இடதுசாரி ஐயங்கார்களின் கதை
கடந்த ஞாயிறன்று(31/05/2015) சேலத்திலுள்ள
பாலம் தி புக் மீட்டில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய “புலிநகக் கொன்றை” நாவல் சார்ந்து பேச
அழைத்திருந்தனர். அங்கு பேசியதன் சுருக்கமான எழுத்துவடிவத்தை பதிவு செய்கிறேன்.
சாதிகள் சார்ந்து பல்வேறு விதமான
காழ்ப்புகள் இருந்தாலும் தமிழகமே மறக்க முடியாத சாதியாக இருப்பது என்னவோ பார்ப்பனீயம்
தான். அவர்கள் பிறசாதிக்காரர்களுக்கு இழைத்த தீங்குகளையும் அநீதிகளையும் வார்த்தைகளால்
அளவிடமுடியாத வண்ணம் நீண்டு செல்லக்கூடியது. அதே நேரம் மூவர்ணங்களும் ஒன்றுதிரண்டு
அவர்களிடமிருந்து தங்களின் சுயகௌரவத்தை மீட்க நினைக்கும் போது ஆதிக்க சாதியாய் இருந்த
பார்ப்பனர்களிடம் கிலி ஏற்பட்டது. பெருங்குரல்கள் நாத்திகத்தை பேச ஆரம்பித்தன. கழகங்கள்
திராவிடத்திற்கும் தமிழிற்கும் பொதுமைக்குமாக பேச ஆரம்பித்தன. சாதிகள் இல்லாமல் ஆவதற்கு
பதிலாக ஆதிக்க சாதியினர் என்னும் இடத்திற்கு போட்டிகள் அதிகமாயின. ஆதிக்க சாதியின்
இடங்களில் எத்தனை பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும் கீழ்ச்சாதிக்காரர்களின் மீதான
வன்முறை மட்டும் காலத்திற்கும் மாறாமல் இருக்கிறது.
எல்லா சாதியினரிடமும் சாதி என்பது
தற்காப்பிற்கான வளையமாகவே இருக்கிறது. அந்த பிம்பத்தை வைத்துக் கொண்டு ஏதேனும் லாபத்தை
ஈட்டமுடியுமா என்பதே அவர்களின் நோக்காக அமைகிறது. ஒருக்கால் மனிதர்களுக்கு சாதிகளினால்
எந்த லாபமும் இல்லாமல் போய்விடின் நிச்சயம் அதை புறக்கணிக்க தயங்கியிருக்கமாட்டார்கள்.
பல கூட்டங்கள் அதற்கு எதிராக தோன்றும் பட்சத்தில் லேசான பயம் மனதை ஆட்டவே செய்கிறது.
சாதி பல கொள்கைகளாலும் கோட்பாட்டுகளாலும் நிறைந்தது. அவை கவைக்குதவா சித்தாந்தங்கள்.
அதை சுமந்து முதுகு பலப்படுமே ஒழிய கொள்முதல் இல்லை. பயம் அந்த சுமத்தலையே அதிகமாக
செய்கிறது.
சாதியினால் ஏற்படும் பயம் ஒன்று
அதன் சித்தாந்தங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ள மனிதனை தள்ளுகிறது. மற்றொன்று வேறு
கொள்கைகளுக்கு மாற அவனை உத்தேசிக்கிறது. கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறான். அதற்கு பிரதான
காரணமாக இருப்பது பழைய கொள்கைகள் அவனுள் கொள்ளும் பலகீனங்கள். இரண்டாம் வழியை தேர்ந்தெடுப்பவன்
பழைய கொள்கையின் சகாக்களினால் வஞ்சிக்கப்படுகிறான். மேலும் புதிய கொள்கைகளில் இருக்கக்கூடிய
அரசியல்களை முழுதும் அறிவதற்கு முன் அதன் அதலபாதாளங்களில் சென்று வீழ்கிறான். இந்த
கொள்கை மாற்றங்கள் காலமாற்றத்தைப் போல சுழற்சி முறையில் நிகழ்ந்து கொண்டே இருப்பன.
மாற்றம் எப்படி மாறாத ஒன்றாக இருக்கிறதோ அதைப் போலவே இந்த கொள்கைவாதம் மாறிக் கொண்டே
இருக்கக்கூடியது. இல்லையெனில் உலகம் முழுக்க இத்தனை சித்தாந்தங்கள் பழையனவற்றை வெற்றிகண்டு
புதிதாக தம்மை உயிர்பித்துக் கொள்ள தேவையில்லை. இப்படியான பெரிய சுழற்சியை குறிப்பிட்ட
சாதியை மையமாக கொண்டு நாவலாக்கியிருக்கிறார் பி.ஏ.கிருஷ்ணன். அந்த நாவலே அவர் இயற்றிய
“புலிநகக் கொன்றை”.
1988ஆம் ஆண்டு பெங்குவின் வெளியிடாக
ஆங்கிலத்தில் TIGERCLAW TREE என்று வெளியானது. பின்னர் அவரே தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இந்த மொழியாக்கத்தில் செய்ய வேண்டிய நேர்த்தியை முன்னுரையில் எழுதியிருந்தார். நாவலை
வாசித்து முடிக்கும் போது ஆங்கிலத்தில் எழுதியதும் ஒரு கதையின் மொழியாக்கமாகத்தான்
இருக்கும் என்பதை தெளிவாக உணர முடிந்தது. நாவலினூடே ஊடாடும் தமிழக தொன்மங்களுடனான சாயல்
அப்படி எண்ண வைக்கிறது. பின் இந்த நாவல் 2012இல் காலச்சுவடின் வெளியீடாக புலிநகக் கொன்றை
என்னும் தலைப்பில் தமிழில் வெளியானது.
இத்தலைப்பிற்கான காரணத்தை ஆரம்பத்திலேயே
கொடுத்து அதற்கு பின் தான் எழுத ஆரம்பிக்கிறார். புலிநகக் கொன்றை என்பது பெரிதான மரம்.
அம்மரம் பல கிளைகளை கொண்டிருக்கிறது. மேலும் இந்த வரிகளை அவர் ஐங்குறுநூறிலிருந்து
எடுத்தாள்கிறார். அதற்கான காரணத்தை ஆரம்பத்திலேயே அளித்திருந்தாலும் இதே விளக்கம் நாவலோடு
இணைந்து நாவலின் பின்பகுதியில் வரும் பொழுது ஏற்புடையதாகவும் நாவலின் மொத்த சாரத்தை
தாங்கி நிற்பதாகவும் படுகிறது.
நாவல் இரண்டு பெரிய பாதையில்
நகர்கிறது. ஒன்று மாறாத கொள்கையுடைய பாதை. மற்றொன்று காலநேரத்திற்கொப்ப மாறிக் கொண்டே
இருக்கும் கொள்கையுடனான பாதை. மாறாத பாதையென குறிப்பிடுவது ஐயங்கார் என்னும் சாதி.
இந்த சாதியில் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று வடகலை மற்றொன்று தென்கலை. இரு உட்பிரிவுகளுக்கும்
சித்தாந்தங்கள் ரீதியான வேறுபாடல்கள் உள்ளன. மேலும் இருவருக்கும் ஒருவர் மற்றொருவர்
மீதான காழ்ப்புணர்ச்சிகளும் புனைவுக்கதைகளும் அதற்கான தருக்கங்களும் நிரம்பி இருக்கின்றன.
அதில் தென்கலை ஐயங்காரின் பெரிய குடும்பமொன்றை கதைக்களமாக எடுத்திருக்கிறார்.
நான்கு தலைமுறையின் கதையினை இந்நாவல்
கூறுகிறது. தென்கலை ஐயங்கார் என்னும் சாதியினை தாங்கி நிற்கும் அதே சமயம் அதற்கென போர்த்த
வேண்டிய பிம்பங்களை வம்சாவளிக்கு அளித்தே தீர வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முனைப்பாய்
செய்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைக்கு மந்திரங்களை உச்சாடனம் செய்ய கற்றுத்தருவது,
பிரபந்தம் ஓதப் பழகுவது போன்ற சம்பிரதாய வழக்கங்களை கற்றுத்தருகின்றனர். ஆனால் காலமாற்றத்திற்கேப
அவை கசப்புகளுடன் கடக்க ஆரம்பிக்கின்றன. நாவலின் பக்கங்கள் நகர நகர இந்த ஐயங்கார் என்னும்
பதம் நவீனம் நோக்கி நகர்ந்து வருகிறது.
நாவலின் ஆரம்ப சில பக்கங்களில்
இதற்கான எந்த சாயலையும் நம்மால் காணவியலாது. ஆனால் ஆண்டாள் என்னும் கதாபாத்திரத்தின்
விவரிப்புகளுடன் இந்த நவீனம் நோக்கிய பயணத்தை நம்மால் உணரமுடிகிறது. அக்காலத்திற்கொப்ப
பூப்பெய்துவதற்கு முன்பே மணம் செய்துவைக்க முயல்கின்றனர். ஆண்டாளுக்கு மணம் செய்த நன்காவது
நாளே கணவன் இறந்துவிடுகிறான். அவளுக்கு மறுமணம் செய்ய அப்பா ராமன் முனையும் போது அங்குள்ள
ஜீயர் சாதிக்கே புறம்பான காரியத்தை செய்ய முயல்கிறாயே என்கிறார். இங்கிருந்து தான்
நாவல் தனக்கான தர்க்கத்தை இயக்க ஆரம்பிக்கிறது.
எல்லா சாதிகளும் தங்களுக்கேயான
எல்லைகளை வகுத்து வைத்திருக்கிறது. அவற்றைக் கடக்கக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகள் இருப்பினும்
அதற்கான தைரியம் எல்லோரிடமும் இருப்பதில்லை. சாதி எனும் குறுவட்டத்தில் யாரேனும் முன்மாதிரியாக
எல்லைகளை கடந்தால் அதையே பின்பற்றலாம் என்னும் பிற்போக்குத்தனமான எண்ணமே தழைத்தோங்கியிருக்கிறது.
அதன் வித்தாக இந்த குடும்பத்தில் ஆண்டாளின் விஷயம் இருந்தது. இதைத் தொடர்ந்து நாவலின்
எண்ணற்ற எல்லைகளை கதாபாத்திரங்கள் மீறிக் கொண்டே செல்கின்றன. அவற்றில் குறிப்பாக ஆண்டாள்
என்னை அதிகமாக கவர்ந்த கதாபாத்திரமாக அமைந்தது. குறிப்பாக கதாபாத்திரத்தின் பெயர்கள்
யாவும் வைணவ பக்தியின் வெளிப்பாடகாவே இருக்கிறது. ஆண்டாள் எனும் போது பெருமாளை நினைத்து
மனமுருகி காதலித்த பெண்ணே எல்லோரினுள்ளும் தோன்றும். அந்த பிம்பத்தை மனதில் வைத்தே
அதன் மனவோட்டங்களுக்கு எதிர்ப்பதமாக இக்கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார் பி.ஏ.கிருஷ்ணன்.
இதுவரை முதல் விஷயத்தை கூறினேன்.
நாவலின் இரண்டாம் பாதை முழுக்க இந்தியாவின் விடுதலை போராட்டமும் அதற்கு பின்னான அரசியல்
நிலையும் தான். இந்த பகுதிகளே நாவலின் பெரும் இடத்தை பிடித்துக் கொள்கின்றன. மேலே சொல்லப்பட்ட
ஐயங்கார் விஷயம் நுண்மையான அரசியலை பேசுகிறது எனில் இந்த விஷயம் நாட்டையே உள்ளடக்கும்
விஷயங்களை பேசுகின்றது.
நாட்டின் சுதந்திர போராட்டம்
என வரும் பட்சத்தில் எல்லோருமே அதற்காக போரிடுவதில்லை. மேலும் இறப்பவர்கள் எல்லோருமே
சுதந்திர போராட்டத்திற்காகவே இறப்பவர்கள் என்றும் இல்லை. எல்லாமே collateral
damage இன் விகிதாச்சாரங்கள். மேலும் வரலாறு என்பது மேல்தட்டு போராட்டக்க்காரர்களின்
ஆதிக்கத்தினால் நிறைந்ததாகவே இருக்கிறது. போராடி வீழ்ச்சியுற்று தன்னாலான போராட்டங்களை
நிகழ்த்திய அநேகம் பேரை இந்த வரலாறு மறந்தே இருக்கிறது. பிராந்தியவாரியாக வரலாற்றினை
எழுதும் பட்சத்தில் எண்ணற்ற போர்வீரர்களை நம் வரலாறு கண்டெடுக்கும். அப்படியான பிராந்திய
வரலாற்றை இந்நாவல் கதையினூடாக சொல்லுகிறது.
கதை நான்குநேரியில் ஆரம்பிக்கிறது.
அங்கிருந்து கதை திருநெல்வேலியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
1857இல் நிகழும் முதல் சுதந்திர போராட்டத்தில் தொடங்கி 1980களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்டு கட்சியாக பிளவு கொண்டு அதற்கு பின்னான அக்கிரமங்கள்
சார்ந்தும் நோக்கி நகர்கிறது. இந்த மாபெரும் அரசியல் மாற்றங்களையும் அதே நேரம் அங்கே
நிகழ்ந்து கொண்டிருந்த நிலவியல் மாற்றங்களையும் கச்சிதமாக கதையுடன் இணைத்து கூறியிருக்கிறார்.
நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும்
சுதந்திர போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மனநிலையுடன் மோதுபவர்களாக இருந்திருக்கின்றனர்.
அதே நேரம் கதை மையமாக்கும் குடும்பத்தில் எல்லோருமே கம்யூனிஸத்தின் மீது பெரும் ஆசை
கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த எல்லா மாற்றங்களைக் கண்டும் மூப்பை தேடும் பாத்திரமாக
பொன்னா இருந்து கொண்டிருக்கிறாள். இந்த மாற்றங்களே அந்த குடும்பத்தின் வீழ்ச்சியாக
இருந்திருக்கிறது.
இந்த மாற்றங்களை நாவல் முழுக்க
நுண்மையாக கணக்கிட்டாலே எப்படி அந்த குடும்பத்தின் வீழ்ச்சிக்கு அது வித்திட்டது என்பதை
அறிந்து கொள்ள முடிகிறது. சுதந்திரத்திற்கு முன்னான போராட்டங்கள் அனைத்துமே சுதந்திரம்
என்னும் நோக்கில் நகர்ந்திருக்கிறது. அப்போது போராடுவதற்கொப்ப தனித்தனி சங்கங்கள் ஆங்காங்கே
முளைக்க ஆரம்பித்தன. அதிலும் குறிப்பாக ஒன்று பாரத மாதா சங்கம். அந்த சங்கத்தின் வாயிலாகவே
வாஞ்சினாதன் ஆஷை மணியாச்சி இரயில் நிலையத்தில் கொன்ற விஷயம் நாவலில் வருகிறது. இந்த
கொலை சார்ந்து பலர் பிடிபடுகிறார்கள். அப்போது அந்த சங்கத்தில் இருந்தவன் இந்த குடும்பத்தில்
ஒருவனான நம்மாழ்வார். தன்னாலான பங்கு நாட்டின் சுதந்திரத்திற்கு இருக்க வேண்டுமெனில்
நிச்சயம் நான் சிறைவாசம் அடையவேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறான். அது நிறைவேறவில்லை
எனும் போது கொள்கைகளின் மீது அவனுக்கு கசப்புகள் வருகின்றன. அவனிடம் ஒருவர் சுயராஜ்யம்
வெகுதொலைவில் எங்கோ இருக்கிறது. அதற்காக காத்திருந்து காலத்தை வீணாக்க வேண்டாம் எனும்
போது நம்மாழ்வார் கூறுகிறான்,
“இருக்கலாம் சார். நாங்களும் அந்த மூட்டத்தைத் துளைச்சு சுயராஜ்யம் எவ்வளவு
தொலைவுல இருக்குங்கறத பார்க்கத்தான் முயற்சி செய்திண்டிருக்கோம்”
இந்த முயற்சி ஒரு கட்டத்தில்
கசப்பின் எல்லைக்கு அவனை கொண்டு சேர்க்கிறது. கொள்கைகள் தளர்ந்துவிடுகின்றன. அவனுக்கு
அடுத்ததான காலத்தில் காந்தீய கொள்கைகள் நாட்டில் பரவ ஆரம்பிக்கின்றன. அப்போது நம்மாழ்வாரின்
மகன் மதுரகவி பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாடு சார்ந்த விழிப்புணர்ச்சிகளை மாணவர்களுக்கு
விதைக்க வேண்டும் என்னும் விஷயங்கள் நாடு முழுக்க பரவி இருக்கின்றன. இந்நிலையில் சாதிய
நிலைப்பாடுகள் சார்ந்து பல தர்க்கங்கள் எழுகின்றன. எப்பாடுபட்டும் சில ஐயங்கார்களின்
மகன்கள் பிறசாதிக்காரர்களுடன் இணையாமல் இருப்பது, தூரத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்வது
போன்றவை நாவலில் அரசியல் களமாக மாற்றம் கொண்டிருக்கின்றன.
மதுரகவிக்கு பிறகாக வரும் போது
இந்தியா சுதந்திரத்தை அடைந்திருக்கிறது. அப்போது நாவல் முழுக்க அரசியலின் அதிருப்திகளால்
நிறைந்திருக்கிறது. சுயராஜ்யம் உருவான போதும் மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்னும்
கோஷங்கள் எழுந்தபாடிருந்தன. இங்கே நம்பி என்னும் பாத்திரம் வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும்
ஒவ்வொரு சாதீய அம்சங்களை மீறியே வருகின்றனர். இதில் கலப்பு திருமணம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த நாவலில் தீவிரமான கொள்கைவாதியாக இருப்பவன் நம்பி தான். மதங்களை மக்களின்
நலனுக்காக நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தீர்க்கமாக நம்புகிறான். மருத்துவத்தையே
மக்களின் சேவையாக்கி தன் கடமையை அதில் ஆற்றுகிறான். ஆனாலும் கம்யூனிஸ்டாக இருந்து எதையும்
செய்யவில்லையே என்னும் தாக்கம் அவனுள் இருந்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொள்கையும்
நிஜவாழ்க்கையும் வேறு என்பதை காலப்போக்கில் உணர ஆரம்பிக்கிறான். இந்தியாவில் கம்யூனிஸம்
உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை என்பதை அறியத் தொடங்குகிறான். ஆனாலும்
அவனுள்ளே இருக்கும் கொள்கைகள் தளர்ந்து போவதில்லை. கொள்கைகள் சார்ந்து சந்தேகம் கொள்ளும்
தருணத்தில் கொள்கைக்கே எதிரியாகிறான். அப்போது அந்த கொள்கைக்கூட்டம் அவனை எப்படி பார்க்கிறது
என கொள்கை சார்ந்த எல்லா முனைகளுக்கும் சென்று வரும் ஒரே பாத்திரமாக இருப்பது நம்பியாகத்தான்
இருக்கிறது. அவன் தன்னை நியாயபடுத்தவும் செய்கிறான். அப்படி செய்யும் தருணத்தில் அவன்
மீது சாதியின் எந்த பூச்சும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. என்னை ஈர்த்த பகுதிகளில் நம்பியின்
நியாயப்படுத்துதலும் ஒன்றாகும்.
நம்பியை போலவே கொள்கைவேகம் நிறைந்த
மற்றுமொரு கதாபாத்திரம் கண்ணன். அடிப்படையில் கண்ணன் குழப்பவாதி. நாவலிலோ நம்பியை குழப்பவாதியாக
பலர் கூறுகின்றனர். நம்பி தெளிவானவனாகவே எனக்கு தெரிகிறது. கொள்கை சார்ந்த பற்றுகள்
நிறைய இருந்தாலும் சோம்பேறி. எதையும் முனைப்புடன் செய்யும் ஆள் இல்லை. உணர்வுகளின்
வசம் கொள்கைகளை ஒப்படைத்தவனாக இருக்கிறான். கோவத்தின் மூர்க்கத்தில் கொள்கைகளை கையாள்பவனாக
நாவல் முழுக்க வலம் வருகிறான். கோவம் தீரும் பட்சத்தில் அவன் வசம் போராடுவதற்கு காரணங்கள்
இருக்க வாய்ப்பில்லை. கோபமோ நிரந்தரமானதல்ல. அப்படியான பட்சத்தில் சுயபோக வாழ்க்கைக்கான
தேடலே மீதமாக இருக்கும். உணர்வுகளிடம் அறிவை அடகு வைத்தவனுக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை
என்பது தான் சாசுவதம். அப்படியான உருவத்தையே கண்ணனுக்கு ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.
நான்கு தலைமுறைகளின் கதையினை
வெகுசாதாரணமாக சொல்லி செல்கிறார். நான்கு தலைமுறைகளிலும் அறுபட்ட பாத்திரங்களாக இருப்பது
என்னவோ பெண்களாகவே இருக்கிறார்கள். நக்ஸலைட்டுகளின் உருவாக்கத்தால் சந்தேகம் கொண்டு
இறக்கும் கதாபாத்திரங்களும் அவர்தம் மனைவியினாலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக நாவலில்
இடம்பெறுகிறார்கள். பொன்னா, ஆண்டாள், ரோஸா, லெக்ஷ்மி, ராதா என எல்லோரும் காவிய சோகத்தை,
வெளியே சொல்லவியலாத துக்கங்களை சுமப்பவர்களாக இருக்கிறார்கள். ரோஸாவைத் தவிர எல்லோருக்கும்
கொள்கைகள் குடும்பத்தை அழிக்கும் விஷயமாக இருக்கிறது. ரோஸாவுக்கோ கொள்கைகள் தர்க்கமாக
இருக்கின்றன. முடிவுற்ற தர்க்கங்களுக்கு இடையில் மீறல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறாள்.
ஆண்டாளோ மீறலே வாழ்க்கை என வாழ்கிறாள். காந்தீயவாதம் நாவலின் கடைசிவரை தொடர்ந்து
வருவதன் காரணம் மட்டும் புரியவில்லை. இந்நாவலின் இன்னுமொரு குறையாக நான் உணர்ந்தது
நிலவியல் சார்ந்த விவரணைகள் இல்லாமல் போனது. அது இருந்திருப்பின் கலையின் உச்சத்திற்கு
செல்லக்கூடிய சாத்தியக்கூற்றினை இந்நாவல் அடைந்திருக்கக்கூடும்.
எல்லோரினுள்ளும் போராட வேண்டும்
என்னும் சின்னதான பொறி இருந்து கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு அவர்களுடைய சொந்த
உந்துதலாக இருக்கலாம். சிலருக்கு வம்சாவளியாக கடத்தப்பட்டதாக இருக்கலாம். செயல்பாட்டளவில்
எத்தனை பேர் முனைகிறார்கள் என்பதில் தான் யதார்த்தவாதம் எஞ்சி நிற்கிறது. தாழ்வுமனப்பான்மையினாலும்,
சாதிகளின் வரையறுக்கப்பட்ட எல்லைகளினாலும், சமூக ஒடுக்குதலினாலும் கொள்கை அளவில்
பலர் முடங்கி போயிருக்கிறார்கள். பல குழுமங்கள் முடங்கியிருக்கின்றன. அப்படி முடிங்கியும்
டாம்பீகமாக நிற்கும் இடதுசாரி தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் கதையை அழகியலுடன் கூறுகிறது
புலிநகக் கொன்றை.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக