கடந்த சென்னை புத்தக திருவிழாவில்
காலச்சுவடு பதிப்பக அரங்கத்தில் சில
புத்தகங்களை இலவசமாக தருவதற்கென்றெ வைத்திருந்தார்கள்.
குறிப்பிட்ட தொகையினை கடந்து வாங்குபவர்களுக்கு அதிலிருந்து
இத்தனை நூல்கள் தரப்படும் என்னும்
அறிவிப்புடன் இருந்தது. அப்படி எனக்கு எடுத்துக்
கொள்ள வாய்ப்பு கிடைத்த போது மூன்று
சின்ன நூல்களை எடுத்துக் கொண்டேன்.
அதில் ஒன்று 1994 முதல் 2000 ஆண்டுவரை காலச்சுவடு சிறுபத்திரிக்கையில் வெளியாகியிருந்த மொழிபெயர்ப்பு
சிறுகதைகளின் தொகுப்பு. இதை நூலாக தொகுத்திருப்பவர்
கண்ணன். அந்நூல் “மௌனப் பனி ரகசியப்
பனி”. எனக்கு இந்த தலைப்பும்
அத்தலைப்பிலான கதையும் சுத்தமாக பிடிக்கவில்லை.
அதனால் ஒவ்வொரு வரியிலும் என்னை
ஈர்த்த, நான் கொண்டாடிய இதே
தொகுப்பில் இருந்த கதையின் தலைப்பையே
கட்டுரைக்கு வைத்திருக்கிறேன். அது தான் “அவன்
என்னை குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்”. இதை எழுதியவர் ப்யூனஸ்
அயர்ஸில் பிறந்த ஃபெர்னான்டோ ஸோரன்டினோ
ஆவார். இவருடைய மொழிபெயப்பு சிறுகதை
தொகுப்பும் காலச்சுவடில் கிடைக்கிறது – ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்னும் தலைப்பில்.
இந்நூலுக்கு
வருவோம். மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அல்லது நாவல்கள் வாசகனுக்கு
நல்ல கதையை அடையாளம் காண்பதற்கு
தேவையான நுண்மையை அளிக்கிறது. படிப்பினையும் அனுபவமும் கலந்ததான ஒன்று. உலகத்தரத்தில் சிறுகதையினை
அணுகும் போது பொதுமையாக ஒரு
விஷயத்தை எப்படியெல்லாம் முன்வைத்திருக்கிறார்கள் என்றும் ஒரு பிரச்சினையை
புனைவின் மூலம் அணுக நேரும்
போது அது எப்படி ஒழுங்குடன்
உருக் கொள்கிறது என்பதையும் நம்மால் அறிய முடியும்.
மேலும் மொழிபெயர்ப்பினை நம்மால் எப்போதும் மிக
அருகில் அனுபவிக்க முடியாது. வேற்று மொழி இலக்கியங்களை
என்னதான் தேர்ந்த அளவில் மொழிபெயர்த்தாலும்
அதற்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி நிச்சயம்
இருக்கும். அதைத் தாண்டிச் செல்லும்
பார்வையில் அவன் இலக்கியத்திற்கான கோட்பாடுகளை
கண்டடைகிறான்.
தமிழில்
வெளியாகும் இலக்கியங்களுடன் நம்மால் எளிதில் ஒன்றிவிட
முடியும். அதை பிரித்தறிதல் கடினமான
விஷயமாகிறது. அன்றாடங்களுடன் அவை இணைகிறது. அதே
ரேமண்ட் கார்வரின் சிறுகதையை மொழிபெயர்ப்பின் வாயிலாக வாசிக்க நேரும்
போது யதார்த்தத்துடன் ஒன்றுவது போலவும் அதே நேரம்
வேறு ஒரு பிராந்தியத்தில் நிகழும்
சம்பவம் போலவுமாக தோற்றத்தை அளிக்கும். இங்கே தேர்ந்த வாசகனுக்கு
தரிசனம் ஒன்று கிடைக்கிறது. அதாவது
வாசகன் வேறு ஒரு நிலத்திலும்
ஆசிரியன் வேறு ஒரு நிலத்திலும்
இருப்பினும் இருவரையும் நிலம் சார்ந்த ஏதோ
ஒரு பிரச்சினை, அது அகம் சார்ந்ததோ
புறம் சார்ந்ததோ ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இந்த
இழையை வாசகன் பற்றிக் கொள்ளும்
தருணத்தில் படைப்புகளை தேர்ந்தெடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறான்.
இதை முழுமையாக்க உதவுவது மொழிபெயர்ப்பாளர் கைகளில்
தான் இருக்கிறது. அதை செவ்வனே செய்யும்
தருணத்தில் மூல எழுத்தாளரின் கரு
முழுமையாக வாசகனுக்கு சென்றடைகிறது. அப்படி செறிவான பதினாறு
கதைகளை இத்தொகுப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. முன்னுரையில் கண்ணன் ஆற்றாமையுடன் கலந்த
பெருமிதத்தை இந்நூலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆறு ஆண்டுகளில்
பதினாறு மொழிபெயர்ப்பு கதைகள் எனில் எண்ணிக்கை
அளவில் அது குறைவே. ஆனால்
அவற்றினூடே இருக்கும் பரிசீலனைக்கான வேலை மொழிபெயர்ப்பின் செழுமையை
நிர்ணயம் செய்கிறது. அவ்விதத்தில் இந்நூல் நிச்சயம் பொக்கிஷமாக
கருதவேண்டியதே.
ஒரு தொகுப்பு என எடுக்கும் பட்சத்தில்
எல்லா படைப்புகளும் பிடித்துப் போகும் என்று சொல்ல
முடியாது. அவ்வகையிலேயே இத்தொகுப்பும் எனக்கு அமைந்தது. ஆனால்
ஒரிரண்டு கதைகளை தவிர்த்து எல்லா
கதைகளையும் வெகுவாக ரசித்தேன். புனைவினை
உருவாக்க யதார்த்தத்தை எப்படி அணுகியாள வேண்டும்
என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு யசுனாரி
கவாபட்டா. அவரின் கதைகள் மிகச்சிறிய
அளவிலேயே வாசித்திருக்கிறேன். அந்த அளவில் அவர்
உருவாக்கும் புனைவுகள் யதார்த்தத்தை ஒட்டியே செல்கின்றன. இத்தொகுப்பிலும்
அவருடைய மச்சம் மற்றும் வெட்டுக்கிளியும்
சில்வண்டும் என்னும் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்விரண்டில் மச்சம் மிகச்சிறந்த கதை.
மச்சம் தனித்தன்மையானது. அவற்றை கொண்டிருப்பவர்கள் எப்படி
அணுகுகிறார்கள், அதை அணுகுவதை பார்க்கும்
மற்றவர்களுக்கு மச்சமும் அதை கொண்டவர்களும் எப்படி
இருக்கிறார்கள் என்னும் துவந்துவத்தை கதையாக்கியிருக்கிறார்.
நாயகி மச்சத்தை நிமிண்டிக் கொண்டே இருக்கிறாள். அது
சுற்றியிருப்பவர்களுக்கு பிடிப்பதில்லை. அவர்கள் எல்லோரின் அறிவுரைகளையும்
அவள் வாங்கிக் கொள்கிறாள். ஆனால் ஏன் அவர்கள்
வெறுப்பினை உமிழ்கிறார்கள் என்பதே சிறுகதையின் பாடுபொருளாக
இருக்கிறது. இன்னமும் சொல்லப் போனால் பழக்கத்தினை
மாற்ற நினைக்கும் சுற்றத்தின் தன்மையை இக்கதை தெளிவாக
ஆராய்கிறது.
பழக்கம்
எனும் போது தான் இக்கட்டுரை
தலைப்பிற்கான கதை நினைவிற்கு வருகிறது.
அக்கதையின் நாயகனை ஒருவன் குடையால்
அடித்துக் கொண்டே இருக்கிறான். இவ்வளவு
தான் கதையே. அவன் ஏன்
அடிக்கிறான் என்பதும் கதையில் இல்லை. அடிப்பதை
நிறுத்துகிறானா என்பதும் அக்கதையில் இல்லை. மாறாக ஒட்டிக்
கொள்ளும் விஷயம் எப்படி அன்றாடமாக
மாறுகிறது என்பதை மிக நுண்மை
நிரம்பிய படைப்பாக்கியிருக்கிறார். பழக்கத்தை சுற்றியிருப்பவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறோம். அதை தமதாக்கிக் கொள்கிறோம்.
அப்போது ஏற்படும் கேள்வி அதை விட்டுவிட்டு
நம்மால் வாழ முடியுமா ? அன்றாடம்
இயல்பாக நகருமா ? ஒட்டிக் கொள்ளும் பழக்கம்
சுயத்தை எப்படி திண்கிறது என்பதை
அதன் ஆழம் வரை சாதாரணமாக
ஆசிரியர் கூறிச் செல்கிறார்.
இடாலோ கால்வினோவின் இரண்டு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன
– ஒரு மனைவியின் சாகசம் மற்றும் ஆதாம்,
ஒருமாலைப்பொழுது. இவ்விரண்டு கதைகளுமே குணத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட விஷயங்களின் மேல், விழுமியங்களின் மேல்
வெளிச்சத்தை செலுத்துகின்றன. முதல் கதையில் மனைவி
என்பவளுக்கு சமூகம் என்ன என்ன
விதிகளை வைத்திருக்கிறதோ அதை எல்லாவற்றையும் சாதாரணமாக
மீறுகிறாள் நாயகி. அதன் பிறகே
அவள் தர்க்கத்தை ஆரம்பிக்கிறாள் தான் செய்தது சரியா
என. இரண்டாம் கதையில் ஆண் குணம்
மட்டுமே நிரம்பிய ஒருவனும் பெண் குணம் மட்டுமே
நிரம்பிய பெண்ணும் சந்திக்கிறார்கள். ஆண் தன் ரசனைக்கேற்ற
விஷயங்களை பரிசாக கொடுக்க நினைக்கிறான்.
பெண் அருவருப்பாகிறாள். ஆனால் அப்படியே இருந்துவிட
முடியுமா என்ன ?
இடாலோ கால்வினோவின் கதைகளை சொல்லும் போது
மற்ற மனைவி என்னும் கதை
இடம்பெற்றிருந்தது நினைவிற்கு வருகிறது. இதை எழுதியவர் ஃப்ரெஞ்சு
எழுத்தாளர் கோலேத். உணவு விடுதிக்கு
கணவனும் மனைவியும் சாப்பிட செல்கிறார்கள். அங்கே
கணவனின் முன்னாள் மனைவி சற்று தள்ளி
அமர்ந்திருக்கிறாள். அவளை கதையின் முன்னால்
கொண்டுவராமல் ஆனால் அவளை மட்டுமே
மையப்படுத்தி இருவரின் உணர்வுகளை அட்டகாசமாக முன்வைத்திருக்கிறார் ஆசிரியர்.
சாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள்
இரண்டு இடம்பெற்றிருக்கின்றன. அவை படபடப்பான தருணங்களை
கலைத்தன்மையுடன் பேசுகின்றன. பிரிவினை காலத்தை மையப்படுத்திய கதையம்சத்தில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்புகளாக அவை இருக்கின்றன. டினோ
புஸாட்டி எழுதிய விழுந்துகொண்டிருக்கும் பெண் சிறுகதையும்
தருணத்தை விவரிக்கும் சிறுகதை தான். சின்னதான
நொடியினை புனைவினூடே பூதாகாரமாக மாற்றுகிறார் ஆசிரியர்.
மார்ட்டின்
லூயிஸ் கஸ்மான் எழுதிய துப்பாக்கிக்
குண்டுகளின் திருவிழா இரத்தங்களாலான திடலையும் அதன் உருவான விதத்தையும்
ஒவ்வொரு நுட்பத்தையும் விளக்கும் வண்ணம் மனிதமற்ற தன்மையை
கலையாக முன்வைக்கிறது. இதே போன்ற இன்னுமொரு
கதை பெண்ணின் இடத்திலிருந்து பேசுகிறது. அது ஜான் ஸ்டீன்பெக்
எழுதியிருக்கும் பாம்பு. இதில் பெண்ணினுள்ளே
இருக்கும் மூர்க்கம் வசீகரமானதாய் அதே அருகிலிருக்கும் ஆணிற்கு
அச்சமூட்டுவதாய் இருப்பதை நுண்மையாக கூறியிருக்கிறார். ஐசக் அசிமோவின் யந்திர
மனிதனின் கனவு யதார்த்தத்தில் இருக்கும்
போராட்டமான மனித வாழ்க்கையை விஞ்ஞான
புனைவிற்குள் எப்படி கொண்டு செல்ல
வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறது.
மொத்த தொகுப்பில் சிறந்த கதையாக நான்
கருதுவது கனடிய எழுத்தாளரான மார்க்ரெட்
அட்வுட் எழுதி அம்பை மொழிபெயர்த்திருக்கும்
சந்தோஷமான முடிவுகள் என்னும் கதை. கதை
எப்போதும் பன்முக தன்மையினையும் பன்முக
கிளைகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை யார் வேண்டுமெனினும்
எங்கிருந்து வேண்டுமென்றாலும் விசாலப்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஆசிரியரே விசாலமாக்கும்
ஒரு கதை தான் இது.
ஆதியும் அந்தமும் ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையுடன்
சொல்ல வேண்டுமெனில் பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் ஒன்று தான். ஆனால்
இடையில் ஊசலாடும் வாழ்க்கை எண்ணற்ற சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கிறது.
அதில் எதை மனிதன் தேர்ந்தெடுக்கிறான்
என்பதில் தான் அர்த்தம் பொதிந்திருக்கிறது.
அதை சின்ன சின்ன tale களோடும்
அதை இணைக்கும் நான்-லீனியர் தன்மையோடும்
வியக்கவைக்கிறார் ஆசிரியர்.
மொத்த தொகுப்பும் ஆரம்பத்தில் சொன்னது போன்று படிப்பினையாகவும்
தேர்ந்த வாசிப்பிற்காகவும் ஆவணமாக வைக்கப்பட வேண்டிய
தொகுப்பாகவும் இந்நூல் விளங்குகிறது. எல்லோரின்
மொழிபெயர்ப்பும் சோடையின்றி கதையின் உணர்வுகளை சிதையாமல்
கொடுத்தே செல்கிறது. இத்தொகுப்பை முடிக்கும் போது ஒரே ஒரு
கேள்வி என்னுள் தொக்கி நின்றது.
ஒருவேளை இந்நூலை இலவசமாக கொடுக்காமல்
இருந்திருந்தால் நான் கண்டிராமலே போயிருப்பேனோ
? விடை மட்டும் கிடைக்கவில்லை!
1 கருத்திடுக. . .:
சுவாரஸ்யமான கதைகள்...
Post a comment
கருத்திடுக