நவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (1)


எழுத்தாளனை உருவாக்குவது அவனவன் அனுபவங்களாகவும் கற்பனைகளாகவும் இருந்தாலும் அவற்றிற்கான ஊன்றுகோலாக இருப்பது வாச்சியம் தான். பரந்துபட்ட வாசிப்பின் மூலம் அவன் புனைவின் எல்லா சாத்தியப்பாடுகளையும் அறியமுயல்கிறான். புனைவு தன்னை ஸ்தாபிக்க நிறைய வடிவங்களை கைக்குள் கொண்டிருக்கிறது. கவிதை சிறுகதை நாவல் என கற்பனையை விரிக்கும் வடிவங்களாகவும் அவற்றை புரிதல் கொள்ள கட்டுரைகளையும் வேறு சில அறிவுசார் விஷயங்களையும் எடுத்துரைக்கவல்ல கட்டுரைகளையும் புனைவு கொண்டுள்ளது. புனைவு எல்லா வடிவங்களையும் தம்முள் குவிய வைக்கும் சக்தியை தன்னகத்தே கொண்டுள்ளது. இது எல்லா காலத்திலும் பேதமற்று நிகழும் அற்புதமாக இருக்கிறது.

நாவல் என்பதற்கு நான் கொண்டுள்ள விளக்கமே எண்ணற்ற சாத்தியக்கூறுகளை வெளிக்காட்டும் கருவி என்பதே. சிறுகதை தனக்குள்ளே முடிவொன்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு கணம் சிறுகதை முடியும் போதும் நம்மை ஒருமுகமான அகப்பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது. சிறுகதையிலிருந்து சாத்தியக்கூறுகளை பல திசைகளில் விரித்துக் கொண்டதாலோ என்னமோ நாவல் இருபதாம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பலருக்கு புரியாமலும் சென்றுவிடுகிறது.

ஒரு நாவல் புரியாமல் செல்வதற்கு நிறைய காரணங்களும் வழிகளும் உள்ளன. அதில் முதலாவதாக இருப்பது நாவலுக்குள் இருக்கும் பரந்துபட்ட வெளி நம்மை அச்சுறுத்துகின்றது. நாம் வாழும் கட்டமைக்கப்பட்ட வாழ்விற்கு வெளியே இருக்கும் சகலத்தையும் ஒரு நாவல் தீண்ட யத்தனிக்கிறது. வாசகன் நாவல் சார்ந்து கொள்ளும் முழுமையான புரிதலே அந்த முயற்சியை முழுமையாக்குகிறது. வட்டத்திலிருந்து வெளியே வருவது வாசகனுக்கு எளிமையானதல்ல. காப்ரியல் கார்ஸியா மார்க்வேசின் பெயர் புயலென தமிழ்நாட்டில் வீசிக் கொண்டிருந்த காலம். எஸ்.ராமகிருஷ்ணன் மார்க்வேசின் எழுத்து புரியவில்லை என அதை புரிய பல எழுத்தாளர்களை அணுகியிருக்கிறார். கொலம்பியாவின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள பலர் மூலம் அவரும் கோணங்கியும் முயற்சித்திருக்கின்றனர்.

இங்கே அடுத்த கேள்வி எழுகிறது. பயணங்கள் பல மேற்கொண்டு ஒரு நாவலினை புரிந்து கொள்ள இருவர் செய்த முயற்சி மட்டுமே அந்நாவலின் புரிதலை முழுமைப்படுத்துமா ? நிச்சயம் இல்லை. அப்படி முழுமைபடுத்திவிட்டால் அது நாவல் என்னும் கூற்றுக்கு வெளியே நிற்கும் விஷயமாகிவிடுகிறது. மேலே சொன்னது போல நாவல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது. அவற்றின் ஏதேனும் ஒரு இழையை மட்டுமே ஒருவனால் பிடித்துக் கொள்ளமுடியும். அதையே அவன் நம்புகிறான். அதையே அவன் நாவல் எனக் கொள்கிறான். அங்கே அவனுக்கான பிரதி அந்நாவலிலிருந்து உருவாகிவிடுகிறது. அப்படியெனில் நாவலின் முழுமை எப்படி கிடைக்கும் ?

இந்தக் கேள்வி நாவலுக்கு மட்டுமானதல்ல. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என எல்லாவற்றிகுமானது. புரிதலை விரிவுப்படுத்த பலரின் குரல் தேவைப்படுகிறது. அப்படி எல்லா குரல்களும் இணையும் போது சாத்தியக்கூறுகளின் வேர் இழையை எப்படி நம்மால் பற்ற முடியும் என்பதை கற்றுக்கொடுக்குமே ஒழிய படைப்பை முழுமையாக்காது. படைப்பின் முழுமை வாசிப்பின் அனுபவத்தில் மட்டுமே ஒளிந்து கொண்டுள்ளது.

இதற்கு தமிழ்நாட்டில் பேருதவியாய் இருந்தது சிறுபத்திரிக்கை உலகம். நிறைய சிறுபத்திரிக்கைகள் பலரால் ஆரம்பிக்கப்பட்டது. எழுத்து, மீட்சி, தெறிகள், படிகள், பிரக்ஞை, கிரணம், உன்னதம், தேடல், விடியல் என கூறிக்கொண்டே போகலாம். அதில் பலசிறுபத்திரிக்கைகள் அதன் ஆசிரியர்கள் இறந்ததாலும் பொருளாதார வசதியின்மையாலும் காணாமல் போனது. இப்போது இலக்கிய வாசகனின் நினைவுகளில் புதையுண்டிருக்கும் fossilகளாக மாறியிருக்கிறது. ஒரு சிறுபத்திரிக்கையை ஆரம்பிப்பது என்பது பல கடமைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. கலை இலக்கியத்தினூடே இருக்கும் புரியாத்தன்மையை விளக்கும் விஷயமாக அச்சிறுபத்திரிக்கை தன்னை உருமாற்றிக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் காணும் நிலையை பல ஆண்டுகளுக்கு முன்பே இலத்தின் அமேரிக்க இலக்கியங்களும் ருஷ்ய இலக்கியங்களும் கண்டிருக்கின்றன. அவற்றை நாம் இங்கே இருக்கும் வாசகர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் புனைவின் வேர்கள் இன்னமும் நீட்சியை கொள்ள ஆரம்பிக்கின்றன.

சிறுபத்திரிக்கை ஆரம்பித்த காலம் முதல் அதற்கென்ற சில அரசியல் நிலைப்பாடுகளுடன் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சி.சு செல்லப்பா தன்னுடைய எழுத்து சிறுபத்திரிக்கைகளில் ஓவியங்கள் சார்ந்து எதுவும் வெளிவரக்கூடாது என்றிருந்தாராம். இது எல்லா எழுத்தாளர்களின் மனதிலும் கிட்டதட்ட ஊன்றி போன விஷயமென்றே கருதுகிறேன். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும். நாவல் சிறுகதை மற்றும் கவிதை ஆகியன இருபத்தியோராம் நூற்றாண்டில் தனித்தனி நிறுவனங்ளாக தோற்றம் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. நிறுவனமயமாதலின் போது அங்கே இலக்கியம் நிலை கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதை சிதிலமடைய செய்ய வேண்டிய கடமையும் சிறுபத்திரிக்கையிடம் தான் பொதிந்து இருக்கின்றன. இதில் கோணங்கி ஓவியம் மற்றும் நாடகங்களையும் இணைக்கிறார். கலை-இலக்கியம் என்பதே பிரியக்கூடாது. இரண்டுமே தனித்தனி நிறுவனங்கள் அல்ல. மானுடத்தின் விடுதலையை மேவிடும் வெவ்வேறு வடிவங்கள் என்பவையே அவை என்கிறார்.

பல கடினமான பொருளாதார மேடுகளை தாண்டியும் இந்த எல்லா கடமைகளையும் செவ்வனே செய்து வரும் சிறுபத்திரிக்கையாக இருக்கிறது கோணங்கி வெளியிட்டு வரும் கல்குதிரை. மேலே சொன்ன விஷயங்களையும் கோணங்கியே தன்னுடைய முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

எனக்கும் கல்குதிரைக்குமான உறவு மிக மெலிதானது. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இரண்டாவது இதழைத் தான் வாசிக்கிறேன். சென்ற ஆண்டு லக்ஷ்மி மணிவண்ணன் மூலமாக மட்டுமே எனக்கு கோணங்கியுடனான நேரடி பழக்கம் ஏற்பட்டது. அவருடைய கலை சார்ந்த ஈர்ப்புடன் கூடியபேச்சில் மயங்காத இலக்கியவாதிகள் இல்லை என்பதை பலரின் கட்டுரைகளில் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முன் கோணங்கி எழுதிய பாழி நாவலை வாசித்து தோற்ற அனுபவமே அவருடைய உருவத்தை என்னுள் எழுப்பியிருந்தது. அந்த முதல் சந்திப்பின் விளைவாக எனக்கு கிடைத்தது கடந்த ஆண்டு வெளிவந்த இரண்டு கல்குதிரை இதழ்கள். ஒவ்வொரு ஆண்டும் இளவேனிற்கால இதழ் என்றும் முதுவேனிற்கால இதழ் என்றும் இரு சிறுபத்திரிக்கைகளை வெளியிடுகிறார்.

சென்ற ஆண்டு வாசித்த போதே ரேமண்ட் கார்வர், ஜான் ஜீவர், வில்லியம் பர்ரோஸ், ஆண்டன் செகாவ், ராபர்டோ கலாஸோ போன்ற பல உலக இலக்கியவாதிகளின் கதையை வாசித்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் அது சார்ந்து பதிந்து வந்தேன். எழுத முனைபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் தீவிர வாசிப்பாளருக்கும் தங்களின் எழுத்தை அல்லது வாசிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு அல்லது நவீனம் நோக்கியதாக மாற்றிக் கொள்வதற்கு இந்த கல்குதிரை பேருதவியாக இருக்கிறது.

இவ்வளவு தூரம் உயர்த்திப்பிடிப்பதற்கான காரணத்தை சிறுபத்திரிக்கையை முதலில் வாசித்ததாலேயே உணர்ந்தேன். புனைவு எத்தனை தூரம் புரியாத்தன்மையை தன்னுள் கொண்டிருக்கிறதோ அப்போது வாசகனுக்கு அதன் மீதான பயமும் புறக்கணிப்புமே அதிகரிக்கிறது. அதே நேரம் அது போன்ற எழுத்துகளுக்கான கட்டுடைப்பு கட்டுரைகள் வெளியாகும் போது எழுத்தின் வசீகரமான அந்தரங்கங்களை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அதன்படி பார்த்தால் கல்குதிரை தேர்ந்த வாசகனுக்கான வாசகசாலையாக விளங்குகிறது.

பல சிறுபத்திரிக்கைகள் பல காரணங்களால் காணாமல் போனாலும் அதே வேகத்துடன் இயங்கிவரும் கல்குதிரை தன்னுடைய கால்நூற்றாண்டு பயணத்தில் இம்முறை காலடி எடுத்து வைக்கிறது. வரவிருக்கும் நூற்றாண்டுகளுக்கான விதைகளை தூவிய வண்ணம் தன் பயணத்தை தொடர்கிறது. கோணங்கி சொல்வதுபோல் மூன்றாம் உலக இலக்கியத்திற்கான முன்மாதிரியாக கல்குதிரை முழுமைக்கும் விளங்குகிறது.

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் சமீபத்திய நேர்காணல் சிலேட் சிற்றிதழில் வெளியாகியிருந்தது. அதில் கல்குதிரை சார்ந்து பேசியிருக்கும் வார்த்தைகளே கல்குதிரை எப்படி காலத்தின் படிமமாக மாறியிருக்கிறது என்பதற்கு சான்றாகும்.

மாக்குவஸ்  மொழிபெயர்க்கப்பட்ட அந்த கல்குதிரை இதழ் இன்றைக்கும் எனக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருக்கு. வறட்சியாகவும், படைப்பூக்கம் அற்ற ஒரு நிலையையும் நான் உணரும்போது நான் மார்க்வேஸ் சிறப்பிதழை எடுத்து படிக்கிறேன், பல மொழிபெயர்ப்பு தாண்டி இன்றைக்கும் நான் ஆற்றல் அடையக்கூடிய இடமாக மார்க்வெஸ் சிறப்பிதழ் இருக்கு”


(அடுத்த பதிவு கல்குதிரையில் வெளியாகியிருக்கும் ராபர்ட்டோ பொலானோ படைப்புகள் பற்றியது. . .)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக