இருத்தலே சாகசம்!

யுகோஸ்லோவியா வரலாற்றில் முக்கியமான இடமொன்றை பிடித்த நாடு. முதலாம் உலகப் போர் ஆஸ்ட்ரிய நாட்டு மணமக்களை கொன்றதனாலேயே ஆரம்பமானது. அது நிகழ்த இடம் யுகோஸ்லோவியா. அதன் உட்பகுதிகள்தான் போஸ்னியாவும் ஹெர்ஸகோவினாவும். போஸ்னியாவின் தலைநகரம் செராஜிவொ. யுகோஸ்லோவியாவின் ஆட்சிக்கு கீழேயே இவ்விரு நாடுகளும் இருந்துவந்தன. ஆனால் மக்களின் போராட்டத்தால் 1992 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 29 ஆம் தேதி தனக்கென விடுதலையை அடைந்தது போஸ்னியா. வருடந்தோரும் மார்ச் ஒன்றாம் தேதி சுந்தந்திர தினத்தை கொண்டாடுகிறது. இவர்கள் சுதந்திரம் அடைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஹெர்ஸகோவினாவும் சுதந்திரம் அடைந்தது. அதற்கு பிறகே அம்மக்களுக்கான பிரச்சினைகள் ஆரம்பமாயின.

யுகோஸ்லோவியாவின் ஆட்சிக்கு கீழேயே இருக்க வேண்டும் என்னும் சாராரும் தனிநாடு வேண்டும் என்னும் சாராரும் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவு பலாயிரம் மக்களின் உயிரிழப்பு மற்றும் நாட்டில் ஏற்பட்ட சேதங்கள். இதை சீஜ் ஆஃப் செராஜிவொ என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அங்கு பிரபலமாக இருந்தவர்கள் ஸ்னைப்பர்ஸ் எனப்படுபவர்கள். இவர்கள் தூரமாக இருந்து துல்லியமாக மக்களையோ அல்லது அவர்கள் குறிவைக்கும் விஷயங்களையோ சுடவல்லவர்கள். இந்த ஸ்னைப்பர்ஸால் மக்களின் அன்றாட நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் முன் உயிர் ஸ்னைபர்களால் போய்விடும் எனும் அபாயம் எப்போதுமே அவர்களின் மனதில் வேரூன்றி இருந்திருக்கிறது.

இந்த போர்காலத்தினூடே அங்கு வாழ்ந்த ஒருவர் தான் அலெக்ஸாண்டர் ஹீமோன். அங்கிருந்து யாத்ரீகனாக அமேரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். ஆனாலும் செராஜிவொ நாட்டின் மண்வாசனையும் அங்கு சிதறப்பட்ட ரத்தங்களின் அடையாளங்களும் அவரை நிழல்களாய் துரத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. அதையே தனது எழுத்தின் மூலப்பொருளாக ஆக்கி அனைத்து படைப்புகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அமேரிக்க-போஸ்னிய எழுத்தாளரான ஹீமோன் சில விருதுகளையும் வாங்கியிருக்கிறார். அவருடைய முதல் நூல் ஒரு சிறுகதை தொகுப்பு. அதை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அது தான் THE QUESTION OF BRUNO.இத்தொகுப்பில் இருக்கும் எட்டு கதைகளுமே வந்தேறியின் உணர்வை மேலோங்க வைக்கின்றன. அதற்கு காரணமாக பார்க்கப்போனால் சிகாகோவில் இருந்த ஹீமோனின் வாழ்க்கையாக இருக்கிறது. வேலை என்ற ஒன்று இல்லாமல் அலைந்து திரிந்து நானாவித வேலைகளை பார்த்து ஆங்கிலத்தை தானே கற்றறிந்து எழுத ஆரம்பித்த ஹீமோனின் வாழ்க்கை எழுத்தளவில் செராஜிவோவில் நின்றுவிடுகிறது. எல்லா கதைகளிலும் பாத்திரங்கள் அமேரிக்காவில் இருந்தாலும் நினைவுகள் பேச்சுகள் செராஜிவோவில் தங்கியே இருக்கின்றன.

மேலும் லத்தின் அமேரிக்க இலக்கியங்கள் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்ட பெருமைகளை பலகாலமாக கொண்டிருக்கிறது. அதன்வழியில் ஹீமோனின் கதைகளும் தன் பங்கை ஆற்றியிருக்கிறது. ஹீமோன் வரலாற்றையும் தனிமனித வாழ்க்கையையும் புனைவின் துணைகொண்டு மீட்டுருவாக்கம் செய்ய யத்தனிக்கிறார். இன்னமும் தெளிவாகசொல்ல வேண்டுமெனில் உண்மையின் எதிர்ப்பதம் பொய் என்பதல்ல. மாறாக புனைவே அதன் எதிர்ப்பதம். புனைவை நம்மால் ஒருபோதும் பொய்யென சொல்ல முடியாது. நம்புபவர்களுக்கு அதுவே உண்மையாகிவிடுகிறது. மேலும் அந்த தன்மை புனைபவனின் தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லா கதைகளிலும் காணமுடிகிறது.

இந்த மாதிரியான துவந்துவங்களை எல்லா கதைகளிலும் உருவாக்கியே செல்கிறார். இதில் உள்ள நான்கு கதைகள் உலகத்தரமானவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ரிச்சர்ட் சார்ஜ் என்பவர் சோவியத் ருஷ்யாவின் சிறந்த உளவாளி. இரண்டாம் உலகப் போரில் பல விஷயங்களை உளவறிந்து சொல்லியிருக்கிறார். அதே நேரம் போலிஸிடம் மாட்டப்பட்டு அவரே உண்மைகளை சொல்லி ஒப்புக்கொண்டு துக்கிலிட்டு கொல்லப்பட்டார். இந்த வரலாறுகள் எல்லாமே இருக்கிறது. அதை ஹீமோன் கையிலெடுக்கும் போது சார்ஜின் மகனை கதைசொல்லியாக மாற்றுகிறார். தன்னுடைய அப்பா உளவாளியா என்பது அவனது பிரதான சந்தேகமாக ஆகிறது. குழந்தைக்கு எல்லா விஷயங்களும் தெரியப்போவதில்லை. அதே நேரம் வரலாறு குழந்தையின் உலகை காட்டிலும் பிரம்மாண்டமானது. கதை மிகச்சிறிது. ஆனால் சில வார்த்தைகளுக்கு அடிகுறிப்புகளாக இருப்பவை மிக பெரியனவாக இருக்கின்றன. சார்ஜின் மகன் அறிந்திருக்கும் விஷயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மையும் சார்ஜை முழு உருவமாக காட்டுகிறது. இந்த கதை The sorge spy ring.

மற்றொரு கதை The life and work of alphonse kauders. இதே மாதிரியான கதை தமிழிலும் இருக்கிறது. சாரு நிவேதிதா எழுதிய “நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொணர்ந்தவர்களும் பிணந்திண்ணிகளும்” என்னும் கதை. இந்தக்கதையும் புனைவினூடாக உண்மையை உருவாக்குகிறது. பழங்குடியின மக்கள் அவர்கள் சார்ந்து எழுதிய நூல் என எழுதிகொண்டே செல்கிறார். அதே நேரம் ஹீமோன் அல்ஃபோன்ஸ் காடர்ஸ் என்னும் கதாபாத்திரத்தை சிதறுண்ட பாத்திரமாக உருவாக்குகிறார். பத்திகளில் செல்லாமல் அங்கங்கு பேசிய வாக்கியங்களாகவும், சின்ன சின்ன சம்பவங்களாகவும், அவரைப் பற்றி பேசப்பட்ட வார்த்தைகளாகவும், பின்குறிப்பாக அக்கதையில் வரும் கதாபாத்திரங்களை விளக்குவதன் மூலமாகவும் கதையை ஒன்றுமில்லாத கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மாற்றிவிடுகிறார்.

A coin என்னும் கதை செராஜிவோ நாட்டின் போர்காலத்தை தீவிரமாக பேசுகிறது. அதன் முதல் வரியே அசாத்தியமானது.

Suppose there is a point A and point B and that, if you want to get from point A to point B, you have to pass through an open space clearly visible to a skillful sniper. You have to run from point A to point B and the faster you run, the more likely you are to reach the point B alive. The space between point A and point B is littered with things that sprinting citizens  have dropped along the way. A black leather wallet, probably empty. A purse, agape like a mouth. A white plastic water-vessel, with a bullet hole in its centre.. . .

இவ்வித அழகான வர்ணனைகளுடன் நீளமாக நகர்கிறது கதை. இதில் பிரதானாமக்குவது இரண்டு விஷயங்கள். புகைபடக்காரனின் தர்மம் என்ன ? அவனுடைய இருத்தல் போர்களுக்கு இடையில் எதனூடே ஊசலாடுகிறது என்பதை அழகாக பேசுகிறது. போர்க்கால அவலங்களை புகைப்படம் எடுக்கிறான். சிலர் ரத்த வெள்ளங்களுடன் உடற்பாகங்கள் சிதறுண்டு கிடக்கிறர்கள். அவர்களையும் அவன் புகைப்படம் மட்டுமே எடுக்கிறான். நாயகி அவனிடம் கேட்கிறாள் இதை எடுக்கும் நேரத்தில் நீ அவனை காப்பாற்ற முயலலாமே என. அதற்கு அவன் சொல்கிறான் அப்போது என் இருத்தல் அர்த்தமற்றதாகிவிடும். பணமே வாழ்வின் பிரதானமாகிவிட்ட தருணத்தில் மனிதம் புதையுண்டு செல்கிறது. மேலும் ஆசிரியர் எந்த ஒரு கதையிலும் எதிர்ப்பதத்தை தடுத்து அறத்தை நிலைநாட்ட விரும்பவில்லை. அறப்பிழையே யதார்த்தம் என்பதில் முனைப்புடன் புனைவை உருவாக்குகிறார். மனிதனின் இருத்தலை கரப்பான்பூச்சியுடன் ஒப்பிடும் ஆசிரியரின் நுண்மை இருத்தலின் முக்கியத்துவத்தை துல்லியமாக காட்டுகிறது.

Blind Jozef Pronek and dead souls கதை The sorge spy ring போன்று குறுநாவல். இது லீனியராக கதையினை சொல்கிறது. கதை முழுக்க ஹீமோனின் வாழ்க்கையை நம்மால் பார்க்க முடிகிறது. சராஜிவோவிலிருந்து சிகாகோ வரும் யாத்ரீகனின் வாழ்க்கை எப்படியெல்லாம் அல்லலுறுகிறது என்பதை முழுமைக்குமாக காட்டுகிறது. வேலையில்லாமல் அலையும் தருணத்தில் சராஜிவோவில் இருக்கும் பெற்றோரை நினைக்கும் ப்ரோனெக்கின் தர்க்கங்கள் இருத்தலை கேள்விக்குள்ளாக்குகிறது. க்ஷண நேரத்தில் எட்டிவிடக்கூடியது மரணம். அதைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் நீளமான இருத்தல் கொடுக்கும் பயம் ஏன் அதைவிட சின்னதாக இருக்கிறது என்னும் கேள்வியை கதை முழுக்க சுமந்து கொண்டு செல்கிறான்.

எல்லா கதைகளுமே இருத்தலின் எல்லாவித பயங்களையும் அபாயங்களையும் தொட்டு செல்கிறது. மனிதனின் ஆகப்பெரும் சாதனை வாழ்தலே என்பதை எல்லா கதைகளிலும் சொல்கிறார். உண்மைகள் காணாமல் போவதில்லை மாறாக புனைவின் மேற்பூச்சில் அவை ஒளிந்து கொண்டிருக்கின்றன. வேர்களை தேடிச் செல்லும் போதும் மனதினுள்ளே இருக்கும் உலகத்தினுள்ளும் அவ்வுண்மைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை கூறுகின்றன ஹீமோனின் கதைகள். எல்லாமே நாவலுக்கான சாத்தியங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

வித்தியாசமான கதைசொல்லல் முறையினை அறியவும் பின்நவீனத்துவ எழுத்தின் பன்முக சாத்தியக்கூறுகளின் பால் ஈர்ப்பு கொள்ளவும், வரலாற்றை மீட்டுருவாக்கும் யுத்தியை நவீனம் எப்படி அடையாளம் காண்கிறது என்பதை புரிந்து கொள்ளவும், இருத்தல் ஒரே தருணத்தில் வியாதியாகவும் சாகசமாகவும் இருக்கும் கணங்களை நுகரவும் அலெக்ஸாண்டர் ஹீமோனின் கதைகள் நிச்சயம் உதவும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக