தமிழ் தி இந்துவில் இரண்டாம்
உலகப் போரின் அழிவுகளைப் பற்றியும்
அதன் பிண்ணனிகளைப் பற்றியுமான விஷயங்களை சமீபமாக வெளியிட்டு வருகிறார்கள்.
போரின் கொடூரங்களை ஆவணமாக நமக்கு காட்டப்படும்
சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். போர்களை இந்த உலகம்
எப்படி காணுகிறது ? இந்த அடிப்படை கேள்வியே
என்னுள் எழுந்தது. கேள்வியுடனேயே நாளை கழிக்கும் போது
வாசிக்க நேர்ந்த நாவலும் இரண்டாம்
உலகப் போர் சம்மந்தமாகவே இருந்தது.
குறிப்பாக ஹோலோகாஸ்ட் என்று சொல்லப்படும் காலகட்டம்
சார்ந்தது. அஃதாவது ஹிட்லரின் நாஜிப்படைகள்
கொத்து கொத்தாக யூதர்களை கொன்ற
காலகட்டம். இந்தப் பகுதி முழுக்க
பச்சாதாபமும் இரத்தமும் தோய்ந்த பகுதியாக வரலாற்றில்
இடம்பெற்றிருக்கிறது. மடிந்த அத்தனை ஆயிரம்
மனிதர்களின் மரணத்திற்கான காரணம் அவர்களின் சுயமே
எனும் போது அதிலுள்ள வரலாற்றுமுரணை
யூகிக்க முடிகிறதா ? முதலாம் உலகப் போரையும்
அதன் கோரத்தையும் கண்டவுடன் இன்னுமொரு விநாச போரை இவ்வுலகம்
காணாது என்றே எண்ணிக் கொண்டிருந்தது
உலகம். மக்களின் எண்ணத்தையும் கற்பனைகளையும் உடைக்கும் வண்ணம் நவநாகரீக கண்டுபிடிப்புகளாலும்
இயற்கையை வளமிழக்க செய்யும் ஆயுதங்களாலும் உலகம் இன்னுமொரு போரைக்
கண்டது. அதன் பின்னர் மக்களின்
மனதில் உதித்த எண்ணம் இன்னுமொரு
போரை இவ்வுலகம் தாங்காது என்பதே. இந்த வரியை
யோசிக்கும் போதே லேசான பயம்
என்னுள் தோன்றவே செய்கிறது.
நான் வாசித்த நாவல் “வண்ணம்
பூசிய பறவை”. இதை எழுதியவர்
ஜெர்ஸி கோஸின்ஸ்கி. தமிழில் பெரு.முருகன்
மொழிபெயர்த்துள்ளார். புலம் வெளியீடாக வந்திருக்கிறது.
இந்நூலின் ஆரம்பத்தில் எம்.கோபாலகிருஷ்ணன் என்பவரின்
முன்னுரை ஒன்று வருகிறது. அதில்
போர்கள் எதற்காக உருவாகின என்பதற்கு
சின்னதான அர்த்தத்தை கூறியிருக்கிறார். ஒரு மனிதனுக்கு இடமொன்றை
ஒதுக்கிவிடுகிறோம். அவன் அதை சொந்தம்
கொண்டாடுகிறான். அதே இடத்தில் இன்னுமொரு
மனிதன் படைக்கப்படும் போது தன் இருத்தலின்
மேல் அச்சம் கொள்கிறான் முதலாமவன்.
இன்னுமொருவனின் ஊடுருவலால் போதாமை ஏற்படுமோ என.
இந்த போதாமையை சரி செய்ய, தனக்கென
ஒரு நிலவியலின் மேல் இருக்கும் அதிகாரத்தை
நிலைநாட்ட அவன் போர் செய்ய
இயற்கையால் நிர்பந்திக்கப்படுகிறான். ஆக போரும் இயற்கையானதே
என்று கூறியிருக்கிறார். அப்படியான இயற்கையின் ரத்தம் தோய்ந்த சில
பக்கங்களையே கோஸின்ஸ்கி நாவலாக்கியிருக்கிறார்.

நாவலைப்
பற்றி கூறுவதற்கு முன் ஜெர்ஸி கோஸின்ஸ்கி
பற்றி கூற ஆசைப்படுகிறேன். நாவலை
வாசித்து அவரைப் பற்றி இணையத்தில்
பிராண்டும் போது சில சுவாரஸ்யமான
விஷயங்கள் கிடைத்தன. இவரின் படைப்புகளைப் போலவே
சுய வாழ்க்கையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இவரின் முதல் பெயர்
ஜோசப் லெவின்கோப். யூத மதத்தில் பிறந்தவர்.
ஜெர்மனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபடியால் குடும்பமே
பெயர்களை கோஸின்ஸ்கி என்று மாற்றி வைத்துக்
கொண்டது. இவர் எழுதிய முதல்
நாவல் THE PAINTED BIRD. இதன் பின் ஐந்து
நாவல்களை எழுதியுள்ளார். எல்லா நாவல்களுமே அதிகமாக
விற்று அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தன.
அவருக்கு இரு மனைவிகள். யூதர்களை
கொலை செய்த காலகட்டத்தில் வாழ்ந்த
எழுத்தாளர்களுள் குறிப்பிட்ட சிலருள் இவரும் ஒருவராவார்.
வண்ணம்
பூசிய பறவை நாவல் 1967இல்
வெளியாகியிருக்கிறது. 1982
வில்லேஜ் வாய்ஸ் என்னும் பத்திரிக்கையில்
வெளியான கட்டுரை தான் கோஸின்ஸ்கியின் இலக்கிய மற்றும் சுய வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதில்
ஜியாஃப்ரீ ஸ்டோக்ஸ் மற்றும் எலியோட் ஃப்ரெமாண்ட்
ஸ்மித் என்பவர்கள் சாட்டிய குற்றம் கோஸின்ஸ்கியின்
நிலைப்பாட்டை மக்களிடையே உடைத்தெறிந்தது. அவர்கள் குறிப்பாக இரண்டு
குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். முதலாவது அவரின் BEING THERE என்னும் நாவல் அப்பட்டமான
போலீஷ் நாவலின் தழுவல் என்பது.
இன்னுமொரு குற்றச்சாட்டை இங்கு பார்ப்போம். ஏனெனில்
அது வண்ணம் பூசிய பறவை
நாவல் சார்ந்தது.
இந்நாவலின்
மையக்கதை யாதெனில் ஆறுவயது சிறுவன் ஒருவன்
அவனது பெற்றோராலேயே தத்து கொடுக்கப்படுகிறான். ஏனெனில்
யூதன் என அறியப்பட்டால் அவனும்
நாஜிப்படைகளால் கொல்லப்படலாமோ என்னும் எண்ணமே அது.
இந்த தத்துப் பெற்றோர்களிடமிருந்து பல்வேறு மனிதர்களையும்,
நிலங்களையும் காண்கிறான். எல்லா இடங்களிலும் வன்முறைகள்
துரத்திக் கொண்டே வருகின்றது. வல்லுறவுகளும்,
சித்ரவதைகளும், நம்பிக்கைகளும், அவனை துரத்திக் கொண்டே
இருக்கிறது. யூதன் என்னும் அடையாளத்துடன்
வாழ்வதும், அதே அடையாளம் அவனை
துரத்தும் போது அவன் கொள்ளும்
முழுப்பயணமுமே இந்நாவல்.
வன்முறைக்கும்
மரணத்துக்குமான இடைவெளியில் நிகழும் இந்நாவல் வெளிவந்தவுடன்
பெரிய கூட்டத்தினரால் autobiographical
என்று பேசப்பட்டது. அவரோ மௌனம் காத்திருக்கிறார்.
வேறு சில விமர்சகர்கள் அது
எப்படி எல்லா இடங்களிலுமே தீவினைகள்
மட்டுமே அச்சிறுவனை துரத்தக்கூடும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அப்போது அதை கோஸின்ஸ்கி வெளிப்படையாகவே
எதிர்த்திருக்கிறார். நாவல் என வரும்
போது அதில் புனைவு என்பது
நிச்சயம் இருக்க வேண்டும். யதார்த்தமான
விஷயங்களுடன் இணைந்து கற்பனையை கலப்பதே
படைப்பாகும் என்றும் கூறியிருக்கிறார். சிலரிடம்
இது இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்லோன்
என்பவர் அமேரிக்க நாட்டவர். அவர் தான் கோஸின்ஸ்கியின்
வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரின் நூல் வெளிவந்தவுடனே
வேறு சில காரணங்கள் கோஸின்ஸ்கியை
எதிர்க்க வலுவாக கிடைத்தன. அதில்
முதலாவது நாவலில் சித்தரிக்கப்படும் எல்லா
வதைகளுமே போலந்து நாட்டவர்கள் செய்வனவாகவே
இடம்பெற்றிருக்கிறது. சில கதாபாத்திரத்தின் பெயர்கள்
கூட அவரின் வாழ்க்கையிலேயே இடம்பெற்றவை
தாம். இது அவர்களுக்கு இழைத்த துரோகமாக ஸ்லோன் கூறியிருக்கிறார். காரணம் போலந்து நாட்டவர்கள் நாவலில் வருவது போல அவருக்கு எவ்வித கொடுமைகளையும் செய்யவில்லை. இதில் இன்னுமொரு விஷயம்
யாதெனில் நாவலில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில்
அவர் எந்தவித கடினங்களையும் அனுபவிக்கவில்லை
என்று கூறியிருக்கிறார். பதவிசாக உதவிக்கு பணிப்பெண்ணும்
இருக்க அவர் வாழ்ந்திருக்கிறார். சில
கதாபாத்திரங்களே அவரின் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
மீதமெல்லாம் அவர் அறிந்தனவாக இருக்கக்கூடும்
என்றும் குறிப்பிடுகிறார். இதனால் நாவலின் கதை
மேல் இருக்கும் நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்திருக்கிறது. யூதர்களின் பிடியில் சிக்கி பல லட்சம்
பேர் துறந்த உயிர்கள் சொந்த
செல்வாக்கிற்காகவும், புகழுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டுமா போன்ற குரல்களும் எழுந்திருக்கின்றன.
அவரின் நாவல் semi-autobiographical என்னும் நிலையை எட்டின.
இதனூடே
வேறொரு விஷயமும் இருந்தது. அது யாதெனில் கோஸின்ஸ்கி
போலிஷ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்.
இருந்தாலும் இரண்டு ஆங்கில வல்லுனர்களை
வைத்துக் கொண்டே நாவலை ஆங்கிலத்தில்
இயற்றியிருக்கிறார். அவ்விருவரும் நாவலில் வரும் பெரும்பகுதி
எங்களுடையது இவர் தன் பெயரை
போட்டுக் கொண்டார் என்று சாடியிருக்கிறார்கள். வண்ணம் பூசிய
பறவை எழுப்பிய எல்லா அலைகளையும் அந்த
கட்டுரை தரை மட்டத்திற்கு கொண்டு
வந்தது. சில மாதங்களுக்கு பின்
அவர் என் நாவலில் இருக்கும்
நிறுத்தற்குறியீடுகள் முதற்கொண்டு யாரும் எழுதியதல்ல, நானே
இயற்றியது என்று கூறினாலும் நாவலின்
நம்பகத்தன்மை குறைந்தது என்னவோ மறு(ற)க்க முடியாத உண்மையாகிப்போனது.
இந்த பிரச்சினை நிகழ ஆரம்பித்து ஆறு
ஆண்டுகள் கழித்து தான் தன்
கடைசி நாவலை அவர் எழுதியிருக்கிறார்.
அது THE HERMIT OF THE 69TH
STREET. இந்நாவல் முழுக்கவே இந்த தழுவல் பிரச்சினையை
முன்வைத்த அவரின் வாக்குமூலமாக அமைந்திருக்கிறது
போலும். இது அவரின் மனதை
வெகுவாக பாதித்திருக்கிறது. இதய நோயாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார்.
தனது 57வது வயதில் அதிகமான
மதுவை உட்கொண்டு ப்ளாஸ்டி பையை வைத்து தலையினை
மூடிக் கொண்டு தற்கொலை செய்து
கொண்டார். இறுதி வாக்கியமாக - I am going to put myself to sleep now
for a bit longer than usual. Call it Eternity. யூதர்களின்
அழிவை காணவியலாது அல்லது சொல்ல இயலாது
இறந்தவர்களுள் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவரின்
வாழ்வும் கூட இக்கட்டுரையின் தலைப்பிற்கு
பொருத்தமாக இருக்கிறது.
சுய வாழ்வைப் போலவே தான் நாவலிலும்
சிறுவன் தன் சுயத்தை தேடி,
வேர்களைத் தேடி செல்கிறான். அவற்றை
மூன்று கதைகள் கொண்டு சொல்ல
நினைக்கிறேன். மூன்றுமே நாவலில் இடம்பெறும் அருமையான
உவமைகள்.
முதலாவது
லேக் சம்மந்தபட்ட கதை. இவன் பல்வேறு
வகை பறவைகளை சுட்டு வேட்டையாடும்
குணம் கொண்டவன். அந்த பறவைகளை வேட்டையாடும்
எல்லா நுட்பங்களையும் விரிவாக எழுதியிருக்கிறார். எல்லா
பறவைகளையும் அப்படி விழ்த்தி வீழ்த்தி
சேகரித்து வைக்கும் போது ஒரு நாள்
விசித்திரமானதொரு எண்ணம் அவனுக்கு தோன்றியிருக்கிறது.
தன்வசம் இருந்த வண்ணங்களை எடுத்து
ஒரு பறவையின் மேல் பூசுகிறான். அந்த
பறவையே வண்ணமயமாகிறது. முழுதாக பூசியவுடன் பறக்க
விடுகிறான். தன்னுடைய இனத்தையும் கூட்டையும் தேடி செல்கிறது அப்பறவை.
அந்த பறவையின் இனமோ நிறங்களைக் கண்டு
அச்சமுற்று கொத்திக் கொன்றுவிடுகிறது. தன் வசம் இருக்கும்
விதவிதமான பறவைகளுக்கு இதை செய்கிறான். எல்லாமே
இறந்து போகிறது.
அடுத்து
முயலின் கதை. மக்கர் என்னும்
மனிதன் முயல்களை ஆர்வமாக வளர்ப்பவன். அதை
கொல்லும் போது அதன் தோலினை
உரிக்கும் வேலையை நாயகனிடம் கொடுத்துவிடுவான்.
ஒரு முயல் கர்ப்பமாக இருந்தது.
அதை அதிக கவனத்துடன் மக்கர்
வளர்த்து வந்தான். என்ன தோன்றியதோ ஒரு
நாள் நாயகனிடம் கொல்லச் சொல்கிறான். மறுக்கும்
அவனை அடித்து செய்ய சொல்கிறான்.
அவனும் பயத்துடன் கொல்ல முயற்சிக்கிறான். முயலின்
கன்னத்தில் அறைந்து கொல்கிறான். பின்
மரமொன்றில் கட்டி அதன் தோலை
உரிக்கிறான். பாதி உரிக்கும் போது
முயல் மீண்டும் உயிர்த்தெழுகிறது. அவனின் கட்டுப்பாட்டை மீறி
ஓடுகிறது. வலியும் வேதனையும் அதனை
உருள வைக்கிறது. சுற்றியிருக்கும் எல்லா துகள்களும் அதன்
மேல் ஒட்டிக் கொள்கிறது. வலியில்
ஓடும் அந்த முயலை கட்டையால்
அடித்துக் கொள்கிறான் மக்கர்.
மூன்றாவதும்
முயல் கதை தான். இது
நாயகனே சொல்லும் கதை. காட்டு முயல்
ஒன்றை பிடிக்கிறோம். காட்டு முயல் கட்டற்ற
சுதந்திரத்துடன் சுற்றக் கூடியது. அதை
பிடிப்பது என்பதே சவாலானது. அதை
பிடித்து ஒரு சாக்கு பையினுள்
போடும் போது துள்ளுகிறது.
கூண்டினுள் அடைக்கிறான். அதனுள்ளேயே ஓடுகிறது. எப்படியேனும் தப்பிக்கமாட்டேனா என்று. அதன் மேல்
ஒரு போர்வையையும் போர்த்தி கூண்டினுள் வைக்கிறான். அதன் சுற்றுதல் இடமளவில்
குறைந்துவிடுகிறது. தொடர்ந்து இப்படியே செய்து வந்தவன் ஒரு
நாள் கூண்டை திறந்து விடுகிறான்.
வெளியே ஓடிச் சென்று புல்வெளிகளை
மேய்கிறது. காதினை விடைத்து எங்கோ
இருந்து வரும் ஓசைகளை கேட்கிறது.
சட்டென திரும்பி மீண்டும் கூண்டிற்கே வருகிறது. அப்போது அவன் சொல்கிறான்.
கூண்டு அதன் வெளியில் இல்லை.
உள்ளே ஒரு கூண்டு ஸ்திரம்
கொண்டுவிட்டது என.
இம்மூன்று
கதைகளை கூறியதன் காரணம் இது தான்
நாவலின் மையக்கதையும் கூட. மகனுக்கு எதுவும்
ஆகக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் வேறொருவரிடத்தில்
தத்துக் கொடுக்கிறார்கள். அவனின் பயணமோ நரகல்களினூடாக
நம்பிக்கைகளின் மத்தியில் பயணிப்பதாக அமைகிறது. மனிதர்களின் குட்டையான இவ்வுலகத்தில் அவனும் மனிதனாகவே பிறந்திருக்கிறான்.
அவன் மேல் பூசப்பட்ட வண்ணம்
யூதன் என்னும் அடையாளம். அதற்கேற்ற
அங்க அடையாளங்களும் இருக்கிறது. எங்கு சென்றாலும் யூதனாக
கண்டறியப்படுகிறான். யூதனை ஒரு ஊரில்
மறைத்து வைத்திருந்தால் அந்த ஊருக்கே நாஜிப்படைகளால் ஆபத்து என்பதையறிந்து எல்லோரும் பயப்படுகிறார்கள். அவனையே தீவினைகளின் குறியீடாக
நினைக்கிறார்கள். அச்சம் கொண்டு விலகுகிறார்கள்.
அவனுக்கு
இரண்டு வெளிகள் தான் இருக்கிறது.
ஒன்று தைரியமாக நாஜிகளின் கேம்பினுக்கு சென்று சரணடைவது. அடுத்து
அனுபவிக்கும் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பது. அவனுக்கு
கிடைக்கும் தண்டனையில் ஒன்றை கூறுகிறேன் பாருங்கள்.
பாதிரியார் ஒருவர் அவனை நாஜிக்
கேம்புகளில் இருந்து கூட்டி வந்து
கேர்பஸ் என்னும் குடியானவனிடம் விடுகிறார்.
அவனுக்கு இவனை பிடிக்கவேயில்லை. பாதிரியாரின்
பேச்சிற்கிணங்க தன்னுடன் இருக்க சம்மதிக்கிறான். தினமும்
அடிக்கிறான். தூக்கத்தையே மறந்து விடுகிறான் சிறுவன்.
கேர்பஸிடம் இருக்கும் நாயையும் அவிழ்த்து கடிக்கவிடுவேன் என்று அச்சுறுத்துகிறான். நாயின்
வாயினில் துணியை கட்டி சிறுவனுடன்
மோத விடுகிறான். உடலெல்லாம் கால் நகங்களின் பிறாண்டல்கள்.
இதைத் தவிர அவன் உடலை
ஏற்கனவே வதைத்திருந்த கேர்ப்ஸின் காயங்கள் வேறு. பாதிரியார் இறந்து
போக கேர்பஸ் வெறியில் உச்சமடைகிறான்.
உன்னை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பாதிரியாருக்கு
பதில் சொல்லியாக வேண்டும் என்னும் எண்ணமே என்று சிறுவனுக்கு முடிவு கட்ட திட்டமிடுகிறான். உத்தரத்தில்
அவனை தொங்கவிட்டு நாயினை கீழே உட்கார
வைக்கிறான். காலினை நீட்டமாக வைத்தாலே
நாய் சதையை எடுத்துவிடும். சிறுவனின்
உடலில் இருக்கும் பலத்தை எல்லோரும் அறிவோம்.
அவனின் நிலையை யோசிக்க முடிகிறதா
? ஒரு கட்டத்தில் பாதத்தின் சிறு பகுதியை அந்த
நாய் கடித்தும் விடுகிறது. இது அவன் வதைப்படும்
வாழ்க்கையின் சிறு பகுதியே. விரிவாக
நாவலில் வருகிறது.
தப்பித்தலுக்கான
எண்ணத்தை அவன் கொள்வதேயில்லை. மாறாக
சித்ரவதை படுவதற்கும் மரணத்திற்குமிடையிலான சின்னதான இருப்பை நிரூபனம் செய்ய
முயல்கிறான். காமத்தால் ஒரு பெண் அவனை
தன்வயப்படுத்துகிறாள். அவனுக்கோ பிற வதைகளைப் போல
இதுவும் வதைக்கவே செய்கிறது. எண்ணற்ற ரத்தங்களையும் வல்லுறவுகளையும்
வதைகளையும் கடினங்களை அனுபவிக்கும் அதே சமயம் காணவும் செய்கிறான்.
யூதர்களை கடத்தி செல்லும் ரயில்களை
காண்கிறான். ஜன்னலின் வழியே காணும் அவர்களுக்கும்
தனக்கும் இருக்கும் வித்தியாசம் மிக மெலிதானது தானே
என்று உணர்கிறான்.
இந்நாவலில்
இருக்கும் இன்னுமொரு விஷயம் வன்முறைகள் எல்லாமே
அப்பட்டமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் பார்வையில் அர்த்தங்கள் தேவையில்லை. வன்முறை தான் அவன்
முன்னே நிகழ்கிறது. எதை சொன்னாலும் எளிதில்
விதைக்கப்படும் மனம் சிறுவனுடையது. அவன்
முன்வைக்கும் கேள்விகளெல்லாம் சிறுபிள்ளைத் தனமாக இருப்பினும் அதனுள்
இருக்கும் உள்ளார்ந்த அர்த்தம் வியக்க வைக்கிறது. கண்ணிவெடிகளையும்
மனித அழிவிற்கு காரணியாக இருக்கும் பொருட்களையும் தயாரிப்பவர்கள் ஜெர்மானியர்களாகத் தான் இருக்க வேண்டும்
ஏனெனில் வலிமையான அவர்கள் பிறநாட்டவர்களிடமிருந்து அறிவை திருடிவிட்டார்கள்
என்று செவி வழி செய்திகளை
தனக்குள்ளேயே சொல்லி நிரூபணம் செய்து
கொள்கிறான். அவனின் இன்னுமொரு வார்த்தையை
பாருங்கள்
“மாபெரும்
உலைக்கலங்களை உருவாக்கி, யூதர்களையும் நாடோடிகளையும் அதில் போட்டு எரிப்பதற்கு
பதிலாக, அவர்களின் கண்களையும் தலைமுடிகளையும் மாற்றுவது சுலபமான வேலைப் போல
தோன்றுகிறது.”
குழந்தைகளின்
உலகம் நம்பிக்கைகளாலும் சூழப்படுகிறது. தீவினைகளையும் நன்மைகளையும் குழந்தைகளுக்கு போதிக்கும் வயதில் தான் இவன்
கொடூரமான இப்பயணத்தில் இருக்கிறான். அவன் கடந்து வரும்
ஒவ்வொரு மனிதர்களிமிருந்தும் ஒரு நம்பிக்கையை வளர்த்துக்
கொள்கிறான். உயிர்ப்பயம் அவனை நெருக்கி தள்ளும்
தருணத்தில் பிரார்த்தனையில் இறங்குகிறான்.
வன்முறைகளையும்
கொடுங்கோல்களையும் மட்டுமே கண்டு வந்த
அவனின் வாழ்வில் தான் செம்படையையும் காண்கிறான்.
சோவியத் ருஷ்யாவிலிருந்து வந்து அவனின் கிராமத்தை
சீரழித்த படைகளை அழிக்கிறார்கள். இந்த
கிராமத்தை சீரழித்த பகுதியை விரிவாக கோஸின்ஸ்கி
எழுதியுள்ளார். அதிலுள்ள வல்லுறவுகளும் ரத்தமும் மட்டுமே கண்களை விட்டு
அகலா கனவுகளைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கேவரில்லா என்பவன் அவனுக்கு ஸ்டாலின்
லெனின் கம்யூனிஸம் சுயம் கல்வி என்றெல்லாவற்றையும்
உணர்த்துகிறான். அதுவரை சிறுவன் கொண்டிருந்த
தளரா நம்பிக்கைகளை தகர்த்தெறிய செய்கிறான். சிறுவன் முழுதும் புதுமையாக
மாறுகிறான். உலகம் அவனின் அறிவினின்று
உருவாகிறது. தன் வளர்ச்சியை தானே
அறிகிறான். செய்த பயணம் மட்டும்
அவனின் நினைவுகளாய் தேங்கி நிற்கிறது. கேவரில்லா
சொல்வதெல்லாம் உனக்கு மட்டும் தான்
உன்னைப் பற்றி நன்கு தெரியும்.
ஆனால் நாயகன் கடைசிக்கருகில் வரும்
போது சொல்லும் விஷயம்
“ஒரு குடியானவனின் வீட்டுப் பரண்போல என் உலகானது
குறுகிக்கொண்டே வருகிறது. ஒருமனிதன் எல்லா சமயங்களிலும் தன்னை
வெறுத்து கொடுமைப்படுத்த விரும்புபவர்களின் கைகளிலோ அல்லது தன்னை
ஆதரித்து அன்பு செலுத்துபவர்களின் கைகளிலோ
விழுந்துவிடுகிறான்.”
இதற்கொப்பவே
சிறுவனின் வாழ்க்கை நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் மொழி
எங்குமே வசனங்களை கொடுக்கவில்லை. கதைசொல்லியாக அவனின் எல்லா பயணங்களின்
விவரமான குறிப்புகளையும் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு
மனிதர்களையும் அவர்களிடமிருந்து அவனுக்கு கிடைக்கும் கசப்பான அனுபவங்களாகவும் நாவல்
செல்கிறது. நான் கூறியிருப்பதெல்லாம் நாவலின்
சொற்பமான பகுதிகளே. கட்டமைப்பில் மார்க்விஸ் தே சாத்தின் ஜஸ்டின்
நாவலைப் போலவே இது தோன்றினாலும்
வன்முறைகளை எங்குமே நியாப்படுத்தாமல் பயம்
எப்படி மக்களை ஆட்டி வைக்கிறது
என்பதையும் உயிர்வாழ ஆசைப்படும் ஒவ்வொரு மனிதர்களின் உணர்வுகளையும்
நாவலில் மிக அழகாக கூறியிருக்கிறார்.
மொழிபெயர்ப்பும் தங்கு தடையின்றி செல்கிறது.
அந்நியத்தன்மையை உணர்த்தாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் பெரு.முருகனுக்கு
என் வாழ்த்துகள்.