கல்குதிரை சிறுபத்திரிக்கை சிறுகதைகள்,
மொழிபெயர்ப்பு சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவலின்
பகுதிகளால் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு சிறுபத்திரிக்கையும் யாரேனும் ஒருவரை மையப்படுத்தி
வரும். அப்படி மையப்படுத்துவதால் அவருடைய நேர்காணல்களும் இடம்பெறும். இம்முறை இதழ்
இராபர்ட்டோ பொலானோவின் சிறப்பிதழாகும். இவர் சீலே தேசத்து எழுத்தாளர். ஐம்பது ஆண்டுகால
வாழ்க்கையில் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என சகல கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும்
தன்னை முன்னிறுத்தியிருக்கிறார். சில காலம் அரசியல் செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
அவருடைய ஆகச்சிறந்த படைப்பாக “2666” நாவல் கருதப்படுகிறது.
கல்குதிரை இளவேனிற்கால இதழில்
இராபர்ட்டோ பொலானோவின் நான்கு நேர்காணல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இம்முறை நேர்காணல்
மிகச்சிரியனவாக இருக்கின்றன. ஒருவேளை பொலானோவின் குணம் சின்னதான பதில்களை அளிப்பதாகக்கூட
இருக்கலாம். அவற்றில் சில பதில்கள் அவருக்குள்ளிருந்த
இச்சைகளை பேதமற்று வெளிப்படுத்தின. உதாரணத்திற்கு அவருடைய பதில் ஒன்றை பாருங்கள்,
“இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் மேலும் கடவுள்
அதை என்னை தேர்ந்தெடுக்க வேண்டாமென்று வேண்டினாலும் நான் இலக்கியத்தையே தேர்ந்தெடுப்பேன்.
என்னிடம் சிறந்த நூலகம் அல்லது Vladivostak ற்குச் சென்று திரும்ப ரயில் பயணச்சீட்டு
அளிக்கப்பட்டால் எவ்வித சந்தேகமின்றி நான் நூலகத்தையே தேர்ந்தெடுப்பேன். நூலகத்துடனான
எனது பயணம் மிக நீண்டதாக இருக்கும்”
பொலானோ எழுத்தின் அடிக்ட் ஆகியிருக்கிறார்
என்பதை அவருடைய நேர்காணலில் காணமுடிகிறது. மேலும் எழுத்து வளையக்கூடிய எல்லா வழிகளிலும்
தன் பயணத்தை நீட்டிக்க முயன்றிருக்கிறார் என்பதையும் நம்மால் நேர்காணல் மூலமாகவும்
சிறுகதைகள் மூலமாகவும் கவிதைகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளமுடிகிறது. பொலானோவின் நான்கு
சிறுகதைகள் இம்முறை கல்குதிரையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நான்குமே ஆகச்சிறந்த கதைகள்
என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மேலும் மொழிபெயர்ப்பும் கதையின் ஓட்டத்தில்
எங்குமே தடையின்றி செறிவாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான்கு கதைகளாவன
ஒரு இலக்கிய சாகசம் – வடகரை ரவிச்சந்திரன்
தொலைபேசி அழைப்புகள் – வடகரை ரவிச்சந்திரன்
மௌரிசியா (கண்) சில்வா – சித்ரன்
சென்சினியின் தேடல் – செங்கதிர்
தொலைபேசி அழைப்புகள் – வடகரை ரவிச்சந்திரன்
மௌரிசியா (கண்) சில்வா – சித்ரன்
சென்சினியின் தேடல் – செங்கதிர்
இந்நான்கு கதைகளும் வெவ்வேறானவையாக
இருப்பினும் அவற்றினுள்ளே மேலதிகமாக தெரியக்கூடிய ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனை கூறுவதற்கு
முன் ஃப்ரான்ஸ் காஃப்காவின் கதைகளில் இருக்கக்கூடிய ‘க’வினை கூற நினைக்கிறேன். விசாரணை
நாவலில் க வின் பாத்திரம் முழுமையாக பார்த்தால் அரூபமாகவே இருக்கும். அதற்கான காரணம்
எந்த நோக்கமுமின்றி அவன் வழக்கொன்றில் சிக்கிக் கொள்கிறான். அது என்ன என்பது அவனுக்கும்
தெரிவதில்லை. வாசிக்கும் வாசகனுக்கும் புலனாவதில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி
அந்த கதாபாத்திரம் நமக்குள் முழுமைப்பெறும் ? ஆனாலும் ‘க’ வை இந்த உலகம் மறப்பதில்லை.
அதற்கான மூலக்காரணம் பிண்ணனியற்று ஒரு கதாபாத்திரத்தின் நானாவித குணாம்சங்களையும் குழப்ப
உணர்ச்சிகளையும் ஆசிரியர் நாவலில் கூறியது தான். மேலும் அந்த இடத்தில் ‘க’விற்கு
flexibility இருக்கிறது. அதை தூக்கிவிட்டு யாருடைய பெயரினை இட்டாலும் அது முழுதுமாக
பொருந்திப் போகும். மனிதனுக்கு இருக்கக்கூடிய பொதுமையான குணாம்சத்தை அதன் எல்லா சாத்தியக்கூறுகளுடன்
‘க’விற்கு காஃப்கா கொடுத்துவிடுகிறார். அதனாலேயே அந்த பாத்திரத்திற்கு அப்படியானதொரு
flexibility கிடைக்கிறது.
இதை இங்கே இவ்வளவு பெரிதாக கூறக்
காரணம் பொலானோவின் எழுத்துகளும் காஃப்காவின் சாயலில் தோன்றியதைப் போல அதைவிட மேம்பட்டதைப்
போல தென்படுகிறது. எவ்வாறு மேம்படுகிறது எனில் காஃபகவிற்கு மனிதனின் தேடல்களையும் முடிவுறாத
இருத்தலையும் விஸ்தரிக்க கதையென்ற ஒன்று ஆணித்தரமாக தேவைப்படுகிறது. பொலானோவோ முழுமைக்குமான
character assassination செய்கிறார். மேலே குறிப்பிட்ட முதல் இரண்டு சிறுகதைகளில்
‘a’, ‘b’, போன்றே கதாபாத்திரங்களின் பெயர்கள் வருகின்றன. மூன்றாவது சிறுகதையில் கதாபாத்திரத்தின்
பெயரை மௌரிசியா சில்வா என்று கூறிவிட்டு அவனை எல்லோரும் கண் என்றழைப்பார்கள் என முன்னறிவிப்பு
செய்து கண் என்ற பெயரிலேயே சிறுகதையை நகர்த்துகிறார்.
கண் என்பது பொதுத்தன்மையை குணத்தை
ஓர் உறுப்பை குறிக்கும் சொல். அதை கதாபாத்திரத்திற்கு வைத்து தனித்தன்மையாக்குகிறார்.
பொலானோ அக்கதாபாத்திரத்தின் குணாம்சங்களையும் தெளிவுற சொல்கிறார். ஆனாலும் கண் எனக்
குறிப்பிட்டு சிறுகதையை நகர்த்தும் போது தனிப்பட்ட குணங்களும் பொதுக்குணங்களும் மோதிக்
கொண்டே வருகின்றன.
இந்நான்கு கதைகளை பொறுத்தமட்டில்
பொலானோவின் எழுத்துகள் நிலையற்ற அச்சமுறும் இருத்தலையே மையப்படுத்துகிறது. எத்தனை கதாபாத்திரங்களை
சிறுகதைக்குள் நுழைத்தாலும் இரு தனிப்பட்ட இருத்தல்கள் மோதுகின்றன அல்லது சந்திக்கின்றன
என்னும் நிலையிலேயே கதைகளை கொண்டு செல்கிறார். ஏதேனும் ஒரு சுயம் வெற்றி கொள்கிறது.
அந்த மகத்தான வெற்றிக்காக பலவித தீய குணாம்சங்களை தன்னக்கத்தே ஏற்றி வைத்திருக்கிறது
இந்த அபத்தமான இருத்தல். ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் வெற்றி கொள்கிறது. ஒன்று
தோல்வியடைகிறது. இரண்டை நோக்கும் போதும் இந்த சுயம் என்பது சிறுமை கொள்ளவேண்டிய பண்டமா
என்னும் அடிப்படைவாத கேள்வியே என்னுள் எழுச்சி கொள்கிறது.
இந்நான்கு சிறுகதைகளும் பொலானோவினை
நோக்கி என் தேடலை விரிவடையச் செய்கின்றன. அதே நேரம் என்னுள் எழும்பிய கேள்வி கிலியையும்
ஏற்படுத்துகிறது.
(அடுத்த பதிவில் கல்குதிரையில் வெளியாகியிருக்கும் இதர உலக சிறுகதைகள் பற்றியது. . .)
1 கருத்திடுக. . .:
தேர்ந்தெடுப்பு மிகவும் சிறப்பு....
Post a comment
கருத்திடுக