நான்கு சுயங்களின் கதை
மலையாள
இலக்கியம் சார்ந்த பரிச்சயம் வெகு
சில எழுத்தாளர்களால் மட்டுமே எனக்கு நிறைவேறியிருக்கிறது.
அதில் பிடித்தவரும் குறிப்பிட வேண்டியவருமானவர் எம்.டி.வாசுதேவன்
நாயர். நாலுகட்டு மற்றும் இரண்டாம் இடம்
ஆகிய நாவல்கள் அவருடைய எழுத்து சார்ந்த
புரிதலை எனக்கு அளித்தது. இதில்
இன்னுமொரு சிறந்த விஷயம் யாதெனில்
அவ்விரண்டு நாவல்களின் மொழிபெயர்ப்பு. இரண்டுமே தமிழில் எழுதப்படும் நாவலையொத்ததான
மொழியினை கொண்டுள்ளது. இதே போன்ற அருமையான
மொழிபெயர்ப்பில் அவருடைய இன்னுமொரு நூலும்
இருக்கிறது. தையல் வெளியீடான “குட்டியேடத்தி”.
இதில் நான்கு நெடுங்கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால் யார் மொழிபெயர்த்தார்கள்
அல்லது வாசுதேவன் நாயர் தமிழிலேயே எழுதியதா
போன்ற எந்த குறிப்புகளும் இல்லை.
பதிப்பாளரின் சிறியதான குறிப்பு ஒன்று உள்ளது. அது
உள்ளிருக்கும் முதல் கதை சம்மந்தப்பட்டதாக
மட்டுமே முடிந்துவிடுகிறது.
எப்படியிருந்தாலும்
இந்த தொகுப்பு தொகுக்கப்பட்ட விதத்திலும் சரி ஒவ்வொரு கதையின்
அளவிலும் சரி ஆழமானதாகவும் மையம்
கொண்டதாகவும் இருக்கிறது. இந்த மையம் எம்.டி.வாசுதேவன் நாயரின்
கதைகளிலேயே நம்மால் பொதுமையில் காண
முடியும். நாலுகட்டு நாவல் அப்புண்ணியை மையமாக வைத்து குடும்பத்தின் சிதைவையும் அதனூடே இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகள்
மற்றும் அரசியலையும் முன்வைத்திருப்பார். இரண்டாம் இடத்திலோ மொத்த மகாபாரதத்தையும் பீமனின்
தோளிலிட்டு புனைவாக்கியிருப்பார். ஆக ஒரு நாயகனை
நாயர் உருவாக்குகிறார். அப்படி உருவாக்கும் போது
அதில் செவ்வியல் தன்மையை முழுமைக்கும் புகுத்துகிறார்.
செவ்வியல்
தன்மை எனில் ? எல்லா மனிதர்களும்
கோபம் துரோகம் வஞ்சம் ஏமாற்றம்
என சொல்லமுடியாத உணர்வுகளை தனதாக்கிக் கொண்டிருப்பர். அவற்றை பொதுமைபடுத்தி குறிப்பிட்ட
கதாபாத்திரத்திற்கு கொடுக்கும் பட்சத்தில் அவன் செவ்வியல் தன்மை
பொருந்திய நாயகனாகிறான். இரண்டாம் இடம் நாவலை வாசித்த
பின் ஒருவருக்கு பீமனே யதார்த்த நாயகனாக
தெரியக்கூடும். அதற்கு காரணம் பீமனை
வைத்து பாரதத்தினுள் இருக்கும் விஷயங்களை demystify செய்கிறார். புனிதமாக இருக்கும் விஷயத்தை யதார்த்தமாக்குகிறார். அதற்கு நாயகன் தேவைப்படுகிறான்.
எந்த புனைவாக இருப்பினும் நாயகனை
மையப்படுத்தும் போது அவனுக்குள்ளே ஆணித்தரமான
சுயம் ஒன்று தேவைப்படுகிறது. இந்த
சுயத்தை பிறர் அறிய வேண்டும்
என அதைத் தாங்கிக் கொண்டிருக்கும்
உடல் எண்ணுவதும் அதை முழுதும் அறிய
முடியாமல் ஏங்கிக் கொண்டு உலகம்
செல்லுதலும் தான் நிலவும் யதார்த்தமாக
இருக்கிறது. இந்த முரண்பட்ட எல்லைகளுக்கு
உள்ளே தான் இருத்தல் மனிதனுக்கு
சாத்தியமாகிறது. மேலும் இவற்றிற்கு இடையே
தான் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மனிதன் புதைத்து வைத்திருக்கிறான்.
இந்த சுயத்தை முழுதுமாக பிரித்து
நான்கு வெவ்வேறு இலக்கிய உருவங்களை கொடுக்க
முனைகிறார் எம்.டி.வாசுதேவன்
நாயர். திருவாளும் காற்சிலம்பும் என்பதே இத்தொகுப்பின் முதல்
கதை. எந்நிலை வாசகனாக இருப்பினும்
இந்த கதையை கடந்து செல்வது
என்பது கடினமான ஒன்றாகவே இருக்கக்கூடும்.
சுயத்தை ஆன்மீகவாதிகள் ஆன்மா என்றழைக்கின்றனர். அவை
தனக்கான தரிசனங்களை தனக்குள்ளேயே கொண்டிடுக்கின்றன. செய்யும் செயல்களிலும் அல்லது வாழ்தலிலும் சில
நேரம் தியானங்களிலும் அதனதன் உச்சங்களை எட்டும்
தோறும் இந்த தரிசனத்தை அவர்களால்
அறிந்து கொள்ள முடிகிறது. இது
அவர்களுக்கு உண்டானதே ஒழிய பொதுமையானது அல்ல.
இந்த இருமையினை வைத்தே ஆன்மீகத்தை எட்டும்
சாமியாடும் பண்டாரத்தின் வீழ்ச்சியை பேசுகிறார். தன்னுடைய ஆன்மீக தரிசனத்தை உதாசீனப்படுத்தும்
யாரையும் அவர் மனதால் மன்னிப்பதில்லை
குரோதம் அவருக்குள்ளேயே புதைபட ஆரம்பிக்கிறது. இடையில்
வரும் ஒரு வரியை பாருங்கள்,
“ஒரு தடவை மகன், திருவாளை
எடுத்து மாங்காய் சீவிக் கொண்டிருப்பதை அவன்
பார்த்துவிட்டான்! திருவாளின் மதிப்பை சிறுவன் அறிவானா
? அவனது கண்களில் கனல் பறந்தது.
அன்று மாலை மகன் வீடு
திரும்பவில்லை. ரயில் நிலையத்தில் அவனை
யாரோ பார்த்தார்களாம். இப்படித்தான் குடும்பத்தின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது”
வாக்கியங்களுக்கு
இடையே மொழியின் உதவியோடு அவர் உருவாக்கும் மௌனம்
எண்ணற்ற அடர்த்தியான உணர்வுகளை கடத்தி செல்கின்றது. இது
இந்த ஒரு கதை மட்டும்
தான் என்றில்லை. நான்கு கதைகளிலும் இந்த
அடர்த்தியை உருவாக்கியே செல்கிறார்
குட்டியக்கா
கதையிலும் வீழ்ச்சியையே அவர் பேசுகிறார். பண்டாரத்திடம்
தன்னுடைய சுயம் சார்ந்து அல்லது
தன்னுள் இருக்கும் தரிசனங்களை பிறரின் அறியாமை உதாசீனப்படுத்துவதைக்
கண்டு வீழ்ச்சி கொள்கிறார் எனில் இங்கு தன்
கொண்டாட்டமான மீறலை பிறர் கலாச்சார
குடுவைக்குள் இடுகிறார்கள் என வீழ்ச்சியை சந்திக்கிறாள்.
திருமணமாகாத எல்லா சுட்டித்தனங்களும் செய்யும்
குடும்பத்தில் யாருக்கும் பிடிக்காத பெண்ணின் கதை இது. இது
திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலே சொன்ன இரு கதைகளிலும்
ஒரு சுயத்தின் வீழ்ச்சியை பேச வேறு ஒரு
சுயம் தேவைப்பட்டிருக்கிறது. வீழ்ச்சிக்கு மட்டுமல்ல கொண்டாட்டத்திற்கும் காலத்தை கழிப்பதற்கும் இன்னொன்று
தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
இதை தன்னுடைய மூன்றாவது கதையான இருண்ட உள்ளத்தில்
பெரிதாக்குகிறார். சுயம் அன்பிற்காக ஏங்குகிறது.
தன்னுடைய இருத்தல் ஒரு ஆங்கீகாரத்தை தேடுகிறது
என்பதை உணரும் போது உடலையும்
அதற்கு ஒத்துழைக்க வைக்கிறான் நாயகன். பைத்தியமான வேலாயுதனின்
கதை தான் இது. பைத்தியத்தினுள்ளே
பிரக்ஞையுடன் கூடிய உலகம் ஒன்று
இருக்கும் போது அது தானே
அவர்களின் சுயம் ? அதற்கு தானே
அங்கீகாரம் வேண்டும் ? இந்த கேள்விகளுக்கு யதார்த்தமான
பதிலை கதை கொடுக்கிறது.
கடைசி கதை மூன்றுலிருந்தும் வேறுபட்டு
இருவரின் உரையாடல்களாக நீள்கிறது. அதில் தங்களுடைய சுயத்தை
உலகத்துடன் ஒன்றி அதை எடை
போட முயற்சிக்கிறார்கள். மாஸ்டர் மற்றும் விநோதினி
என்ற இருவர்களுக்கு இடையேயான உரையாடலும் அவர்கள் மேற்கொள்ளும் பயணமுமாக
நகர்கிறது வானப்பிரஸ்தம் கதை.
நான்கு
கதைகளும் இருத்தலை ஊர்ஜிதம் செய்யும் ஆழ்ந்த சுயங்களை பரிசீலனை
செய்கின்றன. அதற்கு ஒவ்வொரு கதையும்
ஒவ்வொரு களத்தை தனக்காக தேர்ந்தெடுத்துக்
கொள்கிறது. அந்தந்த களங்களில் தங்களுக்கு
தேவையான பாதையில் தங்களுக்கான முடிவுகளை தேடி மொழியின் லயிப்பில்
நதியின் நீரோட்டம் போல நகர்கிறது. முன்பு
வாசித்த இரண்டு நாவல்களைப் போல
இந்த கதைத் தொகுப்பையும் வெகுவாக
ரசித்தேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக