ஒவ்வொருவர்களுக்கும் குறிப்பாக
வாசகர்களுக்கு நீங்காத கருவாக ஒரு விஷயம் மனதுள் எப்போதும் நிறைந்திருக்கும். மனச்சோர்வுற்ற
தருணங்களில் அதை வாசித்து சமனிலைக்கு வருவர். மகாபாரதம் எனக்கான கம்ஃபர்ட் ஸோன்.
இது ஏன் என்னும் மர்மத்தை எப்போதும் என்னால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அதே நேரம்
நானறிந்த பாரதம் கடுகிலும் சிறியது என்பதில் மட்டும் பூர்ணமான நம்பிக்கை கொண்டவன்.
அதில் மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. சிறுவயது முதல் சொன்ன கதைகளையே அம்மா திரும்ப திரும்ப சொன்னாலும் அதை முதன்முதலாய் கேட்பது போல கேட்கும் குணம் கொண்டவன். கேட்பதில் எவ்வளவு
சுகம் காண்கிறேனோ அதே அளவு இன்பத்தை பிறருக்கு சொல்லும் போதும் அடைவேன். எங்கு என்னை
பழைமைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்னும் பயத்திலேயே நிறைய முறை சொல்லாமல் இருந்துவிடுவதும்
உண்டு.
மகாபாரதம் நம்மை பன்முகத்தனமான
புரிதலை நோக்கி எப்போதும் நகர்த்தி செல்கிறது. கணக்கிலடங்கா பாத்திரங்களை கொண்டிருக்கும்
பாரதம் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், வாசிக்கப்படும் போதும் குறிப்பிட்ட கதாபாத்திரம்
நோக்கி நம் கவனத்தை திருப்பிவிடுகிறது. இந்த காரணத்தினாலோ என்னவோ உபகதைகளாக பல சொல்லப்படும்
போதும் பாரதம் மீது ஆர்வம் கொண்டவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
வியாசர் இயற்றிய பாரதத்தில் சமகாலத்தில் கூறப்படும் உபகதைகள் எல்லாமும் இருந்தனவா என்பது
சந்தேகத்தின்பாற்பட்டது. அப்படியெனில் இந்த உபகதைகளை சமகால அறிவுஜீவிகளின் புனைவு என
புறந்தள்ளிவிடலாமா ?
இந்த கேள்வி நம்மை மீண்டும் ஆரம்ப
கால பாரதம் பக்கம் இழுத்து செல்கிறது. எம்.டி வாசுதேவன் நாயர் இந்த கேள்விக்கு அழகானதொரு
பதிலை தன்வசம் வைத்திருக்கிறார். எல்லா உபகதைகளின் பாத்திரங்களும் வியாசன் எழுதிய பாரதத்தில்
இருக்கின்றன. அவை சொல்ல முனைந்த கருத்தை சுருக்கமாகவோ அல்லது ஓரிரு வரிகளிலோ அல்லது
கவனிப்பாரற்று புதையுண்டோ கிடக்கின்றன. அதனை புனைவுலகத்தின் துணைகொண்டு விரிக்கும்
போது அங்கே உபகதைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. அப்படி உபகதைகள் உருவாவதற்கு துணையாய்
இருப்பது பிரதான பிரதியில் வியாசர் வைத்திருக்கும் மௌனம் தான் என்கிறார்.
அப்படி படர்ந்திருக்கும் மௌனங்களை
பயன்படுத்தி உபகதைகளை உருவாக்கும் போது அது எவ்வகையில் இருக்க வேண்டும் என்னும் கேள்வியும்
எழுகிறது. இதிகாசங்களும் காப்பியங்களும் கதைகளின் மூலமாக ஸ்தூலமான, காலத்திற்கும் அழியாத
விஷயங்களை பதிவு செய்து நகர்ந்து செல்கிறது. அப்படியெனில் அதனூடாக வரக்கூடிய கதைகளும்
இந்த மையப்பயணத்திலிருந்து வழுவாது இருக்க வேண்டும். இதை இரண்டு விதமாக செய்யலாம்.
ஒன்று எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட அறங்களை சமகாலத்திற்கும் ஏற்றவாறு தர்க்க ரீதியாக
அமைக்கலாம். அல்லது அதே கதைகளை வேறு கோணத்தில் மீட்டுருவாக்கம் செய்யலாம். செய்யக்கூடாதது
அதே கதையை அப்படியே மறுபடியும் சொல்வது. இது தோற்றுப் போகக்கூடிய விஷயமாக இருக்கிறது.
காரணம் நம் தொன்மக் கதைகள் வாய்மொழியாக சொல்லப்பட்டே வருகின்றன. வாசிக்கும் பழக்கம்
கொண்டவனுக்கு அக்கதைகள் தெரிவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.
மேலும் இதிகாசக் கதைகள் என எடுக்கும்
பட்சத்தில் அங்கே மர்மங்களுக்கும் மாயங்களுக்கும் நிறைய இடங்களில் இருக்கின்றன. அதைத்
தாண்டியே அதனூடாக சொல்லப்படும் அல்லது நிறுவப்படும் அறத்தை அறிய வேண்டியிருக்கிறது.
இந்த புரிதலுக்குட்படாத மர்மங்களை நீக்கிவிட்டால் அந்த கதைகள் எப்படி இருக்கும் ? நித்யகன்னி
நாவலில் எம்.வி வெங்கட்ராம் சின்னதான புனைவை வைத்துக் கொண்டு அதை புனைவற்ற தன்மைக்கு
தர்க்கம் மூலம் வாசகர்களை கொண்டுசென்றிருப்பார். இதை நவீன காலத்தில் தொன்மங்களை பார்க்க
வேண்டிய பார்வையாக கருதுகிறேன். இந்த சின்னதான மர்மத்தையும் நீக்கும் பட்சத்தில் அது
நம் மூதாதையர்களின் கதைகளாகிறது. நம்மைப் போன்றே பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
மக்களின் கதையாகிறது. அதனூடே பொன்முலாம் போன்று பூசியிருந்த தெய்வத்தன்மை அகன்று மனிதர்களுக்குள்ளே
நிகழும் வாழ்வியலாகிறது. அப்படி மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தை காரணார்த்தங்களையும்
தர்க்கங்களையும் கொண்டு சாமனிய மனிதர்களின் கதையாய் மாற்றியிருக்கிறார் மலையாளத்து
ஆசிரியர் எம்.டி. வாசுதேவன் நாயர். அப்படி
மாற்றிய நாவல் “இரண்டாம் இடம்”.
இந்நூலை எழுத அவருக்கு ஆறு ஆண்டுகள்
பிடித்திருக்கிறது. மரணப்படுக்கையில் இருப்பதாக உணரும் போது இந்நூலை எழுத ஆசை கொண்டு
அதற்கான தரவுகளை தேடி நூல்களினூடே பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்படி அவர்
செய்த பயணம் சார்ந்த குறிப்புகளும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இதிகாசம் சார்ந்த
நாவலை எழுதும் போது தேவையான நுண்மைகளை அவர் ஆராய்ந்த விதம் எழுத முனைபவர்களுக்கும்
நாவலின் அழகியலை ரசிப்பவர்களுக்கும் பேருவகையாக இருக்கும்.
பாரதம் சார்ந்த நாவலை அணுகும்
போது அங்கே பொதுப்பிரச்சினை ஒன்று எழுகிறது. பாரதத்தின் மேலோட்டமான கதை அல்லது வாய்வழியாக
முழுக்கதையும் கூட தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் நேரத்தில் மீண்டும் அதை முதலிலிருந்து
நாவலாக வாசிக்கும் தருணங்களில் அது நம்மை ஒவ்வொரு கட்டத்திலும் ஈர்க்கும் விஷயமாக இருக்க வேண்டும் என ஆசைகொள்கிறோம்.
நம் புரிதலிலிருந்து மாறுபட்டு அதன் மையம் நோக்கிய தர்க்கங்களை நவீனத்திற்கு ஏற்றாற்போல
கூறுவதாய் இருக்க வேண்டும். மேலும் பாரதம் தர்மத்தைப் பற்றிய நூல். இதை விவரிக்கும்
போது வார்த்தைகளை மாற்றி இப்படியும் கூறலாம் தர்மத்தை எந்த அளவிற்கு இந்நாவல் பேசுகிறதோ
அதைவிட அதிகமாக அதர்மத்தை பேசுகிறது. இது தான் இந்நாவலின் பிரதானம். இங்கே முரண்பட்ட
கோட்பாடுகள் மோதுகின்றன. அவை அங்கீகரிக்கப்பட்ட அதர்மமும் அங்கீகரிக்கப்படாத அதர்மமுமாக
இருக்கின்றன. இதை நுண்மையாக நாவலில் விவரிக்கிறார்.
அறம் பேசக்கூடிய எல்லா கதைகளுமே
இருதரப்பில் எதிர்வாதங்களுடன் மோதுவதாகவே இருக்கின்றன. இங்கோ பாண்டவர்களும் கௌரவர்களும்.
ஆனால் பாண்டவர்கள் அறப்புத்திரர்கள் என்று கூற முடியாதபடி அறப்பிழைகள் அவர்களை சூழ்ந்து
இருக்கின்றன. ஆனாலும் அறத்தை நிர்ணயம் செய்ய முனையும் நடுநிலைவாதிகளாக அவர்கள் தங்களை
ஸ்தாபித்து கொள்கிறார்கள். அப்படியெனில் இந்த தர்மம்-அதர்மம் என்னும் விதிகளை யார்
நிர்ணயம் செய்வது ?
தனிமனித ஒழுக்கமும் நிலைப்பாடும்
சார்ந்தது இந்த தர்க்கம். அவரவர்களின் தர்மம் அவரவர்களுக்கே உரித்தானது. அது பிறரது
கோணத்தில் நிச்சயம் அதர்மமாக தெரியலாம். ஆக ஒருவனுக்குள்ளே உருக்கொள்ளும் தர்மம் நிச்சயம்
பொதுமைபடுத்த முடியாத ஒன்று. இந்நிலையை நாம் முழுமனதாக ஏற்றுக் கொள்ளும் போது முழு
இதிகாசமே யாரோ ஒரு மையக் கதாபாத்திரத்தின் திரிபுகளாக இருக்கக்கூடுமோ என்னும் சந்தேகம்
எழும். அஃதாவது ஒரு பாத்திரத்தின் அறத்தை மையமாக கொண்டு இருக்கும் ஏனையபாத்திரங்களை
எடைபோடுவது. துரியோதனை மையப்படுத்தி பார்த்தால் பாண்டவர்களின் மீது கூட நம்மால் அறப்பிழைகளை
சுமத்த முடியும் தானே ? இந்த கட்டற்ற சுதந்திரத்தை மிக லாவகமாக வாசுதேவன் நாயர் பயன்படுத்தி
இருக்கிறார்.
பாரதத்தின் கடைசி வரை வாக்குறுதிகளை
அளித்தும் அதை தன் புஜபல பராக்கிரமத்தால் நிறைவேற்றியும் கண்ணுக்கு புலப்படாத வீழ்ச்சி
அவனை துரத்திக் கொண்டே வருகிறது. உணர்வெழுச்சிகள் எல்லாமே அர்த்தமற்று அவனை தனிமையாக்குகின்றன.
தனக்குள்ளே வெற்றிக்கான ஜெயகோஷங்கள் முழங்கப்பெறும் போதும் புறவுலகில் உதாசீனமே மிஞ்சுகிறது.
தான் வேண்டாம் தன் திறமே போதும் என எல்லோரும் உணரும் போது தேவையற்று என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கும் அந்த “நான்” எதற்கு என்னும் அடிப்படைக் கேள்வியை கடைசிவரை சுமந்து திரிகிறான்
இந்நாவலின் நாயகன் விருகோதரன்(பீமன்).
அண்ணனை நாடாளச் செய்ய வேண்டும்.
துரியோதரனை வீழ்த்த வேண்டும் ஆகிய இரண்டும் தான் அவனுடைய தலையாயக் கடமையாக இருக்கிறது.
இதற்கிடையே அவன் தனக்காக ஆசைக்கொள்வது பெண்ணின் மேல் தான். இடும்பி, திரௌபதி, பலந்தரை
என மனைவிமார்கள் இருந்தாலும் பீமன் சுகத்தை அனுபவிக்காமலே இருக்கிறான். பொங்கியெழும்
காமம் எல்லாம் சடங்குகளாக நிறைவேறுகின்றன. பிறக்கும் மகன்கள் மீது அளவற்ற பாசமும் அவர்களிடையே
இருக்கும் தூரத்தைக் கண்டு வருத்தமுற்றாலும் அவனின் சோகத்தை பங்குகொள்ள ஆளில்லாமல்
தவிக்கிறான்.
காமத்தை எப்படி அந்த உணர்விற்கும்
கொண்டாட்டத்திற்கும் மட்டும் அனுபவிக்க எண்ணுகிறானோ அதேதான் அவன் குணாதிசியங்களாக இருக்கின்றன.
அவன் எல்லா செயல்களையும் அந்த க்ஷண நேர பிரக்ஞையுடன் மட்டுமே புரிகிறான். புரிய ஆசைகொள்கிறான்.
உதாரணம் வேண்டுமெனில் போர்களைப் பற்றி கூறச் சொல்கிறாள் திரௌபதி. அவனால் விளக்க முடியவில்லை.
அதற்கு அவன் சொல்லும் காரணம் போரின் நேரத்தில் வீரன் எதிரியிடம் தாக்குவதற்கான லாவகத்தை
தேடுகிறான். அப்படி எதிரியினை வீழ்த்த சமயம் கிட்டவில்லையெனில் அவனின் உயிர் சென்றுவிடும்.
இந்நிலையில் எப்படி நிகழ்ந்த எல்லா விஷயங்களையும் நினைவில் கொள்வது ? நிகழ்ந்ததைக்
கூற வேண்டுமாயின் சூதனே போதும் க்ஷத்திரியன் தேவையில்லை என்கிறான்.
விருகோதரனை மையமாக்கி அவன் சொல்லும்
பாரதமாக விரியும் போது நிறைய பாத்திரங்களின் முன்கதைகளை சுருக்கிவிடுகிறார். பீமனின்
பார்வையில் இருக்கும் கதைகள் மட்டுமே வாசகனாய் நமக்கும் விரிகிறது. பீமனுக்கு எழும்பும்
விடைதெரியாத கேள்விகள் நமக்கும் எழும்புகின்றன. ஒருவேளை அதன் பதிலை வாசுதேவன் நாயர்
கூறியிருந்தால் இந்நாவல் கதையளவில் முழுமையடைந்திருக்கலாம். ஆனால் பீமனை நிச்சயம் உணர்ந்திருக்க
முடியாது.
தன்னாலானவரை மகாபாரதக் கதையை
காரணார்த்தங்களோடு கூறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மாயங்கள் எல்லாம் கட்டவிழ்க்கப்படுகின்றன.
அது நமக்கு பேரதிச்சியாய் அமைகிறது. அதனூடே இன்னுமொரு கேள்வியும் நம்முன்னே எழுகிறது.
இரண்டாம் இடத்தில் இருக்கும் பீமனை மையமாக்கி கூறும் போதே இத்தனை இரகசியங்கள் கட்டவிழ்க்கப்படுகிறதெனில்
ஒவ்வொருவராய் மையம் வைத்து தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் இதிகாசத்தின் நிலை என்னவாக
இருக்கும் ?
கட்டமைக்கப்பட்ட எல்லா அறங்களையும்
ஒவ்வொன்றாய் கூறி பின் அதை கதாபாத்திரங்கள் கொண்டே நிராகரித்துக் கொண்டு செல்லும் போது
அடியாழத்தில் குடிகொண்டிருக்கும் அறப்பிழையை பயிற்றுவிக்கப்பட்டு வந்த சமூகத்தின் அங்கமான
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே இந்நாவலின் தரிசனமாகிறது. சமகால உலகிலும்
கூட அங்கீகரிக்கப்பட்ட அறப்பிழையே பொதுமைசார் தர்மமாகிறது. சமூகத்தின் அங்கமாக இருப்பதால்
நாமும் அதனின்று பிரிந்திராமல் சில அறப்பிழைகளை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம். இது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்து கொண்டே தானிருக்கிறது.
1 கருத்திடுக. . .:
"ஒரு பாத்திரத்தின் மூலமே இவ்வளவா...?" என்று வியப்பளிக்கிறது...
Post a comment
கருத்திடுக