தேவிபாரதியிடம்
சமீபமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது அவருடைய நிழலின்
தனிமை நாவலை நெடுங்கதை என்றே
சொன்னார். இன்னமும் தெளிவாக எனில் சிறுகதையாக
எழுத ஆரம்பித்தது பக்கங்களை கடந்து சென்றது என்றார்.
யோசித்துப் பார்க்கையில் உண்மைதான் என்றே தோன்றுகிறது. நாவல்
வாழ்க்கையின் பெரும் பகுதியை, காலத்தை
பேசுகிறது. அதையும் பன்முகப் பார்வையில்
பேசுகிறது. சிறுகதை வாழ்க்கையின் சின்னதான
அசைவை கூறுகிறது. நிழலின் தனிமை அப்படியானதொரு
படைப்பு தான். பழிவாங்குதலை மையமாக
வைத்து அதை நோக்கிய குறுகிய
கால நகர்வை மையப்படுத்துகிறது. அதனூடே
தர்க்கங்களையும் தத்துவார்த்தங்களையும் பேசுகிறது. ஜெயமோகன் தன்னுடைய நாவல் கோட்பாட்டிலும் இதையே
முன்மொழிந்திருப்பார். இங்கே இதைக் கூறுவதன்
காரணம் சிறுகதையான மையத்தை பெரிய அளவில்
எழுதப்பட படைப்பொன்றை இன்று அணுக நேர்ந்தது.
அது இந்தி மொழியில் 1965இல்
வெளியான ஜைனேந்திர குமாரின் “அற்றது பற்று” நாவல். என்.ஶ்ரீதரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நாவல் சாகித்ய
அகாதெமி விருது வாங்கியது முக்கியமான
விஷயமாகும்.
கொள்கைவாதிகளின்
அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் ? இந்தக்
கேள்வி மூன்றாமவனாக யோசிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது.
அதற்கு காரணம் கொள்கைவாதி எதிலும்
தன்னுடைய வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் காண விரும்புகிறான். அடுத்தவர்களின்
சுதந்திரத்தைத் தாண்டி தன்னுடைய விஷயங்களை
நிலைநாட்ட எண்ணுகிறான். அதில் தனிமனித சுகம்
காண்கிறானா எனில் நிச்சயம் இல்லை.
அர்த்தமற்ற தேடலாகவே முடிகிறது. அதை ஒருவன் உணர்ந்தும்
அதை நோக்கிய பயணத்தையே மேற்கொள்கிறான்.
கொள்கை காலநேரத்திற்கொப்ப தளர்க்கப்படவும் வேண்டும். இல்லையெனில் யதார்த்த வாழ்க்கையுடனான தொடர்பில் நீளமானதொரு இடைவெளி ஏற்படுவதற்கான பெரிய
வாய்ப்புகள் இருக்கின்றன.
இதே கொள்கைவாதி ஒருக்கணம் கொள்கையினின்று தளர்த்திக் கொண்டு உலகை பார்த்தால்
எப்படி இருக்கும் ? அவனுக்குள் இருக்கும் கொள்கைகளால் சூழப்பட்ட உலகை விட்டு யதார்த்தமான
உலகின் மேல் பற்று கொண்டால்
? அத்தருணத்தில் கொள்கைகளால் கிடைத்த மனிதர்களின் மனநிலை
எப்படி இருக்கும் ? உண்மையில் யதார்த்தம் அந்த மனிதனை ஏற்றுக்
கொள்ளுமா ? இப்படியான முரண்பட்ட எண்ணற்ற கேள்விகளை விளக்குகிறது
அற்றது பற்று நாவல்.
ஸஹாய் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கிறார். இங்கு தான் நாவல்
ஆரம்பம் கொள்கிறது. ராஜஶ்ரீ அவருடைய மனைவி.
கணவனின் வாக்குகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்பதில் முனைப்புடன் இருப்பவள். அதே நேரம் நாசூக்காக
தன்னுடைய விமர்சனங்களையும் முன்வைப்பவள். டாகுர் ஸஹாயின் வலக்கை
போன்று. அவரால் அரசியலில் முன்னேற்றம்
அடைந்தவர். குடும்பத்தில் நன்மதிப்பை பெற்று குடும்பத்துடன் அன்னியோன்யமாக
இருப்பவர். வீரேஸ்வர் ஸஹாயின் மகன். ஆனால் பற்று
இல்லாமல் இருக்கிறான். அப்பாவின் அதிகாரத்தினடியில் இருக்கக் கூடாது என நினைப்பவன்.
அதே நேரம் அவனுடைய சுய
சிந்தனைக்கு அப்பாவே முட்டுக் கட்டையாக
இருக்கிறார். ஸஹாயின் மாப்பிள்ளை தொழிற்சாலையில்
வேலை செய்பவர். கிட்டதட்ட முதலாளி போன்று. நீலிமா ஸஹாய்க்கு பழக்கமான பெரிய இடத்துப் பெண்.
இவர்களை மையப்படுத்தி நிகழும் சம்பவங்களே நாவலாகின்றன.
ஸஹாயின்
அரசியல் வாழ்க்கையில் கிடைக்கும் அதிகாரம் கொண்டு பலர் வாழ
நினைக்கின்றனர். அதில் சிலர் நேர்மையாக
இருக்கின்றனர். ஸஹாய்க்கு ஆன்ம ஞானத்தை தேடி
செல்ல வேண்டும் என்னும் முடிவில் ஸ்திரமாக
இருக்கிறார். வகிக்கும் பதவியை ராஜினாமா செய்துவிடலாம்
என எண்ணுகிறார். அதற்கு காரணம் காந்தியின்
பாதையில் முழுமையாக தன்னை அர்பணிக்க எண்ணுகிறார்.
காந்தியின் பாதை அகம் சார்ந்தது.
அகம் அமைதியாக இருக்கும் பட்சத்தில் முழுமையாக போராட்டத்தில், அஹிம்ஸையில் லயிக்க முடியும் என்னும்
முடிவில் இருப்பவர். மேலும் உழவர்களுடன் இணைந்து
அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளை அறியும் முனைப்பிலும் இருக்கிறார்.
இது காலைப்பனி போல ஸ்திரமாக இல்லாமல்
இருக்கிறது.
மகன் வீரேஸ்வரை டாகுர் தன்னுடைய பண்ணையில்
வைத்திருக்கிறார். அதற்கு காரணம் ஸஹாய்
தன்னுடைய மகனை விவசாயத்தில் ஈடுபட
ஆர்வமுடன் இருக்கிறார். அதற்கான காரணம் மக்களுடனான,
மக்களுக்காக நேரடி உழைப்பை நல்குவது
விவசாயம் தான் என்பதில் தீர்க்கமாக
இருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை கம்பளி
போர்வையினை உள்ளுரிலேயே தயாரிக்கலாம் என்னும் முடிவில் வீரேஸ்வரை
தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைக்கிறார். மேலும்
நவீனத்திற்கு ஏற்றாற் போலவும் வீரேஸ்வரின்
படிப்பிற்கு ஏற்பவும் தொழிற்சாலையில் வேலையில் சேர்க்கலாம் என மாப்பிள்ளை முடிவு
செய்கிறார். ஸஹாய்க்கும் மாப்பிள்ளைக்குமான மோதல் இந்த கருத்து
ரீதியில் நிலைகொள்கிறது.
ஸஹாயினை
சுற்றியே நாவல் முழுக்க நகர்கிறது.
யாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறார் அவர்
என்பதற்கான பதிலாகவே ஒவ்வொருவருடனான உறவும் நாவலில் பேசப்படுகிறது.
எல்லா உறவுகளிலும் அவருடைய வீழ்ச்சிக்கான காரணம்
கொள்கையாகவும், அவருடைய தேவைக்கான காரணம்
வகிக்கும் பதவியாகவும் இருக்கிறது. இந்நிலையில் தனிப்பட்ட முடிவான பதவியினை துறப்பது
சார்ந்து அவர் வைக்கும் முடிவு
பலரின் பேராசைக் கனவுகளை சீர்குலைக்கிறது. எல்லோரும்
முனைந்து அவரின் முடிவை பரிகசிக்கிறார்கள்,
விமர்சிக்கிறார்கள், ஆமோதிக்கிறார்கள். எல்லாமே அவரவர்களின் தேவைகளை
பொறுத்தும் அவர்களிடையே உருக்கொண்டிருக்கும் ஸஹாயின் குணத்தை பொறுத்தும்
அமைகிறது. இந்நிலையில் முடிவு என்ன ஆகிறது
என்பதை நோக்கிய தர்க்கங்களாக நாவல்
நகர்ந்து முழுமையினை பெறுகிறது. முடிக்கும் போது தான் சிறுகதைக்கான
பிரதான உணர்வான சின்னதான நகர்வை
நம்மால் உணர முடிகிறது.
நாவலில்
இருக்கும் பிரதான குறை ஒற்றத்தன்மையில்
பயணிப்பது. மேலும் உரையாடல்களும் உயிர்ப்புடன்
இல்லை. கதையின் கடைசியில் ஸஹாயின்
முடிவு யாதாக இருக்கும் என்னும்
ஒற்றை நோக்கமே வாசிக்க வைக்கிறது.
இதற்கு தோதாய் நாவலின் கடைசியில்
ஜைனேந்திர குமார் இலக்கியம் சார்ந்து
எழுதிய சின்ன பத்தியையும் கொடுத்திருக்கிறார்.
அதில் இலக்கியம் ஆழம் நோக்கி செல்ல
வேண்டும். அதில் எப்பிழை இருப்பினும்
அதை பொருட்படுத்த தேவையில்லை என்றார். அதனால் வாயடைத்து எதிர்விமர்சனத்தை
குறைத்துக் கொள்கிறேன்.
ஸஹாயின்
குழப்பவாத நொடிகளை அதிகமாக ரசித்தேன்.
தர்க்கங்கள் மூலமாக கதாபாத்திரத்தை உருக்கொடுக்க
முடியும் என்பதையும் இந்நாவலில் அறிந்தேன். தனிமனித சித்தாந்தங்கள் தோல்வியுற்று
மனிதர்களுக்கான போராட்டமாக மாற்றுவதை இலக்கியம் அதிகமாக பார்த்திருக்கிறது. இந்நாவல்
அதன் எதிர்த்திசையில் பயணிப்பது நிச்சயம் சவாலான ஒன்று தான்.
அற்றதின் மீதான பற்று இறுக்கமாக
இல்லாமல் இருக்கிறது என்பதே என் சின்ன ஏமாற்றம்.
1 கருத்திடுக. . .:
நூலின் தலைப்பும் ஈர்க்கிறது...
Post a comment
கருத்திடுக