The Great Beauty – 2013

எழுத்தாளர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு இருக்கும் அன்பர்களிடம் அந்த எழுத்தளர்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பதில்

1.) எழுதுவதைப் போலவே அவர் படு சீரியஸாக இருக்கிறார்.
2.) எழுதுவதற்கும் பழகுவதற்கும் சம்மந்தமேயில்லையே
3.) எழுதறோம்ங்கற திமிர்ல அவர் இருக்கிறார்.

இந்த முன்றில் ஒன்றைத் தான் கேட்க வேண்டியிருக்கும். வேறு ஏதேனும் பதில் கிடைத்தாலும் அது இம்மூன்றினுள் அடங்கிவிடும். உண்மையில் எழுத்தாளனும் சக மனிதன் தானே ? அப்படியெனில் எந்த இடத்தில் வேறுபட்டு எழுத்தாளன் என்னும் படைப்பு ஸ்தானத்திற்கு வருகிறான் ? இந்த கேள்விக்கு இப்படம் மிக நெகிழ்வாக பதில் சொல்கிறது.

After all. . . . Its just a trick. . .

உலகம் முழுக்க இருக்கும் எல்லோருமே பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதில் முக்கால்வாசி பயணங்கள் ஆசைகளற்றதாய் அடுத்தவர்களுக்கிணங்க மேற்கொள்ளப்படுவனவாய் இருக்கின்றன. இந்த பயணங்களின் போது புறக்கண்களால் காணும் மக்களை உலகறிந்த இடங்களை மனதில் புகைப்படம் போல வைத்துக் கொள்கிறார்கள். ஏதேனும் ஒரு கட்டத்தில் நாம் காணும் மனிதர்களை, இடங்களை அங்கிருக்கும் கலாச்சாரத்தை நம் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக் கொண்டால் அத்தருணத்தில் நமக்குள்ளே எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங்களை அடுத்தவர்களிடம் சொல்ல துடிக்கிறோம். சில பேருக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம் சிலருக்கு தேவையற்றதாய் இருக்கலாம். நம்மைப் போலவே எண்ணமும் ஆசைகளையும் கொண்டவர்களை கண்டறிந்தால் தான் நாம் அகத்தால் கண்டதை பகிர்ந்தோம் என்னும் திருப்தி நம்முள் ஏற்படும். அப்படிப்பட்ட மனிதர்களை எங்ஙனம் சென்று கண்டறிவது. அது இல்லாத நேரத்தில் நம்முள்ளேயே குமுறிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் புழுங்குகின்றது. இந்த புழுக்கத்தை உலகில் இருக்கும் பலர் கலைவடிவமாக மாற்றுகிறார்கள். ஒரு விஷயம் கலை வடிவமாக மாறும் போது பலரின் மனதில் தோன்றும் நவ எண்ணங்களை தீண்டி செல்கிறது. இந்த தீண்டல் பலரின் மனதில் எண்ண ஓட்டங்களை உருவாக்குகின்றது. இந்த எண்ண ஓட்டம் வேறு சில எண்ணங்களை உருவாக்குகிறது. இப்படி chain reaction ஐ உலகம் முழுக்க ஏற்படுத்துவதற்கு ஒரு கலைவடிவம் தேவைப்படுகிறது. அந்த கலைவடிவத்தை உருவாக்க கலைஞனுக்கென ஒர் உலகம் தேவைப்படுகிறது. அதனுள்ளே அவன் போராட வேண்டியிருக்கிறது. அவனே நாயகன் அவனே வில்லன் என்று தர்க்கங்களாலும் உணர்வுகளாலும் அல்லலுற்று எல்லாவற்றையும் மறைத்து தன்னுள்ளிருந்து வந்த கலையை மட்டுமே கொடையாக தருகிறான். ஒரு கலைஞன் எப்போதும் அவன் உலகிலிருந்தே நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறான்.

கலைஞர்களில் ஒருவன் தான் எழுத்தாளனும். அவன் எழுத்தின் மூலம் இந்த எல்லா போராட்டங்களையும் நிகழ்த்துகிறான். அந்த எழுத்தாளனின் அக வாழ்க்கையை, அது எப்படி பழகும் மனிதர்களுடனான உறவை பாதிக்கிறது என்பதையும், எப்படி மனிதர்களை, இடங்களை observe செய்கிறான் என்பதையும் படமாக காட்ட முடியுமா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் திரைப்படம் தான் The Great Beauty. இத்தாலிய திரைப்படம்.இந்தப்படம் தான் கடந்த ஆண்டின் சிறந்த வேற்று மொழி திரைப்படம் என்னும் விருதை ஆஸ்கரில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் எழுத்தாளனின் உலகை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. ஜெப் கம்பர்டெல்லா என்பவன் நாவலாசிரியன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் The human apparatus என்னும் நாவலை எழுதியிருக்கிறான். அது எல்லோரும் பிடித்து போய்விட்டது. அதன் பின் அவன் நாவலே எழுதவில்லை. அவனுடன் சமகாலத்தில் எழுதி கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பல்வேறு நூல்களை எழுதி பிரபலமான போதும் ஜெப்பிடம் கேட்கப்படும் ஒரே கேள்வியாக இருப்பது ஏன் இன்னுமொரு நாவலை எழுதவில்லை என்பதே. தான் ஒரு மகத்தான நாவலை எழுதிவிட்டோம் என்னும் எண்ணம் ஜெப்பிடம் இருப்பதாக ஒரு காட்சியில் கூட தெரிவதில்லை.

இந்த ஜெப் இரவானால் ரோம் நகரின் வீதிகளில் உலா வருகிறான். அங்கிருக்கும் தெருக்கள், காமுறும் பெண்கள், சூன்யமான காலத்தினோடு கடந்த காலத்தை நினைத்துச் செல்லும் ஜெப் என்று காட்சிகள் மிக அழகாக காண்பிக்கப்படுகின்றன. ஜெப் ஒரு பத்திரிக்கையில் வேலை செய்கிறான். அவனின் பிரதான நோக்கம் எழுத்தாளன் உண்மையாக இருக்க வேண்டும். எழுதத் தெரிந்தது ஒரு தந்திரமே தவிர அது உலகையே ஆளும் சக்தியல்ல. இதை படம் முழுக்க ஆணித்தரமாக முன்வைக்கிறான்.

சிறுபத்திரிக்கையில் வேலை செய்யும் ஜெப் ஒரு நடிகையை பேட்டியெடுக்க செல்கிறான். அங்கே அவள் நான் ஒரு கலைஞன் எனக்குள்ளே சில vibration கள் நிகழ்கின்றன அதிலிருந்து தான் என் நடிப்பு வெளிவருகிறது என்கிறாள். அந்த  துடிப்பின் அர்த்தம் என்ன என்று துருவி துருவி கேட்கிறான். அவள் அழுகிறாள். ஜெப்பின் கேள்வி மட்டுமே காட்சியில் நிதர்சனமாய் பதிகிறது. இதை வேறு சில இடங்களிலும் மிக அழகாக முன்வைக்கிறார். சக எழுத்தாளர்களிடம் பேசும் போது அங்கே ஈகோவை உடைக்கும் பாத்திரமாக இருப்பது ஜெப். பதினோரு நாவல்களை எழுதிய நாவலாசிரியையின் கர்வத்தை உண்மைகள் காட்சியில் உடைக்கின்றன.

எல்லா சக எழுத்தாளர்களைக் கண்டாலும் தான் ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்னும் கேள்வியே அவனுள் எழுகிறது. இதை காணும் மக்களிடமெல்லாம் கண்டறியப் பார்க்கிறான். பேட்டி எடுப்பவர்களிடம் அறியப்பார்க்கிறான். ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் ரமோனா. பாரில் ஸ்ட்ரிப்பராக இருக்கிறாள். அவளைக் கண்டு எப்படியேனும் இவளை மணம் முடித்துவிட வேண்டும் என்னும் அவளின் அப்பா ஜெப்பிடம் வருத்தப்படுகிறார். ரமோனாவுடன் ஜெப் ஊர் சுற்றுகிறான். ஜெப் மற்றும் ரமோனாவிடம் இருக்கும் எளிமையான ரகசியங்கள் இருவரிடையேயும் கசிகின்றன. ஒருவரின் ரகசியங்கள் மற்றொருவரின் மனதை துன்புறுத்துகிறது. இந்த நெருடலை தாங்கவியலாமல் விலகிச் செல்கிறார்க்கள். காட்சியினூடே ஒரு கேள்வியையும் என்னால் உணர முடிந்தது. உணர்வுகளின் பரிமாற்றங்களால் பயந்து எத்தனை தூரம் ஒருவனால் செல்ல முடியும் ? இதற்கான பதிலும் படத்தில் இருக்கிறது.

எல்லா காலத்திலும் இளைஞர்களின் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே இந்த சமூகத்தை திருத்த வேண்டும் என்பதாகவே இருக்கும். அதற்காக எதையேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கனன்று கொண்டே இருக்கும். அப்போது அகம் சார்ந்த மனிதயியல் சார்ந்த நூல்களை வாசித்தால் சமூகம் சீர்கெட்டு அழிந்து கொண்டிருக்கும் போது தனி மனிதனின் காதலும் உணர்வுகளும் தேவையா என்பதே பிரதானமாக அமைகிறது. இந்த எண்ணத்தை எழுத்தாளர்களிடமும் காண முடிகிறது. எல்லா எழுத்தாளர்களும் அவர்களுக்கான வெளியில் இருந்து மட்டுமே எல்லா விஷயங்களையும் காண்கிறார்கள். அதையே கலையாக மாற்றுகிறார்கள். இந்த இடத்தைத் தாண்டி எழுத முடியும். அப்படி செய்தால் அவர்களுக்குள்ளே அது கலையாக இருக்காது. இந்த உணர்வை காட்சி ரூபத்தில் தர்க்கங்களாக காட்டியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

இலக்கியவாதியின் மிக முக்கியமான விஷயம் வேர்களைத் தேடிப் போவது. இந்த விஷயத்தை ஜெப் மரியா என்னும் கன்னியாஸ்திரியின் மூலம் அறிகிறான். அப்போது எப்படி தன்னால் முதல் நாவலை எழுத முடிந்தது இரண்டாவது நாலை எழுதவியலாமல் தடுக்கும் விஷயம் என்ன என்று எல்லாவற்றையும் காட்சி ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஜெப்பை மட்டுமே காட்டாமல் அவனுக்கு சமகாலத்தில் இருக்கும் கலைப்படைப்பாளர்களின் வாழ்க்கையையும், தீவிர இலக்கிய உபாசகனின் மனப்போக்கையும் ஜெப் பார்வையாளனாய் காண்பது போல் காட்டியிருப்பது கதைக்கு சமமாய் அமைந்திருக்கிறது. அவர்களைக் கண்டு ஜெப்பால் பதில் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறான். அவர்களுக்குளே இருக்கும் சண்டைகள் ஈகோ எல்லாவற்றையும் கட்டுடைக்க ஆசைப்படுகிறான். அவனுள்ளே ஒரு குரல் எழுகிறது இங்குள்ள அழகியலை நீ மாற்றி அமைக்க வேண்டும் என. இந்த வார்த்தைகளை நோக்கி தான் திரைக்கதையும் நகர்கிறது.

ரோம் நாட்டில் இருக்கும் கட்டிடக் கலை எல்லொருமறிந்ததே. டா வின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் போன்ற படங்களில் தேவாலயங்களில் இருக்கும் சிற்பக்கலைகளை காட்டியிருப்பார்கள். அதன் காட்சி வடிவம் த்ரில்லர் கதையில் வரும் சின்னதான கலை போல சென்று விடும். இப்படத்தில் கலையை ஒருவன் நேருக்கு நேர் பருகும் போது அவனுள் என்னவிதமான மாற்றத்தை கொடுக்கும் என்பதை காட்சியாக்கியிருக்கிறார். ஸ்ட்ரிப்பிங்கை தவிர எதையுமே அறியாத ரமோனாவை அழைத்துக் கொண்டு சென்று சிற்பங்களை காட்டுகிறான். அவளின் நடிப்பும் சிற்பத்தை காட்டும் விதமும் நம்முள்ளேயே கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிற்பத்தையும் பறவைகளையும்  வெவ்வேறு காட்சிகளில் இணைத்திருப்பது இன்னுமொரு அழகான விஷயம். சிற்பம் எப்படி கலைவடிவமோ அதே போல பறவைகளும் கலைவடிவம் அதன் முன்னேயும் நம் புலன்கள் தோல்வியுற்று அகம் மட்டுமே விழித்துக் கொள்கிறது என்பதை அவரவர்களின் சிறந்த நடிப்பின் மூலம் இயக்குனர் கூறுகிறார். ஒவ்வொரு காட்சியையும் காண்பிக்கும் விதமும் மிக அழகாய் இருக்கிறது. கேமிரா ஓரிடத்தில் கூட நிற்காமல் செல்லும் விதம் புதுமையாகவும் ஈர்க்கும் வண்ணமும் இசையின் இழையாய் இருக்கிறது.

கலை எப்படி வணிகமாகிறது எப்படி அது கலையாகவே இருக்கிறது என்று எழுத்து என்னும் கலைக்குள் இருக்கும் எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக இக்கதைக்கேற்ப இயக்குனர் காட்டியிருக்கிறார். பார்வையாளனுக்கு இந்த கருவே சலிப்பை கொடுக்குமோ என்னும் என் சந்தேகம் இப்படத்தில் நீங்கியதில் பெரிய ஆச்சர்யமே மிஞ்சியது. ஒரு எழுத்தாளனாய் இப்படம் என்னை வெகுவாகவே பாதித்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களை கற்றும் கொடுத்திருக்கிறது. படத்தின் முதல் காட்சியில் வரும் வாசகமே படத்தைப் பற்றி பேசுகிறது. அது,

“Travel is useful, it exercises the imagination. All the rest is disappointment and fatigue. Our journey is entirely imaginary. That is its strength. It goes from life to death. People, animals, cities, things, all are imagined. It's a novel, just a fictitious narrative. Littrè says so, and he's never wrong. And besides, anyone can do as much.  You just have to close your eyes. It's on the other side of life. Louis-Ferdinand Cèline Journey to the End of the Night”


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக