பழுது : இயந்திரத்தின் ஒரு அங்கம்
அரசியல் என்பதொரு சாக்கடை என்பது
எல்லோரினுள்ளும் அடிப்படைவாதமாக தேங்கி நிற்கும் வசனம். அதே நேரம் எல்லா அரசியல்வாதிகளும்
நல்லது என்னும் எண்ணத்துடனேயே வருகிறார்கள். ஆனால் முழுமைக்கும் அதை நிறைவேற்றுவதில்லை.
வாக்குறுதிகள் காற்றில் கலந்து காணாமலாகின்றன. ஒவ்வொரு நிறைவேறாத ஆசைகளை சுமந்துகொண்டே
அந்த பிராந்திய மக்கள் தங்கள் தேவைகளை தங்களுக்குள்ளேயே பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேல்தட்டு மனிதர்களுக்கு இவ்விஷயங்கள் அரசியல் சுழற்சியின் அன்றாடமாக மனதுள் தேக்கம்
கொள்கிறது. இந்நிலையில் எல்லா பதவிகளும் இப்படித்தான் இருக்கிறதா ? பதவிக்கு வருகின்ற
எல்லோரின் கனவுகளும் இப்படியே ஒடுக்கப்படுகின்றனவா ? எல்லோரின் ஆசைகளும் வீரமும் ஒடுக்கப்படுகின்றது
எனில் தவறு தனிப்பட்ட தவறுகளாக இருக்க முடியாது. அப்படியெனில் தவறுகள் எங்கே இருக்கின்றன
?
இந்த கேள்விக்கான பதிலை ஆராயும்
போது சில உவமைகள் உருவாகின்றன. அரசும் அரசாங்கமும் மாபெரும் இயந்திரம். அதனுள்ளே இருக்கக்கூடிய
சின்ன சின்ன பதவிகள் எல்லாமே அவற்றின் அங்கங்கள். ஆக இயந்திரத்தின் எந்த ஒரு இடம் பழுதானாலும்
இரண்டே வழிமுறைகள் தான் உள்ளன. ஒன்று இயந்திரத்தின் இயல்பு நிலை திரும்புவதற்கேற்ப
பழுதடைந்த பகுதியை தட்டி சரி செய்வதும் சரியாகாத தருணத்தில் அதை தூக்கியெறிந்து வேறொன்றை
அங்கே பொருத்துவதும். சின்ன பகுதிகளின் பழுது எப்போதும் இயந்திரத்தை மாற்றுவதில்லை.
இயந்திரம் அதன் நோக்கிலும் போக்கிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட
அரசியல் இயந்திரத்தின் சிறு பகுதியின் அன்றாட அல்லாடல்களையும் உணர்ச்சி ரீதியான போராட்டங்களையும்
நுண்ணிய சித்திரமாக நாவலாக்கியிருக்கிறார் மலையாளத்து ஆசிரியர் மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
அந்நாவலே அவர் இயற்றிய “இயந்திரம்”. இதை தமிழாக்கம் செய்தவர் பா. ஆனந்தகுமார்.
இந்நாவல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப்
போகும் பாத்திரமொன்றின் கதையை சொல்கிறது. பாலச்சந்திரன் கீழ்த்தட்டு நிலையிலிருந்து
தன் படிப்பின் மூலமாக ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சிக்கு வந்திருக்கிறான். அங்கிருந்து துணைய
ஆட்சியராக பணியை கற்றுக்கொள்ள செல்கிறான். அவனுக்குள்ளே உழைக்கும் மக்களுக்காக போராட
வேண்டும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தீப்பற்றிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நிலையாக உள்ளே ஏற ஏற அரசு என்னும் இயந்திரத்தினுள் பொதிந்து கொண்டிருக்கும்
அதிகாரப்பிடியினை அறிய ஆரம்பிக்கிறான். எல்லா இடங்களிலும் எப்படி முரண்கள் முன்னால்
நிற்கின்றன என்பதையும் கவனிக்க ஆரம்பிக்கிறான்.
நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள்
நல்லெண்ணங்களுடன் பதவிகளை வளர்த்தெடுக்க நினைப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின்
சூழ்நிலை எதிர்த்திசையில் பயணிக்க வைக்கிறது. அரசின் பதவி வகிப்பவர்களின் குடும்ப
நிலைமைகள் நல்லதை பட்டவர்த்தனமாக்குவதாகவும் சின்னதான கெட்ட விஷயங்கள் அரங்கேறினாலும்
அவை புதைக்கப்படும் விஷயங்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கொள்கைவாதப்பிடியை
தளர்த்திக் கொள்ளும் திராணியுடனான மனிதனாக அப்பதவியில் இருப்பவர் இருக்க வேண்டும் என்பதை
சின்ன சின்ன சம்பவங்கள் கொண்டு விளக்குகிறார்.
நாவலில் நிறைய சமூகப்பிரச்சினைகள்
பேசப்படுகின்றன. பழங்குடியின மக்களை விரட்டுவது, குறிப்பிட்ட நிலங்களை தனியாருக்கு
ஒப்படைக்கும் பொருட்டு அங்கிருக்கும் மக்களை வெளியேற்றுவது என நிறைய பிரச்சினைகள் வருகின்றன.
அந்தந்த இடங்களில் ஆதாயங்களுக்காகவும், சில நேரங்களில் கொள்கைகளுக்காகவும் போராடும்
குணம் கொண்டவர்கள் அதை எப்படி எதிர்நோக்குகிறார்கள் என்பதை நாவலில் சொல்லியிருக்கிறார்.
பாலச்சந்திரனுக்கு வரும் காதல்
கதைகள் நாவலின் மற்றுமொரு பக்கமாக இருக்கிறது. அரசியல் பதவியில் இருக்கும் ஒரு ஆணின்,
கொள்கைவாதியின் உறவுகள் எப்படியிருக்கும் என்னும் உருவத்தை இந்த பகுதி வெளிச்சமாக்குகிறது.
பாலச்சந்திரன் வாழ்க்கையில் மூன்று பெண்கள் வருகிறார்கள். அவரின் படிப்பிற்கு உதவி
செய்யும் பணிக்கரின் மகள் சாரதா, கலெக்டரின் இரண்டு மகள்கள் சுஜாதா மற்றும் அனிதா.
சுஜாதா காதலனை இழந்தவள். மூன்று பெண்களின் குணங்களும் பிரத்யேகமானவை. சுஜாதா கடந்தகாலத்தை
மறக்க துணையை தேடுபவள். சாரதா அப்பாவின் பேச்சை கேட்டு நடக்கும் சொல்புத்திக்காரி.
அனிதா சுதந்திரமானவள். அவளைக் கட்டுப்படுத்த ஆளே இல்லை எனும் நினைப்பினை கொண்டவள்.
அவளின் கட்டற்ற சுதந்திரத்தை நாவல் முழுக்க நம்மால் காண முடியும்.
பாலச்சந்திரனின் நண்பனாக வரும்
ஜெயசங்கர் கொள்கைரீதியாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என தெளிவாக தோன்றும். பாலச்சந்திரன்
சமூகத்தின் அறங்களாலும் விழுமியங்களாலும் வளர்ந்த நிலையினாலும் தனக்கென சில கொள்கைகளை
உருவாக்கிக் கொண்டு அதன்படி வாழ வேண்டும் என இருப்பவன். அதே நேரம் போலீஸான ஜெயசங்கர்
கொள்கைபிடிப்பே வாழ்க்கையில் தேவையில்லாதது. இருக்கும் நிலைக்கொப்ப வாழ வேண்டும். அதுவே
survival of the fittest என இருப்பவன். இருவரின் முரண்கொண்ட கொள்கைகளும் இருவருக்கும்
தெரியுமென்றாலும் அவர்களின் நட்பு நாவல் முழுக்க முக்கியமான இடங்களிலெல்லாம் சந்திப்பினை
கொள்கிறது. கொள்கையை தாண்டிய நட்பும், கொள்கைக்காக பிரிக்கப்படும் நட்பும் மிக யதார்த்தமாக
நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
நாவலில் அதிகமாக என்னை ஈர்த்தது
ஜேம்ஸ்-ஆனி தம்பதியினர். ஆனி ஆங்கிலோ இந்தியப்பெண். அவர்களுடைய மகன் ஆண்டனி. சிறுவன்.
நோய்வாய்ப்பற்றவன். அவன் மீது உயிரையே வைக்கும் பொழுது அவன் திருடுகிறானோ என்னும் எண்ணம்
ஆனிக்கு வருகிறது. அதை கணவனிடம் சொல்லும் போது அவன் நம்பவில்லை. இவனுடன் சேருவதால்
தன் பிள்ளை கெட்டுப் போகிறான் என வேறு சிலரும் சொல்வதைக் கேட்டு ஜேம்ஸ் கோவமே கொள்கிறான்.
இந்நிலையில் அவன் தான் வீட்டிலிருந்து பணத்தை திருடினான் என்பதை அறிந்து கொள்கிறான்.
அவனுக்குள்ளே கேள்விகள் எழுகின்றன. என் பணத்தினை என் மகன் எடுத்தால் அது எப்படி திருட்டாகும்
என. மேலும் உண்மையை அறியும் போது கோவம் தலைக்கேறி மகனை அடித்துவிடுகிறான். அந்த உண்மையையும்
பேசும் போது மகனே ஒப்புக்கொள்கிறான். அப்போது அடித்ததால் அப்பாவிடம் அவன் கேட்கும்
கேள்வி
“உண்மையைச் சொன்னதுக்காகவே டாடி என்னை அடிச்சீங்க ?”
அடுத்த நாள் மகனை காணவில்லை.
அவன் எழுதியிருந்த கடிதமே கிடைக்கிறது. . . அந்த கடிதத்தின் வரிகளைப் பாருங்கள்,
“அம்மா,
நான் அப்பா அளவிற்கு புத்திசாலியில்லை. அப்பாவின் விருப்பத்திற்கேற்ப வளர என்னால் முடியாது. எனக்காக அப்பா முடிவுசெய்து வைத்திருக்கின்ற சட்டைக் கூடுகளுக்கு நான் ஒருபோதும் பொருந்தமாட்டேன். என்னை என் வழியில்விடுவது தான் நல்லது. நான் உண்மையை சொல்வேன் என்றுகூட அப்பாவால் நம்பமுடியவில்லை. பரவாயில்லை. எனது ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதற்காக அப்பா சிரமப்படுவது எனக்குத் தெரியும். எனக்காக யாரும் தியாகிகளாக வேண்டாம். இன்னொரு விஷயம்: அம்மாவோடும் அப்பாவோடும் எனக்கு எந்தவிதமான பிணக்கமும் இல்லை”
நான் அப்பா அளவிற்கு புத்திசாலியில்லை. அப்பாவின் விருப்பத்திற்கேற்ப வளர என்னால் முடியாது. எனக்காக அப்பா முடிவுசெய்து வைத்திருக்கின்ற சட்டைக் கூடுகளுக்கு நான் ஒருபோதும் பொருந்தமாட்டேன். என்னை என் வழியில்விடுவது தான் நல்லது. நான் உண்மையை சொல்வேன் என்றுகூட அப்பாவால் நம்பமுடியவில்லை. பரவாயில்லை. எனது ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதற்காக அப்பா சிரமப்படுவது எனக்குத் தெரியும். எனக்காக யாரும் தியாகிகளாக வேண்டாம். இன்னொரு விஷயம்: அம்மாவோடும் அப்பாவோடும் எனக்கு எந்தவிதமான பிணக்கமும் இல்லை”
நிறைய நேரம் இந்த பகுதிகளிலேயே
சிக்குண்டு கிடந்தேன்.
இந்நாவல் முழுதாக எதைப் பேசுகிறது
என இதுவரை வாசித்து வந்தவர்களுக்கு கேள்வி எழலாம். இந்நாவல் பல கொள்கைவாதிகளால் நிறைந்திருக்கிறது.
தங்கள்வசம் இருக்கும் அதிகாரத்தை நன்மைக்காக எப்படியும் திசை திருப்ப வேண்டும் என பல்முனை
நோக்கோடு வாழ்பவர்கள். ஆனாலும் அவர்கள் அரசு என்னும் மாபெரும் இயந்திரத்தின் சின்னதான
பகுதிகள். அவர்களை பழுதுபார்க்க வேண்டிய நுண்ணிய அவதானிப்பை, நுண்மையான எதேச்சதிகாரத்தை
இவர்கள் மீது செலுத்துகிறார்கள். அந்த அதிகாரம் வேலையை, சொந்தத்தை, காதலை, கட்டங்காத
காமத்தை, நட்பை, கொள்கையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை தெளிவாக சொல்லிச் செல்கிறார்.
வசனங்களாலேயே நாவல் மிக அழகாக நகர்ந்து செல்கிறது.
நாவலினூடே சின்னதான நிகழ்ச்சி
வரும். பெண்கதாபாத்திரமொன்று நூலொன்றை எழுதி கொண்டிருக்கும். எப்படியும் அந்த நூலை
முடித்துவிட வேண்டும் என்பது அவளின் எண்ணம். ஆனால் கணவனோ என்ன நினைத்தாலும் இந்த நூலை
உன்னால் முடிக்க முடியாது என்கிறான். அந்த நூலின் பெயரும் இந்த சின்ன விவாதமுமே இயந்திரம்
நாவலின் மையச்சரடு. அந்நூலின் பெயர்,
“The sociology of Indian
Communism”.
பி.கு : இந்நாவலின் முன்னுரை மலையாள இலக்கியம் சார்ந்து அறிந்துகொள்ள பெரிதும் உதவும். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை கூறும் போக்கில் மலையாள இலக்கியத்தின் போக்கையும் அதில் அவர் ஆற்றிய பங்கையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.