மனிதர்களை சிறுமையாக்கும் வீட்டின் இருத்தல்
நீலப்படங்கள் பார்க்கும் போது
மட்டுமே fetish என்னும் வார்த்தையை கடந்து வந்துள்ளேன். அதைத் தாண்டி அதன் அர்த்தம்
கூட தெரியாது. (மேலும் அந்த வகையறாவில் இருக்கும் படங்களும் எனக்கு பிடிக்காது). ஃபேஸ்புக்கில்
இலக்கிய விமர்சகருடன் பேசிக் கொண்டிருந்த போது மூத்த எழுத்தாளர் ஒருவரை குறிப்பிட்டு
அவருடைய படைப்பு fetish தன்மையுடன் இருக்கிறது என்றார். எத்தனை முறை தான் நான் தெரிந்தவன்
போல தலையை ஆட்டுவது என அதன் அர்த்தம் கேட்டுவிட்டேன். அப்போது தான் பெரிதான ஞானமே பிறந்தது.
எல்லா வயதிலும் ஏதேனும் பொருளின்
மேல் மோகிப்பவர்களாய் மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். பையனாக இருப்பின் பைக், சிகரெட்,
மது என பல விஷயங்கள் இருக்கும். பெண்களில் அதிகமாக தெரியவில்லை. ஆனால் மோகம் நிச்சயம்
உண்டு. அக்குறிப்பிட்ட பொருள் இல்லையெனில் வாழ்தலும் அப்போதைக்கான இருத்தலும் ஸ்தம்பித்து
போய்விடும். சிலருக்கு பொருட்கள் ஆயுள் முழுதுற்குமான போதைப் பொருளாகிவிடுகிறது. இந்த
அசையாத சொத்துகள் கூட நாமாக தேர்வு செய்வதாக சில நேரம் இருந்துவிடுகிறது. பிற நேரங்களில்
நம் விதிப்பயனாக அமைந்துவிடுகிறது.
இந்த இரண்டாம் கட்ட விஷயத்தை
எடுத்துக் கொள்வோம். இங்கே பெரிய புலனறியாத அரசியல் குடிகொண்டுள்ளது. அப்பாவின் வேலையை
மகன் தொடர்வது, பூர்வீக சொத்துகள் போன்றவைகளை இதில் சேர்க்கலாம். இவை பெரியதொரு பாரமாக
அமைந்தாலும் இருத்தலுக்கு பெருந்துணையை புரிந்து கொண்டே இருக்கும். இதை நம்மால் புறந்தள்ளவும்
முடியாது. அதே நேரம் மனதின் ஆசைகளை ஒதுக்கி கொண்டாடவும் முடியாது. இங்கே நம் அனுமதியில்லாமலேயே
இருத்தல் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமையாகி கிடக்கிறது என்று கூறலாமல்லவா ? இதை க்ளாஸிக்
நாவலாக ஹெப்ஸிபா ஜேசுதாசன் மாற்றியிருக்கிறார். அப்படி அவர் மாற்றிய நூல்(நாவல்) தான்
“புத்தம் வீடு”
இந்நூலை பலர் பெருமையாக பேசி
கேட்டிருக்கிறேன். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய நாவல் முகாமில் பலரின் பேச்சில்
அமைந்த ஒரு நூலும் இது தான். இந்நிலையில் தான் என் கண்ணிற்கு இந்நூல் புலனாயிற்று.
பனையேறி என்னும் கிராமத்தில் இருக்கும் பழைமை நிறைந்த வீட்டின் பெயர் தான் புத்தம்
வீடு. அங்கு வசிக்கும் லிஸி என்பவளின் கதை தான் இந்நாவல். கதை என்பதைவிட உணர்வுச் சிக்கல்களினூடான
பருவமாற்றம் தான் இந்தக்கதை.
புத்தம் வீடு அவளுக்கு நிறைய
அரண்களை வழிவகுக்கிறது. அப்பாவின் கண்டிப்புகள் மூலமாகவும், பருவமடைவதன் மூலமாகவும்,
சிறுமியாக அனுபவித்த தோழமைகளை சமூக அறங்களால் சுற்றம் புறமொதுக்குவதன் மூலமாகவும் தனக்குள்ளான,
புத்தம் வீட்டிற்குள்ளான சிறைவாசத்தை எய்துகிறாள். அதே நேரம் விடுதலைக்கான பல முயற்சிகளை
அந்தந்த வயதில் மேற்கொள்ளவும் செய்கிறாள். ஒவ்வொரு வயதிலும் அவள் விடுதலைக்கென மேற்கொள்ளும்
சிறு சிறு முயற்சியும் பெரும் சாதனையாக அவளுள் வேரூன்றுகிறது. அதே நேரம் அடுத்தடுத்த
அரண்கள் முளைத்துக் கொண்டே செல்கின்றன.
தொடர்ந்து ஒடுக்குப்படும் போது
ஒடுங்கிப்போதலே நம் இயல்பு என்றாகிவிடுகிறது. அதே நிலை தான் லிஸிக்கும் ஏற்படுகிறது.
இந்நிலையில் இருத்தல் சார்ந்த பல கேள்விகள் அவளுள் எழுகிறது. தன் இருத்தலுக்காக போராட
வேண்டும் என்றெண்ணுகிறாள். அதற்கான வாய்ப்புகளை எண்ணிக் கொண்டே வருகிறாள். வீடு உருவாக்கும்
பயங்களை அவளால் எந்த இடத்திலும் மீற முடிவதில்லை. அந்த மீறலை ஒரே ஒரு இடத்தில் பலத்த
குரலுடன் செய்கிறாள். வாசிக்கும் போது அந்த ஒரு இடத்திற்காகத்தானோ இத்தனை பக்கங்களை
கடக்க வேண்டியிருந்தது என்னும் பெருமூச்சு நம்முள் எழுகிறது. அவ்வளவு கலைத்தன்மையுடன்
அந்த இடத்தை ஆசிரியர் உருவாக்குகிறார்.
சாதிப்பிரிவினையை மிக அழகாக உருவகமாக
நாவலில் சொல்கிறார். பனையேறிகளுக்கும் புத்தம் வீட்டுக்காரர்களுக்கும் இருக்கும் எதிர்
எதிரான உறவை மிக அழகாக விவரிக்கிறார். புத்தம் வீடு விழ்ச்சியின் அடையாளம். ஆனால் அந்த
வீழ்ச்சி அதனுள்ளேயே அடங்கிக்கொள்கிறது. வெளியே தெரிவதெல்லாம் பிரம்மாண்டமான வீடு கொடுக்கும்
மரியாதையும் அது சார்ந்து உருவாகும் மேல்வர்க்க பயமும். இந்த உணர்வுகளை அவ்வீட்டார்களும்
தனதாக்கிக் கொண்டு அதற்கொப்ப நாவலில் உலவுகிறார்கள். ஒருக்கணம் அந்த வீட்டை நீக்கி
அக்கதாபாத்திரங்களை நினைத்துப் பார்த்தால் யாருக்குமே அர்த்தம் புலப்படுவதில்லை. எல்லாம்
ஒன்றுமில்லாமல், அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.
நாவலின் மொழி எளிமையானதாகவும்
வசீகரமானதாகவும் இருக்கிறது. ஆரம்ப சில பக்கங்களுக்கு நாவலின் ஓட்டம் அதன் மெதுவான
நடையில் பிடிபடவில்லை. பின் கதை தன் ஆழம் நோக்கி பயணிக்க மொழி தானாக தன் பிரவாகத்தை
தெரிவு செய்துகொள்கிறது. வட்டார மொழியும் கடினமின்றி இனிமையாய் இருக்கிறது. சில இடங்களில்
உள்ளவசனங்கள் உரைநடை மொழிக்கொப்ப மாறுவது மட்டும் ஏன் என்பது தெரியவில்லை. புத்தம்
வீடு உணர்வு சிக்கல்களின் அடையாளம். ஆனாலும் அவ்வடையாளம் சின்னதான உருவையே எடுத்திருக்கிறது.
அது தன் முழுமையை எய்துவதில்லை. மாறாக சிதறிக்கிடக்கும் இடங்களிலேயே தன் பழைமையை ஸ்தாபித்துக்
கொள்கிறது. அதற்கான கைப்பாவைகளாக கதாபாத்திரங்கள் கதையினூடே உலவுகிறார்கள். அவர்களின்
உலவுதல் எவ்வளவு பெரிதாக இருப்பினும் சலனங்களை ஏற்படுத்தி சலனமின்றி ஸ்திரமாக நிற்கிறது
புத்தம் வீடு.
பி.கு : பனையேறிகள் சார்ந்து
நாவலில் வரியொன்று வருகிறது.
“பனையேறிக்க அருமையெ அறிஞ்சானா
இவனுவ ? பனையேற ஆளில்லே இல்லேண்ணு தவங்கிடக்க போற காலம் வருது ?”
இந்த வார்த்தை என்னவோ உண்மை தான்.
தென்னை மரம் ஏறுவதற்கும் பனையேறுவதற்கும் இப்போது ஆட்கள் மிக மிகக் குறைவு. ஒரு மரம் ஏறுவதற்கு நூற்றி ஐம்பது என்று நகர்ப்புறங்களில்
கேட்கிறார்கள். அதே நேரம் கிராமங்களில் பழைய காலத்தை ஒப்பவே பண்டமாற்று முறையில் இந்த
ஏற்றங்கள் அமைந்துவருகின்றன. நகரங்களின் இடையே இருக்கும் தென்னைகளை அகற்றுவதிலே தான்
நகர்வாசிகள் ஆர்வம் காட்டுகிறர்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஒரே காரணம் தென்னங்காய்
தலையில் விழுந்துவிடுமோ என. தென்னையும் பனையும் நெடுஞ்சாலைகளுக்கான அலங்கரிப்பு பொருட்களாக
மாறி வருகின்றன. அதை எண்ணித்தானோ என்னவோ 1964இல் எழுதப்பட்ட புத்தம் வீடு நாவலில் இப்படியான
வரி வருகிறது என்ற சந்தேகம் வாசிக்கும் போது என்னுள் எழுந்து மறைந்தது.
2 கருத்திடுக. . .:
good review ki mu
நன்றி...
Post a comment
கருத்திடுக