தஞ்சை பிரகாஷின் எழுத்துகளை இதுவரை மூவர் எனக்கு
அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஒருவர் சாரு நிவேதிதா.
எப்போதோ வாசித்து மனதில் பதிந்திருந்தது பெயர்.
அடுத்தது சாம் நாதன். உடலரசியல் சார்ந்த நூல்களில் இருக்கும்
நுட்பங்களைப் பற்றிக் கூறும் போது
சொல்லியிருக்கிறார். அடுத்து எஸ்.ராமகிருஷ்ணன்.
நாவல் முகாமில் தஞ்சை பிரகாஷ்
சார்ந்து கூறிய விஷயம் மிக
முக்கியமானதாக படுகிறது. தஞ்சை சார்ந்து புனையப்பட்டனவற்றில்
பிரகாஷ் தனித்துவம் வாய்ந்தவர். அதற்கான காரணம் தஞ்சையின்
திகைப்பை ஏற்படுத்தும் கலையுடன் அதே ஊரில் இருந்த
விளிம்பு நிலை வாழ்க்கையை அவர்
எழுதியிருப்பதே என்றார்.
இந்த மூன்றும் இணைந்து அவரின் எழுத்துகளை
எப்படியேனும் வாசிக்க வேண்டும் என்னும்
ஆசை என்னுள் கிளைவிட்டிருந்தது. ஆனால்
அவருடைய நூல்கள் பெருவாரியாக இப்போது
கிடைப்பதில்லை. எல்லா நூல்களுமே அடுத்த
பதிப்புகளுக்காக காத்திருப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் தான்
புதிய பதிப்பகமான நடுகல் பதிப்பகம் அவரின்
கள்ளம் நாவலை வெளியிட்டிருக்கிறது. அழகானதொரு முகப்போவியத்துடன்
நயம்பட நூலாக்கியிருக்கிறார்கள்.
எல்லா வகையான இலக்கியத்திற்கும் அனைத்து
மொழிகளிலும் மாஸ்டர்கள் அல்லது பிதாமகர்கள் இருக்கிறார்கள்.
அப்படி தமிழில் இருக்க வேண்டியவராகவே
தஞ்சை பிரகாஷைக் கருதுகிறேன். அவரின் எழுத்துகளை மூன்றாக
வகைப்படுத்தலாம். பிரதானமாக இருப்பது உடலரசியல், அடுத்து கலை, அடுத்து
literature of trash. இவரை
மாஸ்டர் என்று சொல்வதற்கான இன்னுமொரு
காரணம் பின்நவீனத்துவ எழுத்துகள் என்றாலே புரியாத்தன்மைகள் மேலோங்கியிருக்கும்
என்னும் பிம்பத்தை இவரின் படைப்பு முற்றிலும்
நிராகரிக்கிறது. கள்ளம் முழுமைக்குமான ஒரு
பின்நவீனத்துவ படைப்பு.
தஞ்சையில்
கண்ணாடிகளை ஒட்டி அதிலிருந்து ஓவியங்களை
உண்டாக்கும் மீனாக்ஷி ராஜு என்னும் கலைஞர்.
அவருடைய மனைவி இறந்து போக
சரளா என்பவளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் தான்
பரந்தாம ராஜு. கதையின் நாயகன்.
வீட்டைப் புறக்கணித்து தான்தோன்றியாக போதை வேசிகள் என்று
சுற்றித்திரிகிறான். இந்த protagonist இன் கதையே கள்ளம்
நாவல். அவனின் பயணங்களை மிக
விரிவாக விவரிக்கிறது.
தஞ்சையில்
இருக்கும் மண்டபமொன்றை விளக்குவதினூடாகவே நாவல் ஆரம்பிக்கிறது. இந்த
ஆரம்பத்திலேயே வேசி, அவளிடமிருந்து வரும்
வாசனை, அந்த இடத்தில் இருக்கும்
நாயகனின் நிலை, வௌவ்வால்களின் பீ
என்று அழுக்கடைந்த இடத்தின் வர்ணனைகளை மிக அழகாக விவரிக்கிறார்.
இந்த விவரித்தலினூடே பேச்சுகள் தொடர்கின்றன. நாவல் முழுக்க இந்த
அசிங்கங்கள், கெட்ட வார்த்தைகளின் பன்முக
உபயோகங்கள் தொடர்கின்றன. விஷயம் யாதெனில் பிரகாஷின்
எழுத்தில் அவை எல்லாமே அழகியலின்
அங்கங்களாக மாறுகின்றது. இந்த அசிங்களினூடே தான்
அவர் உடலரசியலையும் ஆரம்பிக்கிறார்.
எத்தனையோ
பெண்கள் நாயகனையே சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லோரிடமும் காமுறுகிறான். அவனின் தேடல் எல்லாமே
பெண்களினுள்ளே இருக்கும் Nymphomaniac(கட்டற்ற காமம்) தன்மை
ஏன் மறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று.
இந்த கேள்வியை சரளாவிடமிருந்து ஆரம்பிக்கிறான். அவளிடம் பணம் கேட்டு
செல்லும் போது தர மறுக்கிறாள்.
கோபத்தில் நீ அப்பன மட்டுமா
வச்சிருக்க என்னையுந்தான் வச்சிருக்க என்று கூறுகிறான். நாவலின்
வேறு சில பகுதிகளில் அவளும்
அதையே கூறுகிறாள். கட்டற்று பெருகும் காமம் எல்லாமே கலாச்சாரத்தாலும்
அதிகாரத்தாலும் அடக்கியாளப்படுகிறது. இந்த அதிகாரத்திலிருந்து எப்படியேனும்
வெளியே வர வேண்டும். இந்த
அதிகாரத்தை நாயகன் வேஷம் என்கிறான்.
ராஜாவின் படம் ஒன்று இருக்கிறது.
அதை ராஜாவாக பார்ப்பவனை எண்ண
வைப்பது ஆபரணங்கள் தானே ஒழிய முகத்தோற்றம்
அல்ல. அப்படியெனில் அது ஒரு வேஷம்
தான் என்பது நாயகனின் கூற்று.
முக்கோணத்தை இதன் குறியீடாக்குகிறான். முக்கோணம்
அதிகாரத்தின் குறியீடாகும்.
நாயகன்
இன்னமும் ஒரு அடி முன்னே
சென்று அதிகாரத்தின் ஒரு அங்கம் இந்த
உடல். இதை என்னால் துறக்க
முடியவில்லையே என்று யோசிக்கிறான். ஆணுக்குள்
இருக்கும் பெண்மையையும் பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையையும் வெளிக்கொண்டுவரவிடாமல் தடுப்பது இந்த உடல். இது
இல்லையேல் காமம் மட்டுமே தனித்த
உணர்வாக இருக்க முடியும் தானே
? ஒரே உடல் இரு பெண்களை
சுகிக்கிறது. ஒருத்தியிடம் இன்பமடைகிறான். இன்னொருத்தியிடம் தோல்வியடைகிறான். அப்படியெனில் குறைபாடு உடலுடனா மனதுடனா ? இதை
தான் நாவல் முழுக்க நாயகன்
கண்டறியப்பார்க்கிறான்.
இசையில்
இருக்கும் த்வனியானது அச்சமயம் மட்டுமே உயிர்ப்பித்து தத்தம்
அழகியலை காட்டி செல்லும். அது
அடுத்து எப்படி இருக்கும் என்னும்
எண்ணத்தில் உயிர்ப்பெறுவதில்லை. சங்கீதத்தின் முழுமையின் உருவம் எப்படி இருக்கும்
என்னும் எண்ணத்தை த்வனி கொள்வதில்லை. மனிதன்
மட்டும் ஏன் இறப்பை நோக்கி
எண்ணம் கொண்டு பயணிக்கிறான் என்கிறார்.
அவர் சொல்லும் விதத்தை பாருங்கள்
“இருப்பின் இயல்பில்
இருக்கும் வரை தோயாது இறப்பிற்கு
துரிதமாவது எத்தனை முட்டாள்தனம் ?”
இதை சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. பெண்களை
காணும் போதெல்லாம் அவனுக்கு அவர்களுக்குள்ளே இருக்கும் நிதர்சனம் தெரிந்துவிடுகிறது. பெண்கள் அவனை அடைய
நினைக்கிறார்கள். அதே சமயம் அதிகாரம்
செலுத்தவும் நினைக்கிறார்கள். அதிகாரத்தை குழந்தையின் உருவில் நிர்ணயிக்க முனைகிறார்கள்.
இந்த விஷயத்தை முழுமையாக நாயகன் எதிர்க்கிறான். எதிர்பார்ப்புகளும்
முடிவுகளும் அற்ற காமசுகத்தை மட்டும்
ஏன் யாரும் அனுபவிக்க மறுக்கிறார்கள்
?
இதை செயலாக்க சில கதாபாத்திரங்களையும் நாவலில்
ஊடாட விடுகிறார். பாபி ஜம்னா கருப்பி
என்று நிறைய பெண்கள் வருகிறார்கள்.
எல்லோரும் அவனை அடைய நினைப்பவர்கள்.
அவனோ நோக்கற்ற வாழ்க்கையை பிரதானமாக கொண்டு வாழ்கிறான். ஜம்னாவை
காந்தர்வ மணம் புரிந்து கொண்டு
சேரி ஒன்றில் வசிக்கிறான். அங்கு
இருக்கும் எல்லா பெண்ணும் அவனின்
அந்தப்புர அங்கங்களாகிறார்கள். அதிலும் ஜம்னாவின் இருப்பு நாவலில்
மாயத்தன்மை கொண்டிருக்கிறது. சுகிக்காமலே இருந்தாலும் சுகித்ததன் உணர்வை கதையில் பிரகாஷ்
முன்வைக்கிறார்.
இங்கிருந்து
தடத்தை மாற்றி கலையை கூறலாம்
என்று நினைக்கிறேன். கலை சார்ந்து அவர்
முன்வைக்கும் விஷயங்கள் எல்லாம் வக்கிரமாக இருக்கிறது.
புராதனங்களையே நாம் கலைகளென சுமந்து
கொண்டு வருகிறோம். நகலெடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த புராதனம் இன்னமும்
எத்தனை நாட்களுக்கு கலையாக அங்கீகரிக்கப்படும். கலை
மனிதனின் அடியாழத்திலிருந்து வரக்கூடிய சொந்த சரக்காக அல்லவா
இருக்க வேண்டும் என்கிறார். அப்பாவை நீ கலைஞனே
இல்லை என்று தகர்த்தெறிகிறான். காலத்திற்கும்
நீ கண்ணன் ராமன் என்று
வரைந்து வரைந்து வியாபாரம் செய்கிறாய்.
இவை எல்லாமே ஒரு கட்டத்தில்
சோரம் போகக்கூடியவை என்று கூறுகிறான். கலை
ஒழுக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஒழுக்கத்தை உடைத்தால்
மட்டுமே ஒரு பித்தனிலையை மனிதன்
எட்ட முடியும். அப்போது தான் கலை
பிறக்கக்கூடும். அந்த கலை ஒழுக்கம்
சார்ந்ததா அல்லது சாராததா என்பதை
நுகர்பவனால் மட்டுமே உணர முடியும்.
அதைத் தாண்டிய விஷயமே வியாபாரம்
என்பதை ஆணித்தரமாக முன்வைக்கிறார். இந்த விஷயத்தை கலையை
வெளிக்கொணர கலைஞன் யாது செய்கிறான்
? இக்கேள்விக்கான பதிலை நாயகனின் வாழ்வாக
நாவலில் எழுதியிருக்கிறார். கலைஞனின் பசியைத் தான் நாம்
கலையாக கொண்டாடுகிறோம். கலைஞனின் இழப்பை தான்
நாம் நுகர்கிறோம். அந்த இழப்பை அறிந்தவர்கள்
அவன் மேல் எப்படியெல்லாம் பச்சாதாபம்
கொள்வார்கள் ? ஏன் அவன் இழத்தலை
அங்கீகரிக்கிறான் என்பதை அழகாக கூறுகிறார்.
பேதங்களற்ற விஷயமாக அதே நேரம்
யதார்த்தம் முகம் சுழிக்கும் விதமாகவும்
இருக்கிறது.
தஞ்சையில்
இருந்த கண்ணாடிகளின் வழியே ஒட்டப்படும் கலை
சார்ந்து விவரித்திருக்கும் பகுதிகள் முழுக்க முழுக்க புதியவை.
கலை சார்ந்து படிந்திருக்கும் புனித பிம்பத்தை உடைக்க
அரக்கர்களின் கொடியவர்களின் உருவை அவன் செய்கிறான்.
அதை செய்ய தேவையானதையும் பொறுமையினையும்
வாசிக்கும் போதே அறிந்து கொள்ள
முடிகிறது. இது புறத்தோற்றம். கலையை
வெளிக்கொணர்ந்தவுடன் அவனை விட்டு அதன்
சாயல்கள் அகன்று செல்வதை தான்
நம்பமுடியாமல் இருக்கிறது. வரையும் வரை அல்லது
அதனை செய்துமுடிக்கும் வரை அவனுள் இருக்கும்
க்ரியா சக்தி முடித்தவுடன் காணாமல்
சென்று பார்வையாளனாக ரசிக்கத்துவங்குகிறான். கலையை அல்ல, அடுத்தவர்களின்
பிம்பத்தை உலகத்தை. தேடலும் தாகமும் தான்
கலைஞனை உருவாக்குகிறது. விஷயம் யாதெனில் தாகத்தின்
பயன் கலை அல்ல. ஏதோ
ஒன்றை தேடி செல்கிறான். வழியில்
எதையோ கண்டறிகிறான், உள்ளுணர்கிறான். இந்த உணர்தல் ஏதேனுமொரு
வழியில் கலையாகிறது. மனித உணர்வுகள் கலையிலேயே
பூர்ணத்துவம் பெறுகிறது என்றும் நாவலில் சொல்கிறார்.
முழுக்க முழுக்க உண்மையான விஷயம்
அது. இங்கே பரந்தாம ராஜுவின்
தேடலாக இருப்பது காமம். கண்டறிவதோ யதார்த்த உலகின்
வேஷம்.
இதே வேஷத்தை ஆதவனும் எழுதியிருக்கிறார்.
அவர் ஒரு குடும்பத்தினுள்ளேயே நின்றுவிடுகிறார்.
குடும்பம் என்னும் அரசியலுள் இருக்கும்
பிம்பங்கள் எப்படி அபத்தமாய் இருக்கின்றன
என்பதை கூறி நழுவி செல்கிறார்.
இங்கோ நோக்கற்று பயணம் செய்யும் மனிதன்
காணும் வேஷங்களை உலகமயமாக்குகிறார். அப்படி காட்டுவதற்கு காமம்
பொருளாகிறது.
பரந்தாம
ராஜு சொல்லும் விஷயம் நான் அதுவாக
விரும்புகிறேன். உலகிலுள்ள எல்லாமுமாக விரும்புகிறேன் புனிதங்களை விட்டு மண்ணுள் இருக்கும்
மனிதர்களை நான் கலையில் வெளிக்கொணர
நினைக்கிறேன். அதற்கு நான் உபவாசம்
இருக்கப்போகிறேன். நானாக உருவாக்குமொரு பசி.
பசியை அனுபவிக்கும் போது சின்னதான பயமும்
தோன்றுகிறது, ஒரு முகமூடியை நான்
அடுத்தவனிடமிருந்து கழற்றி எரியும் போது
மீதமாய் ஒரு முகமூடி இருப்பின்
என்ன செய்ய ? எதை நம்ப
? அடுத்தவர்களின் முகமூடிகளை கழற்றி எரிய நினைக்கும்
என் குணமே ஒரு முகமூடியோ
? குழப்பத்தினூடே தர்க்கங்கள் நாவலில் விரிவடைகிறது.
தஞ்சை பிரகாஷ் நாவலில் இருவித மொழிகளை
கையாள்கிறார். கதைசொல்லியாக வரும் இடங்களில் இருக்கும்
மொழியும் வசனங்களில் இருக்கும் மொழியும் வேறுபட்டே தெரிகின்றன. கதைசொல்லியாக வரும் மொழியை வேறெங்கிலும்
காண முடியாத வண்ணம் இருக்கிறது.
வசனங்களில் இருக்கும் மொழியோ அவருக்கு பின்வந்த
பலரின் எழுத்துகளில் காண நேருகிறது. வசனங்களில்
குறிப்பாக காதல் ரசம் சொட்டும்
இடங்களில் பிரகாஷ் வைக்கும் வசீகரம்
பெருத்த மௌனத்துடன் பயணித்து ஒருவித தனிமையை அளிக்கிறது.
பெண்ணின்
உடம்பில் இருக்கும் கிராம்பு வாசனை – வௌவ்வால்களின் பீ
நாற்றம் – பெண்கள் – சொந்தம் – மூகமூடி – கலை – பசி – நான்
– அது - இருத்தல் - இன்மை என்று சுழற்சியில் சிக்கிக்
கொள்ளும் நோக்கற்ற மனிதனின் கள்ளம், அந்தரங்க குறிப்புகளாக,
வசீகரமாக ஈர்க்கிறது.
பின் குறிப்பு : நாவலில் 125 மற்றும் 126 ஆம் பக்கங்கள் மாற்றி
அச்சாக்கப்பட்டிருக்கின்றனவோ
என்னும் சந்தேகம். நடுகல் பதிப்பகம் அதை
கவனித்தால் நன்றாக இருக்கும். இவ்விரு
பக்கங்களுக்கும் அதற்கு முந்தைய பிந்தைய
பக்கங்களுக்கும் சம்மந்தமில்லை. அதே நேரத்தில் இவ்விரு
பக்கங்களும் 145 ஆம் பக்கத்தில் தொடர்ச்சியுடன்
இடம்பெறுகிறது. அடுத்த பதிப்பில் (நான்
குறிப்பிட்டது) தவறாக இருப்பின் சரி
செய்யுங்கள். நான் தவறாக இருப்பின்
பிழையை கூறுங்கள். புரிதலை திருத்திக் கொள்கிறேன்.
1 கருத்திடுக. . .:
கள்ளம் வாசிக்க ஆவலா உள்ளேன் .. ஏற்கனவே தஞ்சை பிரகாஷின் -"பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம்"மற்றும் "மேபல்" வாசித்துள்ளேன் ... அவரின் கதை சொல்லும் பாங்கும் பாத்திரங்களின் படைப்பும் அசத்தலானது... தவிர்க்கமுடியாத ஆளுமை தஞ்சை பிரகாஷ் !
Post a Comment
கருத்திடுக