கிராமத்தின் கால்தடங்கள்
ஒவ்வொரு
ஊர்களும் ஏதேனும் மரபுகளை சுமந்து
கொண்டே தான் இருக்கிறது. இந்த
மரபுகளும் புராதனங்களும் காலத்தின் வேகமான போக்கில் மக்களிடமிருந்து
மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நகரமயமாக்கல் இதற்கு முக்கிய காரணமாக
அமைகிறது. இந்த நகரமயமாக்கலால் நிகழும்
விஷயம் எல்லா ஊர்களும் அதன்
மக்களும் தனக்கென இருக்கும் பிரத்யேக
விஷயங்களை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சமகாலத்தில் எல்லா ஊர்களிலும் மால்களின்
பெருக்கம் பெருகிக் கொண்டே செல்கிறது. இந்த
மால்களில் இருக்கும் கவர்ச்சியை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. ஒரு
கட்டத்தில் எல்லா மால்களும் ஒன்றைப்
போலவே இருக்கின்றதே ஆனாலும் இளமைக்கூட்டங்கள் அந்த
மால்களுக்கே செல்வதன் காரணம் என்ன ? இந்த
கேள்வி எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியைக்
கண்ட ஊர்களுக்கும் பொருத்தமானதாய் இருக்கிறது. இது கிராமங்களை எப்படி
பாதிக்கிறது என்பது இதனுடன் இருக்கும்
கிளைக்கேள்வியாய் அமைகிறது.
சென்னை
கோவை போன்ற ஊர்களில் வந்தேறிகளானவர்கள்
தான் அதிகமாக இருக்கிறார்கள். தீபாவளி
பொங்கல் போன்ற நாட்களில் மட்டும்
தான் அந்த ஊர்க்காரர்களால் மட்டும்
ஊர் நிரம்பி வழிகிறது. மற்ற
நாட்கள் எல்லாம் படிப்பிற்காகவும் வேலை
நிமித்தமாகவும் வந்த மக்களின் கூட்டமே
ஊரை சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஆடைகளிலும் வழக்கங்களிலும் அவர்கள் தங்களின் ஊர்களை
சுமந்து கொண்டே செல்கிறார்கள். மணிப்பூர்காரன்
ஒருவன் கோவை வருகிறான் என்று
வைத்துக் கொள்வோம். அவனால் பொதுத்தமிழை மட்டும்
தான் அதிகமாக புரிந்து கொள்ள
முடியும். கோவைக்கென இருக்கும் பிரத்யேக தமிழை அவனிடம் கொண்டு
செல்லப்பார்த்தால் புரிதலில் பொதுத்தமிழே தகிடுதத்தாம் ஆகிவிடும். நான்கு ஆண்டுகள் படிக்க
வந்தவன் சுதந்திரமாக ஊரை சுற்றிப் பார்க்க
கிளம்புவதற்கே மாதங்கள் பிடிக்கிறது. அப்படியே அவன் வெளியில் செல்வதாக
இருப்பினும் மொழிப்பிரச்சினை வராத இடங்களாக செல்ல
வேண்டும். ஒன்று இயற்கை அல்லது
மால்கள். இந்த இரண்டிலும் கூட
மால்களுக்கு செல்வதை தான் அவன்
அதிக சுதந்திரமாக உணர்கிறான். கல்லூரியில் இருக்கும் ஒரு மணிப்பூர்க்காரனிடம் கேட்டது
இது. நீர்வீழ்ச்சிக்கு செல்வதாக இருப்பினும் கூட அவனுடன் ஒரு
கும்பல் இருக்கிறது. இருக்கவேண்டிய அவசியம் அவனுள் ஏற்படுகிறது.
ஒரு பயம் அவனை தொற்றிக்
கொண்டே வருகிறது. நமது பாரம்பரியத்தை காட்சிப்பொருளாக
மாற்றவேண்டிய சூழலில் நாம் சிக்கிக்
கொண்டுள்ளோம். அப்படி செய்ய முனைந்தால்
எல்லோரிடமும் நம்வசம் இருக்கும் விஷயங்களை
கொண்டு செல்லலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது
ஆவணங்கள்.
இந்த ஆவணங்களை அநேகம் பேர் விரும்புவதில்லை.
சேலத்தில் இன்னமும் பழங்குடி இன மக்கள் தங்களின்
வழமை மாறாமல் வாழ்ந்து வருகிறார்கள்
என்பதை வேற்றூர் எழுத்தாளன் ஒருவன் சொல்லி எனக்கு
தெரிகிறது. அப்படியெனில் எனக்கு பின்னால் சேலத்தில்
வாழப்போகிறவர்களுக்கு சேலம் எனில் குறிப்பாக
பழமையான சேலம் எனும் பெயரில்
ஏற்காட்டை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க
வேண்டிவரும். இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அசோகமித்திரனை
இரண்டாவது முறையாக சந்திக்க சென்ற
போது அவர் சேலத்தில் வரலாற்று
விஷயங்கள் அவ்வளவாக இல்லை என்று ஆதங்கப்பட்டார்.
எனக்கோ சேலத்திற்கு வரலாறு உண்டா என்று
கூட தெரியாது. சமீபமாக தான் திப்பு
சுல்தானின் போர் ஒன்று சேலத்தில்
நிகழ்ந்திருக்கிறது என்பதை மேம்போக்காக அறிந்தேன்.
முழமையாக தெரியவில்லை. இந்த அறியாமையை மாற்ற
முடியுமா என்பது சந்தேகம் நிறைந்ததொரு
கேள்வி. அதற்கு பதில் சேலம்
தனக்கென கொண்டிருந்த விஷயங்களை ஆவணம் செய்யலாம். சேலம்
மட்டுமல்ல எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. அதிலும்
சிற்றூர்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக
கயத்தாரை கூறலாம். கட்டபொம்மன் வாழ்ந்த வரலாற்று பெருமை
கொண்ட ஊர். அந்த வரலாற்றுக்கும்
சமகால கயத்தாருக்கும் இடையில் நிகழ்ந்திருக்கும் அனைத்து
விஷயங்களையும் ஆவணம் செய்யலாம். இதை
அவசியமானதாகவே உணர்கிறேன். இந்த வேலையை தான்
ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன் செய்திருக்கிறார்.
மதுரையில்
இருக்கும் சமயநல்லூர் கிராமத்தில் பிறந்தவர் முருகேசபாண்டியன். தன்னுடைய சிறுபிராயத்து நினைவுகளையும், பொதுப்படையான விஷயங்களையும் சமூகம் கொண்டிருக்கும் மாற்றங்களையும்
ஒரு கோட்டில் இணைக்க முயன்றிருக்கிறார். தீர்வுகளை
நோக்கி செல்லாமல் ஆய்வு என்னும் கோணத்தில்
சமயநல்லூரின், மதுரையின் மக்கள் வாழ்க்கையை முன்வைக்கிறார்.
அந்நூலின் பெயர் “கிராமத்து தெருக்களின்
வழியே”. குறிப்பிட்ட விஷயத்துடன் நின்றுவிடாமல் தன்னால் இயன்றவரைக்கும் அந்த
ஊரின் உருவத்தை உயிர்ப்புடன் வார்த்தைகளில் கொடுத்திருக்கிறார்.
பேய்கள்
சார்ந்த நம்பிக்கைகள், விலங்கினங்கள், விலங்கினங்களுடன் மக்கள் கொண்டிருந்த உறவு,
குழந்தைகளின் விளையாட்டு உலகம், தெருக்கள், அங்கு
வாழ்ந்த பல்வேறு தரப்பான மனிதர்கள்,
போதை வஸ்துக்களின் தாக்கம், ஜாதீய ரீதியான தாக்கங்கள்,
விநோதம் நிறைந்த மனிதர்கள், நாடகங்கள்,
சினிமாக்கள், மருத்துவம், குழந்தைகளின் நரகமாக போன பள்ளிக்கூடங்கள்,
கிராமத்திற்கு வருகை தரும் மனிதர்கள்
என்று ஊரின் ஒவ்வொரு நுட்பங்களையும்
கூறியிருக்கிறார். எல்லா இடங்களும் அவரின்
சுயானுபவங்களாகவே எழுத்திலும் அமைந்திருக்கிறது. முன்னுரையிலேயே இத்தொகுப்பின் தேவை எல்லாம் என்
அனுபவங்கள் தான் என்று சொல்லிவிடுவதால்
வாசிக்கும் போது முரணாகபடுவதில்லை.
கிராமங்களை
சினிமாக்களிலும் கதைகளிலும் சித்தரிக்கும் போது இரண்டே விஷயங்களில்
முன்னிறுத்துகிறார்கள். ஒன்று இயற்கை மற்றொன்று
சாதி. இந்த இரண்டையும் தாண்டி
ஒரு கிராமத்தினுள் இருக்கக் கூடிய அமைப்புகள், அரசியல்,
அதிகாரம் எல்லாமே நுட்பமாக ஆச்சர்யம்
கொள்ளும் வகையில் வாசிப்பில் இருக்கிறது.
அதற்கு இவர் சொல்லும் வார்த்தை,
“கிராமம்
என்றாலே கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு
என்பது பலருக்கு தெரியாது. சாதி, மதம், வீட்டுவகைப்பு
என ஒவ்வொருவரின் அடையாளமும் வரையறுக்கப்பட்டிருக்கும்”
குழந்தைகளின்
உலகம் மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.
அவர்களின் இருவேறு உலகங்களை எழுதியிருக்கிறார்.
ஒன்று விளையாட்டில் இருக்கும் சந்தோஷம். மற்றொன்று பள்ளிக்கூடம் எனும் போது அவர்களுக்குள்
எழும் விரக்தி, அதிருப்தி. இதில் இவர் கூறும்
அநேக விஷயங்கள் இன்னமும் சமூகத்தில் மாறாமல் இருக்கிறது என்பது
ஆச்சர்யகரமாக இருக்கிறது. கழுகு பறந்தால் கழுகே
கழுகே பூப்போடு என்று விளையாடுவது, சாணியை
மிதித்துவிட்டாலோ அழுக்கை தீண்டிவிட்டாலோ தலைமுடியை
பிடித்துக் கொள்வது எல்லாம் இன்னமும்
விளையாட்டில் இருக்கிறது. இவர் சொல்லும் சில
விளையாட்டுகள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுடன்
இன்னமும் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
குழந்தைகளின் விளையாட்டுகளை பறித்தது தொலைக்காட்சி என்று மட்டும் கூறுகிறார்.
இதில் இன்னுமொரு விஷயத்தை இணைத்துக் கொள்ளவும் ஆசை கொள்கிறேன். கைக்கிரிக்கெட்
போன்ற உடல் வலுவை பயன்படுத்தாமல்
அமர்ந்த இடத்தில் இருந்தே ஆடும் ஆட்டங்கள்
சிறுவர்களை வசீகரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.
தொலைக்காட்சி இவர்களை அசையாமல் வைப்பதால்
விளையாட்டுக்கான ஆர்வங்கள் எல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே
செய்ய முடியுமா என்னும் தோரணையில் செல்ல
ஆரம்பித்திருக்கிறது. இதோடு பள்ளிக்கூடம் சார்ந்த
அதிருப்திகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தண்டனைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் அந்த கட்டிடம் கொடுக்கும்
சுவாசமும் அதிலிருக்கும் அருவருப்பும் மாறாதது. அந்த கட்டிடம் கொடுக்கும்
ஒரே ஆசுவாசம் நண்பர்கள்.
நாடகங்களும்
திரைப்படங்களும் மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்த அங்கமாக
இருந்திருக்கிறது. இன்று இந்த திரைப்படங்கள்
கூட நலிவடைந்த பகுதியாக மாறியிருக்கிறது. திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒருவாரம் ஓடிய பின் ஒவ்வொரு
தொலைக்காட்சி சேனல்களிலும் வெற்றி விழாவையொத்த நிகழ்ச்சிகளை
போட்டு தொலைகாட்சிகளை ஆனே செய்ய இயலாதவாறு
செய்கிறார்கள். இவர் திரையரங்கிற்கும் மக்களுக்கும்
உள்ள தொடர்பை விவரிக்கும் வார்த்தையை
பாருங்கள்
“கனவுக்கும்
நினைவுக்குமான குழப்பத்தில் இடிந்து போன மூன்று
மணி நேரங்களில் தொலைந்துபோன தன்னை தேடியவாறு வெளிவரும்
பார்வையாளராக நானும் இருந்திருக்கிறேன்”
வசீகரம்
நிறைந்த இந்த இருளினூடான தேடல்
இன்னமும் சமூகத்தில் இணைந்து இருக்கிறது. என்ன!
அதன் மையம் கொண்டாட்டமாக இன்றி
பணமாகவும் வணிகமாகவும் மாறிவிட்டது. சில நேரங்களில் வாசித்ததை
யோசிக்கும் போது பழையனவற்றை மட்டும்
மறக்காமல் புதிதாக வந்து கொண்டாட்டத்தை
கொடுத்த, மக்களுடன் ஒன்றிய சில விஷயங்களையும்
மறந்து செல்கிறோமோ என்று தோன்றுகிறது.
கடைசியாக
என்னை அதிகமாக கவர்ந்த கட்டுரையைப்
பற்றி சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
அது போதையையும் குடியையும் பற்றியது. குடி தமிழர்களுடன் மிகப்பழைய
காலத்திலிருந்தே இணைந்து வருகிறது என்று
ஆரம்பித்து கிராமத்தின் பழக்கங்களுக்குள் செல்கிறார். வகை வகையான போதை
வஸ்துக்கள், சாராயங்கள், அந்த சாராயமும் அதனூடே
இருந்த அரசியலும் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இதில் அமிர்தப்பிறதாயினி
என்னும் குடியைப் பற்றி கூறுகிறார். இதை
யாரேனும் குடித்திருக்கிறார்களா, அதன் அனுபவம் என்ன
என்று அறிய ஆசைப்படுகிறேன். இந்த
போதை ஏன் மக்களை ஈர்க்கிறது
என்பதற்கு முருகேசபாண்டியன் கூறும் வார்த்தை ஏற்புடையதாய்
இருக்கிறது. அஃதாவது,
“வாழ்வின்
துக்கமும் இருப்பின் துயரம் எதிர்காலம் குறித்த
நிச்சயமின்மையும் மனிதர்களுக்குள் ஏதோ ஒரு நிலையில்
பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இன்னொரு
புறம் வாழ்க்கையின் ‘அபத்தம்’ விடாது மனிதர்களை துரத்திக்
கொண்டே இருக்கிறது. சமூகம் சொல்லும் ‘நல்ல
வாழ்க்கை’ பற்றிய கனவும் எல்லோருக்குள்ளும்
பதிவாகியுள்ள நிலையில், ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உலகினை கற்பித்து,
தன்னையே மறந்திட ‘போதை’ பயன்பட்டுள்ளது. மனிதன்
‘தான்’ என்று தன்னையறிந்தவுடன் தன்னை
மறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டதன் வெளிப்பாடு தான் போதை”
மருத்துவத்தில்
கூட நம் நோய்களுக்கான விசேஷ
இயற்கை மருந்துகளும், மர்மமான மருத்துவ முறைகளும்
கூறப்பட்டிருக்கின்றன. வாசிக்க வாசிக்க மாயங்களும்
மருத்துவமும் இணைந்தது போன்றதொரு உருவத்தை அளிக்கிறது. நாவலுக்கான எல்லா அம்சங்களும் இந்நூலில்
நிறைந்திருக்கிறது. இருந்தும் கட்டுரை தொகுப்பு என்னும்
நிலையிலேயே இருப்பது தான் தனிப்பட்ட வருத்தமாய்
அமைகிறது. நாவலாக மாறியிருப்பின் செவ்வியல்
அங்கீகாரத்தை நிச்சயம் பெற்றிருக்கும்.
இந்நூல்
எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமின் மூலம்
அறிந்து கொண்டேன். அங்கு வந்திருந்த ந.முருகேசபாண்டியனை அறிமுகம் செய்யும் போது எஸ்.ரா
கூறிய நூல் இது. மாற்றங்களுக்கான
காரணங்களை ஆராயாமல் ஆதங்கங்களை வெளிப்படுத்தி இழந்த விஷயங்களின் நினைவோடையாக
இந்நூல் அமைந்திருக்கிறது. மதுரை சார்ந்து அறிந்து
கொள்ள விரும்புபவர்களுக்கும் தத்தமது நினைவுகளை வெளியெடுக்க
விரும்புவோருக்கும் இந்நூல் நிச்சயம் உதவும்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக