிறார். அவர் தான் இந்திய
முஸ்லீம்களின் பலவீனங்களை உணர்ந்து அதற்கான வடிகாலை ஏற்படுத்த
வேண்டும் என முனைந்தவர். அவர்
கண்ட பலகீனம் இந்தியக் கல்வி
முறையில். அதில் முக்கால் சதவிகிதத்திற்கும்
மேல் இந்துக்களே இருந்தனர். முஸ்லீம்களின் பக்கம் ஆங்கிலேயர்களும் இல்லை.
அவர்கள் முஸ்லீம்களை மையமாக வைத்தே வகுப்புவாதத்தை
கிளப்ப முயற்சி செய்யலாயினர். இதனால்
சர் சையது என்பவர் முஸ்லீம்களுக்கான
பாடசாலையை துவக்க விரும்பினார்.
நேரு மொத்தமாக இதிலிருந்து இரண்டு விஷயங்களை எடுக்கிறார்.
அதாவது பிரிவினை ஒரு சாராரின் பலகீனங்களாலும்
ஆங்கிலேயர்களுக்கு தங்களின் ஆட்சி வீழ்ச்சியுறுகிறது என்னும்
ஐயத்தினாலுமே நிகழ்கிறது என்பதை. இந்தியா முழுக்க
சுதந்திரத்திற்கான வேர்கள் பரவும் பொழுது
சமஸ்தானங்கள் மூலமாகவும் இஸ்லாமியர்களின் மூலமாகவும் வெவ்வேறு ரீதியான பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள்
கிளப்பியிருக்கின்றனர். பலவீனர்களை மட்டுப்படுத்தியும் சமஸ்தானங்களை தங்களின் கைப்பாவைகளாக ஆக்கியும் தங்களின் நிலையை ஸ்திரப்படுத்த முயற்சி
செய்திருக்கின்றனர்.
இதை தர்க்கிக்கும் நேருவின் அறிவோ விஸ்தாரமானது. சுதந்திரத்தைக்
கடந்த உலகளாவிய சர்வ சுதந்திரத்தை நாடுகிறது.
உலகப் போர்களுக்கு எதிரான குரலாக அவரது
ஒலிக்கிறது. ஸ்பெயினிலும், அல்ஜீரியாவிலும் பாலஸ்தீனத்திலும் நிகழும் கொடுமைகளுக்கு எதிராக
தனது தர்க்கத்தை நிலைநாட்டுகிறார். சிலர் அவரது சார்பினை
எதிர்த்தனர். அதற்கு அவர் கூறும்
ஒரே பதில் நமக்கும் அவர்களுக்கும்
இருப்பது பொது எதிரி. ஆங்கிலேயர்களை
குறிப்பிடவில்லை ஏகாதிபத்தியத்தை குறிப்பிடுகிறேன் என்கிறார். ஏகாதிபத்தியத்தின் முடிவு ஜனநாயகத்தில் இருக்க
வேண்டும். அதுவும் அடித்தட்டில் இருக்கக்
கூடிய சிறுதொழில் முனைபவர்களிடம் இருக்க வேண்டும் என்கிறார்.
சமீபத்தில் சசி தரூர் ஆக்ஸ்ஃபோர்ட்
பல்கலைகழகத்தில் பேசிய பேச்சில் என்னை
கவர்ந்த விஷயம் ஆங்கிலேயர்களின் தொழிற்சாலை
மயமாக்கம் இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலைகளை அழித்ததனாலேயே பெரிதடைந்தது என்றார். இதை நேருவும் ஆதாரங்களுடன்
அப்போதே விளக்குகிறார்.
நேருவின்
தர்க்க மனப்பான்மை அவரது கொள்கை அவருக்கு
கொடுத்தது. விஞ்ஞான வளர்ச்சி சுதந்திரமான
நாட்டுக்கு தேவை. அதைவிட முக்கியமானது
இந்த விஞ்ஞான ரீதியான அணுகுமுறை
என்கிறார். இந்நூலிலுள்ள ஆரம்ப கட்டுரைகளில் தனக்கும்
இறை நம்பிக்கைக்கும் இடையில் இருக்கும் தூரத்தை
விளக்கும் தருணத்தில் தன்னுடைய விஞ்ஞான அணுகுமுறையை ஸ்தாபிக்கிறார்.
பிரச்சினைகளை அதன் ஆழம் வரை
சென்று ஆராய வேண்டும். மேலும்
அப்பிரச்சினைகளின் தீர்வினையும் அதற்கு பிறகு அப்பிரச்சினை
மீண்டும் வராமல் இருப்பது வரையிலும்
விஞ்ஞான அணுகுமுறையில் தர்க்கம் செய்ய வேண்டும் என
பல பிரச்சினைகளை அலசவும் செய்திருக்கிறார். கருத்து
சுதந்திரம் சார்ந்த பிரச்சினை, காங்கிரஸினுள்
இருக்கும் பிரச்சினை, பிரிவினை பிரச்சினை, அந்நிய நாடுகளுடனான ஒப்பந்தம்
சார்ந்த பிரச்சினை போன்றவைகளை அவர் விவரணையாக கூறுகிறார்.
ஞான மார்க்கம் அல்லது ஆன்மீகத்துடன் அவர்
ஒவ்வாமையாக இருப்பதன் காரணமாக கூறுவது விஞ்ஞான
அணுகுமுறை தர்க்கத்தால் மூலத்தையும் முடிவையும் இணைக்கிறது. ஞான மார்க்கமோ ஆதியும்
அந்தமமும் இல்லாத நம்பிக்கையில் உழல்கிறது.
சுதந்திரம் நோக்கிய பயணத்தில் அது
மக்களுக்கு தேவையில்லை என்கிறார். மேலும் ஞான மார்க்கத்திற்கான
அமைதியான மனநிலையில் தானும் நாடும் இல்லை
எனவும் சொல்கிறார்.
நிறைய கட்டுரைகளை வகுப்புவாதம் சார்ந்தே எழுதியிருக்கிறார். மதம் நாடாக ஒருக்காலும்
முடியாது. மதத்தை மையமாக வைத்து
பிரிவினையை பேசுபவர்கள் தனிநாடு என்னும் நிலை
வரைக்கும் மட்டுமே சிந்திக்கிறார்கள். அதையே
வகுப்புவாதத்தின் தோல்வி என கருதுகிறார்.
இது போன்ற பல விஷயங்கள்
அவருடைய காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்திருக்கிறது. அதையும் அவர் ஒப்புக்
கொள்கிறார். பெரிய பெரிய பிரச்சினைகள்
சார்ந்து அவர் முன்வைக்கும் விஷயங்களை
அவரே நடைமுறைக்கு ஒவ்வாது என மறுதலிக்கிறார்.
அதற்கு காரணமாக அவர் முன்வைப்பது
இப்போதைக்கு மக்களின் தேவை ஐக்கிய பாரதத்தை
சுதந்திரமாக்குவது மட்டுமே என்பதில் அவர்
முனைப்புடன் இருந்திருக்கிறார். இப்போதிருக்கும் பிரச்சினையான நிலம் மசோதாவினை அப்போதே
விவசாயிகளுக்கு சாதகமாக இயற்ற முனைந்திருக்கிறார்.
ஒட்டுமொத்த
நூலில் ஒரு கட்டுரை வெகுவாக
ஈர்த்தது. தில்லியின் சாலையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றனர். அவ்வழியே சென்ற நேரு அவர்களிடம்
ஓரிரு வார்த்தைகள் பேச இறங்கியிருக்கிறார். அவர்கள்
ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள். காங்கிரஸ்காரர்கள்
கோஷம் போடச் சொன்னார்கள் என
அவர்களும் போட்டிருக்கின்றனர் வாழ்க பாரத மாதா
என்று. நேரு
அவர்களிடம் இதன் அர்த்தம் என்ன
என கேட்டிருக்கிறார். மிகச்சிறிய கட்டுரையாக இருப்பினும் இதனை என்னால் முழுதாக
காட்சிப்படுத்த முடிந்தது. அந்த கேள்வியை ஒட்டு
மொத்த கூட்டத்தாலும் எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் கோஷங்களின் வார்த்தைகளால்
சூழ்ந்தவர்களே ஒழிய பிரச்சினையின் ஆழத்தால்
அல்ல. மேலும் இந்த கேள்வி
எல்லா போராட்டத்திற்கும் தகுந்ததே. மேலும் அதற்கான விளக்கத்தை
நேரு அளித்திருக்கிறார். ஜாட் விவசாயிகளுக்கு ஏற்ற
பதிலை அளித்திருக்கிறார். விவசாயிகளுக்கான நவீன மனிதனாகவே நேரு
எனக்கு தெரிகிறார். இங்கு போராட்டங்கள் வார்த்தைகள்
அளவிலும் மிகச்சிறிய மக்கள் கூட்டத்தாலும் நடைபெறுகிறது.
அதை இவர் எதிர்க்கிறார். தனக்கு
அரசியல் நாட்டம் இல்லை என்பவர்களை
வெளிப்படையாக சாடுகிறார். அவர் சொல்லும் விஷயம்
உனக்காக கோஷமிட்டு போராடுபவர்களை சிறையில் அடைக்கும் தருணத்தில் நீ அந்த கோஷத்தை
கையிலெடுக்க வேண்டும். அதற்கு அரசியல் நாட்டம்
நிச்சயம் தேவை என்கிறார்.
நாடு சார்ந்த பலவித விஷயங்களை
முன்வைத்த அதே நேரம் காங்கிரஸினுள்
இருக்கும் பேதங்களையும் எதிர்த்தே இருக்கிறார். தனிமனித தாக்குதல்களற்ற காத்திரமான
விமர்சனங்களை இன்முகத்துடனேயே வரவேற்றிருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கும் காழ்புணர்ச்சிகளுக்கும்
இடையில் இருக்கும் வேறுபாட்டையும் தர்க்கத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.
இந்நூலை மட்டுமே நேரு சார்ந்து
வாசித்திருப்பதால் அவரை விமர்சனமின்றி என்னால்
ஏற்றுக் கொள்ள முடிகிறது. தார்மீகமான
அதே நேரம் அவருடைய கருத்து
சார்ந்த காத்திரமான விமர்சனங்களை அணுகும் தருணத்தில் நேரு
மீதிருக்கும் என் நன்னம்பிக்கை விமர்சனத்திற்கு
மாற்றல் பெறலாம். இப்போதைக்கு ஏதோ ஒரு வகையில்
நேரு எனக்கு ஆசானாகவே தெரிகிறார்.