முதலில்லாத காமமும் முடிவில்லாத காதலும்
ஆண்-பெண் உறவுகளைப் பற்றி
பேசும் படைப்புகள் எண்ணற்ற அளவில் வெளிவந்துள்ளன.
தமிழிலும் சரி பிற மொழிகளிலும்
சரி. ஆனாலும் சமகாலத்தில் அவற்றை
எழுதுவதற்கான தேவைகள் இருந்து கொண்டே
தான் இருக்கின்றன. இதற்கான காரணம் யாதாக
இருக்கும் ? இந்தக் கேள்விகளுக்கு இரண்டு
பதில்கள் கிடைக்கின்றன. ஒன்று க்ளாசிக் எழுத்துகள்
இந்த அரசியலை முழுமையாக பேசவில்லை.
அல்லது சமகாலத்தில் நவீனமான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இரண்டாவது காரணம் நம்ப முடியாதது
தான். ஏன் என்பதையும் சொல்கிறேன்.
உறவுகள்
சார்ந்தும் உடல் அரசியல் சார்ந்தும்
எழுதப்பட்ட படைப்புகள் இரண்டு விதமாக இருக்கின்றன.
ஒன்று வெளிப்படையாக காமத்தை பேசுவது. இரண்டாவது
மறைமுகமாக காமத்தை பேசுவது. இந்த
இரண்டாவதை தி.ஜாவின் எழுத்துகளில்
காணமுடியும். மோக முள் பக்க
அளவில் மிகப் பெரியதாக இருந்தாலும்
காமத்தை உடல்களின் வேட்கையை எந்த ஒரு இடத்திலும்
வெளிப்படையாக அவர் பேசவில்லை. இரு
உடல்கள் சம்போகிப்பதற்கான இடங்கள் இடம்பெறும் போதிலும்
அவற்றை அவர் கையாளவில்லை. ஆனால்
சம்போகம் நிகழ்ந்ததற்கான சுகந்தம் மட்டும் அந்தந்த பக்கங்களில்
இருக்கின்றன. இது எப்படி ? பூடகமாக
காமத்துள் இருக்கக்கூடிய வசீகரத்தை மிகச் சரியாக அந்த
எழுத்து பிடித்துவிட்டது என்பதே பொருள்.
க்ளாஸிக்
படைப்புகளை அணுகும் போது எல்லோருக்கும்
ஐயம் ஒன்று எழும். அது
எப்படி சமகால பிரச்சினையை இத்தனை
ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறான் இந்த
எழுத்தாளன் என்று. தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள்
ஃப்ராய்டின் தத்துவத்திற்கு உதவியிருக்கிறது. இன்று உளப்பகுப்பாய்வில் ஃப்ராய்டு
முண்ணனியில் இருக்கிறார். அதே மனோதத்துவம் குற்றம்
சார்ந்த புரிதல் மற்றும் தர்க்கம்
தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வாசிக்கும் போது இன்றைய நிலவியல்
சார்ந்ததாகவே தோன்றுகிறது. இந்த காரணத்தால் தான்
சமகாலத்தின் நவீன பிரச்சினை எழும்ப
வாய்ப்பில்லை என்கிறேன். அதே பிரச்சினைகள் நவீன
உருவை எடுத்துக் கொண்டிருக்கலாம். பிரச்சினை நிகழ்வதற்கான பிண்ணனி வேறாக இருக்கலாம்.
நாஞ்சில்
நாடனுடன் சமீபத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் வைத்த
கேள்வி நியாயமானதாக பட்டது. அதுவே இந்த
கேள்விக்கும் பதிலாக இருக்கக்கூடும். காதல்,
காமம், வீரம் எல்லாம் சார்ந்தும்
படைப்புகள் அதன் ஆழம் வரை
சங்ககாலம் முதற்கொண்டே வந்துவிட்டன. அப்படியிருந்தும் இன்றைய எழுத்தாளன் இதையே
ஏன் எழுத வருகிறான். அதற்கு
அவன் கொள்ளும் அனுபவங்களே காரணமாகின்றன. அனுபவத்தால் உணரும் போது ஏற்கனவே
இருக்கும் பிரச்சினைகளின் தன்மை புரிகிறது. அப்பிரச்சினையின்
விளைவினால் ஏதோ ஒரு எல்லைக்கு
செல்கிறான். சில நேர்மறையாகவும் சில
எதிர்மறையாகவும் இருக்கின்றன. அவற்றை பொதுமைபடுத்தும் போது
இலக்கியமாகிறது. காலம் பல சென்றாலும்
அவை கோட்பாடுகளாகின்றன. அப்படி பொதுமைபடுத்திய ஆண்-பெண் உறவை மையப்படுத்தும்
நாவலொன்றை வாசிக்க நேர்ந்தது. அது
கன்னடத்தில் ஶ்ரீரங்க எழுதிய “முடிவில்லாததும் முதலில்லாததும்”
ஆகும். தமிழில் ஹேமா ஆனந்ததீர்த்தன்
மொழிபெயர்த்துள்ளார்.
மூன்று
கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஆண்-பெண் உறவு
சார்ந்த குழப்பங்களை ஆசிரியர் நீண்ட தர்க்கமாக்கியிருக்கிறார். நாவல் முதலில்லாததும்
என்று ஒரு பாகமும் முடிவில்லாததும்
என இன்னொரு பாகமும் கொண்டிருக்கிறது.
இப்படி வைத்ததற்கான காரணார்த்தத்தை பின்வருமாறு இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார். அஃதாவது,
“காமம்
முதலில்லாதது, அதற்கு முடிவும் இல்லை.
காதல் முடிவில்லாதது, அதன் முதலை அறியவும்
முடியாது.
முதலில்லாததும் முடிவில்லாததும் காமம், முடிவில்லாததும்
முதலில்லாததும் காதல் ஆகையால் காமம் என்றால் காத-"
முதலில்லாததும் முடிவில்லாததும் காமம், முடிவில்லாததும்
முதலில்லாததும் காதல் ஆகையால் காமம் என்றால் காத-"
கதையளவில்
பார்க்கும் போது நாவல் மூன்றாக
பிரிந்திருப்பதாக தோன்றுகிறது. ராமண்ணா ஒரு எழுத்தாளன்.
அவனது மனைவி சரளா. அவள்
நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். அவளுக்கு சிசுருஷை செய்வதற்காக ஊரிலிருந்து அவளுடைய தங்கை குமுதாவை
அழைக்கின்றனர். அவள் மீது மோகிக்கிறான்
ராமண்ணா. இறப்பதற்குள் ராமண்ணாவிற்கு இன்னுமொரு மணம் செய்து பாத்துவிட
வேண்டும் என நினைக்கிறாள் சரளா.
ராமண்ணாவிற்கும் குமுதாவிற்குமான காமம் திருமணத்தில் முடிகிறது.
கிட்டதட்ட இந்த மணம் தான்
நாவலின் மையம். இந்த மணத்திற்கு
முன்னும் பின்னும் ராமண்ணா மற்றும் குமுதாவின்
மன ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதை
விவரிப்பதிலேயே நாவல் முழுமைக்கும் நகர்கிறது.
இந்தக்
கதை எப்படி மூன்றாக பிரிந்திருக்கிறது
எனில் முதலில் ராமண்ணா-சரளா
உறவு. சரளாவின் மேல் ராமண்ணாவிற்கு காதல்
இருக்கிறது. அதே நேரம் குமுதாவுடனான
கள்ள உறவு சரளாவிற்கு தெரிந்துவிடுமோ
என்னும் பயமும் இருக்கிறது. தான்
செய்தது தவறோ எனும் எண்ணத்தையும்
கொள்கிறான். சரளாவிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என
அவளுடனேயே இருக்கிறான். சரளாவிற்கு எப்படியும் கணவன் சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்னும் எண்ணம். அதற்காக
மணம் செய்து கொள்ள சொல்கிறாள்.
இந்த கேள்வி ராமண்ணாவிற்கு அவனுடைய
நடத்தை சார்ந்து எழுப்பப்பட்ட கேள்வியாக அமைகிறது. இதன் முடிவில்லா தர்க்கத்தில்
அவன் திளைக்கிறான். இந்தக் கதையை மையக்கதையின்
பின்புறம் நிழலாட விட்டிருப்பது அற்புதமாக
இருக்கிறது.
இரண்டாவது
ராமண்ணா-குமுதாவுடனான உறவு. இந்த உறவிலும்
தன்னையே கேள்வி கேட்டுக் கொள்கிறான்.
எது தன்னை குமுதாவின் பக்கம்
இழுத்தது என. குமுதாவுடனான உறவு
நிகழ்ந்த உடன் ஏற்படும் குற்றவுணர்வு
சரளா பக்கம் ராமண்ணாவை சாய்க்கிறது.
குமுதா தன்னை விபச்சாரியாக கற்பிதம்
கொள்வதில் குறியாக இருக்கிறாள். இந்த
அடையாளத்தை உடைக்க வேண்டுமெனில் சரளாவுடனான
உறவிலிருந்து ராமண்ணா வெளிவர வேண்டும்.
இந்த எண்ணம் கொடுமையானதல்லவா ? ஆனாலும்
இந்த எண்ணத்தால் முன்னும் பின்னும் ஆட்டிவைக்கப்படுகிறாள் குமுதா. அவளுக்கு இல்லற
வாழ்க்கையின் சூட்சுமம் காமம் மட்டுமல்ல என்பதை
மாமியார் கற்றுக் கொடுக்கிறார். அந்த
படிப்பினைகள் மூலமே அவள் தான் காமத்தின்
சொரூபம் மட்டுமே என்பதை அறிந்து
கொள்கிறாள். கிட்டதட்ட வீழ்ச்சியிலிருந்து வெளிவர முயலும் பெண்ணாக
குமுதா நாவலில் இருக்கிறாள்.
மூன்றாவது
ராமண்ணா. அவன் எழுத்தாளன். அவனால்
ஆணின் பார்வையை மையப்படுத்தி மட்டுமே எழுத இயலும்.
உண்மையிலேயே பெண்கள் வசம் இருந்த
பிரச்சினைகள் என்ன அவர்களின் தேவைகள்
என்ன என்பதை அவனால் ஒருக்காலும்
எழுதவியலாது என்பதை சரளா கூறுகிறாள்.
துஷ்யந்தன் – சகுந்தலையின் கதையை மையமாக கொண்டு
நிகழ்த்தப்படும் எல்லா விவாதங்களுமே படைப்பினூடாக
தெரியும் ஆணாதிக்க குணத்தை வெளிப்படையாக்குகிறது. உறவுகளின் சிக்கலை
அவனால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடிவதில்லை. கொள்கையின்
சிறுவட்டத்தினுள் சிக்கிக்கொண்டிருக்கிறான் என்பதையே படைப்பு ரீதியான அவனது
வாழ்க்கை நாவலினூடே வெளிச்சமாகிறது.
இந்நாவலின்
அற்புதமான விஷயங்களுள் ஒன்று இதன் கட்டமைப்பு.
தெளிவாக சொல்ல வேண்டுமெனில் முதல்
அத்தியாயத்தில் இரண்டு பாத்திரங்களால் நிறைந்த
சம்பவமொன்று நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அதை ஆண் பாத்திரத்தின் வாயில்
அவர் கூறுகிறார். அடுத்த அத்தியாயத்தில் அதே
சம்பவம் அங்கிருந்த பெண்பாத்திரத்தின் வாயிலில் கூறப்படுகிறது. பின் அடுத்த சம்பவம்
அங்கேயே தன் ஆரம்பத்தை கொள்கிறது.
சங்கிலித் தொடர் போல மிகச்
சிறிய சம்பவங்களும் அங்கே இருந்த கதைமாந்தர்களின்
குணங்களும் என பிண்ணிப்பிணைந்து முழுமையை
சென்றடைகிறது. இதை வாசிக்கும் பட்சத்தில்
நாவல் சோர்வினை ஏற்படுத்துமோ என எண்ணம் எழக்கூடும்.
ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் அந்த
சம்பவங்கள் நிகழும் இடங்களில் என்ன
மனநிலையில் இருந்தன என்பதை துல்லியமாக
காட்டியிருக்கிறார்.
நாவலில்
இரண்டு பெரும் குறைகள். இந்நாவலை
எழுதப்பட்ட காலத்தில் மட்டுமே வைத்து பார்க்க
முடியும். காரணம் பெண்களை முடக்கி
வைக்க நினைக்கும் ஆணாதிக்கத்தனங்களை நியாயப்படுத்துகிறது நாவல். இரண்டாவது நாவலின்
கரு. ஜெயமோகனின் இணையதளத்தில் தஞ்சை பிரகாஷுடன் ஶ்ரீரங்க
செய்த உரையாடல்கள் இருக்கின்றன. அதில் தஞ்சை பிரகாஷ்
இந்நாவல் சார்ந்து கூறிய விஷயம் மிகச்
சரியானது. அது,
"ஒரு கூழாங்கல் இன்னொன்றுடன் உரசும் சம்பவத்தைச் சொன்னாலும்
கூட பிரபஞ்ச இயக்கம் தரும்
பெருவியப்பை அதில் காட்டிவிட கவிஞனால்
முடியவேண்டும். உங்கள் நாவல் மானுடஉறவின்
கதை மட்டுமே. `உறவு’ என்ற ஆன்மிக
பிரச்சினையின் கதை அல்ல’’
குறைகள்
இருந்தாலும் நாவலில் இருக்கும் வசீகரம்
ஈடுஇணையற்றது என்பதற்கு என்வசம் மாற்றுக்கருத்து இல்லை.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக