ரத்தத்துடன் கலக்கும் தண்ணீர்
கடலோரப்
பகுதிகளில் முத்தெடுப்பவர்கள் என தனிப்பிரிவினர் உண்டு.
அவர்களை மீனவப் பறவர் என்றழைகின்றனர்.
இந்த அழைத்தலுக்கு காரணம் சூரியனுக்கு முன்னே
அதற்கு இணையான ஒளியினை பரப்பக்கூடிய
பறவையினை பார்த்ததனால் அப்பெயர் அவர்களுக்கு வந்தது என்னும் நாட்டாரியல்
கதையொன்று உள்ளது. இவர்களின் தொழில்
மீன்பிடிப்பதும் முத்து எடுப்பதும் ஆகும்.
முத்தெடுத்தல் சிரமமான காரியமும் கூட.
ஏனெனில் எழுபது எண்பது அடி
ஆழத்திற்கு சென்று தான் முத்தெடுக்க
வேண்டும். அப்படி செல்லும் பட்சத்தில்
சரியாக மூச்சினை பிடிக்காவிட்டால் மூளைக்குள் ரத்தநாளங்கள் சிதறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கு பயிற்சி கொடுக்கும் போதே
பல முறை ஆழம் வரை
செல்லமுடியாமல் அவர்கள் திரும்பிவிடுவர்.
பாண்டியர்களின்
ஆட்சிகாலத்தில் முத்தெடுப்பவர்களை இறங்கக்கூடாது என சொல்லிவிட்டனர். அதற்கு
காரணம் அவர்களுக்கு முன்புவரை முத்தெடுப்பவர்கள் எடுத்து முடித்தவுடன் தங்களுக்கென
பங்கினை முத்துலிருந்து பெற்றுக் கொள்வர். இதை பாண்டியர்கள் தடை
செய்தனர். தாங்களே எடுக்கிறோம் என்றும்
கூறினர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இவர்களுக்கு பின் வந்த சோழர்கள்
முத்தெடுப்பவர்களையே எடுக்க சொல்லி சிறிய
அளவிலான பங்கினையும் அவர்களுக்கு கொடுத்தனர்.
இவர்களை
தொடர்ந்து அராபியர் மூர்கள் என படையெக்க
ஆரம்பித்தனர். அவர்களின் தேவையாகவும் அப்போது முத்து இருந்திருக்கிறது.
இவர்களுக்கு பிறகு கிறித்துவர்களின் ஆதிக்கம்
அங்கே வர ஆரம்பித்திருக்கிறது. போர்ச்சுகீஸியர்கள் 1532 ஆம் ஆண்டு
அங்கே வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு
முத்தெடுப்பவர்களுக்கான பங்கினை அதிகமாக கொடுப்பதாக
கூறி மக்களை மதம்மாற்ற இணங்கவைக்க
ஆரம்பித்தனர். 1658இல் போர்ச்சுகீஸியர்களுக்கு இடையே நிகழ்ந்த
கருத்து முரண்பாடுகளாலும் பறவர்குலத்துடனான சண்டையினாலும் அவர்கள் கடலோரப் பகுதியிலிருந்து
செல்ல நேர்ந்தது. இதற்கு பறவர்களுடன் துணையிருந்தவர்கள்
டச்சுக்காரர்கள். இவர்கள் 1663 முதல் 1791 ஆம் ஆண்டுவரை மீனவ
மக்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். மீனவர்களாலோ பெரிதளவிலான மாற்றங்களை இனங்காண முடியவில்லை. போர்ச்சுகீஸியர்களின்
எண்ணமே டச்சுக்காரர்களிடம் தேங்கியிருந்தது. இவர்களுக்கு பின்பு தான் வெள்ளைக்காரர்களின்
ஆதிக்கம் மீனவ கிராமங்களுக்குள்ளே வர
ஆரம்பித்திருக்கிறது.
மீனவ சமூகம் சார்ந்த ஆரம்பகட்ட
அரசியல் இப்படியிருக்கிறது எனில் பிற்கால அரசியல்
இன்னமும் மோசமாக சூழ்ச்சிகளும் தந்திரங்களும்
நிரம்பியதாக இருக்கிறது. பெரிய பெரிய கப்பல்களில்
சரக்குகள் தூத்துக்குடி துரைமுகத்திற்கே வந்திறங்கும். அது தென் தமிழகத்தின்
பெரிய துறைமுகமாக இருந்தாலும் கரையருகே கப்பல் நிறுத்துவதற்கான எந்த
ஏற்பாடும் இல்லை. இதனால் எட்டு
கி.மீ உள்ளே தள்ளி
நிறுத்தி வைத்திருப்பார்களாம். அதிலிருக்கும் சரக்கினை கரைக்கு கொண்டுவர மக்களின்
தோணி தேவைப்படும். இதுவும் ஒரு தொழிலானது.
இந்த தொழிலை வெள்ளைக்காரர்களின் ஆளுமைக்கு
அடியிலேயே நிகழ்த்தப்பட்டது. அவர்களுக்கு பிறகு பிள்ளைமார்கள், பிராமணர்கள்,
விருதுநகர் நாடார்கள் செய்துவந்தனர். அவர்களுக்கும் பிறகே டென்டர் முறை
அமலுக்கு வந்தன.
இந்த எல்லா படினிலை மாற்றங்களை
பார்க்கும்போதும் அடித்தட்டு மீனவ பறவர் சமூகத்தில்
மேலதிகமாக மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே
தீர்மானமாகிறது. என் கடன் பணி
செய்து கிடப்பதே என்பது மேல்தட்டு மக்களின்
பழமொழியாக இருப்பினும் அவற்றிற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் இந்த
பறவர் இன மக்களாகவே இருக்கின்றனர்.
இவர்களை கதையின் நாயகர்களாக்கி போதிசத்வ
மைத்ரேய இயற்றிய நாவல் தான்
“சிப்பியின் வயிற்றில் முத்து”. இது வங்காள நாவல்.
1980 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழில்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். இந்த ஆசிரியர் மீன்வளத்துறையில்
பணி புரிந்ததால் மக்களுடன் பழகி அவர்களுடைய அன்றாட
வாழ்க்கையினையும் நாட்டாரியல் பழக்கங்களையும் பார்க்க முடிந்திருக்கிறது. அவற்றை
நவீனத்தின் சாயலுடன் நாவலாக்கியிருக்கிறார்.
இந்நாவல்
இன்னுமொரு உருவையும் கொண்டிருக்கிறது. இதுவரை வாசித்த நாவல்களில்
நல்லதொரு ஆக்ஷன் நாவலாக
இது இருக்கிறது. கொஞ்சமும் மாற்றாமல் இந்நாவலை படமாக்கினால் நிச்சயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும். வரலாறு காதல் காமம்
வீரம் வன்மம் என எல்லா
உணர்வுகளும் பஞ்சமின்றி இடம்பெற்றிருக்கிறது.
இந்நூல்
தூத்துக்குடியில் வாழும் பல மக்களின்
வாழ்க்கையை பிரதிநிதித்துவம் செய்வதையே முதல் கடமையாக கொண்டிருக்கிறது.
அவற்றை இணைக்கும் சின்னதான கோடாக மட்டுமே கதை
தேவைப்படுகிறது. காட்வின் அந்த இடத்தின் பெரிய
புள்ளி. அவருடைய மகன் அந்தோனி
படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் பலரின்
துணைக்கொண்டு வீட்டை எதிர்த்து வங்கம்
செல்கிறான். அங்கிருந்து லண்டன் என தனக்கான
வாழ்க்கையை நிரந்தரமாக்கிக் கொண்டான். மீனவப் பறவர்களில் ஒருவன்
பீட்டர். அவனுடைய அப்பாவை போராட்டமொன்றில்
மூங்கிலால் அடித்தே
கொன்றுவிட்டனர் சில அதிகாரவர்க்கத்தின் கூலிகள்.
அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனையை
பெற்றுத் தர முடியவில்லை. அதே
நேரம் அந்த கொலைகாரர்கள் எப்படியும்
பீட்டரையும் கொல்ல வேண்டும் என
துடிக்கின்றனர். இதனால் கடலிலேயே திரிகிறான்.
சோபியா அவன் காதலிக்கும் பெண்.
ஆனால் கன்னியாஸ்திரியாக இருக்கிறாள். இவையெல்லாமே காட்வினின் மரணத்தில் ஒன்றிணைகிறது.
எப்படியெனில்
காட்வின் தன்னுடைய சொத்தினை பீட்டரின் மேல் எழுதி வைக்கிறார்.
அதற்கு காரணம் பறவர்களுக்கு அந்த
பணம் சென்று சேர வேண்டும்
என்னும் சமூக எண்ணம். பீட்டருக்கும்
இந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது.
எப்படியேனும் இந்த மக்களின் அன்றாட
தேவைகளையும் உழைக்கும் பகுதிக்கான சன்மானத்தையும் கொடுக்க வேண்டும் என
போராடுக்கிறான். தெளிவாக சொல்லப்போனால் களப்போராளி.
அந்தோனி
வெளிநாட்டில் படிப்பு முடித்து வேலையில்
சேர்ந்து அங்கு ஒரு பெண்ணையும்
காதலித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவின் மரணத்தை அறிந்து வரும்
அவனுக்கு ஊரின் உண்மை நிலை
தெரிகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் சென்றவன் சுதந்திரத்திற்கு
பிறகே வருகிறான். அப்போதிருக்கும் உலகம் அவன் கற்பனை
கொண்டிருக்கும் விஷயங்களுக்கு எதிர்த்திசையில் இருக்கின்றன. இதை அவனால் ஜீரணிக்க
முடியவில்லை. திருத்த நினைக்கிறான். ஆனால்
களப்பணி செய்ய தகுதியானவனா ?
சோபியாவை
முன்மாதிரியாக வைத்து கிறித்துவ மதத்தையும்
கம்யூனிஸததையும் இணைக்கிறார் ஆசிரியர். பீட்டர் கம்யூனிஸத்தால் மக்களுக்கு
விடிவு ஏற்படும் என மிகையாக நம்பியவன்.
அப்படியானவனுக்கு கம்யூனிஸத்தின் மீது அவநம்பிக்கையே வருகிறது.
காரணம் பீட்டர் அன்றாடங்காய்ச்சிகளின் அடிப்படை தேவைகளை
பூரித்தி செய்ய வேண்டுமெனில் களத்திலிறங்கி
அவர்களுடன் அவர்களுக்காக போராட வேண்டும் என்றிருக்கிறான்.
செய்கிறான். ஆனால் கொள்கைவாதிகளோ நிகழும்
ஆட்சியினை தகர்க்க வேண்டும் என்பதிலேயே
மும்முரமாய் இருந்தனர். இந்த அதிருப்தியில் அவனே
சில நண்பர்களுடன் அதிகார வர்க்கத்தை எதிர்த்து
நிற்க ஆரம்பிக்கிறான்.
காட்வினின்
சொத்துகளை எப்படியேனும் அபகரிக்க வேண்டும் என சில அதிகாரவர்க்க
குழுமங்கள் தயாராக இருக்கின்றனர். அவர்கள்
எல்லோரையும் எதிர்த்து அந்தோனியால் செல்ல முடியவில்லை. கிட்டதட்ட
நாவல் முழுக்க அந்தோனியிடம் பெரிதான
கேள்வியொன்றே உருவாகிறது. அதை மிக மெதுவாக
பல கதாபாத்திரங்களுடன் ஏற்படும் விவாதங்களின் மூலம் ஆசிரியர் உருவாக்குகிறார்.
தர்க்கங்களாலும் வார்த்தைகளாலும் அறிந்த கொள்கைகள் யதார்த்தத்தில்
எந்நிலையில் உள்ளன என்பதை அவன்
மூலம் விளக்கி கொள்கைகளுக்கும் நிகழ்வுகளுக்குமான
இழைகளை தர்க்கமாக்குகிறார்.
ராமன் ஆசிரியர் போன்ற கதாபாத்திரங்கள் வருகின்றன.
இவர்கள் மூலம் ஆசிரியர் நாட்டியத்தின்
நுட்பங்கலை விரிவாக ஆராய்கிறார். அதை
வாசிக்கும் போதெல்லாம் தி.ஜானகிராமன் மோகமுள்
நாவலில் விவரித்திருக்கும் இசை நுணுக்கங்களே நினைவில்
எழுந்தன. இதைக் கூறும் அதே
கூற்றில் தேவதாசிகளுக்கான தேவைகளையும் சமூக ரீதியான அவர்களின்
அங்கீகரத்தையும் மிக விரிவாக பேசுகிறார்.
இந்த கதாபாத்திரங்கள் கூட பறவர்களுக்காக மோதும்
மக்களின் குரலுடன் கருத்தியல் ரீதியாக இணைகிறது. ராமன்
பரதம் கற்றுக் கொள்கிறான். அப்போது
ஆசிரியர் கூறுகிறார் சிருங்காரத்தின் ரசம் நாட்டியத்தில் வர
வேண்டுமெனில் நீ நிச்சயம் ஒரு பெண்ணையாவது சுகித்திருக்க
வேண்டும். இல்லையென்றாலும் பாவம் வரும். ஆனால்
அதில் கலையின் உயிர்ப்பு இருக்காது
என. இதைத் தான் பீட்டர்-அந்தோனியின் நட்பும் களப்போராட்டம் சார்ந்து
மீனவ பறவர்களின் வாழ்க்கை சார்ந்தும் கூறுகிறது.
எல்லா முரண்பட்ட கதாபாத்திரங்களிலும் அவர்களுக்குள்ளே இருக்கும் தர்க்கங்களில் எது ஜெயிக்கிறது என்பதை
நோக்கியே நாவல் நகர்கிறது. யதார்த்த
வாழ்க்கையில் இருக்கும் பரபரப்பு அங்கங்கு தெரியும் அழகியல் மற்றும் கடந்து
போன வரலாற்றிற்கான சுவடுகள் என அறிந்த எல்லாவற்றையும்
செறிவாக கதையினுள் புகுத்தி அளித்திருக்கிறார். சிப்பியினுள்ளிருந்து முத்து வருவது வலியின்
வெளிப்பாடு. அப்படியான வலியின் வெளிப்பாடாகத்தான் பறவர்
இனம் நாவலில் இருக்கிறது. அவர்களுடைய
கடல் செந்நீரால் நிரம்பியிருக்கிறது. அதிகாரத்தின் கலப்பில் அழுக்கடைந்து இருக்கிறது. அதனூடே எழும் அலைகளில்
எதிர்நீச்சலடிப்பவர்களின் கதையே சிப்பியின் வயிற்றில்
முத்து. நம்ப முடியாத ஒரே
விஷயம் இது ஒரு வங்க
நாவல் என்பது!
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக