நதியின் சரிதம்
இந்த வார்த்தைகள் எனக்கு மிக
பிடித்தமானது. சாரு நிவேதிதா இத்தலைப்பில் நாவலொன்றை எழுதவிருப்பதாக பழைய கட்டுரையொன்றில்
குறிப்பிட்டிருப்பார். இவ்வார்த்தைகளில் இருந்த வசீகரம் மனதுள்ளே பதிந்தே இருந்தது.
ஒரு நதிக்கென என்ன சரிதம் இருக்கப்போகிறது ? இந்த கேள்வியும் காவியத்தனமான ஒன்று. அதற்கான
காரணம் நதி ஆரம்பிப்பது ரம்மியமான மலைப்பகுதியில். கலப்பது மாபெரும் கடலில். இரண்டிற்கும்
இடையே பழ வழிதடங்களை அளந்து கொண்டே செல்கிறது. இவற்றைக் கடந்ததொரு வரலாற்றை யோசிக்க
இயலுமா எனில் இதனுள்ளேயே பெரிதான வரலாறு புதையுண்டுள்ளது.
நதி ஸ்திரமான இயற்கை வளம். அது
கடக்கும் வழிகள் எல்லாவற்றிலும் ஊர்களும் அரசாங்கங்களும் போராட்டங்களும் அரங்கேறி இருக்கின்றன.
ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கும் அந்த நதி ஒவ்வொரு உருவில் சிறப்பு வாய்ந்ததாய்
அமைந்திருக்கிறது. சிலருக்கு பூர்வீகமாய் அமைந்திருக்கிறது. இன்னமும் சில இடங்களில்
பல போராட்டங்களையும் ரத்தச் சிதைவுகளையும் கண்ணுற்ற ஜடமாக நதி இருந்திருக்கிறது. வெள்ளத்தினால்
ஊர்களை அழித்திருக்கிறது. கோடையில் தாகத்தை நனைத்திருக்கிறது. நன்மைகள் தீமைகள் என
தன்னிசைவிற்கு செய்து கொண்டிருந்தாலும் மக்கள் அதனை வெறுப்பதில்லை. தற்காலிகமான கோபங்கள்
நதி சார்ந்து மனதுள்ளே எழுந்தாலும் அவை கடந்து செல்லக்கூடியதாக அமைந்துவிடுகிறது. இதற்கு
முக்கிய காரணமாக வேறு ஒரு பூச்சும் நதியின் மேல் படர்ந்திருக்கிறது. அது தான் புனிதத்தன்மை.
இயற்கைகளை கடவுளர்களாக பூஜிக்க
ஆரம்பித்ததிலிருந்து அதன் மேல் புனிதத்தன்மை ஏறிக் கொண்டிருக்கிறது. அல்லது ஏற்றுவிடப்படுகிறது.
இந்த புனிதத்தன்மையை மக்கள் பூஜிப்பதால் குறைந்தபட்சம் அதன் காரணியாக இருக்கும் நதியை
கலங்கமில்லாமலாவது வைக்க வேண்டும் என்னும் எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். இன்றிருக்கும்
எல்லா நதிகளும் ஏதோ ஓரிடத்தில் கலங்கப்படுத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கிறது. அதே நேரம்
ஒரு நதியைக் காணும் போது நமக்குள்ளே இருக்கும் கற்பனைகள் பெருவாரியாக விரிகின்றன. புதிதாக
நதியை பார்கும் பட்சத்தில் எங்கிருந்து வரக்கூடும், ஏன் கடலில் கலக்கிறது, இந்த தண்ணீரின்
சுவை ஏன் இப்படி இருக்கிறது, இந்த தண்ணீர் மட்டும் குளிர்வதற்கான காரணங்கள் என்ன எனவும்
பால்ய காலத்திலிருந்து பழகியிருந்த நதியை பிறிதொரு நிலையில் பார்க்கும் போது கடந்த
காலம் முழுக்கவும் நினைவில் எழுகிறது. அது அந்த நதி சம்மந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
வெறும் பால்யகாலமாகவும் இருக்கலாம். இரண்டிற்குமே முக்கியமானதாய் இருப்பது என்னவோ நதி
தான்.
அப்படியானதொரு நதியை மையமாக வைத்து
உருதுவில் நாவலொன்றை புனைந்திருக்கிறார் குர் அதுல்ஐன் ஹைதர். இதை சௌரி தமிழாக்கம்
செய்திருக்கிறார். நேஷ்னல் புக் டிரஸ்ட் வழியாக வெளிவந்திருக்கும் அந்த நாவல் “அக்னி
நதி”.
சீரான நடையிலோ கதைசொல்லலிலோ இந்நாவல்
நகர்வதில்லை. பதிலாக பல ஆண்டுகளை, நூற்றாண்டுகளை கடந்து நாவல் நகர்கிறது. தொடர்ச்சியுடன்
கூடிய கதைகளும் இல்லை. வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும் கதைகள். ஆனால் எல்லா கதைகளுக்கும்
ஏதோ தொடர்பு இருக்கவே செய்கிறது. இதை நான் லீனியர் படைப்பு என வகைப்படுத்தவும் விரும்புகிறேன்.
அதற்கான காரணம் வெவ்வேறு கதைகள் ஒரு நதியை ஒட்டியே நகர்கிறது. எல்லா காலத்திலும் ஒரே
பெயர்கள் இடம் பெறுகின்றன. நதி மட்டும் மையம் கொள்கிறதேயன்றி கதைகள் அல்ல.
நாவலின் ஆரம்பம் புத்த பிக்குகள்
காலத்தில் தொடங்குகிறது. அங்கே கௌதம நீலாம்பரன் என்பவனுடன் நாவலில் கூற்றுகள் சம்பாஷணைகள்
ஆரம்பிக்கின்றன. கிட்டதட்ட ஆரம்ப சில அத்தியாயங்களிலேயே ஆசிரியர் இந்நாவல் எதை மையமாக
கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறார். உலகம் முழுக்க போர்களாலும் அதிகார
வெறிகளாலும் ஒருவரைக் கொன்று பின் அவர்களுடைய இடங்களை பிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இது எல்லா காலங்களிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இந்நிலையில் எல்லோரும் விரும்புவது
என்னவோ அன்பை தான்.
யோகிமார்களும் சந்நியாசிகளும்
இந்த அன்பை தெய்வீகத் தன்மையுடன் இணைத்து பக்திப்பொருளாக மாற்றிவிட்டார்கள். ஆக விஷயம்
அன்பு என்பதை மாற்றி போரிடுதலும் துறவு பூண்டுடுதலும் என்னும் நிலைக்கு வருகிறது. ஊரே
பற்றி எரியும் போது தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் போதிப்பது அறிவிலித்தனம். விதிப்படி
நடக்க வேண்டியது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கடந்து செல்வதற்கு பதில் தன்னாலானவரை
காயப்பட்டிருக்கும் இருவரை உதவலாம், அல்லது உழைக்கும் வர்க்கத்திற்காக போராட்டங்களை
செய்யலாம்.
வேறு காலகட்டத்தில் கதை செல்லும்
போது இதே விஷயம் வேறு ஒரு உருவத்தைக் கொள்கிறது. அசோகப் பேரரசர் போரின் அவலங்களைக்
கண்டு புத்த மதத்தை தழுவினார் என பலரும் வாசித்திருப்போம். இந்த நிலையை பார்கையில் போரின்
கொடூரங்களை கண்ணாரக் காணும் பட்சத்தில் இதை துறந்து அமைதியான வாழ்க்கையை நாடி செல்லலாம்
என்னும் நிலை மனதுள்ளே கோலோச்சுகிறது. இந்த இரு நிலைகளையும் நாவல் வெவ்வேறு காலகட்டங்களை
முதலாகக் கொண்டு பேசிக் கொண்டே செல்கிறது. எல்லா காலங்களிலும் ஒரே பெயர்கள் வருவது
ஆசிரியர் தத்துவார்த்தமாக உபயோகபடுத்தும் ஒரு யுக்தி.
இதை புத்த மதக் கோட்பாடுகளுடன்
முதல் அத்தியாயத்திலேயே விளக்கிவிடுகிறார். பெயர் என்பது சில ஒலிகளின் சேர்க்கை என
முதலிலேயே சொல்லிவிடுகிறார். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெயர்கள் ஏற்கனவே வந்த
பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் குணங்களோ சின்னதான ஒற்றுமைகளும் பெரிதான வேற்றுமைகளும்
கொண்டனவாக இருக்கின்றன. இதை கூர்ந்து நோக்கும் போது நாவல் கொடுக்கும் தரிசனம் மேம்பட்டதாய்
இருக்கிறது.
இதனிடையே கலைகளையும் உள்ளிழுக்கிறார்
ஆசிரியர். கலைகள் வரலாற்றின் வெளிப்பாடுகள். அந்த கலைகளும் முன்முடிவுகளுடன் வெளிப்படுவன
அல்ல. மாறாக தன்னார்வத்துடன் உள்ளார்ந்த போதத்துடனும் வெளிப்படுபவை. குறிப்பிட்ட காலகட்டத்தில்
வடிக்கப்படும் சிலை பல்வேறு காலங்களுக்கு அப்பால் எப்படியெல்லாம் பார்க்கப்படும் என்பதையும்
நாவலில் கூறுகிறார்.
நாஸ்டால்ஜிக் என கூறப்படும் சொந்த
ஊர் நினைவுகள் நாவலில் மிகப்பொருத்தமாக கலையனுபவத்துடன் இடம்பெற்றிருக்கிறது. அபுல்
மன்சூர் கமாலுத்தீன் என்பவன் இந்த மண்ணில் இருக்கும் பாரம்பரியங்களை பாரசீக மொழியில்
மொழிபெயர்க்க வேண்டி ஆவணங்களை சேகரிக்க மகாராஜாவால் அனுப்பபடுகிறான். அவனுடைய பயணங்களும்
அந்த நதியை சுற்றியே நிகழ்கின்றன. அவனுக்கு இந்த மண் சுத்தமாக பிடிபடுவதில்லை. தன்னுடைய
சொந்த ஊரின் நினைவிலேயே இங்கே உழல்கிறான். அவனை இந்த நதி எப்படி தன்வயப்படுத்துகிறது
என்பதும் நாவலின் சுவாரஸ்யமான பகுதிகள்.
மேலும் இந்துஸ்தானத்திலிருந்து
இந்தியா என்னும் பெயர்மாற்றத்தினிடையில் இருக்கும் பெருவாரியான வரலாற்றை மிக அழகாக
உணர்ச்சி சித்திரமாகவும் குறைந்தபட்ச வரலாற்றுத் தொனியுடனும் கூறிச் செல்கிறார். ஒவ்வொரு
காலகட்டத்திலும் இருக்கும் லக்னௌ கொல்கத்தா போன்ற இடங்களின் வர்ணனைகள் அந்த காலமாற்றத்தையொட்டிய
நிலவியல் மாற்றங்களை தெளிவுற காட்டுகின்றன. அதே நேரம் மனிதர்களின் மாற்றங்களும் தெளிவாக
சொல்லப்படுகின்றன.
இந்திய முஸ்லீம் லீக் நிகழ்ந்து
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் போது நாவலில் வரும் பாத்திரங்கள் தத்தமது உள்ளார்ந்து
உண்மைக் குணங்களை வெளிக்கொணர்கிறார்கள். மேலும் இந்த பிரிவினைக்கு பின்னே இருக்கும்
தனிமனித மனப்பான்மையை சந்திரகுப்த மௌரியரின் படையெடுப்பாக வரும் அத்தியாயத்திலேயே ஆசிரியர்
சொல்லிவிடுகிறார். மன்னர்களுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயும் இருக்க வேண்டிய ஒற்றுமை
தளர்ந்து செல்கிறது. இதனாலேயே நிறைய போர்களை சந்திக்க வேண்டிவரும் என. கதாபாத்திரங்களும்
அதற்கொப்ப மண்ணின் ஏக்கங்களை வெளிக்காட்டுகிறார்கள். பிரிவினை தனிப்பட்ட பிரிவினையாக
மாறும் பட்சத்தில் அவை எந்த விதமான உணர்ச்சிச் சிக்கலாக இருக்கக்கூடும் என்பதை மொழியின்
லயத்தில் உணர்ச்சிப்பிரவாகமாக மாற்றியிருக்கிறார்.
கம்யூனிஸத்திற்கும் சோஷலிஸ்திதிற்கும்
இடையே பெரும்போர்கள் தனிமனிதர்களுக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பெரும் போராட்டங்களை
சிறுவாரியான மக்களே செய்திருக்கிறார்கள். பெருவாரியான மக்கள் தத்தமது வாழ்க்கையினை
பேணிக்காக்கவே முனைந்திருக்கிறார்கள். இதையும் நாவல் எல்லா காலகாட்டத்தையும் இணைத்து
பேசுகிறது.
எல்லா மாற்றங்களும் நிகழ்ந்த
போதும் நதி அங்கேயே ஓடிக் கொண்டிருக்கிறது. அதை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை.
அந்த நதியும் யாரையும் குறிப்பாக நினைவில் கொள்வதில்லை. அபத்தங்களை பார்த்து கெக்கலியிட்டாலும்
உன்னதங்களை பார்த்து பூரிப்படைந்தாலும் நதி கலங்கமாகவே இருக்கிறது. கலங்கமாகியிருந்தும்
ஆழத்தில் புனிதத்தன்மை ஊறியிருக்கிறது. அதை அதன் வரலாறே எடுத்து சொல்லக்கூடியது. வெறும்
புனைவன்று வரலாறு. இயற்கையேனும் அதற்கு சாட்சியாக நிச்சயம் நிற்கும். அதன் படியே அக்னி
நதியும் சில கதாபாத்திரங்களைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. நாவலுக்குள்ளே காலம் அதன்
வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கிறது ஒரு நதியைப் போல.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக