மௌனம் சொல்லும் கதைகள்
அசோகமித்திரனின்
எழுத்துகளை வாசித்து நாட்கள் பல கடந்துவிட்டன.
அவரின் எழுத்துகளை வாசிக்க முன்னெடுப்புகள் எப்போதும்
அவசியம் இல்லாதவை. கதை நிகழும் இடத்தை
அப்படியே தன் வர்ணனைகளில் கண்முன்னே
கொணரக்கூடியவர் அசோகமித்திரன். எழுத்தைக்காட்டிலும் அது சார்ந்த அவரின்
பேச்சுகள் எனக்கு அதிகம் பிடிக்கும்.
சென்னைவாசியாக இல்லாமல் போனேனே என்னும் வருத்தம்
இதை நினைவுகூறுந்தோறும் வந்து வந்து மறைகிறது.
அசோகமித்திரனின்
நினைவுகள் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவசியமானது
என்பேன். எழுத்து தன்னிடமிருந்து ஆரம்பிக்கிறது.
தான் இருந்த இடங்களின் நாஸ்டால்ஜிய
உணர்வுகளால் பின்னப்படுகிறது. அதற்கு பின்னர் விருப்பப்பட்ட/அனுப்பப்பட்ட பயணங்களும் அது தரும் உணர்வுகளும்
நம்முள்ளே அனுபவங்களை மலரச் செய்கின்றன. இந்த
அனுபவங்கள் கதைகளாகின்றன. சொல்லப் போனால் உலகம்
முழுக்க கதைகள் நிரம்பி வழிகின்றன.
அதிலிருந்து நாம் எதை கண்டடைகிறோம்
என்பதில் தான் வாசிப்பனுபவம் பொதிந்திருக்கிறது.
இதை சிலர் தரிசனம் உன்னதம்
என வார்த்தைகளால் விளக்க முற்படுகிறார்கள். அசோகமித்திரனோ
மௌனங்களால் அந்த இடங்களை நிரப்புகிறார்.
பதினெட்டாவது
அட்சக்கோடு நாவலை வாசித்திருக்கிறீர்களா ? அந்நாவலின் க்ளைமாக்ஸ்
எல்லோரின் மனதிலும் மின்னலின் வெட்டைப் போன்றதொரு உணர்வை கொடுக்ககூடியது. அது
ஸ்தம்பிக்க செய்யும் விஷயம். அங்கே ஒரு
மௌனம் உருவாகிறது. எண்ணற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளில்
உயிர்கள் மறிக்கின்றன. ஆனால் இன்று நாவலில்
இறக்கும் பெண்ணின் தருணம் பெருத்த மௌனத்தை
நம்மிடம் விதைக்கிறது. அவர் காரணங்களை தேவையான
இடத்தில் முன்னிலைபடுத்துகிறார். அதே நேரம் எதிர்பாராத
நேரத்தில் கதைக்குள் விபத்துகளை உருவாக்குகிறார். இந்த விபத்துகள் வாசகர்களிடம்
பெருத்த மௌனத்தை உருவாக்குகிறது. இந்த
மௌனமே கதையை முழுதுற்குமாக நகர்த்துகிறது.
அதே போல் காமத்தையும் அதிகமான
வன்முறைகளையும் இந்த மௌனம் கொண்டே
அவர் நகர்த்துகிறார். வெளிப்படையாக கூறுவதோ வர்ணிப்பதோ இல்லை.
இவ்விரு விஷயங்களையும் மிகச்சரியாக மௌனங்கள் நிறைவேற்றுகின்றன. இவ்விரண்டயும் ஏன் அவர் வெளிப்படையாக
எழுதவில்லை என்பதை அவரிடமே கேட்க
வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை.
நேரில் சந்திக்கும் போது கேள்விகள் மறந்துவிடுகின்றன.
கலாச்சாரத்தால் அவர் எப்போதுமே ஈர்க்கப்பட்டவர்
என்பதை என்னால் யூகமாக உணர
முடிகிறது. கலாச்சார விழுமியங்களுக்கு அப்பாலும் செல்லாமல் அதனுள்ளேயே தன்னால் கட்டமைக்கக்கூடிய எல்லா
புனைவுகளையும் உருவாக்கியிருக்கிறார். மேலும் அந்த கட்டமைப்புகள்
எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதிலும்
தன்னாலான எல்லா சாத்தியப்பாடுகளையும் நிறைவேற்றியிருக்கிறார்.
நினைவுகளை
அவரைப் போல் கொள்ள வேண்டும்
என்று சொல்லியிருந்தேன். அதற்கான காரணம் நிறைய
புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு
புத்தகங்களுக்கு பின்னும் அனுபவங்களை அதனைக்காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும்
பிசகில்லாமல் அதே உணர்வுடன் பகிரக்கூடியவர்
அசோகமித்திரன். சமீபத்தில் சென்ற போது என்னிடம்
ஏன் சென்னையில் இருக்கிறாய் என்று கேட்டார். சர்வதேச
திரைப்பட திருவிழா என்ற போது அவர்
ஹைதராபாத்திற்கு இதே திரைப்பட திருவிழாவிற்காக
சென்றதன் அனுபவங்களை கூற ஆரம்பித்தார். சினிமா
நேரங்களும் அது உடலை எப்படி
பாதிக்கிறது என்பதையும் சினிமா சார்ந்த கட்டுரைகளைப்
பற்றியும் மிக அழகாக கூறிக்
கொண்டிருந்தார்.
இன்று அவருடைய இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
குறுநாவல்கள் தொகுப்பை எடுக்கும் போது இதன் பிண்ணனியில்
இரண்டு குறுநாவல்கள் இருப்பதைக் கண்டு துணுக்குற்றேன். எதற்காக
நினைவுகளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்னமும் புரியாத
புதிராக இருக்கிறது. அவ்வயதில் இருக்கும் பலரிடமும் இதைக் காண்கிறேன்.
இன்ஸ்பெக்டர்
செண்பகராமன் தொகுப்பில் நான்கு குறுநாவல்கள் இருக்கின்றன.
இன்ஸ்பெக்டர் செண்பகராமன், விழா மாலைப் பொழுதில்,
விழா, இருவர். விழா மற்றும்
விழா மாலைப்பொழுதில் ஆகிய இரண்டு கதைகளும்
திரைப்பட திருவிழாவின் பிண்ணனியில் அமைந்திருக்கிறது. இவ்விரண்டைக் காட்டிலும் மற்ற இரண்டு கதைகள்
என்னை அதிகமாக ஈர்த்தன.
நான்கு
கதைகளிலும் முன்சொன்னது போல மௌனம் பெருத்த
இடங்களை ஆக்ரமித்துக் கொள்கின்றன. விழா மாலைப்பொழுதில் குறுநாவலில்
திரைப்படங்களைக் கண்டு அது சார்ந்து
எழுத வேண்டிய சிறு கூட்டமொன்றுடன்
செல்கிறான் நாயகன். அங்கு நடிகை
ஜெயதேவியைக் காண்கிறான். ஜெயதேவியை அவனுக்கு முன்பிருந்தே தெரியும். ஆனால் ஜெயதேவியாக அல்ல.
ஒரு பெயர் மாறும் போது
எப்படி எல்லாவித அனுபவங்களும் பழமையாகின்றன என்பதை மிக அழகாக
விவரித்திருக்கிறார். இருவருக்கும் இடையில் இருக்கும் விஷயத்தை
சொல்லாமல் சொல்வதில் தான் நடையின் சுவாரஸ்யம்
தெரிகிறது.
அதே போல் விழா குறுநாவல்.
வெளிநாட்டு இயக்குனர் தன் திரைப்படத்தை இங்கு
காட்ட, வெளியிட வருகிறார். இங்கிருக்கும்
திரைப்படவிழா அரசியல் அவரை எங்கெங்கு
அலைக்கழிக்கிறது என்பதை அகவெளிப்பாடாக எழுதியிருக்கிறார்.
என்னை அதிகம் ஈர்த்த குறுநாவல்
இன்ஸ்பெக்டர் செண்பகராமன். இக்குறுநாவலில் வரும் எல்லாபாத்திரங்களும் ஒருவரிடமிருந்து
இன்னொருவருக்கு ஏதோ ஒரு ரகசியத்தை
அவர்கள் அறியாமலேயே கடத்துகிறார்கள். அதே நேரம் எல்லோருக்கும்
ஏதோ ஒரு ரகசியம் தெரிந்திருக்கிறது.
இந்த ரகசியம் அவர்களை அழ
வைக்கிறது. சிலரின் குணங்களை மனதிற்குள்ளேஎயே
சிதைக்கிறது. அருவருப்பு ஏற்படுகிறது. வாழ்க்கையோ இதை பெரிதுபடுத்தாமல் நகர்ந்து
கொண்டே இருக்கிறது. இந்த வாழ்க்கையே மறைக்கப்பட்ட
விஷயங்களால் நிறைந்த அபத்தமோ என்னும்
கேள்வி நாவலினூடே எழுகிறது. அதே நேரம் தாம்
அபத்தம் என எண்ணும் விஷயம்
பிறிதொருவருக்கு இனிமையாக இருக்கிறது எனில் வாழ்க்கை என்பதற்கு
விளக்கம் என்ன என்னும் அடிப்படை
கேள்வியை மிக அழகாக முன்வைத்திருக்கிறார்
அசோகமித்திரன்.
இருவர்
கதையும் முன்னதற்கு அடுத்ததாய் பிடித்திருந்தது. இக்கதையில் சில அமானுஷ்யங்கள் இருக்கின்றன.
அப்பாவின் ஆசைகளும் இச்சைகளும் மகனின் உருவத்தில் வருகின்றன.
மகனைப் பார்த்து அப்பாவை மாதிரியே உரித்து
வைத்திருக்கிறான் எனும் போது அவன்
அப்பாவின் பாவங்களையும் சுமந்து கொண்டுதானிருக்கிறான். இயேசு சூசையப்பரின்
பாவங்களை சுமந்தது போல. வம்சத்தையே அழிக்கும்
விஷயத்தை அப்பா செய்திருக்கிறார் என்று
குடும்பம் கருதுகிறது. மகனோ இறந்த அப்பாவை
காண்கிறான். அவர் மறைமுகமாக வாழ்ந்துவந்த
அம்மணிக்கும் அம்மாவுக்கும் வித்தியாசமில்லையே என்பதை மானசீகமாக உணர்கிறான்.
இதை வெளியில் நிச்சயம் சொல்லவியலாது. இந்த சொல்லவியலாத மௌனம்
தான் குறுநாவலை செவ்வியல் தன்மை கொண்டதாய் மாற்றுகிறது.
இக்கதை மற்றதைக் காட்டிலும் நீளமாக இருப்பினும் மௌனம்
வாசிப்பவர்களின் மனதை கணக்க வைக்கிறது.
அசோகமித்திரனின்
குறுநாவல் வடிவத்தை அதிகமாக ரசிக்கிறேன். ஒவ்வொரு
குறுநாவலிலும் நாவலுக்கான உணர்வை விட்டே செல்கிறார்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது
நீ என்னுடைய நூலை வாசித்திருக்கிறாயா எனக்
கேட்டார். நான் வாசித்த அவரின்
சில நாவல்களின் பெயர்களைக் கூறியதும் இவ்வளவு வாசிச்சிட்டியா என்றார்.
இக்குணம் எனக்கு வேண்டும் என்பதே
என் ஒரே பிரார்த்தனையாய் என்றென்றைக்கும்
இருக்கும். மௌனமாய்!!!
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக