THE SKIN I LIVE IN – 2011
பிருஹன்னளை
நாவலை எழுதி மாதங்கள் பல
உருண்டோடிவிட்டன. இந்த நிலையில் சமீபத்தில்
கோணங்கி அந்த நாவலால் ஒரு
விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அஞ்ஞாதவாசத்தில் அர்ஜுனன் கொள்ளும் இந்த பிருஹன்னளை வேடத்தினுள்ளே
இருக்கும் உடலரசியல் வாசிக்க வாசிக்க அற்புதமாக
இருக்கிறது என்று. பிருஹன்னளை என்பது
ஒராண்டுக்கான பெண்வேடமாக இருப்பினும் அதிலிருந்து மீள்வது கடினம். அந்த
ஓராண்டிற்குள் அவன் பல ஆயுட்களுக்கான
வாழ்வை வாழ்ந்திருக்கிறான். அந்த வாழ்க்கை முழுக்க
வேட்கை நிரம்பியதாயும் இருந்திருக்கிறது என்று சில உரைகளை
மையமாக வைத்து சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை இங்கே சொல்லும் போது
புராண மையம் கொண்ட கதையொன்றும்
நினைவில் தோன்றுகிறது. ஆணும் பெண்ணும் ஓருடலாக
இருந்து பின் பிரிந்து உலகில்
வலம் வருகின்றனர் என்பது அது. அப்படி
இந்த வாக்கியம் உண்மையாக இருப்பின் இருவருள்ளும் மற்றவர்களின் தன்மை இருக்கத் தான்
செய்யும். ஊர் வழக்கங்களில் கூட
ஆண் குழந்தைக்கு குறிப்பிட்ட வயதிற்கு பின்
கண்ணிற்கு மை வைக்கக்கூடாது, கடுக்கன்
போடக்கூடாது என்று கூறுகிறார்கள். அதற்கு
காரணமாக அவர்கள் சொல்வது அந்த
குழந்தை பெண் சுபாவத்தை அடையக்கூடும்
என்பதாக இருக்கிறது. ஆக உடலால் இரு
இனமும் வேறு வேறாக இருப்பினும்
இருவரினுள்ளும் இரண்டும் கலந்தே இருக்கிறது என்பது
உண்மையாக இருக்கிறது. அர்ஜுனன் ஓராண்டுகாலம் பிருஹன்னளையாக பேடியாக வாழ்ந்திருக்கிறான் வேடம்
அணியவில்லை என்பதையும் லேசாக யூகிக்க முடிகிறது.
சின்னதான கேள்வி என்னுள் எழுகிறது.
சமகாலத்திலும் அநேக நேரங்களில் நம்மால்
நம்முள் இருக்கும் பெண்ணை நிச்சயம் உணர
முடியும். அப்படி உணரும் தருணத்தில்
நம் இருத்தல் சார்ந்து நமக்கு சந்தேகம் வராதா
?
ஆண்
என்றாலே ஒரு வீரம் இருக்க
வேண்டும். பெண்ணெனில் மென்மை இருக்க வேண்டும்
என்னும் வரையறுக்காத தன்மை இன்னமும் தீர்க்கமாக
நிலவுகிறது. இதைத் தாண்டிய பெண்மையை
ஒரு ஆண் உணர்கிறான் எனில்
ரகசியமாகவே அவனுள் அது பதியப்படுகிறது.
கொண்டாடப்படுகிறது. இதே விஷயம் பெண்களின்
பக்கம் நிகழ வாய்ப்பில்லை. பெண்ணிடம்
ஆணின் குணம் இருப்பதை ஊரார்
கண்டறிந்தால் அது துணிச்சலாகிறது அல்லது
தற்காப்பாகிறது. ஆணிடம் மட்டும் தான்
பேடித்தனம் ஆகிறது. அந்த ஆணோ
அதை ரசிக்கவே செய்கிறான். பெண் எப்போதும் வசீகரமானவள்.
அந்த வசீகரத்தை ஆணால் நிச்சயம் அனுபவிக்க
முடியாது. தெரிந்தும் அனுபவிக்க ஆசைப்படுகிறான். பெண்ணாக விழைகிறான். அதே
நேரம் ஊராரிடமிருந்து இந்த விஷயத்தை மறைக்க நினைக்கிறான்.
ஒவ்வொரு ஆணிற்குள் இருக்கும் இந்த ரகசியமும் வேறுபட்டுக்
கொண்டேதானிருக்கிறது. அப்படியாயின் ஒரு ஆணின் ரகசியம்
உண்மையில் எப்படி இருக்கும் ? எந்த
உருவத்தில் அது வெளிப்படும் ? பெண்மைக்கும்
ஆண்மைக்கும் தோலினுக்கடியில் நிகழும் போர் எப்படிப்பட்டதாய்
இருக்கும் ?
***
மேலே
சொன்ன விஷயங்கள் எதற்காக சொல்லப்பட்டது என்பதை
நிச்சயம் கூறப்போவதில்லை. இப்போது
படத்திற்குள் செல்லலாம். இது ஸ்பானிய திரைப்படம். ராபர்ட் என்னும் ஒரு
மருத்துவர். அவர் ஆராய்ச்சி ஒன்றில்
ஈடுபட்டு வருகிறார். மென்மையான தோல் ஒன்றை எப்படியேனும்
செய்ய வேண்டும் என்று அவரின் ஆராய்ச்சிகள்
நிகழ்கின்றன. அவருடைய தனிமையான வீடொன்றில்
அவருடன் இணைந்து இருவர் வசிக்கிறார்கள்.
ஒருத்தி அங்கிருக்கும் வேலைக்காரி. இன்னுமொருத்தி அவருடைய நோயாளி. அவளை
ஒரு தனியறையில் இட்டு மருத்துவம் பார்க்கிறார்.
அவள் அணியும் ஆடைகள் உடலுடன்
ஒட்டியே இருக்கும் தோலின் நிறத்திலான ஆடைகள்.
அதை அணிந்து கொண்டு யோகாசனங்களை
பயிற்சி செய்கிறாள். அவள் வசம் இருக்கும்
வேறு ஆடைகள் எல்லாம் கிழிந்து
காண்பிக்கப்படுகின்றன. அவளுக்கு தேவையானதை இண்டர்காமின் வழியே வேலைக்காரியிடம் சொல்லி
வாங்கிக் கொள்கிறாள். அவளுடன் பேசும் ஒரே
ஜீவன் மருத்துவர் ராபர்ட். அந்த அறையில் அவள்
அடிக்கடி தற்கொலை செய்யவும் முயற்சி
செய்கிறாள். இந்த பெண் யார்
? ஏன் அவளை வீட்டிலேயே வைத்து
அவர் மருத்துவம் செய்ய நினைக்கிறார் என்பது
எல்லாம் படத்தின் முடிச்சுகளாக ஒவ்வொன்றாக மெதுவாக காட்சியில் கட்டவிழ்கிறது.
தோல்
சார்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள அந்த மருத்துவருக்கு காரணமாக
இருப்பது தீவிபத்தில் இறந்த அவரின் மனைவியே.
அவளின் கதை ஐந்து நிமிடங்களுக்கு
காட்சியில் வருகிறது. சாகும் தருவாயில் இருக்கும்
அவளை காப்பாற்றி எப்படியேனும் காப்பாற்றிவிடலாம் என்று முயற்சி செய்கிறார்.
அவளும் முன்னேறியே வருகிறாள். இந்த காட்சிகளில் வரும்
வசனமொன்று அவருக்கான நிம்மதியான தருணங்களெல்லாம் அவள் உறங்கிக் கொண்டிருக்கும்
கட்டிலினுக்கருகில் அமர்ந்திருப்பது என்று வருகிறது. மிக
அழகாக அதை காட்சியாகவும் காண்பித்திருக்கிறார்.
அவள் ஒரு நாள் பாடலொன்றை
கேட்கிறாள். அது அவள் தன்
மகள் நோர்மாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடல். அந்த
பாடல் அவளை உயிர்ப்பிக்கிறது. எழுந்து
நடந்து கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் போது
தான் அதிர்ச்சி ஏற்படுகிறது.
இங்கே
முக்கியமான விஷயம் அழகை முகம்
தீர்மானிப்பதில்லை மாறாக தோல் தீர்மானிக்கிறது
என்கிறார் இயக்குனர். இந்த தோல் அழகை
மட்டுமின்றி ஒருவரின் இருத்தலை தீர்மானிக்கிறது. நான் இருக்கிறேன் அதற்கு
ஆண் என்பதே என் அடையாளம்.
இதே போலத் தான் ஒரு
பெண். இதை வேறு விதமாக
கூற முயற்சிக்கிறேன். சுதந்திரமாக திரியும் மனிதன் சந்தர்ப்பவசத்தால் கொலை
செய்து சிறைக்கு சென்று வதைகளை அனுபவிக்கிறான்.
குற்றவுணர்ச்சியிலும் பீடிக்கிறான். முன்பிருந்த வாழ்க்கையின் நினைவுகளுடன் சிறைவாழ்க்கையை வாழ்கிறான். அவனின்
பிரக்ஞை உயிருடன் இருக்கிறோமா என்னும் சந்தேகத்தை சிறையில்
இருப்பதனாலேயே ஏற்படுத்துகிறது. ஆக அவனின் இருப்பிடம்
தான் அவனின் இருத்தலை தீர்மானிக்கிறது
என்று கொள்ளலாமா ? இதே போல் தான்
இயக்குனர் இப்படத்தில் காட்டும் ஆண்-பெண் என்னும்
இனம் சார்ந்த இருத்தல். இந்த
விஷயத்தை காட்சியாக்கியிருக்கிறார். இதற்காக போராடும் ஒரு
விஞ்ஞானியாக ராபர்ட்ஸ். அவரின் தீவிர தேடலை
மிக அழகாக காட்சிப்படுத்துகிறார்.
ஒரு
சின்ன உதாரணம் சொல்கிறேன். முதல்
காட்சியில் ராபர்ட் தன் அறையினுள்
நுழைகிறார். அவரின் அறைக்கு பக்கத்து
அறையில் தான் அந்த பெண்
இருக்கிறாள். அந்த அறையில் கண்காணிப்பு
கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதை எப்போதும் மருத்துவர்
பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரண்டு
அறைக்கு நடுவில் பெரியதான ஓவியமொன்று
இருக்கிறது. நிர்வாணமான ஓவியம். இதைப் போலவே
வேறு சில ஓவியங்களும் காண்பிக்கப்படுகின்றன.
தன் அறையினுள்ளே நுழைந்த உடன் அங்கேயும்
ஒரு பெண்ணின் ஓவியம் இருக்கிறது. இந்த
ஓவியம் உண்மையில் ஓவியமே இல்லை. உண்மையான
பெண்ணின் உருவம் தான் அது.
பக்கத்து அறையில் இருக்கும் பெண்ணினுடையது.
இதே போல வேறு ஒரு
காட்சியில் பெண் எப்படி திரையினுள்
அமர்ந்திருக்கிறாளோ அதற்கு எதிர் திசையில்
ராபர்ட் அமர்ந்து கொள்கிறார். பின் அவளை பார்வையில்
அவதானிக்க ஆரம்பிக்கிறார். கேமிரா அவருக்கு பின்னே
இருக்கிறது. பார்க்கும் போது ஓவியத்தின் உணர்தலையே
உணர்ந்தேன். இப்படி படம் நெடுக
நிறைய காட்சிகளை பாஸ் செய்து அதன்
ஃப்ரேமையே பார்க்க ஆரம்பித்தேன். மேலே
சொன்ன காட்சியை பின்வரும் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இந்த
படத்தில் கூட அவளின் பின்னே
இருக்கும் சுவரில் நிறைய எழுத்துகளை
நீங்கள் காண முடியும். அது
தான் படத்திலேயே என்னை மிகவும் ஈர்த்த
அருமையான ஓவியம். அந்த காட்சி,
இந்த
படத்தின் பிண்ணனி இசையும் கேமிராவும்
மிக அழகாக இசையைப் போலவே
படத்தை நகர்த்தி செல்கிறது. படத்தில் இருக்கும் எண்ணற்ற முடிச்சுகள் எதையுமே
நான் இங்கு அவிழ்க்கவில்லை. என்னை
பாதித்த ஒவ்வொரு காட்சிகளையும் விவரிக்க
முயற்சித்து தோற்றுப் போகிறேன். காரணம் படம் காட்டும்
விஷயங்கள், இருத்தலை முன்வைத்து எழுப்பும் கேள்விகள் என எல்லாமே என்னை திக்குமுக்காட
செய்கிறது. இதிலிருந்து என்னால் மீள முடியவில்லை.
இன்று எனக்கு கல்லூரியில் பரீட்சை.
எழுதி கொண்டிருக்கும் போது கூட என்னுள்ளே
இந்த படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களும் ஓடிக்
கொண்டிருக்கிறது. கேள்விகள் மீண்டும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்குமே பதில் தெரியவில்லை.
இதன்
இயக்குனர் பெட்ரோ அல்மொதொவார் இப்படம்
சார்ந்து சொல்லும் போது சுயமாக தேர்ந்தெடுத்து
பாதையில் செல்லும் போது வரும் இடர்களை
தனதாக்கிக் கொள்ளும் ஒரு பாத்திரத்தின் கதை
தான் இது என்கிறார். இந்த
வரிகளையே நான் கவித்துவமாக அர்த்தப்படுத்திக்கொள்ள
நினைக்கிறேன். இப்படத்தின் தலைப்பே படம் முடித்த
பின் விவரிக்க இயலாத உணர்வை கொடுத்து
செல்கிறது. இவரின் வாக்கியமும் அப்படிப்பட்ட
உணர்வை நிச்சயம் கொடுத்துவிட்டே செல்லும். இப்போதும் அதையே உணர்கிறேன்.
இப்படத்தில்
வரும் இசையை முக்கியமானதாக உணர்கிறேன்.
திருப்பங்கள் வரும் இடங்களிலெல்லாம் ஹாலிவுட்
சினிமாக்களைப் போலவே படபடக்கும் இசையை
வைத்து உணர்வுகளை தூண்டும் இடங்களில் ட்ரம்பெட், பியானோ போன்று இழைய
வைப்பது வித்தியாசமாக இருக்கிறது. படம் கொடுக்கும் உணர்வுகளுக்கு
பங்கம் விளைவிக்காமல் இணைந்தே பயணிக்கும் இசை.
அதே நேரத்தில் பன்முக இசையை புகுத்தியிருப்பது
வித்தியாசமாகவும் இருக்கிறது. இசை கொடுக்கும் எல்லா
உணர்வுகளையும் சிறிதளவிளான மௌனமும் கொடுத்து செல்கிறது.
குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ்.
ராபர்டாக
நடித்திருக்கும் அந்தோனியோ பந்தேராஸின் நடிப்பு சிலிர்க்க வைக்கும்
நடிப்பு என்று தான் சொல்ல
வேண்டும். படத்தில் அவரின் பாத்திரம் கொண்டிருக்கும்
மையக்குறிக்கோளில் இருக்கும் வன்மத்தை நம்மால் கிஞ்சித்தும் காணமுடியாது.
அதே அவரின் மனித இயல்புகளை
நம்மால் ஒவ்வொரு காட்சியிலும் அவதானிக்க
இயலும். மனிதனுள்ளே இருக்கும் பல்வேறு உணர்வுகளின் அபத்த
வலைபின்னல்களின் ஒரு விளைவு தான்
இந்த நாயகன். அதே நேரம்
அடைக்கப்பட்ட பெண்ணாக வரும் பெண்
வெராவின் தனிமையை படம் மிக
அழகாக சித்தரிக்கிறது. அதற்கு ஒத்திசைவது ஓவியம்
தான். இவர்களை தவிர படத்தில்
முக்கியமான பாத்திரங்களே நிறைய பேர் வருகிறார்கள்.
நான் முழுவதையும் சொல்லவில்லை. மாறாக ஒட்டு மொத்த
படத்தின் ஐந்து சதவிகிதத்தை தான்
கூறியிருக்கிறேன். மையக்கதையே வேறு. அந்த கதையினுள்
இருக்கும் வன்மத்தை கலை ரூபத்தில் காட்சியாக்கியிருக்கிறார்
அல்மொதாவார்.
இப்படத்தில்
காட்டப்படும் காமம் வேட்கை இருத்தல்
மூவற்றுக்குமான ஒற்றுமை, ராபர்ட் மற்றும் வெராவினிடையே
வரும் காதல், காமம் அதனூடே
இருக்கும் வன்மமும் கொண்டாட்டமும், ஒருமிருகம் இன்னுமொரு மிருகத்தை வேட்டையாடுவதைப் போல செய்யும் அதிகாரம்
என்று எல்லாமே புதுமையாக ரசிக்கும்
வண்ணம் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது.
எனக்கிருக்கும்
மிகப்பெரிய வருத்தம் ரசித்த யாவற்றையும் முழுமையாக
சொல்ல முடியவில்லையே என்பது தான். மையக்கதையை
கொஞ்சமாக சொன்னால் கூட இப்படம் கலை
சார்ந்து கொடுக்கக் கூடிய எல்லா விஷயங்களையும்
நான் உடைப்பதாக ஆகிவிடும். இப்படம் பார்க்கும் போது
காட்சிக்கு காட்சி சிறிதளவிலான கண்ணீராவது
என்னுடன் சண்டையிட்டது எனும் போது தான்
சந்தோஷமே கொள்கிறேன்.
Thousand kisses to the unseen Pedro
Almodóvar. . . .
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக