அனலின் உருவம்

பழிக்கு பழி என்னும் பதம் இருத்தல் என்பதை உணர ஆரம்பித்த காலத்திலிருந்தே உருவாகி வந்திருக்கிறது. தன்னுடைய இருத்தல் இல்லாமலாகும் போது அதை பிடுங்கும் அடுத்தவன் மீது கோவம் உருவாக ஆரம்பிக்கிறது. தன்னுடைய உடைமையின் மீது இருக்கும் அதீத பாசம் அதன் எதிர்த்திசையில் மனிதனை இழுத்து செல்கிறது. இந்த குணம் அல்லது எண்ணம் முற்றுப்புள்ளியைப் போல நிற்கும் தருணத்தில் வாழ்க்கை அதை கடந்து செல்வதற்கான காரணங்களை இழந்து நிற்கிறது.

பழிக்கு பழி சார்ந்து உருவாகியிருக்கும் கலைப்படைப்புகள் எல்லாமே அதன் இரு விஷயங்களை ஆராய்கிறது. ஒன்று பழி தீர்க்கும் மூர்க்கம் தன்னுள்ளே கொண்டிருக்கும் கொண்டாட்டத்தை. பழி தீர்த்தபின் வாழ்க்கை பயனை அடைந்தாற்போல உணரும் சின்னதான நிம்மதியை. மனதினுள்ளே உருவாகும் குரோதம் செயல்வழியில் தீரும் வரை குறைய வாய்ப்பில்லை. அதற்கான நானாவித வழிகளையும் நடப்பினை கொண்டு தீர்மானித்து பழி தீர்க்க குணங்கள் காத்திருக்கின்றன. மேலும் அப்படி தீர்த்த பின் மனதோரம் கொண்டாட்டம் ஒன்று நிறைகிறது.

இன்னொரு விஷயம் மேலே சொன்னவற்றின் எதிர்ப்பதம். கொண்டாடும் அதே சமயத்தில் மனதோரம் இருக்கும் வாழ்க்கை சார்ந்த பற்று ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. அதுநாள் வரை எப்போது பழிதீர்ப்போம் எப்படி பழிதீர்ப்போம் என்னும் எண்ணத்தையே ஓடவிட்டுக் கொண்டிருப்பவன் தன் எதிர்காலத்திற்கென எதையுமே சிந்திப்பதில்லை. பழி தீரும் தருணத்தில் தனக்காக எதையும் யோசிக்கவில்லையே என்னும் எண்ணமே எழுகிறது. இதை வேறு விதமாகவும் கூறலாம். மனம் நிரம்பி இருந்த ஒற்றை எண்ணமான பழி தீர்த்தல் தீர்ந்த பின் மனது காலியாகிறது. அத்தருணத்தில் எதிர்காலம் சார்ந்த கேள்விக்குறி எழுகிறது.

இவ்விரு விஷயங்களையும் கலைப்படைப்புகள் அதிகமாக உருவாக்குகின்றன. முதலில் சொன்ன விஷயத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் திரைப்படம். இரண்டாவதற்கு ஓல்ட்பாய் என்னும் கொரிய திரைப்படம். நாவல்களில் பழி தீர்த்தல் சார்ந்து அதிகம் வாசித்ததில்லை. இவ்விரு படங்களும் இந்த இரண்டு விஷயங்களை அரசியலாக மாற்றுகிறது. அவ்விரு படங்களைப் பார்க்கும் போது கூட ஏதேனும் ஒரு நாவலில் இதை எழுதமாட்டார்களா/எழுதியிருக்கமாட்டார்களா என்னும் அவா எழுந்தது. அப்படி யதேச்சையாக என் கைக்குள் சிக்கியது தான் பூமணி எழுதிய “வெக்கை”.இங்கே இரண்டு விஷயங்களும் அலசப்படுகின்றன. அவற்றில் முதலாவதாக சொன்ன கொண்டாட்டமே அதிகமாக இருக்கிறது. தன் அண்ணனை கொன்ற வடக்கூரானை சிதம்பரம் கொன்றுவிடுகிறான். கொலை செய்த இடத்திலிருந்து தப்பித்து அய்யாவுடன் காடுகளுக்குள் பதுங்க சென்றுவிடுகிறான். அவர்களின் பயணமும் கொலைக்கு பின்னான வாழ்க்கையுமே நாவலாக இருக்கிறது. நாவலே அந்த கொலையில் தான் ஆரம்பம் கொள்கிறது.

கொலை செய்யும் சிதம்பரம் பதின்வயது இளைஞன். இளைஞன் என்பதாலேயே இரண்டு வித விஷயங்கள் எண்ணமாய் எழுகிறது. ஒன்று பதின்வயதில் செய்த காரியத்தால் எதிர்காலம் பாதிக்குமே என்னும் எண்ணம். மற்றொன்று பதின்வயதில் செய்தது சாதனையல்லவா. இந்த இரண்டும் நாவலில் இடம்பெறுகிறது. ஆனால் யார் யார் அதை சிரமேற்கொள்கிறார்கள் என்பதில் தான் நாவலுக்கான சுவாரஸ்யமும் வாசகனுக்கான அதிர்ச்சியும் காத்திருக்கிறது. பழிதீர்த்தல் வடுவாக மாறிப்போன நெஞ்சம் எதையும் சொல்லத்தூண்டும் என்பதற்கான சான்றாக இந்நாவல் அமைகிறது.

பழிதீர்த்தலுக்கான காரணத்தை பயணத்தினூடே அதிசுவாரஸ்யமாக சொல்லி செல்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பழிதீர்த்தல் வெவ்வேறு உருவத்தை கொண்டிருக்கிறது. அது பிறரிடமிருந்து வேறுபடும் விதத்தை அல்லது வித்தியாசத்தை தெளிவாக கதையின் ஒட்டத்தோடு காட்டியிருக்கிறார்.

பழிதீர்த்தல் வீரத்துடன் எப்படியான சம்மந்தத்தை கொண்டிருக்கிறது என்பதையும் இந்நாவல் பேசுகிறது. வீரம் கௌரவம் சார்ந்த விஷயம். கௌரவம் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டது. ஒரு பழிதீர்த்தலை குடும்பம், அரசாங்கம், சுற்றம், எதிர்தரப்பார் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பதை நாவல் பேசுகிறது. அரசும் அதிகாரமும் தேவையே இல்லை. தப்பு செய்தவனுக்கு அங்கேயே தண்டனையை அளிக்க வேண்டும் என்பது எல்லோரின் மனதினுள்ளும் இருக்கும் அடிப்படைவாத கொள்கை. இந்த கொள்கை எப்படி பழிதீர்த்தலை நியாயப்படுத்துகிறது என்பதையும் சொல்கிறார்.

கதை சொல்லும் விதம் தி.ஜானகிராமனைப் போல வசனங்களாலேயே நகர்கிறது. குறைவான உரைநடையும் அதிகமான வசனங்களையும் வைத்து சொல்ல நினைத்த கதையை செறிவாக கூறியிருக்கிறார். ஆனாலும் நாவலில் முழுமையை என்னால் உணர முடியவில்லை. சின்ன உதாரணம் சொல்கிறேன். ஓல்ட்பாய் படத்தில் நாயகனை பதினைந்து ஆண்டுகள் தனியான அறையில் அடைத்து வைக்கிறான் வில்லன். தன் குடும்பத்தை இழந்து அந்த அறையிலேயே ஏங்கி ஏங்கி சித்தம் கலங்கி விடுகிறான். அவனுக்குள் நிரந்தரமாக இருக்கும் ஒரே எண்ணம் தன்னை அடைத்து வைத்திருந்தவனை கொலை செய்ய வேண்டும் என்பது. திடிரென ஒரு நாள் வெளியே வந்த போது எப்படியோ தன்னை அடைத்து வைத்தவனை கண்டறிகிறான். அவனை கொலை செய்ய முயலும் போது வில்லன் பேசுகிறான். எனக்கு இதயம் கிடையாது. பேஸ் மேக்கரை வைத்திருக்கிறேன். கைவசம் ஒரு பொத்தனை வைத்துக் கொண்டு இதை அழுத்தினால் நானே இறந்துவிடுவேன். உன் வெறி அடங்குதலும் முழுமை பெறாது. எப்படியும் இறக்க போகிறவன் நான். மேலும் என்னை கொலை செய்த பின் உனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது ? முதலில் ஏன் உன்னை அடைத்து வைத்திருந்தேன் என அறிந்து கொண்டு வா. பின் மோதலாம் என்கிறான். இந்த படத்தின் கடைசி காட்சி காவியத்தனமான சோகம் நிரம்பியது. அதே நேரத்தில் பழி தீர்த்தலின் பின்னே இருக்கும் அரசியலை அந்த ஒற்றைக் காட்சி ஆராய்கிறது.

பழிதீர்த்தல் சங்கிலித் தொடரைப் போல. பழியும் பாவமும் இடம்மாறிக் கொண்டே செல்லும். அதை எங்கேயும் தடுத்து நிறுத்த இயலாது. பழிதீர்ப்பதற்கு காலமும் தேவைப்படுகிறது. காலம் பார்த்து தீர்ப்பது தான் வீரத்திற்கு அடையாளமாய் இருக்கிறது. அந்த காலத்தின் போது எதிரியின் நிலை என்ன என்பதை அவதானிப்பதும் முக்கியமானதாய் அமைகிறது. இந்த விஷயங்களை என்னால் வெக்கையில் உணர முடியவில்லை. பழியின் அரசியலை விரிவாக பேசினாலும் அதில் முழுமையோ மனதை வருடும் விஷயத்தையோ என்னால் துளிக்கூட காணமுடியவில்லை.

பூமணியின் எழுத்தை வெகுவாக ரசித்தேன். வசனங்களின் மூலம் கதை சொல்லும் விதத்தில் பலர் சொதப்பி விட வாய்ப்புகள் உண்டு. அதற்கான காரணம் வசனங்களை எடுக்கும் போதே இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான தர்க்கமாக மாறிவிடுகிறது. சில கருத்தாக்கங்களை நிலை நிறுத்த எழுத்தாளர் மேற்கொள்ளும் போராட்டமாக உருவெடுத்துவிடுகிறது. இவரிடம் அந்த பிரச்சினை இல்லை. கதையினூடே சுவாரஸ்யமான சம்பவங்களும், தர்க்கங்களும் இரண்டறக்கலந்து அழகுற உருவைக் கொள்கிற்து.

காலை முதல் கடுமையான வெயிலில் நிலமொன்று தகித்து பின் சின்னதான தூரலை கண்டால் அதனைத் தொடர்ந்து பூமிக்கடியில் இருக்கும் வெப்பம் மீண்டும் மேலெழும். தோசைக்கல்லில் தண்ணீர் தெளிப்பது போல. அப்போது அது காட்டும் வெக்கை இயல்பை விட அதிகமாக இருக்கும். அதே நேரம் அது தற்காலிகமானது தான். அப்படியானதொரு வாழ்க்கை மற்றும் பழி சார்ந்து இருக்கும் வெக்கையை பூமணி உருவாக்கியிருக்கிறார். அதன் அனல் எல்லா பக்கங்களிலும் தன் உருவை காட்டிக் கொண்டே வருகிறது.

பி.கு : தேவிபாரதியின் முன்னுரை அற்புதமாக இருக்கிறது. நாவல் வாசித்தபின் வாசித்தால் புரிதலிலும் பழியின் பின்னே இருக்கும் அரசியலை பூமணி கையாண்ட விதத்தையும், இந்நாவல் வெளிவந்த காலத்திலிருந்த இலக்கியபோக்கினையும் அறிந்து கொள்ளலாம்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

ராம்ஜி_யாஹூ said...

மீண்டும் ஒரு நல்ல பார்வை,

Post a Comment

கருத்திடுக